in ,

மூன்று கோடுகள் (சிறுகதை) – திசை சங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ருநாள் மனோஜ் எனக்குப் போன் செய்து ஏசியைச் சரி செய்ய வருமாறு கூறினான்.. அன்று தி.நகரில் தீ நகர்வதைப் போல வெயில் இருந்தது! சூடு தாங்க முடியாத புறாக்கள் அகல்யா அப்பார்ட்மெண்டின் ஏசிகளிலிருந்து வடிந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தன.

அந்த அப்பார்ட்மெண்டின் பின்புறம்தான் இருந்தது அந்த வீடு. எப்பொழுதும் ஏசி ஓடிக் கொண்டிருக்கும் அது ஒரு சிறிய வீடு. அதன் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் ஆனது. உள்ளே ஒரு டேப் கட்டிலில் படுத்திருந்தார் தாத்தா.

அவரைக் குளிப்பாட்டிச் சாப்பிட வைப்பதற்காக உள்ளே வந்தான் மனோஜ். அவன் படித்தது பி.எஸ்சி நர்சிங் தான். என்றாலும் கொஞ்ச நாள்களாக அவனுக்கு இந்த ஹோம் நர்சிங் வேலையில் விருப்பமில்லை. மற்ற நண்பர்கள் போல் பொறியியல் படித்திருந்தால் இந்நேரம் ஏதேனும் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம் என்று அவன் ஏங்குவதுண்டு.

சற்று வெறுப்போடு அவரை எழுப்பி, கைபிடித்துக் குளியலறைக்கு அழைத்துச் சென்றான். இரண்டு கைகளிலும் உறை அணிந்து கொண்டான். டப்பாவில் இருந்து சில சொட்டுத் தண்ணீர் மேலே விழவும் தாத்தா ஒரு நாய்க்குட்டியைப் போலத் தன் உடலைச் சிலுப்பினார். மெதுவாக நீர் அவரது உடல் முழுவதும் பரவியது. அவருக்குப் பிடித்த மைசூர் சாண்டல் சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினான்.

மெதுவாக ஒரு துண்டால் தலை துவட்டிப் பின் உடலையும் துடைத்தான். அவருக்கான வேட்டியையும் சட்டையையும் மாட்டி, நாற்காலியில் அமர வைத்தான். பக்கத்து வீட்டு வசந்தாக்கா கொண்டு வந்த இட்லியைச் சாப்பிட வைத்தான். இவற்றை எல்லாம் போட்டோவில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தாவின் பெஞ்சாதி.

தாத்தாவை வாரத்திற்கு இரண்டு நாள்கள் குளிப்பாட்டினால் போதும். மற்ற நாள்களில் அவ்வளவு வேலை இருக்காது. மருந்து மாத்திரைகள் சரியான நேரத்தில் கொடுத்து விடுவான் மனோஜ்.

நானும் உள்ளே தான் இருக்கிறேன். நான் ஒரு ஏசி மெக்கானிக். சர்வீஸ் செய்வதற்காக வந்திருக்கிறேன். ஏசியின் ஃபில்டர்களில் தூசி படிந்திருந்தது. காயில்களில் கொஞ்சம் அழுக்கு சேர்ந்திருந்தது. அதனால் தாத்தாவின் அறையில் வெப்பமாக இருந்தது. நான் எல்லாவற்றையும் நன்கு சுத்தம் செய்து மீண்டும் மாட்டினேன். இப்போது அறையில் வெப்பம் குறைந்தது. தாத்தாவும் தூங்கத் தயாரானார்.

அடுத்து நான் வசந்தாக்கா வீட்டுக்கு சர்வீஸ் செய்வதற்காகச் சென்றேன். அப்படியே தாத்தாவைப் பற்றியும் விசாரித்தேன்.

“அக்கா! தாத்தாவுக்கு ஆகுற செலவு எல்லாம் யாரு பாத்துக்குறாங்க?”

“தாத்தாவுக்கு ஒரு மகன் இருக்காருபா. அவர் போலீஸ். இந்தாண்ட இருக்கற அகல்யா அப்பார்ட்மெண்ட்ல தான்பா இருக்காரு.”

“அப்புறம் ஏன்க்கா இவர கூட வச்சு பாத்துக்கல?”

“என்னதான் போலீஸாவே இருந்தாலும் அவரும் சூழ்நிலைக்குக் கைதி தானபா!”

“என்னக்கா சொல்றீங்க?”

“ஆமாப்பா மொதல்ல தாத்தா அங்கதான் இருந்தாரு.. தாத்தா அங்க இருக்கிறது போலீஸ்காரர் வைஃப்க்கு பிடிக்கல. அவங்களால கவனிச்சுக்க முடியல. அதுக்கு அப்புறம்தான் மனோஜ் வந்தான். அப்பப்போ நானும் பாத்துக்குறேன். மாசம் ஆனதும் சரியா காசு வந்துடும்பா.”

“சரிக்கா” என்றபடி அங்கு வேலையை முடித்துவிட்டு நானும் வீடு திரும்பினேன்.

மனோஜ் வேலை தேட உதவும் பல செயலிகளைத் தரவிறக்கிப் பதிவு செய்தான். தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில், அவன் கூடிய விரைவில் வேறு வேலைக்குச் செல்ல இருப்பதாக அறிவித்தான்.

நானும் பல அப்பார்ட்மெண்ட்களுக்குச் சென்று ஏசிகளோடு குடும்பம் நடத்திக் கொண்டிருந்தேன். சில நாள்களுக்குப் பிறகு திடீரென மனோஜிடமிருந்து ஒரு போன் கால் வந்தது.

“டேய்! தாத்தா வீட்ல ஏசி சரியா ஓடலடா. கூலிங்கே வரல. தாத்தாவால உள்ள இருக்க முடியல. நீ சீக்கிரம் வாடா” என்றான்.

“நீ வெளிய எங்கயோ வேலைக்குப் போறதா சொன்ன. அங்க எப்டி?”

“நீ நேர்ல வாடா. எல்லாம் டீடேய்லா சொல்றேன்”

நானும் பைக்கை எடுத்துக் கொண்டு தாத்தாவின் வீட்டுக்குச் சென்றேன்.

“டேய்! நீ எப்படா இங்க வந்த?”

“நேத்து தான்டா.. என்னால அங்க வேலை பண்ண முடியலடா. வசந்தாக்கா தான் சொன்னாங்க. புதுசா வேற ஒரு பையன் இங்க வந்திருந்தானாம். ஆனா தாத்தா  ‘மனோஜ் மனோஜ்’ன்னு என் பேரச் சொல்லி கூப்டு இருக்காருடா! சரியா சாப்பிடவே இல்லையாம்டா. அதான் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. வேலைய விட்டுட்டு இங்க வந்துட்டேன். எனக்கு இதுதான்டா செட் ஆகும். அது மிஷின் லைஃப்டா”

“சரிடா.. நீ அவர பாத்துக்கோ.. நான் ஏசிய சரி பண்றேன்.”

நான் ஏசியை நன்றாகக் கவனித்தேன். ஸ்டெபிலைசரில் அவுட்புட் வந்தது. இன்டோர் யூனிட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. வெளிப்புறம் சென்று பார்த்தேன். ஏசியின் அவுட் டோர் யூனிட்டில் ஏதோ சத்தம் வந்தது.

மேல் மூடியைக் கழற்றிப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. உள்ளே அணில் கூடு ஒன்று இருந்தது. எத்தனை நாள் உழைப்பு என்று தெரியவில்லை. அந்த மெத்தையில் மூன்று அணில் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தன.

அந்தக் கூட்டில் இருந்த துணிகள் மோட்டாரில் சிக்கியதால் ஃபேன் ஓடவில்லை. ஃபேன் ஓடினால்தான் வெப்பம் வெளியேறும்; கூலிங் வரும். நான் ஏசியை ஆஃப் செய்து விட்டேன்.

“கூட்டை எடுத்து விட்டுருடா. ஏசி ஓடலன்னா தாத்தாவால இருக்க முடியாது, அத எடுத்துடு” என்றான், மனோஜ்.

நானும் அதே முடிவெடுத்தேன். ஆனால், தாத்தா என்னைத் தடுத்தார்.

“வேண்டாம்பா. அத அப்படியே விட்டுடு. அதுங்க வாழட்டும்! இன்னும் கொஞ்ச நாள்ல வளந்து அதுங்களா எங்கனாச்சும் போயிடும். நான் பாத்துக்கிறேன். எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல. அந்த சீலிங் ஃபேனை மட்டும் போட்டு விடு” என்றார் தாத்தா.

நானும் அப்படியே செய்தேன். மனோஜும் எதுவும் பேசவில்லை. தாத்தா அந்த வெக்கையிலேயே வாழப் பழகி விட்டார். தினமும் ‘கீச் கீச்’ ஒலியெழுப்பி அவை தாத்தாவை எழுப்பி விட்டன. அந்தச் சத்தம் தாத்தாவை இன்னும் இளமை ஊஞ்சலாட வைத்தது.

அன்று இரை தேடிச் சென்ற தாய் அணில் வராததால் குட்டிகள் கத்திக் கொண்டே இருந்தன. மனோஜ் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தான். தாத்தா தனக்கு வாங்கிய பாலைக் கொஞ்சம் தனியே எடுத்துச் சூடுபடுத்தச் சொன்னார்.

அந்த இளஞ்சூடான பாலை ஒரு இன்க் பில்லரில் எடுத்து மூன்று பிள்ளைகளுக்கும் ஊட்டச் சொன்னார். மனாஜும் தாத்தா சொன்னபடியே செய்தான். இரண்டு வாரங்கள் கழித்து அவை கண் விழித்தன. இப்போது தாத்தாவோடு சேர்த்து மொத்தம் நான்கு பிள்ளைகளையும் பார்த்துக் கொள்கிறான் மனோஜ்.

வீட்டின் மூலையில் கிடந்த ஒரு அட்டைப்பெட்டியைத் துளையிட்டு அவற்றுக்கு ஒரு வீடு செய்தான் மனோஜ். மூன்று குட்டிகளையும் அதற்குள்ளே வைத்தான். நாய், பூனைகள் சீண்டாதவாறு அவற்றைக் கவனித்துக் கொண்டான். இப்போது அவை வீட்டில் உள்ள பழங்களைக் கொறித்துக் கொறித்துச் சாப்பிட்டன.

சில நாள்கள் கழித்து அவை தாத்தாவின் கட்டிலில் ஏறி விளையாடின. தாத்தாவும் அவற்றோடு விளையாடினார். அன்று வசந்தக்கா கொண்டு வந்த இட்லியைத் தாத்தா ஒரு அணிலைப் போலக் கொறித்துக் கொறித்துச் சாப்பிட்டார். அவன் அதை ஆச்சரியமாகப் பார்த்தான். இருந்தும் எதுவும் பேசவில்லை. தாத்தாவைத் தூங்க வைத்துவிட்டு வீடு திரும்பினான்.

மறுநாள் தி.நகரில் ஒரே மழை. தாத்தாவின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் ட்ரம்ஸ் சிவமணியாக மாறிக் கொண்டிருந்தன மேகங்கள். புறாக்கள் நனைந்த சிறகுகளை உலர்த்திக் கொண்டிருந்தன. மனோஜ் மெல்ல வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே எந்த அரவமும் இல்லை. ஏசி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. அட்டைப்பெட்டிக்குள் இருந்த மூன்று அணில்களையும் காணவில்லை. அவன் தாத்தாவை எழுப்பினான். தாத்தா எழுந்திருக்கவே இல்லை. இப்போது அவன் கண்களுக்குத் தாத்தாவின் தோல் சுருக்கங்கள் எல்லாம் மூன்று மூன்று கோடுகளாய்த் தெரிந்தன. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

கண்ணீர் அவன் கண்களை மறைத்தது. அப்போது ஜன்னலில் ஏதோ ஒன்று அணில் வால் போலத் தெரிந்து மறைந்தது.

“தாத்தா இப்போது ஒரு அணிலாக மாறி, தன் கூட்டை விட்டு வெளியேறி அகல்யா அப்பார்ட்மெண்ட்டில் தன் மகன் குடியிருக்கும் அறையின் ஏசியில் கூடு கட்டச் சென்றிருப்பார்” என்று நினைத்துக் கொண்டான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 1) – கவிஞர் இரஜகை நிலவன்

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 8) – முகில் தினகரன்