2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ரூமில் மாட்டியிருந்த ஸ்மார்ட் டி.வி.யில் இஷாவின் முகம் தெரிந்தது.
“என்னுடைய குழந்தைகளே, எழந்திருங்கள்”.
அம்மாவின் குரல் கேட்டு நான்கு அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த பதினெட்டு வயது ரீது, பதினாறு வயது ரிஷி, பத்துவயது இரட்டையர்களான கவி, விஷு, மூன்று வயது வீணா எல்லோரும் கண் விழித்து, “குட் மார்னிங் மாம்” என்று ஆளுக்கொரு ராகத்தில் இழுத்தனர்.
இஷா, தன் எதிரிலிருந்த மானிட்டரில் வீணாவின் முகத்தை ஜூம் செய்து, “வீணாக்குட்டுக்கு என்ன வேணும்” என்று கொஞ்சினாள்.
“ம்….ம்…மேந்தோ மூத்தி” என்று மழலியது.
“ஓ..மேங்கோ ஸ்மூத்தியா? ஓ.கே , இதோ கொண்டு வரேன்” என்று எழுந்து வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்த மானிட்டரில் மாந்தோப்பு என்று டைப் செய்தாள்.
சென்னை அடையாறிலிருந்து புறப்பட்ட கார் மெயின் ரோட்டுக்கு வந்ததும் இரண்டு இறக்கைகள் விரித்து விமானமாக மாறி மேலே பறந்தது. ஒரு நிமிடத்தில் ஒரு கிராமத்தில் மாந்தோப்பில் ஒரு மரத்தின் அருகில் சென்றது. உட்கார்ந்தபடியே மாம்பழங்களை பறித்தாள் இஷா. மறுநிமிடமே வீட்டில் இருந்தாள். மிஷினில் மாம்பழத்தை வைத்து ஸ்மூத்தி என்ற பட்டனை அழுத்தினாள்.
“அம்மா…” என்றபடியே பறக்கும் டெடிபேர் ரோபோட்டில் மாடியிலிருந்து வந்திறங்கிய வீணாக்குட்டி யை அள்ளி அனணத்தாள் இஷா.
“அம்மா… அடுத்த வாரம் நிலாவுக்கு டூர் போறோம். சொன்னேனா?” என்றபடியே வந்தாள் ரீது.
“அப்போ, இன்னிக்கே அதற்கான ஏற்பாட்டை ஆரம்பிக்கணுமா?” என்றாள் இஷா.
“ஆமாம்மா…என்னென்ன வாங்கணும்னு ஒரு லிஸ்ட் போட்ருக்கேன். அதுல ஃபுட் லிஸ்ட்ல இருக்கறத நீ ரெடி பண்ணி ரஷ்யாக்கு அனுப்பிச்சுடு. நான் இன்னிக்கு கிளம்பி அமெரிக்காவில ட்ரெஸ் வாங்கிட்டு, ஜப்பான்ல காமிரா வாங்கிட்டு, சொல்ல மறந்துட்டேனே என் ஃபிரண்ட் காரியாபட்டிலிருந்து வந்துகிட்டு இருக்கான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஆகாயத்திலிருந்து இறங்கிய பறக்கும் தட்டில் இருந்த ஜன்னல் வழியே கை காட்டினான் கேத்.
“ஓகே….மா, நான் கிளம்பறேன். அப்பப்போ, அப்டேட் பண்றேன். பை…வீணாக்குட்டி” என்று கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஜன்னலுக்கு வெளியே இருந்த பறக்கும் தட்டில் ஏறிக்கொண்டாள்.
“ஏம்மா இஷா” என்றபடியே வந்தான் நைட் ட்ரெஸ்ஸுடன் பதி அவள் கணவன். “ராத்திரி கொஞ்சம் வொர்க் பண்ணிட்டு லேட் டா தூங்கினேன். தலை பாரமா இருக்கு”
“டீ போடவா?” என்று கேட்ட இஷாவிடம், “வேண்டாம் நீ கஷ்டப்படாதே கொஞ்சம் காத்தாட ஊட்டிக்குப் போய் டீ எஸ்டேட்ல ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். மத்தியானம் தாய்லாந்துக்கு போனாலும் போவேன்.உனக்கு அப்டேட் பண்றேன். நாளைக்கு நாம லண்டனுக்கு போய் வீணாக்குட்டிக்கு பர்த்டே ட்ரெஸ் எடுத்துட்டு வரலாம். ஓகே. …பை….” என்று வீணாக்குட்டிக்கு முத்தமிட்டு விட்டு சென்றான்.
ரிஷியிடமிருந்து அழைப்பு வந்தது. மானிட்டரில் பார்த்து “என்னடா கண்ணா?” என்றாள்.
“அம்மா… எனக்கு லைட்டா ஃபீவர் இருக்குன்னு ரோப் சொல்றான்” என்று தன் கையில் கட்டியிருந்த சிறிய கயிறை காட்டினான். அதில் 100.2 என்று காண்பித்தது.
“ஓ.கேடா, …கண்ணா ரெஸ்ட் எடுத்துக்கோ. டாக்டர் அரேன்ஜ் பண்றேன்” என்றாள் இஷா.
இரண்டு நிமிடத்தில் மானிட்டரில் தெரிந்த டாக்டரையும், நர்ஸையும் செலக்ட் செய்தாள். அடுத்த இரண்டு நிமிடத்தில் அவர்கள் ரிஷியின் ரூமில் இருந்தனர்.
நிம்மதி பெருமூச்சு விட்ட இஷா தனக்கு வேண்டிய டிஃபனை மிஷினில் ஆப்ஷன் பட்டனை அழுத்தி விட்டு காத்திருந்த நேரம் இரட்டையர்களான கவியும், விஷுவும் சண்டைபிடித்துக் கொண்டே ஓடி வந்தனர்.
“அம்மா.. பாரும்மா இந்த விஷூவ நான் சொல்றதையே கேட்க மாட்டேங்கறான்” என்றாள் கவி கண்ணில் நீர் கோர்த்தபடி.
“ஆரம்பிச்சிட்டீங்களா? என்ன பிரச்சனை?” என்ற இஷாவிடம்
“எனக்கு பிடிச்ச ஹிஸ்ட்ரியை இவன் கேலி பண்றான். இவனுக்கு பிடிச்ச சயின்ஸ்’அ நான் கேலி பண்ணிருக்கேனா? என்னை ஓல்ட் ஃபேஷன்னு சொல்றான்” என்றாள் கவி குரல் கம்ம.
“அது சரி…விஷு நீ இன்னிக்கு எங்க போய் கத்துக்கப் போற?” என்று கேட்டாள் இஷா
“ம்…. இன்னிக்கு சிங்கப்பூர் சயின்ஸ் மியூசியத்திற்கு போய் பாக்கப் போறேன். சயின்ஸ் மிஸ் போகச் சொன்னாங்க” என்றான்.
“ம்… சரி ..கவி, உனக்கு எங்க?”
“எனக்கு இன்னிக்கு தஞ்சாவூர் கல்வெட்டுல இருக்கற எழுத்துக்கள் பத்தி பாடம். மிஸ் கரெக்டா பத்து மணிக்கு வந்துட சொன்னாங்க. ஃப்ளைட் அரேன்ஜ் பண்ணிடு” குதித்து சந்தோஷத்தை வெளிபடுத்தியவள், “நான் அங்கேயே சாப்பிட்டுக்கறேன். அப்புறம் ட்ரெடிஷனல் ட்ரெஸ்ல வரச்சொல்லிருக்காங்க, எங்க இருக்கும்?” என்றவளிடம்
“பக்கத்து தெருவிலேயே ஷாப் இருக்கு, அங்க 134 வது ஃப்ளோர்ல சௌத் ட்ரெடிஷனல் ட்ரெஸ் இருக்கு. உன்னோட சைசுக்கு ஐ ப்ளாக்ல போய் பாரு” என்ற இஷா, “விஷூ உனக்கு அங்க 77வது ஃப்ளோர்ல.”என்று ஆரம்பித்தவளிடம்
“மாம்.. நா சிங்கப்பூரிலேயே வாங்கிக்கறேன்” என்று கவியை பார்த்து விரலை கொக்கியாய் மடக்கி காட்டி அவளை வெறுப்பேற்றினான். கவி அவனை அடிக்க ஓங்க ஓட்டமாய் ஓடினான். அவர்களை பார்த்து வீணாக்குட்டி கடகடவென சிரித்தாள்.
இஷா வீணாவைப் பார்த்து “உனக்கு அடுத்த வாரம் ரிசல்ட் வந்துடும். உனக்கு எதை படிக்க விருப்பம் அதிகம்னு, உலகத்துல எந்தெந்த இடத்துக்கெல்லாம் போகணும்னு டைம் டேபிள் வந்துடும். எட்டு வயசு ஆகற வரை நானும் உன்கூடவே வருவேன்” என்றாள். புரிந்த மாதிரி தலையை ஆட்டினாள் வீணா. பின் வேகமாக ஓடி புத்தகம் ஒன்றை எடுத்து வந்தாள்.
“மா…. தத… தத.. ” என்றாள் மழலைக் குரலில்.
“கதையா? சரி.. வா.. உக்காரு சொல்றேன்” என்றபடி இஷா சொல்ல ஆரம்பித்தாள்.
முன்னொரு காலத்தில் பணம் என்று ஒன்று இருந்ததாம். எதை வாங்க வேண்டும் என்றாலும் அதைத்தான் பயன்படுத்த வேண்டுமாம். பணம் என்ற ஒன்று இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாதாம்.
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings