2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அன்று எனக்கு வேலையே ஓடவில்லை. கொஞ்சம் நேரத்திற்கு முன்னால்தான் செல்வி வந்து கிசுகிசுத்துவிட்டுப் போயிருந்தாள்.
‘அர்ச்சனாவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சாம். பத்திரிக்கையெல்லாம் அடிச்சாச்சாம். காலையில எனக்கு போன் பண்ணிச் சொன்னா. இன்னிக்கு ஆபீஸ்க்கு பத்திரிக்கை கொண்டு வர்றாளாம். பத்திரிக்கை கொடுத்தாள்னா வாங்கிக்கோங்க… மேற்கொண்டு எதுவும் பேசவேண்டாம் ’
‘எதுவும் பேசவேண்டாம்‘ என்பதை மட்டும் கொஞ்சம் அழுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள் அவள்.
அர்ச்சனா இந்த ஆபிஸிற்கு வந்த புதிதில் அவளால் ஈர்க்கப்பட்டு அவள்மேல் நான் காதலில் விழுந்தது உண்மை. எப்படியாவது என் காதலை அவளிடம் தெரிவித்துவிட வேண்டும் என்று என்னென்னவோ பிராயத்தனமெல்லாம் செய்து பார்த்தேன். முடியவில்லை.
ஒரு நாள் மெல்ல அவளிடம் ‘உங்களிடம் நான் தனியாக பேசவேண்டும்‘ என்றேன்.
‘ஸாரி… எனக்கு வேலை இருக்கு… ‘ என்று சொல்லிவிட்டாள்.
இன்னொரு நாள், ‘சாயங்காலம் சங்கீதா ஹோடலில் காபி சாப்பிடலாம் வாங்களேன்’ என்றேன்.
‘எனக்கு ஒரு கமிட்மென்ட் இருக்கு… நான் சீக்கிரம் கிளம்பனும் இன்னொரு நாள் பார்க்கலாமே… ‘ என்று சொல்லிவிட்டாள்
ஒவ்வொரு முறையும் அவள் மறுத்துக்கொண்டே போனதால் என்னுடைய காதலை அவளிடம் சொல்ல முடியாமல் போய்க்கொண்டிருந்தது. உட்கார்ந்து ஒரு நாள் யோசித்தபோது செல்வியின் முகம் மனக்கண்களில் வந்து நின்றது.
செல்வி ஆபீஸில் என்னுடன் வேலை செய்பவள், அத்துடன் என்னுடன் ரொம்பவும் நன்றாகவே பேசுவாள், பழகுவாள். அவளிடம் போய் நடந்ததைச் சொன்னேன்.
‘அர்ச்சனாவை நான் நிறையவே காதலிக்கிறேன். ஆனா அவளோ பிடி கொடுத்து பேச மாட்டேனேன்கிறாள்… நீ ஏதாவது ஒரு ஐடியா கொடேன்…‘ என்றேன் கொஞ்சம் வருத்தத்துடன்.
‘சரி… அவள் எப்போவாவது நல்ல மூடுல இருக்கற சமயம் பார்த்து நான் அவகிட்டே பதமா சொல்லிப் பார்க்கறேன். நீங்க அவசரப்பட்டு அவள்கிட்டே மேற்கொண்டு ஏதும் பேசி கெடுத்துக்காதீங்க ‘ என்று ஐடியா சொன்னாள் சொன்னாள் செல்வி..
அதற்கு பிறகு இரண்டு மூன்று முறை செல்வியிடம் கேட்டுப் பார்த்தேன், சாதகமான பதில் ஏதும் கிடைத்ததா என்று. ‘இல்லை ‘ என்று உதட்டை மட்டும் பிதுக்கிவிட்டுப் போனாள்.
மேலும் இரண்டு நாள் விட்டு பொறுமை இழந்துபோய் ஏதாவது பதில் கிடைத்ததா என்று செல்வியிடம் மறுபடியும் கேட்டேன், ‘இல்லை‘ என்று உதட்டை மட்டும் பிதுக்கிவிட்டுச் சிரித்துவிட்டு. ‘ஏன் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா.. விடுங்க கணேஷ், தம்மன்னா இல்லாட்டி நயன்தாரா….’ என்று நகைத்தாள்.
‘என்ன சொல்றே செல்வி? ‘ என்றேன்.
‘அவ மனசில வேற யாரோ இருக்காங்கன்னு நினைக்கறேன் கணேஷ். அதான் அவகிட்டயிருந்து சரியான பதில் வரலை’ என்றவள் தொடர்ந்து, ‘கணேஷ், நாம விரும்பறவங்களை விட, நம்மளை யாரு விரும்பறவங்கனு பார்த்து அவங்களை கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகற வழியை பாருங்க. அதுதான் சந்தோசமான வாழ்க்கையில போய் முடியும் ‘ என்று தத்துவம் பேசிக்கொண்டே நகர்ந்து விட்டாள்.
செல்வி சொன்னது போல லஞ்ச் டைம் முடிந்து அர்ச்சனா ஆபிசிற்கு வந்தாள். எல்லோரிடமும் பத்திரிக்கை கொடுத்துக் கொண்டே சென்றாள். ஒவ்வொருவரிடமாக நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கடைசியாக என்னிடம் வந்தாள்.
‘கணேஷ் , எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். அவசியம் வந்திடுங்க….’ என்றாள்.
மௌனமாய் அவள் நீட்டிய பத்திரிகையை வாங்கிக் கொண்டேன். அதை பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை. மேற்பகுதியில், ‘அர்ச்சனா – ராகவன் ‘ என்று இருப்பதற்குப் பதிலாக ‘அர்ச்சனா – கணேஷ் ‘ என்று இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து என்னையே சமானம் செய்துகொண்டேன்.
அர்ச்சனா நகர்ந்த மறு நிமிடம் ஓடோடி வந்தாள் செல்வி. ‘ ஏதும் சொன்னாளா ‘ என்றாள்.
‘இல்லை… ‘ என்றேன்.
புன்னகைத்துக் கொண்டே திரும்பிய செல்வி தனது மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
‘ஸாரி கணேஷ், நீங்க கொடுத்த அந்த லெட்டரை நான் அர்ச்சனாகிட்ட குடுக்கவே இல்லை. குடுத்திருந்தேனா ஒருவேளை அவள் உங்களை விரும்பியிருக்கலாம். ஆனா என் காதல் தோற்றுப் போயிருக்குமே. ஏன்னா நான் ஆரம்பத்துலேர்ந்தே உங்களை அவ்வளவு விரும்பினேன். இன்னும் விரும்பறேன். விட்டுடுவேனா, செல்வியா… கொக்கா… நாளைக்கு வந்து என் காதலை உங்ககிட்டே சொல்லிடறேன்… ‘
மனிதரில் எத்தனை நிறங்கள்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings