2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“சின்னு! நம்ம ஸ்ருதியைப் பொண்ணு பார்த்துட்டுப் போனவங்க சம்மதம் சொல்லிட்டாங்கடி. வர புதன்கிழமை நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்” என்ற மஹாவிடம்
“நம்ப பாப்பாவை பிடிக்கலைன்னு வேற சொல்லுவாங்களா என்னா. எனக்கு முன்னமேயே தெரியும்மா இந்த எடம் முடிவாயிரும்னு” என்றாள் சின்னு.
“ம்க்கும் நீ இப்படித்தான் சொல்லுவேன்னு எனக்கு தெரியாதாக்கும். நீ தூக்கி வளர்த்த பிள்ளையில்ல உனக்கு ஒசத்தியாத்தான் இருக்கும்” என்று பெருமை பொங்க சொன்னாள் மஹா.
“என்னம்மா அப்பிடி சொல்லிட்டீங்க. நம்ப சுருதி பாப்பாவுக்கு என்னா கொறச்சலும்மா. எலுமிச்சம்பழக் கலர்ல நெகுநெகுன்னு வளத்தியா, வாரலா, நல்ல படிப்பும் படிச்சிட்டு நல்ல உத்தியோகத்தில கை நெறய சம்பளமும் வாங்குது.
“இந்தக்காலத்து புள்ளைவோ மாதிரி இல்லாம, மண்ணு பாத்து நடந்துகிட்டு, மனுசங்களைக் கொண்டாடிகிட்டு எங்க தேடினாலும் இந்த மாதிரி பொண்ணு கிடைக்குங்களா” என்று நிறுத்த மனமில்லாமல் பேசிக் கொண்டே போன சின்னுவின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்த மஹா, “எல்லாம் சரி, ஸ்ருதி பிறந்ததிலேருந்து அவளோட எல்லா நல்லது கெட்டதும் நீ கூட இருந்துதான் நடத்தி இருக்க. அதே மாதிரி இப்ப நிச்சயதார்த்தத்தில தொடங்கற அவளோட எல்லா விஷேஷங்களையும், நீ கூட இருந்தாத்தான் என்னால சிறப்பா செய்ய முடியும், ஞாபகம் இருக்கட்டும்” என்றாள்.
“நீங்க சொல்லனுமாக்கும், அது யாரு… என் புள்ளைக்கும் மேல” என்று சொல்லிவிட்டு மனம் நிறைந்த சந்தோஷத்துடன் வீட்டுக்குப் புறப்பட்டாள் சின்னு.
மஹாவுக்கு டெலிவரி முடிந்து மூன்றாம் மாதமே அவளை அழைத்து வந்து விட்டார்கள் அவள் மாமியார் வீட்டினர். அப்போது குழந்தையையும் பார்த்துக் கொண்டு, வீட்டையும் பார்த்துக் கொள்ள சிரமப்படுவாளே மஹா என்று, அவள் அம்மா சின்னுவை மஹாவுடன் அனுப்பி வைத்தார்.
சின்னுவின் அம்மா அவர்கள் வீட்டில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். எனவே மஹாவுடன் தன் மகளை அனுப்ப அவளும் மறுப்பேதும் சொல்லவில்லை.
எனவேதான் ஸ்ருதிக்கும் சின்னுவுக்குமான பந்தம் மிகவும் நெருக்கமாக இருந்தது. அவளுடன் நடைவண்டி பிடித்து விளையாடத் தொடங்கியது முதல், ஸ்கூலுக்கு அழைத்துப் போய் வருவது என்று தொடர்ந்து, ஸ்ருதி பருவமடைந்த போதும் உற்ற துணையாக நின்றது எல்லாமே சின்னுதான்.
மஹா வீட்டுக் கார் டிரைவருக்கே சின்னுவைக் கட்டிக் கொடுத்ததால் இந்த ஊரிலேயே தங்கி விட்டாள்.
ஸ்ருதிக்கு கல்யாணம் வந்திடுச்சு, எல்லா வேலையையும் நாமதான் பாக்கனும். மஹா அம்மாவுக்கு நாம கூட இல்லேன்னா கை ஒடஞ்ச மாதிரி ஆயிடும் என்று நினைத்த போது மனதிற்குள் ஒரு சஞ்சலம் வந்து விட்டது சின்னுவுக்கு.
கொஞ்ச நாளாவே மாதாந்திரத் தொந்தரவு முறையா இல்லாம படுத்தி எடுக்குது. நினச்ச நேரத்தில வந்திடுது, வந்தாலும் பத்து நாள் வரைக்கும் இருந்து தொலைக்குது. அளவுக்கு அதிகமாகவும் உதிரப்போக்கு இருக்கறதால ரொம்ப அவஸ்தையாவும், வேதனையாகவும் இருக்கு.
சுருதி பாப்பா விசேசத்துக்கெல்லாம் எந்தத் தொந்தரவும் இல்லாம இருக்கனும் என யோசித்தபடியே வீட்டை அடைந்தாள்.
நினைப்பதெல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன. சின்னுவுக்கு மறுநாளே விலக்கு ஏற்பட்டுவிட்டது. “நல்லது தான் புதன்கிழமைக்குள்ள சுத்தமாயிடுவல்ல” என்று திருப்திப்பட்டுக் கொண்டாள் மஹாவும்.
சின்னுவும் தனக்கு உள்ள பிரச்சனை பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. ஏனென்றால் விலக்கு நாட்களில் கண்டிப்பாக ஓய்வு கொடுத்து விடுவாள் மஹா. அது சின்னு, மஹாவின் வீட்டோடு இருந்த நாள்ல இருந்தே அப்படித்தான் பழக்கம்.
அதன் பிறகு கல்யாணம் முடிந்து வேறு வீட்டிற்குப் போன பின்பும் லீவ் கொடுத்து விடுவாள் மஹா. ஆசாரமா அல்லது உடல் உபாதை கருதி அனுதாபமான்னு தெரியாது.
இப்ப அதுதான் சின்னுவுக்கு ஒரே மனக்குடைச்சலாக இருந்தது. பத்து பதினஞ்சு நாள் வரைக்கும் ஒதுங்கி இருக்க முடியுமா. அதுக்காக இந்தக் கொடுமையோட வேலை, அதிலேயும் விசேஷ வீட்டு வேலை பாக்க முடியுமா என்று. கடைசியில் சொல்லாமலே சமாளித்து விடலாம் என்றே முடிவெடுத்தாள்.
ஆனால் இம்முறை உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கவே, சோர்வு அதிகம் இருந்தது. மஹா அம்மாவின் ஆச்சாரம் நம்மளால கெட்டுடக் கூடாதேன்னு நித்தம் தலைக்கு தண்ணியை ஊத்திக்கிட்டு ஈரத்தலையோட, அடுப்படியில நின்னு வேர்த்துக் கொட்டக் கொட்ட வேலை பார்த்ததில, ஜூரம் அடிப்பது போல இருந்தது அவளுக்கு.
அதெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை அவளுக்கு. சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நடக்குதே நம்ப செய்யிற பாவத்தால சுருதி பாப்பா வாழ்க்கையில எந்தத் தப்பும் வந்திடக் கூடாதே என்ற மனபாரம் தான் அழுத்திக் கொண்டே இருந்தது.
மஞ்சத் தண்ணியில காசு முடிஞ்சு வச்சு மாரியம்மனை பிரார்த்தனை பண்ணியபடியே தான் தினமும் வேலைக்கு வந்தாள்.
பொம்பள சென்மங்களுக்கு ஏன் இந்தக் கொடுமையை வச்சானோ கடவுள் தெரியலை. ஆரம்பத்தில வயசுக்கு வரப்போ வயசும் சின்ன வயசு எல்லாரும் கொண்டாடுவாங்க அதனால பெரிசா சிரமம் தெரியாம ஒரு மாதிரி குஷியா இருந்திடறோம்.
ஆனா இப்பிடி வயசு போன காலத்தில ஏன் இம்புட்டு கஷ்டத்தைக் கொடுக்கனுமாம். யார்ட்ட சொல்லி இந்தப் பாரத்தை சரி பண்ண முடியும். ஏற்கெனவே வயசானதால சத்து கொறஞ்சு பலம் இழந்து நிக்ககறப்ப இப்படி வேற இருந்தா உடம்பும் மனசும், சே என்ன மனுச வாழ்க்கைன்னு விட்டுப்போகுதே.
வாய் விட்டுப் புலம்பவும் முடியாமல் மனசுக்குள் பல வித போராட்டங்களுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள், ஜூரமும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அடுப்படியில் மயங்கிச் சரிந்து விட்டாள்.
பதறிப் போய் விட்டாள் மஹா. குடும்பம் மொத்தமும் தவித்துப் போய் டாக்டரிடம் அழைத்துப் போனபோது தான் உண்மை தெரிந்தது மஹாவிற்கு.
முதலில் கோபமாக ஆரம்பித்து இறுதியில் சின்னுவைக் கட்டிக் கொண்டு அழுதே விட்டாள் மஹா.
“நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரியா. மாதா மாதமா நார்மலா விலகும் போதே உன்னை வேலை செய்ய வேண்டாம்னு சொல்லி இருக்கேனே. இப்ப இப்படி பெரும்போக்கு இருக்கும் போது எப்படி உன்னை.. போடி புரியாதவளே. எனக்கு இந்த அவஸ்தையெல்லாம் புரியாதா. நானும் பட்டுதானேடி வந்திருக்கேன். நீதான எனக்கு அந்த டயத்தில பக்கத்துலயே நின்னே. மெனோபாஸ் டயத்தில வர ஃபிரெஸ்டேஷன்ல இருந்து என்னை மீட்டு எடுத்தவளே நீதான. இப்ப இப்படி கஷ்டப்பட்டுட்டியே” என்று.
“விடுங்கம்மா, சுருதிப்பாப்பா கல்யாணம் முடிஞ்சிருச்சு இனிமே என்னா. நேத்து அது புருஷன் வீட்டுக்கு கிளம்பிப் போனதும் தான மயக்கம் வந்துச்சு. அங்கே போயிட்டு ஃபோன் போட்டுச்சா, நல்லா இருக்குதாம்மா” என்றவளை முறைத்த மஹா “உன்னை இப்படி விட்டுட்டு, உம்பிள்ளை அப்படிப் போயிடுவாளா” என்றபடி உள்ளே மகளை அழைத்தாள்.
ஓடி வந்து சின்னுவை அணைத்துக் கொண்டு கண் கலங்கினாள் ஸ்ருதி. வார்த்தைகளே வரவில்லை அவளுக்கு.
அவளின் தலைகோதி உச்சி முகர்ந்த சின்னு, “இதுக்கெல்லாம் கண்ணு கலங்கலாமா கண்ணைத் தொடச்சுக்கிட்டு சந்தோசமா கிளம்புடா. காலாகாலத்தில பிள்ளையைப் பெத்துக்குடு வந்திடறேன் நான் வளத்துக் கொடுக்க” என்று சொல்லி சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றிய சின்னு தானும் மனம் நிறைந்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
சின்னு மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம். இப்படி ஒருவர் கிடைப்பது மிக அரிது. அருமையான கதை மா!
அருமை