2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மணிகண்டன் தெருவோரம் நடத்தி வரும் கையேந்தி பவனில், மதியவேளையில் அங்கே சாப்பிடுவதற்கு அவனது நண்பன் மோகன் வந்தான்.
“அண்ணே! ஒரு சாம்பார் சாதம் கொடுங்க” கேட்டான் மோகன். மணிகண்டன் சாம்பார் சாதம் கொடுத்தபோது, அவனைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தான் மோகன்.
“டேய் மணி! நீயா? எப்படிடா இருக்க? ஆமா, ஏன் ரோட்டோரம் சாப்பாடு கடை நடத்துற?” ஆச்சரியத்தில் மணிகண்டனைப் பார்த்துக் கேட்டான் மோகன்.
மணிகண்டனின் அப்பா சக்கர நாற்காலியில், இரண்டு கால்கள் செயலிழந்து அமர்ந்திருந்தார்.
“மோகன்… உனக்கேத் தெரியும். ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் ஒரு கல்யாணத்துக்கு போகும்பொழுது வழியில ஆக்சிடெண்ட் ஆச்சி. அம்மா வீட்டுல படுக்கையில இருக்காங்க. எங்க அப்பாவிற்கு ரெண்டு காலும் செயலிழந்திச்சி! இதை பயன்படுத்தி எங்க சித்தப்பா சூழ்ச்சி செஞ்சி, எங்க வீடு, சொத்தை அபகரிச்சி என்னையும், எங்க அம்மா, அப்பாவையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டாரு. இதனால படிப்பை என்னால தொடர முடியாத சூழ்நிலை. வேற வழியில்லாம, படிப்பை நிறுத்திட்டு குடும்பத்தை காப்பாத்த ரோட்டோரம் சாப்பாடு கடை நடத்திக்கிட்டு இருக்கேன்” மணிகண்டன் விரக்தியாய் பதிலளித்தான்.
“இப்போ புரியுது. இதனால தான் நீ காலேஜ் பக்கம் வரதில்லையா? சரி! உனக்கு இதுல வருமானம் வருதா? இல்லையா?” மோகன் ஆர்வமாகக் கேட்டான்.
“எங்க வருது? யாருமே எங்க கடைக்கு சரியா சாப்பிட வரதில்லை” மணிகண்டன் வார்த்தைகளில் சோகம் கலந்திருந்தது.
“டேய் மணி, எனக்கும் நெருக்கடி. உனக்கு உதவ முடியாத சூழ்நிலையில இருக்கேன். ஒன்னும் கவலைப்படாத! உனக்கு உதவி செய்ய, எனக்கு ஏதாவது ஒரு வழி கிடைச்சா, கண்டிப்பா உதவி செய்றேன். சரியா!” மோகன் ஆறுதல் சொன்னான்.
சாம்பார் சாதம் சாப்பிட்டுவிட்டு, அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு, அந்த இடத்தை விட்டு சென்றான் மோகன்.
வீட்டிற்குச் சென்ற பிறகு, தன் நண்பன் மணிகண்டனின் சாப்பாடு வியாபாரத்தை எப்படி வளர்ச்சி அடைய வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான் மோகன்.
அடுத்த நாள், தன் நண்பன் மணிகண்டனின் சாப்பாட்டுக் கடையை, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தான் மோகன்.
“டேய் என்னடா பண்ற?” ஆச்சரியத்தில், மணிகண்டன் கேட்டான்
“உன் கடையை போட்டோ, வீடியோ எடுத்து யூட்யூப் சேனல், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் மாதிரி சமூக வலைத்தளங்களில் விட்டா, லைக்ஸ் நிறைய வரும். அப்புறம் கடைக்கு, இதுவரைக்கும் வராதவங்க கூட, கடைக்கு வந்து சாப்பிட ஆரம்பிப்பாங்க! வியாபாரம் நல்லா வளரும்” மோகன் பதிலளித்தான்
தனக்காக மோகன் எடுத்த முயற்சியைப் பாராட்டிவிட்டு சிலாகித்தான். அவன் சொன்னதுபோல் யூட்யூப் சேனல், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய, லைக்குகள், பாராட்டுக்கள் குவிந்ததோடு, கடையிலும் கூட்டம் அதிகமானது.
மணிகண்டனின் சாப்பாடு வியாபாரம் நன்றாக ஓட ஆரம்பித்தது. அபார வளர்ச்சி அடைந்தது. அலை கடலென கூட்டம் அவன் கடைக்கு வர ஆரம்பித்தது. தெருவோரம், கையேந்தி பவன் நடத்திய மணிகண்டன், நன்றாக பணம் மற்றும் லாபம் சம்பாதித்து, வளர்ச்சி அடைந்தான். பின்பு, ஒரு நாள் நகரில் புதிய உணவகம் திறந்தான்.
புதிய உணவகம் திறப்பு விழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களை அழைத்தபொழுது, தன் நண்பன் மோகனையும் அழைத்தான் மணிகண்டன்
“மோகன்… மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. குசேலனுக்கு கிருஷ்ண பரமாத்மா மாதிரி, நீ எனக்கு வந்து, என் வியாபாரத்தை தூக்கிவிட்ட! சொந்தகாரங்க கூட எங்களுக்கு உதவி செய்யல. ஆனா, நீ கஷ்டகாலத்துல தானா வந்து உதவி செஞ்ச. உன்னை நண்பன்னு சொல்லிக்க பெருமைப்படுறேன்” ஆனந்த கண்ணீர் விட்டு, மோகனுக்கு நன்றி சொன்னான் மணிகண்டன்.
அன்று அந்த ஹோட்டலில் சாப்பிட வந்தார் சுப்பையா. அவர் முகம் எதையோ பறி கொடுத்தது போல் இருந்தது. மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு கேஷ் கவுண்டருக்கு வந்து பில்லைக் கொடுத்துவிட்டு பரிதாபமாய் பார்த்தார்.
“நான் ஓணரோட சொந்தக்காரன்தான்பா” என்ற சுப்பையாவிடம் பில்லுக்கான பணம் அவர் கையில் இல்லை என்பதை உணர்ந்தார் கேஷியர்.
”அதெல்லாம் நீங்க ஓனர்கிட்டதான் பேசணும்”
”அவர் நம்பர் கொடுப்பா பேசறேன்” கேசியர் கொடுத்த நம்பரை வாங்கி டயல் செய்தார் சுப்பையா.
”மணிகண்டா… நான் உன் சுப்பையா பேசுறேன். உங்கிட்ட பேசறதுக்கு கூட அருகதை இல்லாதவன். உன்கிட்ட நேர்ல பேசணும்” பணிவாகக் கேட்டார் சுப்பையா.
”சரி வர்றேன்!” அலைபேசியை துண்டித்தான் மணிகண்டன்.
அரைமணி நேரத்தில் மணிகண்டன் வந்து சேர்ந்தான். சுப்பையாவைப் பார்த்ததும், அவரை ஏற இறங்கப் பார்த்தான் மணிகண்டன்
“வாங்க… உள்ளால போய் பேசலாம்” மணிகண்டன் அவனது தனியறைக்கு அழைத்துச் சென்றான்.
”சொல்லுங்க,,, என்ன விஷயம்?”
“என்ன மன்னிச்சிடு தம்பி! உங்க அப்பாவுக்கு உரிமையான வீட்டை நான் ஏமாற்றி வாங்கிட்டேன். அப்புறம் வீட்ட அடமானம் வெச்சு பிசினஸ் ஆரம்பிச்சேன். எல்லாமே நஷ்டம் ஆயிடுச்சு. இப்போ வீட்ட விக்கக்கூடிய சூழ்நிலையில இருக்கிறேன். உங்களை ஏமாத்துனதுக்கு கடவுள் எனக்கு தண்டனையைக் கொடுத்துட்டாரு. உங்களுக்குச் சொந்தமான அந்த வீட்டை நீங்களே வாங்கி, என் கடனைத் தீர்த்துட்டேன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்” அவர் அழாத குறையாகக் கேட்ட போது மனசுக்கு பாரமாகவே இருந்தது.
“சரி, பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். வீட்ட நானே வாங்கிக்கிறேன். எங்களுக்கு வீட்டைக் கொடுத்துட்டு, நீங்க என்ன பண்ணப் போறீங்க?” மனதில் துளியும் வஞ்சகமில்லாமல் கேட்டான் மணிகண்டன்.
“நானும் என் குடும்பமும், வாடகை வீட்டுக்குப் போயிடுவோம்”
”சித்தப்பா…. யாரையும் ஏமாத்தி சொத்த அபகரிச்சா அது நீண்டகாலம் நீடிக்காது. சட்டுன்னு கைய விட்டுப் போயிடும். பெரிய வீட்ல இருந்துட்டு, வாடகை வீட்டுக்குப் போறேன்னு சொல்றது, உண்மையிலேயே ரொம்ப கஷ்டமா இருக்கும். நீங்க மறுபடியும் அதே வீட்ல இருங்க. இப்போ சந்தோஷம் தானே!” கேட்ட சுப்பையாவுக்கு உடல் சிலிர்த்தது. அவன் காலில் விழலாம் போல் தோன்றியது.
”சரி தம்பி! நீ சொன்னா சரிதான். ஆனா, உன் ஹோட்டலில் எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தா, என் குடும்பத்தை நான் காப்பாத்திக்குவேன்” மணிகண்டனுக்கு அவர் அப்படிக் கேட்டது மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது
”வேலை போட்டுக் கொடுக்கிறேன். ஆனா, நேர்மை ரொம்ப முக்கியம். நேர்மையா இருப்பீங்களா?”
”நிச்சயமா இருப்பேன்!”
மணிகண்டன் சம்மதித்தபோது, தன் அண்ணனுக்குச் செய்த துரோகம் காற்றில் கரைந்தது. இனிமேல், வாழ்க்கையில் நேர்மை தான் நம்மை வாழ வைக்கும் என்பதை உணர்ந்தார் சுப்பையா
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings