2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இன்னும் ஒரு பத்து நாள் சேர்த்து விடுப்பு போட்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றியது சேகருக்கு.
விடுப்பு போடும்போழுதே கேட்டார்கள்… ‘சரியாய் ஒரு மாதம் முடிந்தவுடன் வந்து விடுவே தானே.. எக்ஸ்டென்ஷன் கேட்கக்கூடாது… ‘ என்றும் சொல்லியிருந்தார்கள்.
ஆம்னி பஸ் சென்னை பைபாஸில் தவழ்ந்து போய்க் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் சத்திரம் பஸ்ஸ்டாண்டை அடைந்து விடலாம்.
அம்மாவுக்கு போன் போட்டு சொல்லலாம் என்று மொபைலை எடுத்தான். அது உயிரிழந்து கிடந்தது. அவசர அவசரமாய் சார்ஜரை தேடினான். ஆனால் அந்த பஸ்ஸில் சார்ஜ் ஏற்ற பிளக் பாயின்ட் இல்லாமல் இருந்தது. வெறுத்துப் போனாலும், சரி இன்னும் ஒரு மணி நேரத்தில்தான் வீட்டுக்குப் போய்விடுவோமே என்று விட்டுவிட்டான்.
ஜன்னல் திரைச்சீலையை ஒதுக்கி விட்டான்… அங்கிருந்து மலைக்கோட்டை மிகவும் சிறியதாய்த் தெரிந்தது. சத்திரம் பஸ்ஸ்டாண்டை அடைந்தவுடன் வயலூர் பஸ் பிடிக்க வேண்டும். பிள்ளையார் கோவில் ஸ்டாப்பில் இறங்கி அரை கிலோ மீட்டர் நடந்து தான் போக வேண்டும் வீட்டுக்கு.
போன தடவை வந்திருந்தபோழுதே அம்மா சொல்லியிருந்தார்கள்.
‘முன்னாடியே குவார்ட்டர்ஸ் கேட்டு வை அப்போதான் கல்யாணம் ஆகி போகும்போது சிரமம் இல்லாம இருக்கும்… நீ வந்ததும் உடனே செல்வியை கேட்டு நிச்சயம் பண்ணிடலாம்… அடுத்த லீவுக்கு கல்யாணத்த வச்சுக்கலாம்…. ’ என்று.
அவனது மாமன் மகள் தமிழ்ச்செல்வியை அவனுக்கு கட்டி வைக்கவேண்டும் என்பதுதான் அவளது நீண்டகால அம்மாவுக்கு ஆசை. தமிழ்ச்செல்விக்கும் அவன்மேல் ஆசை தான். ஏன் அவனுக்கும் கூடத்தான்….!
இதில் விசேஷம் என்னவென்றால், அவள் யாரும் பார்த்துவிடாத இடத்தில்்’சேகரும் செல்வியும்’ என்று பச்சைக் கூட குத்தியிருந்தாள்.
போன தடவையே கண்டிப்புடன் சொல்லியிருந்தாள்… ‘யோவ் மிலிடரி …. ஒழுங்கா என் கழுத்தில சீக்கிரம் தாலியைக் கட்டி கூட்டிக்கிட்டு போ…நீ மட்டும் ஜம்முவுக்கும் காஷ்மீர்க்கும் போயிட்டு போயிட்டு வர்றே.. நான் மட்டும் எப்போ வந்து பார்க்கறதாம்…எல்லாத்தையும்… ’ என்று.
அத்துடன் அவள் ரகசியாமாய் பச்சைக் குத்தியிருப்பதையும் அவனிடம் மட்டும் காட்டி மகிழ்ந்தாள். சேகரும் நெகிழ்ந்துதான் போனான்.
சத்திரம் வந்ததும் பஸ்ஸை விட்டு இறங்கினான். டவுன் பஸ்கள் வரிசையாய் நின்று கொண்டும்.. நகர்ந்து கொண்டும் இருந்தன. தேடிப்பிடித்து வயலூர் பஸ்ஸில் ஏறினான். டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ஜன்னலோர சீட்டாக பார்த்து உட்கார்ந்தான்.
மனசிற்குள் வந்து ‘ஹாய் ‘ சொன்னாள் தமிழ்ச்செல்வி. தன்னிச்சையாக அவனது முகம் மலர்ந்தது.
ஜன்னலோரம் கூடையை உயர்த்தியபடி, ‘மல்லிப்பூ .. மல்லிப்பூ‘ என்று கூவிய பெண்ணிடம் பணத்தைக் கொடுத்து இரண்டு பொட்டலங்களை வாங்கி கைப்பைக்குள் வைத்துக் கொண்டான். போகிற வழியிலேயே மாமா வீட்டுக்கு போய்விட்டுதான் நம்ம வீட்டுக்கு போக வேண்டுமென்று மனதில் ஏற்கனவே நினைத்துக் கொண்டிருந்தான்.
ரெண்டு பொட்டலத்திலுள்ள பூவையும் ஒன்றாக இணைத்து வைத்தால் தான் அவளது ஜடைக்கு எடுப்பாய் இருக்கும். அந்தளவுக்கு அவளது ஜடை நீளம். செல்விக்கு நாமே பூவை வைத்து விட வேண்டியதுதான் என்று யோசனை ஓடியது..
‘பிள்ளையார் கோயில் எல்லாம் இறங்குங்க‘ என்று கண்டக்டர் குரல் கொடுத்த பிறகு தான் சேகர் சுயநிலைக்கு திரும்பினான். அவசரமாய் பெட்டி பைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான்.
அங்கிருந்து நடந்தால் தென்னந்தோப்பு, பிறகு .. வாய்க்கால் பாலம், அதைத் தாண்டினால் அய்யனார் கோவில் மேடு, தொடர்ந்து வயல்வெளிகள். இடையே ஒத்தையடி பாதை. அதில் போனால் நாலுரோடு. இடதுபுறம் போனால் அக்ரஹாரம். வலதுபுறம் போனால் ஊர்க் காடு. நேராக போனால் சின்ன பண்ணை. உள்ளே பத்து பதினைந்து தலைக் கட்டு. சேகர் குடும்பமும் அதில் அடங்கும்.
ஒரு போன் பண்ணினால் யாராவது எவனாவது ஒருவன் வண்டியை எடுத்துக்கொண்டு வந்து விடுவான்… ஆனால் அதில் த்ரில் இருக்காது. மேலும் ஊர்க்காட்டுப் பக்கம் திரும்பி மாமா வீட்டு பக்கம் போய் தமிழ்ச்செல்விக்கு ஒரு சைகை செய்தால் போதும், வந்து விடுவாள். அவளை பார்த்து கொஞ்சி… பேசி…. அந்த ஜாலி தனியாக போகும்போதுதானே கிடைக்கும். அதனால் தனியாகவே நடந்து கொண்டிருந்தான்.
தென்னந்தோப்பைத் தான்டி அய்யனார் கோவில் மேட்டில் காலடி எடுத்து வைத்தான். பனை மரங்கள், ஆல மரங்கள், அரச மரங்கள் சூழ ஆஜானுபாகுவாய் சுமார் பதினைந்தடி உயரத்துக்கு அய்யனார்…. அதன் இரண்டு புறமும் அதன் பாதியளவு உயரத்துக்கு இரண்டு குதிரைகள். அதன் பக்கங்களில் துப்பாக்கியுடன் காவலர்கள், நாய் சிலைகள்.
‘மா…மா..’ என்று குரல்கொடுத்தபடி பின்பக்கம் இருந்து ஓடி வந்தாள் தமிழ்ச்செல்வி. அதை சற்றும் எதிர் பாராத சேகர் கொஞ்சம் நடுங்கித்தான் போனான்.
‘என்ன புள்ள…. சூறாவளி காத்து மாதிரி திடீர்னு சுழண்டுகிட்டு வர்றே… ‘
‘மாமா நா சூறாவளி மாதிரி வர்ல… நேராத்தான் வர்றேன்..! ஆனா நீதான் பேயறஞ்ச மாதிரி முழி பெயர்ந்து நிக்கிற…’
‘ஆமா நீ பின்னாடியிருந்து சத்தம் போட்டுக்கிட்டு ஓடிவந்தா பயப்படாம என்ன பண்ணுவாங்களாம்… ஆனா … நீ எங்க திடீர்னு இப்படி… ?’
‘மாமா நீ என்கிட்டே சொல்லாம என் முன்னால வந்து நிக்கலாம்னு நினைக்கலாம் … ஆனா நான் நினைக்க கூடாதா… என் மாமியார்கிட்ட போட்டு வாங்கிட்டேன்ல… நீ எப்போ வர்றேன்னு… சரி சரி…. மசமசன்னு நிக்காம எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு… சட்டுன்னு வாங்கிட்டு ஓடறேன். மலர்கொடி.. மாதவி.. எல்லாம் வாய்க்காலுக்கு முன்னாடியே போய்ட்டாளுங்க… போனவாரமே தண்ணீர் திறந்து விட்டாங்கல்லே… அதான் நாங்கல்லாம் குளிக்கப் போறோம்… நான் தான் ரொம்ப லேட்டு. இதான் சாக்குன்னு அந்தப் பக்கம் வந்து நின்னுடாத… கொன்னுடுவேன். சரி சரி எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கே சொல்லு மாமா…’
அவளை மேலும் கொஞ்ச விடாமல், மடமடவென கைப்பையில் வைத்திருந்த பூப்பொட்டலங்களை எடுத்தான். ‘இந்தா புள்ள… இத முதல்ல வச்சுக்க… மத்ததெல்லாம்… மத்தியானம் உங்க வீட்டுப்பக்கம் வர்றேன்… வா … அப்போ தர்றேன்…’ என்றான் கிளுகிளுப்புடன்.
‘ரொம்ப ஆசைதான்…‘ என்றவள் ‘ரெண்டு பொட்டலமும் பூவேவா…. சரி சரி… ஒன்னை பிரிக்காம வச்சுக்கறேன்….. குளிச்சுட்டு அப்புறமா நான் வச்சுக்கறேன்…. ஒன்னு மட்டும் இப்பவே உன் கையாலே வச்சி விடுவியாம்… ’ என்று சிணுங்கினாள்.
மடை திறந்த மாதிரி வர்ற இந்த பேச்சை கேட்கத்தானே…. இவ்வளவு நாள் காத்திருந்து வந்திருக்கிறான். பூச்சரத்தை அவளது ஜடையோடு தொங்கும்படி வைத்து அவள் நீட்டிய பின்னை செருகி விட்டான்.
‘என்னா அழகு.. என்னா அழகு….’ அந்த ஜடையழகை ரசித்தான். ஜடை இடுப்பைத் தாண்டி தொங்குகிற அழகே தனிதான்….
‘மாமா நான் இன்னும் குளிக்கலை ரொம்ப ரசிக்காத.. நான் போயி குளிச்சிட்டு உனக்கு பிடிச்ச பச்சைத் தாவணி, சிவப்பு பாவாடை, நீல சோலில வர்றேன். அப்புறம் உன் கண்ணால என்னைய தாரளமா முழுங்கு….இப்போ நான் வர்றேன்….’
சொல்லிக்கொண்டே ஓடியவள்… திடீரென்று நின்று.. திரும்பவும் ஓடி வந்து… ‘அது வரை இதை வச்சுக்கோ…’ என்று சொன்னபடி ‘ பச் ‘ சென அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள்.
அடிப் பாவி…! வந்தா……. மழை மாதிரி கொட்டினா …. ஓடிட்டாளே …. நான் என்ன என்னவெல்லமோ பேசணும்னு ஓடி வந்தேனே…! சரி சரி… அவ வீட்டுப்பக்கம் போகத்தானே போறோம்… அப்போ வச்சுக்குறேன்… முகத்தில் சிரிப்புடன் மேலே நடந்தான்.
பண்ணைக்குள் நுழையும் போதே சின்ன பாப்பாவை பார்த்தான்… பசு மாட்டை இழுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள். ‘என்ன சேகரு சாவகாசமா வர்றே… விஷயம் தெரியுமா உனக்கு… போன் வந்ததா இல்லையா?’ என்றாள்.
இவன் பதற்றத்துடன் ‘ ஏன்க்கா என்ன ஆச்சு… ‘ என்றான்.
‘உனக்கு செல்விய கட்டிவைக்கனும்னு உங்கம்மா சொல்லிட்டிருந்தாங்கள்ல… இன்னிக்கிப் பார்த்து திடீர்னு அவங்க மாமன் பொண்ணுகேட்டு வந்திருக்கான். அவங்கம்மாதான் வரச் சொல்லியிருக்கா… இவ மறுத்து மறுத்துப் பார்த்திட்டு… ஒரு கட்டத்துல ஓடிபோயி தூக்குப் போட்டுக்கிட்டு தொங்கிட்டாளாம்…உயிர் போயி ஒருமணி நேரம் ஆகிருக்கும்… நான் மாட்டை மேய்ச்சலுக்கு கட்டிட்டு வரலாம்னு ஓடிவந்தேன்.. உனக்குத் தெரியாதா… யாரும் போன் பண்ணலையா?’ என்று திணறித் திணறி சொன்னாள்.
அவளிடம் மொபைல் ஆஃப் ஆகிவிட்டதென்று சொல்லவெல்லாம் நேரமில்லை இவனுக்கு. மாமா வீட்டைப் பார்த்து வேகமாக ஓட ஆரம்பித்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings