2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
டாக்டர். மாணிக்கம், பேராசிரியர் (ஓய்வு), அரசு மருத்துவக்கல்லூரி.
சுவரில் மாட்டியிருந்த பித்தளை போர்ட், சூரிய ஒளிபட்டு பளபளவென மின்னியது. லேசாக கூட கறுக்க விடமாட்டார் மாணிக்கம். எப்போதும் போர்டு பளபளவென இருக்க வேண்டும். வீடு, தோட்டம் எல்லாம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
நேர்மை, நேரம் தவறாமை, கண்டிப்பு என ஒழுக்கத்தின் மொத்த குணங்களாக விளங்கினார். அதுவே மற்றவர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. அவர் எதிர்பார்ப்புக்கு நடப்பதற்குள் அகல்யாவிற்கும் போதும் போதும் என்றாகிவிடும். மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கும் போதும் அப்படித்தான் மாணவர்களுக்கு டெரர்.
அன்று காலையில் எழுந்ததுமே சற்று சோர்வாக இருந்தது மாணிக்கத்திற்கு. இருந்தாலும் மாதப்பிறப்பு.. வெள்ளிக்கிழமை.. பூஜை வேலைகள் அவரை அழைக்க, எழுந்தார்.
கூடையை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த பூக்களை பறிக்க ஆரம்பித்தார். செம்பருத்தி, நந்தியாவட்டை, செவ்வரளி என ஒரு குட்டி நந்தவனமே அவருடைய தோட்டத்தில் பூத்துக் குலுங்கியது. தினமும் அந்தப் பூக்களைப் பறித்து சுவாமிக்கு சூட்டுவது அவருக்கு மனதிற்கு பிடித்தமானதொரு வேலை.
செம்பருத்தியை பறித்ததுவிட்டு.. நந்தியாவட்டையைப் பறிக்க கையை உயர்த்தும் போது, நெஞ்சில் திடுமென ஒரு வலி… இடது கை முழுக்க ஒரு விறுவிறுப்பு. இதயத்தில் பாறாங்கல்லை வைத்தது போல் ஒரு பாரம்.
சட்டென அருகிலிருந்த படியில் உட்கார்ந்தவாறு. “அகல்யா.. அகல்யா” என்று மனைவியை அழைத்தார். அவர் கூப்பிடும் குரல் அவருக்கே கேட்காதது போல தோன்றியது… தான் மயங்கி விடுவோமோ என்ற உணர்வில்.. இரும்புக் கதவை லேசாக ஆட்ட.. அகல்யா உள்ளிருந்து எட்டிப் பார்த்தாள்..
அவர் உட்கார்ந்திருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்தவளாய் ஓடி வந்தாள் அகல்யா. “என்னங்க… என்ன ஆச்சு? ஏன் இப்படி உக்காந்து இருக்கீங்க?”..
“கை ரொம்ப வலிக்குது… படபடப்பா வருது என்னமோ பண்ணுது”
அகல்யா சட்டென சூழலை புரிந்து கொள்ள… காம்பவுண்டை எட்டி “பாலு.. பாலு…” என்று பக்கத்து வீட்டுப் பையனை அழைத்தாள்.
பக்கத்து வீட்டு கல்லூரி மாணவன் பாலு அந்த வீட்டின் செல்லப் பிள்ளை.அவர்கள் இருவருக்கும் மனதுக்கு நெருக்கமானவன். இவர்கள் பெற்ற பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் இருக்க… பாலுவே அவர்களின் பெறாத பிள்ளையாகிப் போனான்.
ஓடி வந்த பாலு “என்னாச்சு அங்கிளுக்கு?” அவரை கைத்தாங்கலாக எழுப்பி அருகில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, “ஆன்ட்டி கார் சாவி கொடுங்க… காரை எடுக்கிறேன். உடனே ஹாஸ்பிடலுக்குப் போவோம்” என்றான்.
அகல்யா கார் சாவியை எடுத்து கொடுத்தாள். அவசரமாக எடுக்க வேண்டியவற்றையும் எடுத்து வைத்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் நகரின் பிரபல மருத்துவமனையில் இருந்தார்கள்.
மாணிக்கம் ‘டாக்டர்’ என்றவுடன், பரபரவென மருத்துவமனையின் ஐ.சி.யூ.வுக்கு நேராக அழைத்துச் செல்லப்பட்டார். “கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சதீஷ்க்கு இன்பார்ம் பண்ணியாச்சு.. இப்ப வந்துடுவாரு” என்று பணிவாக சொல்லிவிட்டுப் போனாள் நர்சு.
டாக்டர் சதீஷ் வந்தவர்.. விரைவாக ஐ.சி.யூ நோக்கி நடந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் வெளியே வந்தவர் அகல்யாவிடம் “மேடம் ஒர்ரி பண்ண வேண்டாம்.. ஈ.சி.ஜி, எக்கோ எல்லாம் எடுத்திருக்கோம். இதயத்துடிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கு. அத கண்ட்ரோல் பண்றதுக்கு ஊசி போட்டிருக்கேன். இன்னிக்கி ஒருநாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும் ..” என்றார்.
பெரிதாக பிரச்சனை ஒன்றும் இல்லை என்றதும் தான் அகல்யாவுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டாள். பாலு கவுண்டர் போய் பணம் கட்டிவிட்டு அட்மிஷன் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்துவிட்டு வந்தான்.
ஐ.சி.யூ.வில் கண்விழித்த மாணிக்கம் …தன் அருகே நின்றிருந்த டாக்டரை பார்த்து “டாக்டர் எனக்கு ஹார்ட் அட்டாக்கா…மைல்டா…சிவியரா?” என்றார் .
“சார் ..சார்…நீங்க ரொம்ப கற்பனை பண்ணாதீங்க…பெரிய பிரச்சனை ஒன்னும் இல்ல …பி.பி கொஞ்சம் அதிகமா இருக்கு. பல்ஸ் ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. அதை கண்ட்ரோல் பண்ண இன்ஜக்சன் போட்டிருக்கேன். ஈ.சி.ஜி, எக்கோல ஒன்னும் பெருசா பிரச்சனையில்ல… உங்க சௌரியப்படி பேஸ்மேக்கர் வச்சுக்கலாம் …”
நிம்மதியானார் மாணிக்கம் …
சற்று தயங்கி நின்ற டாக்டர் சதீஷைப் பார்த்து “டாக்டர் என்கிட்ட ஏதும் சொல்லனுமா?” என்றார் குழப்பத்தோடு.
“சார்… என்ன தெரியலையா உங்களுக்கு?” என்றார் சதீஷ்.
சற்று குழப்பத்தோடு ஏறிட்டுப் பார்த்த மாணிக்கத்திடம் சதீஷ் தொடர்ந்தார், “சார்… நான் உங்க ஸ்டூடெண்ட் நினைவிருக்கா? நான் முடிச்சு பத்து வருஷம் ஆயிடுச்சு.. அதான் நீங்க என்னை மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். ஆனா நான் உங்களை பார்த்ததுமே, நீங்க எங்க ப்ரொஃபஸர் மாணிக்கம் என்பதை புரிஞ்சுகிட்டேன். உடல்நலம் சரியில்லாம உங்கள பார்க்க எனக்கு அதிர்ச்சியா இருந்தது. நல்லவேளை பெருசா பிரச்சனை ஒன்னும் இல்ல..”
“இன்னும் நினைவில் வைச்சிருக்கிறீங்களே..”
“சார்! உங்களை எப்படி மறக்க முடியும். நீங்க மருத்துவத்தில சொல்லிக் கொடுத்த அடிப்படை விஷயங்கள்தான் இன்று வரைக்கும் எங்க எல்லாருக்குமே உதவியா இருக்கு. நேரம் தவறாமை…நோயாளிகளை பரிவுடன் கவனிக்கிறது… உண்மையான அர்ப்பணிப்பு உணர்வோட சேவை பண்றது… இதெல்லாம் உங்ககிட்ட தான் சார் நாங்க கத்துக்கிட்டோம்”
“இதெல்லாம் ஒரு நல்ல ஆசிரியரா, என்னோட கடமையை தான் நான் செஞ்சேன். இதுல நீ புகழ்றதுக்கு என்ன இருக்கு?”
“நான் ஒரு விஷயத்தை சொன்னால்… உங்களுக்கு என்னப் பத்தி நினைவு வந்திடும்” சதீஷ் சொல்லச் சொல்ல மாணிக்கத்திற்கு அன்றைய நாளின் நிகழ்வு நினைவில் வந்தது.
மாணிக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு மாணவர்களிடம் படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருப்பாரோ, அதே அளவு அவர்களிடம் ஒட்டுதலாகவும், பாசமாகவும், இருப்பார். மாணவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடிப்போய் உதவுவது முதலில் அவராகத்தான் இருக்கும்.
உடல்நலமில்லாமல் ஹாஸ்டலில் படிக்கும் பிள்ளைகள் மருத்துவமனையில் சேர்ந்தால்.. அவர்கள் வீட்டிலிருந்து ஆள் வரும் வரை மாணிக்கமே கூட அமர்ந்திருப்பார். அதனால் அவர் கண்டிப்பையும் மீறி மாணவர்கள் அவரை புரிந்து கொண்டனர். அவர்கள் எந்த பிரச்சனையும் அவருக்கே முதலில் போகும்.
பல்கலைக்கழக தேர்வுகள் நெருங்க… மாணவர்கள் எல்லோரும் டென்ஷனாக இருந்தார்கள். எவ்வளவு நல்லா படிக்கும் மாணவனுக்கும் தேர்வு பயம் என்பது மிகவும் அதிகமாக இருக்கும்.
அதற்கு காரணம்… அந்தக் காலத்தில் மற்ற கல்லூரி மாணவர்களைப் போல் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் பரீட்சைகளுக்கு இடையே விடுமுறைகள் கிடையாது. தேர்வு ஆரம்பித்தால் வரிசையாக எழுத வேண்டியது தான். அதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட டென்ஷனாகத் தான் இருப்பார்கள்.
தேர்வு நடக்கும் சமயங்களில் மாணிக்கம் ஒரு மணி நேரம் முன்னதாக கல்லூரிக்குப் போய் விடுவார். மாணவர்களை உற்சாகப்படுத்தி, வேண்டிய உதவிகளைச் செய்வார். அன்றும் அதே போல கல்லூரிக்குப் போக…தேர்வு தொடங்க அரைமணி நேரம் இருக்கும் நிலையில் ஒரு போன் …
“சார்! உங்க ஸ்டூடண்டோட அப்பா பேசுறேன்… எனக்கு ஒரு பெரிய பிரச்சனை. தயவு செய்து எங்க வீட்டுக்கு வர முடியுமா?” என்றார் பதட்டத்தோடு..
“சார்.. தேர்வு தொடங்க இன்னும் 20 நிமிஷம்தான் இருக்கு. எப்படி வர முடியும்? “என்று மாணிக்கம் கேட்க…
“இல்ல சார்.. கண்டிப்பா வாங்க.. எங்க வீடு கல்லூரிக்கு பக்கத்துலதான் இருக்கு. அட்ரஸ் சொல்றேன். தயவுசெய்து வாங்க” என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்.
மாணிக்கம் காரை எடுத்துக்கொண்டு அவர் சொன்ன விலாசத்திற்குப் போய் சேர்ந்தார். மிகப்பெரிய அதிர்ச்சி… அன்று தேர்வு எழுத வேண்டிய அவருடைய மாணவன் மிகவும் டென்ஷனாக கத்திக் கொண்டிருந்தான். அதோடு மட்டுமல்லாமல் கையில் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தான்.
மாணிக்கத்தைப் பார்த்ததும் மிகவும் டென்ஷனாக, “சார்…கிட்ட வராதேங்க… நான் உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சுருக்கேன். நீங்க கிட்டக்க வந்தீங்கன்னா.. கத்தியால கழுத்தை அறுத்துக்குவேன். நீங்க எவ்வளவு சொன்னாலும் நான் இன்னைக்கு பரீட்சை எழுத வரமாட்டேன். இன்னைக்கு பரீட்சை எழுதினால் என்னால பாஸ் பண்ண முடியாது. அதனால நான் வர மாட்டேன்” என்றான் தீர்மானத்தோடு.
“இதுதானப்பா விஷயம் ..இதுக்குப் போய் பதறுர… பரிட்சை இந்த தடவ எழுதலைன்னா… அடுத்த தடவை எழுதிட்டு போறது…இதெல்லாம் ஒரு விஷயமா?…நீ டென்ஷன் ஆகாத நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன்…நான் சொன்னா உங்க அப்பா கேப்பாரு” என்றபடி மெதுவாகப் பேசிக் கொண்டே அவன் அருகில் போனவர் சட்டென அவன் இரு கையை பிடித்துக் கொண்டு, அவன் அப்பாவை உதவிக்கு கூப்பிட, அவர் வந்து கத்தியை அவன் கையிலிருந்து வாங்கி கொண்டார்.
அவன் மாணிக்கத்தின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பிக்க… மெதுவாக தட்டிக் கொடுத்தவர், “வாப்பா இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. நீ வந்து ஏதோ உனக்குத் தெரிந்ததை எழுது. பாஸ் பண்ணா சரி… இல்லைன்னா அடுத்த தடவை பார்த்துக்கலாம். உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன்” என்று அவனைத் தன் தோளில் தட்டி ஆறுதல் கூறிக் கொண்டே… அவனை அழைத்தவாறே காரை நோக்கி நடந்தார். அவன் உடை மாற்றிக் கொள்ளக் கூட நேரம் கொடுக்கவில்லை.
திரும்பத் திரும்ப… “நான் தேர்வு எழுதினா பாஸ் பண்ண மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே வந்தவனை
“இதைப் பத்தி கவலையேபடாத, தெரிந்ததை எழுது”
“எனக்கு ஒன்னுமே மனசுல இல்ல.. நான் எப்படி எழுத முடியும்?” என்று கேட்டவனை
“இந்த கேள்வித்தாளை வாங்கி எழுத ஆரம்பிச்சா ..என்ன உனக்கு எது நினைவுக்கு வருதோ எழுது.. பாஸ் பண்ணா லாபம்.. இல்லைன்னா அடுத்த தடவ” என்று ஆறுதல் கூறிய வாறு தேர்வு அறைக்கு அழைத்து வந்தார்.
இதற்குள் பரிட்சை துவங்கி 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அவனை ஆறுதல் அளித்து தேர்வுவெழுத அனுப்பிய பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கண்ணீர் மல்க அவர் தந்தை கைகூப்பியது இன்றும் நினைவில் இருக்கிறது.
அன்று தயக்கத்துடன் தேர்வு எழுதியவன் பாஸ் மட்டுமல்ல… முதல் வகுப்பில் பாஸ் பண்ணியது தான் மிகப் பெரிய ஆச்சரியம். அவர் தேர்வு எழுத வைத்த மாணவன்… இதோ இன்று கண் முன்னால் தன் உயிரை காப்பாற்றிய டாக்டர் சதீஷ் என்று நினைக்கும்போது பெருமிதத்தால் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“சார்.. நான் இன்னைக்கு டி.எம் படிச்சிட்டு கார்டியாலஜிஸ்ட் ஆக இருக்கிறேன்னா.. அதுக்கு காரணம் நீங்கதான். உங்கள மாதிரி ஒரு பேராசிரியர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும். நீங்க எனக்கு ஊக்கம் கொடுத்து அன்னைக்கு பரீட்சை எழுத வைச்சதை நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் சார்”
உணர்ச்சிப் பெருக்கால் அவர் கைகளைப் பற்றிக் கொண்ட டாக்டர் சதீஷ் கண்களிலும் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஒரு நல்ல ஆசிரியருக்கும் மாணவனுக்குமான உறவின் சாட்சியாய்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings