2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
விடிந்ததும் விடியாததுமாக ரகுபதி கேட்டான்.
“இவரா அப்பா …?”
“ஆரம்பிச்சிடியாடா … உங்க அம்மா செத்துப் போனதும்…உங்க அப்பன் என்ன கட்டிக்கிட்டு வந்தான் …பொழைக்க வழி தெரியாம என்னை விட்டுவிட்டு எங்கயோ ஓடி போய்ட்டான் … போக்கத்தவனே போயி வேலைக்கு போற வழிய பாரு …” என்று விரட்டினாள் லட்சுமி.
“அப்ப… இப்போ எழுந்திருச்சி போறாரே … அது யாரு …?” என்றான் விடாப்பிடியாக….
“ஓ அதுவா… உம் மாமன், போடா பொழப்பத்த பயலே” என்று அவனைத் திட்டிக் கொண்டே, கலைந்து கிடந்த கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டு தலையணைக்கு அடியில் கையை விட்டு துழாவினாள் லட்சுமி.
ஐந்தும் பத்துமாய் ரூபாய் நோட்டுகள் கசங்கி போய் கிடந்தன. சுருட்டி எடுத்துக்கொண்டு போய் மல்லி டப்பாவில் போட்டு மூடிவிட்டு, கொல்லைப்புற தட்டியை தள்ளிக்கொண்டு கிணற்றுப் பக்கம் போனாள் லட்சுமி.
அதற்குள் ‘பழையதை’ அள்ளி ஆளுக்கு நாலு வாயாக போட்டு கொண்டு, தூக்குவாளியிலும் கொஞ்சம் போட்டுக் கொண்டு கிளம்பினார்கள் ரகுபதியும், பாப்பாத்தியும் !
ஏதோ சிந்தனையில் நடந்து கொண்டிருந்தவன், தூரத்தில் சைக்கிள்ல் வரும் மீசை வாத்தியாரை பார்த்ததும் தயங்கினான். அவன் பின்னாலேயே வழக்கம் போல பாப்பாத்தியும் பதுங்கினாள் .
“யாண்டா ரகுபதி ஸ்கூலுக்கு வரமாட்டேங்கிறன்னு திட்டுவாரே?”
அதற்குள் மீசை வாத்தியாரே, அவன் அருகில் வந்து சைக்கிளை நிறுத்தினார்.
“அடடே …ரகுபதியா? ஏன்டா பெரிய மனுஷா…வேலைக்கு கிளம்பிட்டியா ? துணைக்கு தங்கச்சி வேறா…?
வாயை திறக்காமல் மௌனமாய் நின்றார்கள் இருவரும். அவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது.
“போ …போ… நீ என்ன பண்ணுவே … பாவம்… ஒண்ணாம் கிளாசும், ரெண்டாம் கிளாசும் நல்லாத்தான் படிச்சே … தலை எழுத்து சரியில்லையே … என்ன பண்ணறது …” என்று சொல்லிக் கொண்டு… சைக்கிளில் ஏறிப் போனார் வாத்தியார்.
வாத்தியார் சைக்கிளில் போகும் அழகையே பார்த்துக் கொண்டு நின்றான் ரகுபதி!
ஒண்ணாம் கிளாஷ்ல சேர்ந்த புதிதில், “நீ என்ன வேலைக்கு போகப் போறேன்”னு கேட்ட போது
“உங்களாட்டம் பெரிய மீசையா வெச்சிக்கிட்டு… இதே பள்ளிக்கூடத்திலே வாத்தியார் வேலை பார்க்கப் போறேன்”னு சொல்லி எல்லோரையும் அன்று சிரிப்பில் ஆழ்த்தியது நினைவுக்கு வந்தது.
ஆனால் ரெண்டாம் கிளாஸோடு அவன் ஆசையில் தீக்குச்சிகளை அள்ளிப்போட்டு மூடி வைத்து, தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்பினாள் லட்சுமி!
அந்த குச்சிகள்தான் அவனுள் இன்னுமும் கனன்று கொண்டிருந்தன… எப்போது பற்றிக் கொள்ளலாம் என்று!
மதியம் சாப்பாட்டின் போது பக்கத்து தெரு மணி கேட்டான்.
“ஏய் ரகுபதி… கொஞ்சம் வெங்காயம் கொடுடா…. தொட்டுக்கிறதுக்கு…!”
“இந்தா … அதுசரி … ஒரு வெங்காயம் கூட கொண்டு வர மாட்டியா …? வாங்கற சம்பளத்தை என்ன பண்ற?” என்றான் ரகுபதி.
“அப்படியே எங்க அம்மாகிட்ட கொடுத்துருவேன்… எங்க அக்கா கல்யாணத்துக்கு காசு சேர்த்துக்கிட்டு இருக்கேன்…” என்றான் மணி பெருமையாக !
“சுரீர்” என்றது ரகுபதிக்கு!
திரும்பி பார்த்தான் பாப்பாத்தியை, எதுவுமே அறியாதவளாக கஞ்சி குடித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு தவறு செய்துவிட்டோம்… இவ்வளவு நாளாக என்று வருந்தினான் ரகுபதி.
மாலை தூக்கு டப்பாவை கொண்டு வந்து ஆணியில் மாட்டியபோது, சித்தி கண்ணாடியின் முன்னாள் நின்று அலங்காரம் செய்து கொண்டு நின்றாள்.
“ஏய் கிறுக்கு பய மவனே… கொண்டாடா காசை…” கண்ணாடி வழியாக அவனை பார்த்து விட்டு கேட்டாள் லட்சுமி!
மௌனமாக அவள் முன்னாள் சென்று சட்டைப் பையில் இருந்து பத்து ரூபாவை எடுத்து அவள் முன்னாள் நீட்டினான் ரகுபதி. வாங்கிப் பார்த்தவள் எகிறி குதித்தாள்.
“எங்கேடா…பத்து ரூபாய்தான் தர்றே …பாக்கி பத்து எங்கே?” என்று அதட்டினாள்.
“தங்கச்சிக்கு சேர்க்கப்போறேன் … நீதான் நா கொடுக்கிற காசையெல்லாம் ராத்திரியானா சாராயம் குடிச்சி காலி பண்ணிடுறே… நாளைக்கு தங்கச்சிக்கு கல்யாணம்னா என்ன பண்றது…?” என்றான் கீழே குனிந்தபடியே!
“பாவம்… லட்சம், லட்சம்மா சம்பாதிக்கிறான் … அதிலே இந்த அழகு தேவதைக்கு சேர்த்து வைக்கிறான்… நாதியத்ததுகளா” என்றபடி கன்னத்தில் இடித்துவிட்டு, பாக்கி பத்து ரூபாவையும் சட்டை பைக்குள் கையை விட்டு எடுத்துக் கொண்டாள் லட்சுமி.
பாவமாக நின்றான் ரகுபதி.
“என்னடா நிக்கிற… ஒழுங்கு மரியாதையா நாளையிலிருந்து சம்பாதிக்கிறத தினம் முழுசா கொண்டு வந்து கொடுக்கணும்… நீங்க எக்கேடு கெட்டா எனக்கென்ன?”
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings