2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஆபீஸ் பாய் வந்து சொன்னான், ஜி.எம் கூப்பிடறாருனு. கதவை பேருக்கு தட்டிட்டு உள்ளே நுழைஞ்சேன், காலங்காத்தாலே என்ன எறிஞ்சு விழுவானோ இந்த மணுஷன்னு நினைச்சிண்டே.
“வாங்க சத்தியமூர்த்தி”னு சிரிச்ச முகத்தோட ஜி.எம் வரவேற்றது ஆச்சரியமா இருந்தது. புலி பதுங்கறதோனு சந்தேகத்தோடயே எதிர்ல உக்காந்தேன்.
“என்ன சத்தியமூர்த்தி அக்டோபர் மாசம் வருது, பர்த்டேக்கு என்ன பிளான் வச்சிருக்கீங்க?”
அவர் கேட்டவுடன்தான் எனக்கும் ஸ்ட்ரைக் ஆச்சு, அட அடுத்த மாசம் 15ம் தேதி பிறந்தநாள் வருதே, ஆனா இத்தனை வருஷமா இல்லாம என் பிறந்தநாள்ல இந்த ஆளுக்கு என்ன திடீர் அக்கறை?
அவரே சொல்லிட்டார் அடுத்தாப்பல, “அக்டோபர் 14ம் தேதி நம்ம கம்பெனில உங்களுக்கு சர்வீஸ் கடைசி நாள்”
எனக்கு ஒரே ஷாக், 60 வயசு முடிஞ்சு போனதுல, அதுவும் சரியா 60 வயசு முடிஞ்ச உடனே போகச் சொல்லிடுவாங்களா? 38 வருஷமா உழைக்கறேனே, நான் இல்லாம என் வேலையெல்லாம் யார் பாப்பா? கம்பெனி ஓடுமா? நிஜமாவே 60 வயசு முடியறதா, டேபிளுக்கு கீழே கை வச்சு விரல் விட்டு எண்ணிப் பாத்தேன். ஆமாம் நிஜம்தான்.
இந்த ஜி.எம். திருடன் தன் மச்சினனை என் இடத்துக்கு கொண்டு வர கழுகா காத்திண்டிருக்கான். எனக்கு பேச்சே வரலை.
“ஆமாம் சார், சரி சார், வரேன் சார்” னு வெளில வந்துட்டேன். என் கேபினுக்கு திரும்ப போய் உக்கார ஏன் இவ்வளவு நேரம் பிடிக்கறது. அஞ்சு நிமிஷத்துல கிழவனாயிட்டேனே.
என் ஸ்டெனோ மீனா, நமுட்டுச் சிரிப்போட “என்ன தாத்தா, 15 நாள்ல ரிடையர்டா”னு கேக்கற மாதிரி தோணித்து.
ஆபிஸ் பாய் கதவை திறந்துண்டு வந்து “என்ன சார் ஆச்சு, காபி கொண்டு வரட்டா?”னு கேட்டான்.
“என்னடா ஆச்சு எனக்கு, காபி வேணும்னா கூப்பிட மாட்டேனா?”
“இல்லை… மீனா மேடம்தான் சொன்னாங்க, சாருக்கு ஏதோ உடம்பு சரியில்லை போல போய் பாருன்னு”
“நான் நல்லாதானே இருக்கேன், ஏன் திடீர்னு எல்லாரும் என்னை பாடா படுத்துறீங்க”னு சீறி விழுந்தேன்.
அவன் பேசாம “சரி சார்”னு போயிட்டான்.
ஏன் என் கை கால் இப்படி நடுங்கறது. சே ஒண்ணுமில்லை 60 வயசு ஆனா என்ன இப்ப, என் அப்பா 64 வயசு வரை இருந்தாரே. ஐயோ அப்ப நானும் இன்னும் 4 வருஷந்தானா?
பி.எஃப் பணம் எவ்வளவு இருக்கும், கம்பெனில இருந்து எவ்வளவு வரும்? எல்லாம் சேத்து ஒரு 20 லட்சம் வருமா? இன்னும் 4 வருஷம்னா வருஷத்துக்கு 5 லட்சம். ஐய்யோ என்ன இது நம்ம வாழ்வு இன்னும் நாலு வருஷம்தான்னு முடிவே பண்ணியாச்சா?
பெரியப்பா 82 வயசு வரைக்கும் இருந்தாரே, நம்ம சுந்து மாமா பிராணனை விடறப்ப 85 இருக்குமா? என்னாச்சு எனக்கு இப்பிடி வயசு கணக்கு போட்டுண்டு உக்காந்திருக்கேன்.
அன்னிக்கு பூரா வேலை ஓடலை, பேப்பரை புரட்டினா அபிச்சுவரிதான் கண்ல படறது. ஒவ்வொருத்தரும் சாகறப்ப எத்தனை வயசுனு தேடறேன்.
அருணாசலம் செட்டியார் சிவலோகப் பதவி அடைந்தார். தோற்றம் 17 ஆகஸ்ட் 1940 – மறைவு 24 செப்டம்பர் 2012. அப்ப 72 வயசு இருந்திருக்கார். 72ல இருந்து 60வதை கழிச்சா இன்னும் 12 வருஷம் இருக்கே, அட போய்யா, அருணாசலம் செட்டியாருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
சாயந்தரம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிட்டேன். நான் கொஞ்சம் சிடுமூஞ்சியா இருந்துட்டேனோ? நான் ரிடயர்ட் ஆறது தெரிஞ்சு எல்லா ஸ்டாஃபும் சந்தோஷப்படற மாதிரி தெரியறதே. நான் ஆபீசை விட்டு வெளியே வந்தவுடனே டான்ஸ்லாம் ஆடுவாளோ?
வீட்ல நுழைஞ்சவுடனே ஷூவை மட்டும் கழட்டி எறிஞ்சிட்டு சோபால தொப்னு விழுந்தேன். மனைவி, உக்காந்து சீரியல் பாத்துட்டிருந்தா, பையன் மொபைல் மேஞ்சிட்டிருந்தான். என்னை கவனிச்சதாவே தெரியலை.
இவங்களுக்கும் தெரிஞ்சு போச்சா, 15 நாள்ல வேலையில்லாம வீட்ல உக்காரப் போறேன்னு. உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கானு சமந்தா பல் வழிய சிரித்த போது அலமு சத்தியமூர்த்தியை பாத்து புன்முறுவல் செய்தாள்.
“என்ன இன்னிக்கு, ‘பணம் படுத்தும் பாடுக்கே’ வந்துட்டேள், ‘இதயவீணைக்குன்னா’ வருவேள்”
ஒரு சின்ன உறுமல்தான் பிறந்தது என் தொண்டைல இருந்து.
“என்ன ஒரு மாதிரி இருக்கீங்க, காபி கலந்து கொடுக்கட்டா?”
“உன் சீரியலை நீ பாரு, நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்”னு பெட்ரூமுக்கு போனேன்.
அலமு டீவியை அணைச்சிட்டு பக்கத்தில் வந்து உக்காந்ததை கண் மூடி படுத்திருந்தாலும் உணர முடிந்தது.
“என்ன ஆச்சு சொல்லுங்கோ, தலை வலியா? ஆபீஸ்ல ஏதாவது பிராப்ளமா?”
எழுந்து உக்காந்தேன். “ஏண்டி அலமு, இந்த குடும்பத்தை உன்னால் தனியா சமாளிக்க முடியுமா? பேங்க், வரவு செலவு , டாக்ஸ, எலக்ட்ரிக்பில் கட்றது எல்லாம் கத்துக்கோனு எத்தனை வருஷமா சொல்றேன். ஒரு ஏ.டி.எம்.ல இருந்து பணம் எடுக்க கூட தெரியாம இப்படி இருக்கயே, என்ன பண்ணப் போறே?”
“ஏன் இப்படி தத்து பித்துனு உளறரேள், நீங்க எங்கே போகப் போறீங்க, நீங்க இருக்கறப்ப எனக்கு என்ன கவலை?”
“அடியே என் மக்கு பொண்டாட்டி, இன்னும் 20 நாள்ல எனக்கு 60 வயசு ஆறது”
“அடுத்த 14ம் தேதி ஆபீஸ்ல கடோசி நாள். எங்க வழில அப்பா, தாத்தா எல்லாரும் 64, 65 வயசுல போய் சேந்தாச்சு. அப்படி பாத்தா எனக்கும் இன்னும் 4 வருஷம்தானே?”
சட்னு என் வாயை பொத்தினாள் அலமு.
“உளராதீங்கோ, நான் காபி கலந்து கொண்டு வரேன்”
அவளுடைய பொங்கிய கண்ணீரை என்னிடமிருந்து மறைக்க எழுந்து ஓடினாள் சமையலறைக்கு.
அடுத்து வந்த நாட்கள் எந்திரத் தனமாய் கடந்தது. அந்த 14ம் தேதியும் வந்தது. அன்று பூராவும் என் கேபினில் பொம்மை போல உக்காந்திருந்தேன். 4 மணிக்கு ஜி.எம் தானே என் கேபினுக்கு வந்தார்.
“என்னாச்சு சத்தியமூர்த்தி? ஒரு வாரமா ஒரு ஃபைலும் எனக்கு உங்ககிட்ட இருந்து மார்க் பண்ணி வரலை? அந்த நெதர்லாண்ட் கம்பெனியோட ஒரு பெரிய ஆர்டர் இன்னும் ஃபைனலைஸ் ஆகலையே? ஒண்ணு பண்ணுங்க, நீங்க அடுத்த வாரம் நேரா போய் பாத்து பேசி அந்த ஆர்டரை ஃபைனல் பண்ணிட்டு வந்திருங்க”
எனக்கு ஒண்ணும் புரியலை, “சார் நீங்க சொன்னீங்களே இன்னிக்குதானே என் சர்வீஸ் முடியுது?”
“போய்யா பைத்தியக்கார மனுஷா, அவ்வளவு சீக்கிரம் எங்க சீனியர் மேனேஜரை விட்டுடுவோமா? சும்மா உங்க ரியாக்ஷனை பாக்கதான் சொன்னேன். போய் பெட்டியை பேக் பண்ணும், இப்ப அங்கே குளிர் ஜாஸ்தி இருக்கும், புதுசா சூட், ஜாக்கெட் எல்லாம் வாங்கிடுங்க. கேஷியர் கேஷ் கொண்டு வந்து கொடுப்பார். சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்திருங்க, நீங்க இல்லாட்டா திண்டாடி போயிடுவேன். குட் லக் டு அஸ்”
எனக்கு பேச்சே வரலை. முஸதஃபா, முஸதஃபா டோண்ட் ஒரி முஸதஃபானு விசில் அடிச்சேன். வயசு ஒரு பத்து வருஷம் குறைஞ்சு போச்சு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை.