2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இவர் ஏன் இப்படி இருக்காரு. தானாவும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாரு. சொன்னாலும் காது கொடுத்து கேக்கறதும் இல்லை. காதும் கேக்கற சக்தியை இழந்திடுச்சு.
இந்த ஒத்த அறை உள்ள வீட்டில மகன் மருமகள் பேரக்குழந்தைகள் எல்லோருமாக வாழும் வாழ்க்கையில் தனிமை என்பது எப்படிக் கிடைக்கும்.
குழந்தைங்க பள்ளிக்கூடம் போயிருக்கிற நேரத்தில, மருமக குளிக்கப் போயிருக்கிற சமயமாப் பாத்து, இந்த மனுசன்கிட்ட பேசலாம்னா, இவர் காதில வாங்கவும் மாட்டேங்கிறாரே. காதுதான் கேக்கலைன்னா முகத்தை நேருக்கு நேரா பாத்தா என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிக்கலாம்ல.
அதையும் செய்யாம ஏதாவது வாயைத் திறந்தாலே, “என்ன சொல்ற புரியல சத்தமாச் சொல்லு”ன்னு கத்தற கத்துல “என்ன என்னன்னு” மருமகளே ஓடி வந்து நக்கலா சிரிச்சுட்டு போறதும், நான் வெட்கத்தில கூனிக்குறுகி நிக்கறதும் தான் மிச்சமாகுது.
என்ன செய்யலாம் என மனசுக்குள் எண்ணி எண்ணி வேதனையில் உழன்று கொண்டிருந்தாள் வேதநாயகி.
பிரச்சனை இதுதான். ஒரே மகன் வேலுவின் வீட்டில்தான் வேதநாயகியும் அவள் கணவர் மாணிக்கமும் இருக்கிறார்கள். அவன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மானேஜராக பணிபுரிகிறான். வேலை பார்க்கும் இடத்துக்கு பக்கமாக வீடு வாடகைக்கு பார்த்ததில் அதிக வாடகையாக இருக்கவே, இங்கு வந்து வீடு எடுத்தான். வாடகை குறையுமே என்பதற்காக.
அதனால் தினமும், அவனிடம் உள்ள பழைய சைக்கிளை மிதித்துக் கொண்டுதான் போய்வந்து கொண்டிருந்தான். காலையில் ஏழு மணிக்கு கிளம்பி விடுவான் இரவு பத்து மணிக்கு மேல்தான் வீடு வந்து சேருவான்.
வீடு, காசுக்கு ஏத்த பணியாரம் என்பது போல்தான். ஒரு சமையலறை, ஒரு சின்ன படுக்கையறை இரண்டையும் இணைக்கும் இடைப்பட்ட இடம்தான் ஹால் என்ற பெயரில் இருந்தது. அந்த ஹாலில்தான் குளியலறை, கழிவறை எல்லாம்.
வேறு வேறு சவுகரியங்கள் குறைவாக இருந்தாலும் சாப்பாட்டுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் மருமகள் தாராவுக்கு நிறைய மனச்சலிப்பு இருந்தது. சின்ன வயசு, ஆசைகள் அதிகம் இருக்கும்தானே. பாவம்தான் அவளும் என்று நினைத்துக் கொள்வாள் வேதநாயகி.
கல்யாணமாகி பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு தான் வேலு பிறந்தான். எனவே கொஞ்சம் கூடுதலான பாசம் காட்டித்தான் வளர்த்தார்கள் வேதநாயகியும், மாணிக்கமும்.
மாணிக்கம் பெயரில் மட்டுமல்ல குணத்திலும் மாணிக்கமேதான். கூலி வேலைதான் பார்த்தாலும் கிடைத்ததை அப்படியே கொண்டு வந்து மனைவி கையில் கொடுத்து விடுவார். எந்த கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை ஆகாதவர்.
வேலை நேரத்தில் ஒரு கப் டீ, காப்பி கூட குடிக்க மாட்டார். அந்த காசை வீட்டில கொடுத்தா மூணு பேருமே டீ குடிச்சிடலாமே என்பார். மகனையும் மனைவியையும் இரு கண்ணாகத்தான் பாவித்தார்.
அப்படி மிகப் புரிதலோடு வாழ்ந்த மனுசன் இப்ப ஏன் இப்படி எதையுமே புரிஞ்சுக்காம நடந்துக்கறார் என்ற தவிப்புதான் வேதநாயகிக்கு.
இரவு வீடு திரும்பும் மகனுக்காக அவன் பிள்ளைகளும், மனைவியும் காத்துக் கிடக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல், உள்ளே நுழைந்ததும் ஏதாவது கேள்வி கேட்டு அவனுடன் பேசத் தொடங்கிடறார்.
அவனும் சொல்ல முடியாம தவிப்போட பேசிகிட்டு நிக்கறான். உள்ளே மருமக கொந்தளிக்கிறா.
“வரதே அர்த்த ராத்திரியில, இதில நீங்க உங்க அப்பா அம்மாவோட கொஞ்சிக் குலாவிட்டு எப்ப வந்து சாப்பிடறது. நான் எப்ப ஒண்ட ஒதுங்க வச்சிட்டு படுக்கறது. உங்களோட நாலு வார்த்தை நானும் பிள்ளைங்களும் அப்பறம் என்னத்தை பேசறது. பேச ஆரம்பிச்சதுமே உங்களுக்கு கண்ணை இழுக்கும். சரி காலையில சீக்கிரம் எழுந்திரிச்சு கிளம்பனுமேன்னு நானும் விட்டுட வேண்டியதாப் போகுது. வாழ்க்கையே இப்படித்தான் ஆக்கறதும், திங்கறதும், தூங்கறதுமா போவுது” என்று ஒருநாள் தன் மனஆதங்கத்தை தாரா கொட்டிக் கொண்டிருந்தது வேதநாயகியின் காதுகளிலும் விழுந்தது.
விழட்டும் என்று கூட பேசி இருக்கலாம். தப்பு ஒண்ணும் கிடையாது. அவளுடைய நிலமையில யாராக இருந்தாலும் இந்தக் கோபம் வரத்தான் செய்யும்.
நாம அந்தக் காலத்தில இதை விட கொறச்ச சம்பாத்தியத்தில இருந்தாலும், எப்படி சந்தோஷமா கூடிப் பேசி, ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்டு, அனுபவிச்சு வாழ்ந்தோம். அந்த வாய்ப்பு இப்ப மருமகளுக்கு கிடைக்காமப் பண்றதுக்கு நாமளே காரணமா இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வேதநாயகி.
அதற்காகவே மகன் வரும்போது ஹாலின் மூலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்வாள். காலையிலும் அவன் கிளம்பும் வரை எழுந்திரிக்க மாட்டாள்.
ஞாயிறு ஒரு நாள் தான், அதுவும் அரை நாள் லீவு உண்டு வேலுவுக்கு. மனைவி மக்களுடன் கூடிக் களிக்க அவனுக்கும் அதை விட்டால் வேறு நாள் கிடையாது.
இதெல்லாம் புரியாமல் இவர் பிள்ளையை விடாப்பிடியாக இழுத்து இழுத்து வைத்துக் கொள்வதால், மகன் பாடுதான் திண்டாட்டமாகிறது.
வீட்டில் இருந்தால்தானே இப்படி என்று விடுமுறை நாளில், சாமான் வாங்கனும், மாவு அரைக்கனும் இப்படி ஏதேதோ சாக்குச் சொல்லி, அந்தப் பிள்ளையை கொஞ்சமும் ஓய்வெடுக்க விடாமல் வெளியில் அழைத்துப் போகத் தொடங்கி விட்டாள் தாரா.
இது எதையும் இவருக்குப் புரிய வைக்க முடியலை. என்னன்னே தெரியலை எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறாரு. சாப்பிட எதைக் கொடுத்தாலும், அது இல்லையா இது இல்லையான்னு கேட்டு அந்தப் பொண்ணோட எரிச்சலை சம்பாதிச்சுக்கறாரு.
நம்ப இருக்கறதால கூடுமான வரைக்கும் இவருடைய தேவைகளை பாத்துப்பாத்து செஞ்சிடறோம். இவர் ஏதாவது பேசிட்டாலும், “மனசில வச்சிக்காதம்மா, வயசான கோளாறு வந்திட்டுப் போல உன் மாமனாருக்குன்னு” ஏதாவது சொல்லி கொஞ்சம் அவளை சமாதானப்படுத்திடறோம்.
நமக்கும் வயசு எழுபதை தாண்டிடுச்சு, அவருக்கு எண்பதுகிட்ட நடக்குது. எப்பப் யாரு முன்னாடி போவோமோ தெரியாது. நமக்குப் பின்னாடி இந்த மனுசன் இருந்தார்னா, அந்தப் பொண்ணு எப்படிப் பாத்துக்கும், இப்பிடி வெறுப்பை சம்பாதிச்சுக்கிறாரேன்னு தான் தவிப்பு வேதநாயகிக்கு.
யோசிச்சு யோசிச்சு கடைசியா மனசில உள்ளதை எல்லாம், பேரப் பிள்ளைங்க கிழிச்சுப் போட்ட ஒரு பேப்பரை எடுத்து, தினம் சமயம் கிடைத்தபோதெல்லாம் ரெண்டு ரெண்டு வரியா எழுதி வச்சு, சந்தர்ப்பம் கிடைத்தபோது, மாணிக்கத்திடம் கொடுத்து விட்டாள்.
புரியாத அதிர்ச்சியில் நிமிர்ந்து பார்த்த கணவரிடம் கண்களாலேயே படிக்கும்படி இறைஞ்சினாள்.
அந்தப் பார்வையையும் தவிப்பையும் உணர்ந்த மாணிக்கம் மறுப்பேதும் சொல்லாமல் கடிதத்தை வாங்கிப் படித்தார். பென்ஸிலால் எழுதப்பட்டு இருந்ததாலும், அங்கங்கே கண்ணீர் கறைபட்டு இருந்ததாலும், எழுத்துக்கள் தெளிவின்றி இருந்தாலும், அவள் உள்ளத்தவிப்பு தெளிவாகத் தெரிந்தது மாணிக்கத்திற்கு.
கொஞ்ச காலமாகவே, தனது அந்திம காலம் நெருங்கி விட்டதாக ஒரு உணர்வு அவருக்கு வரத் தொடங்கி இருந்தது. தன் இழப்பு வேதநாயகியை வருத்தக்கூடாது என்பது மட்டுமின்றி, தனக்குப் பிறகு தனித்து விடப்பட்டு விடக்கூடாது தன் மனைவி என்பதற்காகவே இந்த நாடகத்தை நடத்தி வந்து இருக்கிறார் மனிதர்.
நம்மீது வரும் வெறுப்பினாலும், தனக்கு சப்போர்ட்டாகப் பேசுவதால் வேதநாயகி மேல் கூடுதலாக கனிவும் மருமகளுக்கு வரக்கூடும் என்ற தன் நினைப்பு புரியாமல் மனைவி தன்னை நினைத்து கலங்குகிறாளே என்றெண்ணி வருந்தியவர், வேண்டாம் இந்த நாடகமெல்லாம் வாழும் வரை இவளை நிம்மதியாகவே வாழவைப்போம். இவளுக்காக நானும், எனக்காக இவளும் காவல் தெய்வமாக நின்று, காப்பதாக நினைத்து வேதனையில் உழல்வதைவிட, உயிர்மூச்சு உள்ளவரை உள்ளம் நிறைந்தே வாழ்வோம் என்று எண்ணியவர், மனைவியின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து, “இனி உன் மனசு நினைக்கறாப்பலயே நடந்துக்கறேன்” என்றார் கிசுகிசுப்பாக.
வேதநாயகியின் மனபாரம் அந்த ஒற்றை வார்த்தையில் ஓடி மறைய, கண்கள் கசிய மனம் நிறைந்து முறுவலித்தாள். அங்கே அந்த இருவரின் வார்த்தைகளற்ற பார்வைப் பரிமாற்றத்தில் ஒரு காதல் இருக்கத்தான் செய்தது. பரிபூரண அன்பின் வெளிப்பாடாக.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அழகோவியம்.. உங்கள் கதை என்றுமே எதார்த்தம் நிறைந்ததாகவே இருக்கிறது மா. நான் மிகவும் ரசித்துப் படித்தேன்.