in ,

பந்திக்கு முந்து (சிறுகதை) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“என்னங்க.. வாங்க வீட்டுக்குப் போலாம்” என்றாள் சுதா

“பந்தி பரிமாற ஆளே இல்லை. நான் கொஞ்சம் கூட இருந்து பார்த்துட்டு வரேன்” என்றான் அவள் கணவன் செல்வம்

“பிள்ளைங்க அடம் பண்றாங்க.. போலாம் வாங்க”

“நான் கொஞ்ச நேரத்துல வரேன்.. இல்லனா நீ அவங்கள கூட்டிட்டு கிளம்பு”

செல்வத்திற்கு தான் எந்த விஷேசத்திற்குச் சென்றாலும் அங்கே முதலில் பந்தி வைக்கும் இடத்திற்குச் செல்வான். கூட்டம் அதிகம் இருந்தாலோ பந்தி வைக்க ஆள் போதவில்லை என்றாலோ தானும் சேர்ந்து கொண்டு பரிமாறுவான்.

சிறுவயதில் இருந்தே செல்வத்திற்கு இந்த பழக்கம் உண்டு.

அது நெருங்கிய சொந்தம் என்றாலும் சரி தூரத்துச் சொந்தம் என்றாலும் சரி.

இன்றும் அப்படித்தான் பொங்கல் வைத்து விட்டு சட்னி கொண்டுவருவதற்குள் பொங்கலை உண்டே முடித்து விடுகிறார்கள் அவ்வளவு தாமதம்.

பின் வரிசைக்கு இன்னும் தோசை வரவில்லை. முன் வரிசையில் ஒருவர் வெகு நேரமாய் சாம்பார் கேட்டுக்கொண்டிருக்கிறார். இடியாப்பம் இருப்பது தெரியாமலேயே முதல் வரிசையில் இருந்தவர்கள் எழுந்து விட்டனர்.

இதைப் பார்த்த செல்வம் ஓடி ஓடி தம்மால் முடிந்த வரை பரிமாறிக் கொண்டிருந்தான்.

செல்வத்தின் மனைவி சுதாவிற்கு தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிள்ளைகளை அவளால் சமாளிக்க முடியவில்லை.

அதனால் கோபத்துடனே கிளம்பினாள். பின் செல்வம் வீட்டிற்கு வந்த பின் வாதிட்டாள்.

“ஏங்க.. அண்ணன் தம்பி கல்யாணம்னா எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யலாம். உங்க பாட்டிக்கு தங்கச்சி வீட்டு பேரனுக்கு கல்யாணம். அவங்களே உங்கள கூப்பிடலாமா வேணாமான்னு யோசிச்சு கடைசியா கூப்பிட்ருக்காங்க.. இங்கயுமா இப்படி வேலை செய்யணும்”

“நீயே பாத்தல்ல நமக்கு இட்லி வெச்சிட்டு போய் எவ்ளோ நேரம் கழிச்சி சாம்பார் வந்துச்சு.. கூட்டத்த சமாளிக்க முடில பாவம்”

“புரிதுங்க.. அதுக்கு அவங்க அண்ணன் தம்பிங்க தான முன்னாடி போய் நிக்கணும். நமக்கென்னன்னு அவங்களே உட்கார்ந்திருக்காங்க.. நீங்க ஏன் செய்யணும்ன்னு தான் கேக்கறேன்”

“பந்திக்கு முந்துன்னு ஒரு பழமொழி இருக்கு. அதுக்கு அர்த்தம் மொதல்ல பந்தில உட்கார்ந்து சாப்பிடணும்னு இல்லை. பந்தி பரிமாற முந்திட்டு போய் கலந்துக்கணும்னு அர்த்தம்”

“…”

“அவங்க அண்ணன் தம்பி பண்லன்னா என்ன சுதா எனக்கு இதுல ஒரு சந்தோசம். நான் பண்ணிட்டு போறேன். இப்போ என்ன கெட்டு போய்டுச்சி”

இதே வழக்கத்தோடே தான் சென்ற எல்லா விஷேசங்களையும் சிறப்பித்தான் செல்வம்.

ஆண்டுகள் கடந்தன.

செல்வத்தின் மகளுக்கு நாளை திருமணம். இன்று நிச்சியதார்த்தம்.

இரவு நேர வரவேற்பை பற்றி பத்திரிக்கையில் குறிப்பிடவே இல்லை. நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்திருந்தனர். திருமணம் முடிந்து காலை வரவேற்பிற்கு உறவினர்கள் அனைவரையும் அழைத்திருந்தனர்.

மொத்தம் மாப்பிளை வீட்டாரோடு சேர்த்து அறுனூறு பேருக்கு மேல் மண்டபத்தில் கூடிவிட்டனர். சாப்பாட்டிற்கு சொன்ன கணக்கோ முன்னூறு பேர் தான்.

காலை நேரத்தில் வர முடியாதவர்கள் இப்பொழுதே வந்துவிட்டார்கள். பெண்ணின் தோழிகள் மாப்பிள்ளையின் தோழர்கள் இரவில் அழைக்கப்பட்டிருப்பதை இரு வீட்டாரும் கணக்கில் கொள்ளவில்லையோ என்னவோ.

செல்வத்திற்கு உறவினர் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி ஒரு பக்கம் எப்படி உணவிட போகிறோம் என்கிற கவலை ஒரு பக்கம்.

இன்னும் முன்னூறு பேருக்கு மேல் சேர்த்து சமைக்க வேண்டும். வரவேற்பில் நிற்க வேண்டும். சொந்தங்களை கவனிக்க வேண்டும். சமையல் வேலைகளை மேற்பார்வையிட வேண்டும்.

செல்வத்திற்கு உடன் பிறந்த தம்பிகள் மூன்று பேரும் அண்ணனின் நிலையை புரிந்து கொண்டனர். மாப்பிள்ளை வீட்டாரை கவனிக்கும் வேலையையும் சமையல் வேலைகளையும் தாங்கள் பார்த்துக்கொள்வதாக தைரியம் தந்தனர்.

செல்வம் வரவேற்பை கவனித்துக் கொண்டான்.

இத்தனை பேருக்கும் உணவு போதுமா பரிமாற ஆட்கள் இருக்கிறார்களா என்கிற சிந்தனையோடே நிச்சியதார்த்தம் முடிந்த கையோடு வேக வேகமாக பந்தி நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

அங்கே கூட்டம் நிரம்பி இருந்தது எனினும் பந்தி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. சமையல் கட்டிற்கு விரைந்தான். அங்கே தம்பிகளின் மேற்பார்வையில் கூட்டத்திற்கு ஏற்ப சமையல் வேலை நடந்து கொண்டிருந்தது.

யாருக்கும் உணவு இல்லை என்று சொல்லும் வகையில் இல்லாமல் சுடச் சுட உணவுகள் வந்து கொண்டே இருந்தன.

பரிமாற ஆட்கள் இருந்தன அது போக வரிசைக்கு ஒருவர் நின்று என்ன வேண்டும் என்று விசாரித்து கொண்டிருந்தனர்.

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவர் இலையும் நிரப்பப்பட்டிருந்தது. உபசரிப்பில் திளைத்தனர் விருந்தினர்கள்.

மாப்பிள்ளை வீட்டார் மனம் மகிழ்ந்தனர்.

“இப்போலாம் சொந்த பந்தங்க கல்யாணத்துக்கு வரதே இல்லை. இந்த அவசர உலகத்துல எல்லாம் போன்லயே வாழ்த்து சொல்றாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல வேலை பாக்கறாங்க.அப்படி இருக்கும் போது நம்ம கல்யாணத்துக்கு இவ்ளோ பேர் வந்ததே மகிழ்ச்சி. அதுவும் நீங்க யார்க்கும் எதும் இல்லன்னு சொல்லாம போதும் போதுன்ற அளவுக்கு இப்படி சாப்பாடு பரிமாறி ஜமாய்சிட்டிங்க” மாப்பிளையின் தாய் செல்வத்திடம் புகழ்ந்து கூறினார்.

“அதுவும் பந்தி பரிமாறது உங்க கூட்டம் தான். நெருங்கிய சொந்தம் கூட இல்லை. உங்க ஒன்னு விட்ட சொந்தமெல்லாம் நின்னு கவனிச்சிக்கறாங்க.. எங்க சொந்தம் அதெல்லாம் பார்த்து மூக்கு மேல கைய வெச்சிட்டாங்க” மாப்பிள்ளையின் தந்தையும் வியந்து கூறினார்

சுதாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. தன் கணவனின் நல்லதொரு பழக்கத்தால் இன்று தன் மகளின் புகுந்த வீட்டுக்காரர்கள் எவ்வளவு மகிழ்ந்து உள்ளனர். மகளின் புதிய வாழ்க்கையின் தொடக்கம் மிகச் சிறப்பாக அமைந்ததை எண்ணி மனம் நெகிழ்ந்தாள்.

கணவனை திரும்பிப் பார்த்தாள். அவர் முகத்திலும் முழுமையான மகிழ்ச்சி தெரிந்தது.

அவரிடம் பேச வாயெடுத்தவள் “வாங்க சாப்பிடலாம்” என்பதை மட்டும் கூறிவிட்டு அவன் கைப் பிடித்து கூட்டிச் சென்றாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்லு மனசு (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

    காட்ராக்ட் ஆபரேஷனும் தன்னு பாட்டியும் (சிறுகதை) – சுஶ்ரீ