2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வெளியே நிலைப்படியில் நின்று ஆரவாரத்துடன் கொட்டும் மழையை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. வெள்ளிக் கம்பிகளாய் பூமியையும் வானத்தையும் இணைத்துக் கொண்டு இடையறாமல் பெய்து கொண்டிருந்தது மழை.
மணமகள் ஊர்வலமாக வரும் போது வாசிக்கும் நாதஸ்வரமும், தவிலும் போல் மின்னலும் இடியும் மழையென்னும் மணப்பெண்ணுக்கு கட்டியம் கூறி வரவேற்றது. பவித்ராவிற்கு மழையென்றால் மிகவும் பிடிக்கும்.
ஒரு வருடத்திற்கு முன்பு தான் அமெரிக்காவில் இருந்து வேலை போய், பாண்டிச்சேரிக்கும் கடலூருக்கும் இடையில் ஒரு கிராமத்தில் குடியேறினர் பவித்ராவும் அவள் கணவன் சுரேஷும். அமெரிக்காவில் கடனில் வாங்கியிருந்த ஆடம்பரமான இரண்டு மில்லியன் வீடுகளும், ஆடம்பரமான இரண்டு பேட்டரி கார்களும், ஒரு பென்ஸ் காரும் (கணவன், மனைவி, ஒரு குழந்தை மட்டும்) என மூன்று பேருக்கு மூன்று கார்கள் என்று அனுபவித்து கன்னா பின்னா என்று செலவு செய்து கடைசியில் வேலை போன பின் சொற்பத் தொகையுடன் இந்தியா திரும்பினர்.
மாமியார் வீட்டில் எல்லோரும் மிகவும் நல்லவர்கள். வேலை இழந்து, சௌகர்யமான வாழ்க்கையை இழந்து வந்த அவர்களை பிரியமாகவே நடத்தினார்கள். அவர்கள் எல்லோரும் நடுத்தரக் குடும்பத்தினரே. கைக்கும் வாய்க்கும் சரியாகவே இருக்கும், ஆனாலும் இவர்களிடமிருந்து அவர்கள் எதையும் எதிர்ப்பார்ப்பவர்கள் இல்லை. ஆனால் கொஞ்சம் தூரத்து உறவினர்கள் தான் இவர்களிடமிருந்து எல்லா வகையான உதவிகளையும் எதிர்பார்த்தனர்.
பவித்ராவின் கணவன் சுரேஷோ கொஞ்சம் தாராளமானவன், கர்ணனுக்குப் பங்காளி. அதனால் சுரேஷின் தந்தை மகனை அழைத்து, “சுரேஷ், பவித்ரா நீங்கள் கொண்டு வந்திருக்கும் பணத்தை வாரி இறைத்து விடாதீர்கள். நம் வீட்டிற்கு அருகில் ஒரு ஏக்கர் நன்செய் நிலம் விலைக்கு வந்திருக்கிறது. அதை உங்களிடமிருக்கும் பணத்தில் அந்த நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் ஒரு ஓரமாக சிறிய வீடு கட்டலாம். ஒரு கமலைக்கிணறு ஒன்று வெட்டினால் தண்ணீர் தளராது கிடைக்கும். மீதி இருக்கும் இடத்தில் கீரைகளும், காய்கறிகளும், பழங்களும் பயிர் செய்யலாம். நீங்கள் சிக்கனமாக வாழ்ந்தால், சௌகர்யமாக வாழலாம். என்ன சொல்கிறீர்கள்?” என்றார்.
மகனும் மருமகளும் அவர் சொல்லுக்கு அப்படியே கட்டுப்பட்டு நடந்தனர். அப்படி வாங்கிய நிலத்தில் கட்டிய சிறிய ஓட்டு வீட்டில் நின்ற படிதான் பவித்ரா மழையை ரசித்துக் கொண்டிருந்தாள்.
நிலத்தின் ஒரு பக்கத்தில் பத்து மாமரங்களும் இருபது தென்னங்கன்றுகளும் வளர்ந்து கொண்டிருந்தன. ஒரு பக்கத்தில் வாழை மரங்களும், இன்னொரு பக்கம் முருங்கை மரங்களும் தளதளவென்று வளர்ந்து கொண்டிருந்தன. எல்லாவிதமான காய்கறிகளும் பயிரிட்டிருந்தனர்.
பிஞ்சு கத்தரிக்காய்கள், வெவ்வேறு நிறங்களில் நாக்கில் எச்சில் ஊற வைத்தது. கல்லைக் கட்டிக்கொண்டுத் தரையைத் தொட்டுக் கொண்டு நின்ற பாம்பு போன்ற புடலங்காய்களும், பளபளவென்று மின்னும், நிஜமாகவே பெண்கள் விரலைப் போல் வழுவழுப்பான, வெண்டைக்காய்களும் பவித்ராவின் தோட்டத்தில் பூத்துக் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தது.
கசப்பான பாகற்காய் கூட பளபளவென்று காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தது. இந்தச் செடிகளுக்கெல்லாம் எதுவும் உள்ளே நுழைந்து விடாதபடி முள் வேலி வேறு போட்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் கோழி வேறு வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அது முட்டை வைத்து குஞ்சு பொறித்திருப்பார்கள் போல் இருந்தது. டென்னிஸ் பால்கள் போல் வெவ்வேறு நிறங்களில் கோழிக் குஞ்சுகள். வீட்டு உபயோகத்திற்காக ஒரு சிந்திப் பசு ஒன்று கட்டப் பட்டிருந்தது. அதன் அருகில் இரண்டு கன்று குட்டிகள்.
ஒரு கோனார் வந்து பால் கறந்து வீட்டு உபயோகத்திற்கும், பசுவின் கன்றுகளுக்கும் என்று பாலை விட்டு விட்டு மீதிப் பாலை சொசைட்டியில் விற்று காசாக்கி சுரேஷிடம் கொடுத்து விடுவார். வயலுக்கு தோண்டியிருந்த கிணற்றில் விரால் மீன்களையும் வளர்த்தனர். இத்தனை ஏற்பாடுகளையும் செய்தவர் பவித்ராவின் மாமனாரே, அவளுடைய மைத்துனர்களும் எல்லாவற்றிலும் உதவினர்.
மழையில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்த பவித்ராவிற்கு, இங்கிருக்கும் சந்தோஷமும் நிம்மதியும் அமெரிக்காவின் ஆடம்பரமான பங்களாவிலோ, உல்லாசமான கார்களிலோ இல்லையென்றே தோன்றியது.
இங்கு போல் கஷ்டத்தில் கூட நிற்கும் உறவினர்கள் அங்கே ஏது? சுரேஷிற்கு வேலை போய் விட்டது என்றதும் உயிருக்கியிரான நண்பர்கள் கூட தொலைபேசித் தொடர்பைத் துண்டித்து விட்டார்கள். நேருக்கு நேர் பார்க்க வேண்டியிருந்தாலும், கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். என்ன இருந்தாலும் நாகரிகத்தில் மிகச் சிறந்த நாடல்லவா !
பவித்ரா தன் வீட்டு நுழைவாசலில், பக்கத்து நிலத்தை எட்டிப் பார்த்தாள். அது பெரிய நிலம். ஒரு வேலி (சுமாராக ஆறறை ஏக்கர்) இருக்கும். இப்போது இவர்கள் வீடு கட்டி வசிக்கும் ஒரு ஏக்கர் நிலம், அவள் மாமனாரின் யோசனையின் பேரில் வாங்கியது, ஆகவே அது பதினாலு கேரட்டிற்குப் பாடுபட்டால் இருபத்தி நான்காக கேரட்டாக வளம் கொழிக்கிறது, ஆனால் இந்த ஒரு வேலி நிலம், அவள் சின்ன மாமனாரின் வற்புறுத்தலுக்காக வாங்கிக் கொண்ட வயிற்று வலி.
அந்த நிலத்தில் பல வருடங்களுக்கு முன்பு யாரோ தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருக்கிறார்கள். அந்தத் தோல் பதனிடும் தண்ணீரும், வேறு சில இரசாயனக் கழிவுகளும் சேர்ந்து பூமியில் ஊறி பூமியையே பாழாக்கியிருந்தது. அதைப் பற்றி உண்மை எதுவும் சொல்லாமல், அவன் அப்பாவுடன் கூட அதைப் பற்றி விவரம் சொல்ல விடாமல் சுரேஷை அவசரப்படுத்தி முன் பணமாக சில லட்சங்களைப் பறித்துக் கொண்டார் சித்தப்பா.
“நம் சித்தப்பாவாக இருப்பதால் ஒரே சதுரமான ஒரு வேலி நிலத்தை இவ்வளவு மலிவாக முடித்துக் கொடுத்திருக்கிறார்” என்று சுரேஷ் தன் தந்தையிடம் பெருமை பீற்றிக் கொண்ட போது தான் அவன் அப்பா சுரேஷை நன்றாக ‘டோஸ்’ விட்டுப் பிறகு அந்த நிலத்தின் தன்மையைக் கூறினார்.
“அந்த நிலத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலை இருந்ததால் நிலத்தின் மண் மட்டும் கெட்டுப் போகவில்லை. அந்த நிலத்தின் கிணற்றிலிருந்து குடித்த நீரால் இரண்டு பசு மாடுகள், நான்கைந்து ஆடுகள் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்து விட்டன.
“அதையெல்லாம் உன் சித்தப்பா சொல்லியிருக்க மாட்டானே, அவனுக்கு வேண்டியதெல்லாம் கமிஷன் தொகை. ‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்று நீ படிக்கவில்லையா?” என்றார் கோபமாக.
சுரேஷ் திகைத்து அவன் சித்தப்பாவின் அடாவடித்தனமான பேச்சிற்கு பயந்து ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டபடி, கொஞ்சம் விலையை மட்டும் குறைத்து அவன் அப்பாவின் யோசனைப்படி நிலத்தை சுரேஷ் பெயருக்குப் பத்திரம் பதிவு செய்து கொண்டான். அதோடு அந்த சித்தப்பாவின் திக்கிற்கே ஒரு பெரிய கும்பிடு விட்டு வந்து விட்டான்.
அந்த நிலத்தைப் பார்த்துத்தான் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் பவித்ரா. அப்போது அவள் நீண்ட நாள் தோழி கனகாவின் நினைவு வந்தது. அவள் கோவை விவசாயக் கல்லூரியில் மண்வள ஆராய்ச்சிப் பிரிவில் சீனியர் சையின்டிஸ்டாகப் பணிபுரிந்து வந்தாள். அவள் கூறிய யோசனையைத் தன் கணவனிடமும், மாமனாரிடமும் தெரிவித்தாள்.
பவித்ராவிற்கு அவள் மாமனார் ஒரு தந்தை போல் மட்டுமின்றி, நல்ல ஆலோசகராகவும் விளங்கினார். சின்ன விஷயங்களில் கூட அவருடைய ஆலோசனையின் பேரில் தான் நடப்பாள், அதனால் அவரும் பவித்ராவை மருமகளாக நினைக்காமல் உற்ற மகளாகவே நினைப்பார்.
கனகாவின் ஆலோசனையில் சுரேஷிற்கு ஒன்றும் பெரியதாக அபிப்பிராயமில்லை, ஆனால் பவித்ராவின் மாமனார் “முயற்சி செய்து பார்க்கலாம், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை” என்று துணை நின்றார்.
“கனகாவின் யோசனையால் வீணாக பணம் தான் நஷ்டமாகும் அப்பா. பவித்ரா தான் நம்புகிறாள் என்றால் நீங்களுமா அப்பா?” என்றான் சுரேஷ்.
“மாமா… மொத்த நிலத்தையும் அவள் சொல்வது போல் பண்ண வேண்டாம். ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் நல்ல விளை நிலத்தின் மண்ணை மேல் மண்ணாக கொட்டி, இப்போது நாம் இருக்கும் பண்ணையில் உள்ள கிணற்றுத் தண்ணீரைப் பாய்ச்சி நிலத்தைப் பண்படுத்தலாம். இந்த நிலத்தின் ஒரு மூலையில் குழி வெட்டி சேர்த்து வைத்துள்ள உரக்கலவையையும் போட்டு மண்ணை பக்குவப்படுத்தலாம். பிறகு, கனகா சொன்னபடியே அந்த ஒரு ஏக்கரில் மட்டும் நிலக்கடலை விதைத்துப் பார்க்கலாம். ஒரு ஏக்கர் வரை நிலத்தைப் பண்படுத்த ஒன்றும் நிறைய செலவாகாது இல்லையா மாமா?” என்றாள் பவித்ரா.
“ஒன்றும் நிறைய ஆகாது. வேண்டாதவர்களிடம் எல்லாம் பணம் கொடுத்து நாம் ஏமாறவில்லையா? நாம் மண் மேல் தானே போடுகிறோம்” என்றார் அவள் மாமனார்.
பவித்ரா, அவள் கணவர் மற்றும் மாமனாரின் உதவியுடன் நிலக்கடலையை ஒரு ஏக்கரில் பயிரிட்டாள். கனகாவின் யோசனைப்படி அதற்குத் தேவையான உரம் போட்டு உன்னிப்பாக கவனித்து வந்தார்கள். செடியாக மேலே வந்து இரண்டு மாதத்தில் பூ பூத்தது. பிறகு தான் பவித்ராவிற்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. ஐந்தாவது மாத்த்திலேயே நல்லதேறிய நிலக்கடலை மூட்டை கணக்காக விளைந்தது.
பிறகு, ஒரு வேலி நிலம் முழுவதும் அதே போல் பயிரிட்டு உபயோகமில்லாத நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றினார்கள்.
“பெற்ற தாயும் ,பிறந்த பொன்னாடும் நம்மை ஒரு நாளும் கை விடாது” என்றார் சுரேஷின் அப்பா, தன் மருமகளிடம்.
“ஆமாம் மாமா” என்ற பவித்ராவின் நெஞ்சம் நன்றியால் நிறைந்திருந்தது.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings