2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அதிகாலை நான்கு மணி. ஏதோ கீழே விழுந்த சத்தம் கேட்டு கண் விழித்தாள் பவானி.
“ஓ..ஸாரி..ஸாரி..டா…அலமாரில சோப்பு எடுக்கும் போது கை பட்டு டிஃபன் பாக்ஸ் கீழே விழுந்துருச்சு…படுத்துக்கோ….. இன்னிக்கு உனக்கு ஃபர்ஸ்டே 7.30க்கு போனால் போதும்” என்று மூன்றாம் வருடம் படிக்கும் ரேச்சல் அன்பாகப் பேசினாள்.
“பரவால்ல…அக்கா….எனக்கு தூக்கம் வரல”
“யேய்….பேபி…என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம்..ஹியர்,….வீ ஆர் ஆல் ஃப்ரெண்ட்ஸ்”
“ம்…சரி”
“ஓ.கே… எனக்கு இன்னிக்கு ஃபீல்டு வொர்க் கிளாஸ். ஆறு மணிக்கெல்லாம் வயல்ல இருக்கணும்” என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் விரைந்தாள் ரேச்சல்.
குளிர்ந்த காற்று முடிக்கற்றையை இழுத்து முகத்தில் கோலமிட அருகிலிருந்த ஐன்னலின் வழியே கண்களை அலைய விட்டாள் பவானி.
கண்களுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்த வயல்வெளியில் கருமை படர்ந்திருந்தது. பசுமை வாசம் நிறைந்த காற்று நாசியை நிரப்பி உடல் முழுவதும் ஒரு வித சுகமளித்தது.
சிறிது நேரங்கழித்து… கீழே எதிர்ப்புறத்திலிருந்து காக்கி சீருடையில் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்கள் பேசிக் கொண்டே வந்து நின்றனர். அதில் ஒருவன் பவானியை நோக்கி கையசைத்தான். ஒரு நொடி ‘திக்’ கென்று இருந்தது பவானிக்கு. சர்ரென்று கோபம் புறப்பட்டது.
“ஓ சரவணன் வந்துட்டானா?” என்று காதில் சத்தம் கேட்டு திரும்பினாள்.
அருகில் ரேச்சல் நின்று கொண்டு ஜன்னலுக்கு வெளியே கையசைத்தாள்.
“அவன் தான் சரவணன்.எங்க டிபார்ட்மெண்ட் லீடர். எங்க பாடிகார்டு” சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கால் வந்தது.
“இதோ கிளம்பிட்டேன். ஓ…ஆமா…ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்…..ம்…சரி.. சொல்லிடறேன்” என்று ஃபோனை கட் செய்துவிட்டு சரவணன் ஸாரி சொல்லச் சொன்னான்.
“நான்தான் இங்க உட்கார்த்திருக்கேன்னு நினைச்சு கையாட்டிட்டானாம். ஹஹ்….ஹா ….நீ தப்பா நினைச்சுருப்பியோன்னு பயப்படறான்…ஹீ இஸ் ஜெம். இன்னிக்கு உனக்கு செமினார் இருக்குல்ல…சரவணனோட ஸ்பீச் கண்டிப்பா இருக்கும்…அதுக்கப்புறம் உனக்குள்ள ஒரு மாற்றமே நடக்கும் பாரு…. ஓ.கே….பை…ஈவ்னிங் பாக்கலாம்” என்று கையசைத்துவிட்டு சென்றாள் ரேச்சல்.
பதிலுக்கு பவானியும் கையசைத்து விட்டு மீண்டும் ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓட்டினாள். அதே நிமிடம் சரவணனும் இவளை நிமிர்ந்துப் பார்த்தான். உருவ அமைப்பு தெளிவாகத் தெரியாத தூரமிருப்பினும் இரு மனங்களும் சிநேகமாய் சிரித்தன.
தன் அறைத்தோழி சவிதாவுடன் காலேஜ் ஆடிட்டோரியத்தில் அமர்ந்திருந்தாள் பவானி.
“ஐயோ,..போரடிக்குது…இந்த காலேஜ் பத்தியும், இங்க படிச்சவங்களப்பத்தியும் இன்னும் எவ்வளவோ நேரம் தான் பேசுவாங்களோ?” என்று தனக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் முகத்தை மறைத்துக் கொண்டுகிசுகிசுத்தாள் சவிதா.
பவானியும் தலையை குனிந்து, “கடைசியா இவங்க என்னதான் சொல்ல வறாங்க? எங்க கல்லூரியில படிச்சாதான் நீங்க உருப்புடுவீங்க-னு சொல்றாங்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்ட பவானியிடம்
“தற்பெருமை ஓவர்டோஸா இருக்கே?” என்றாள் சவிதா.
இருவரும் சத்தம் போடாமல் சிரித்தனர்.
“நண்பர்களே!…, நண்பிகளே!” என்ற கணீரென்ற குரல் கேட்டு இருவரும் தலை நிமிர்ந்தனர்
“என்னோட பேர் சரவணன்… நான் தேர்ட் இயர் ஸ்டுடென்ட்…. முதல்ல நீங்க இந்த வேளாண்மைத் துறையை தேர்ந்தெடுத்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள். வேற வழி இல்லாம தான் இங்க சேர்ந்தோம் அப்படின்னு சில பேர் மனசுக்குள்ள பதில் சொல்றது எனக்கு இங்க கேக்குது….”
சிலர் சிரித்தனர்.
“மாணவர்கள் நிறைய பேருக்கு மெடிக்கல் சேரனும் இல்லை இன்ஜினியரிங் சேரனும் தான் ஆசை இருந்திருக்கும். அதெல்லாம் தான் ஒரு அந்தஸ்தான படிப்புன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.இந்த விவசாய படிப்பு அதைவிட மேலானது. நோய் வந்தால் அதை தீர்ப்பது மருத்துவம். ஆனால் நோயே வராமல் பாதுகாப்பது இந்த விவசாயம். உடல் உழைப்பும், சத்தான உணவு தான் நமக்கு ஆரோக்கியத்தை தரும். அது ரெண்டுமே இந்தத் துறையில் இருக்கு.
மனுஷனுக்கு முக்கியமா மூணு தேவை. உணவு, உடை, இருப்பிடம். வீட்டை ஒரு தடவை கட்டினா போதும் தலைமுறை தலைமுறையா அதுல வாழலாம். ஏன் வீடே இல்லாதவர்கள் கூட சந்தோஷமா வாழறாங்க. பகட்டான உடை இல்லாம எளிமையான உடலை மறைக்கிற சில உடைகள் இருந்தா போதும் சந்தோஷமா வாழ்ந்திடலாம். ஆனா உணவு இல்லாம உயிர் வாழ முடியுமா?.. உலகத்தில் உள்ள எந்த மருத்துவராலும் தீர்க்கமுடியாத பசிப்பிணியை தீர்க்கும் தலையாய மருத்துவர்கள் நாம்.”
அனைவரும் கைத்தட்டி ஆர்பரித்தனர்.
“நம்மைப் படைத்த இயற்கையோடு இணைந்து வாழும் பாக்கியம் பெற்றவர்கள் விவசாயிகள். 105 வயது ஆனாலும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து வயலில் இன்றும் வேலை பார்க்கும் கிராமத்து மூதாட்டியைப்பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறீர்களா? அவர் இதுவரை மருத்துவரிடம் சென்றதே இல்லையாம். நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும். நம் நாட்டின் விவசாய முன்னேற்றம் நம் கைகளில் உள்ளது. நாம் ஒரு அக்ரிகல்ச்சர் ஸ்டூடண்ட் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும்.”
சரவணன் நன்றி சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.
அனைவரின் மனதிலும் அவன் பேச்சு நிறைந்து, சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தந்தது. உற்சாகத்துடன் கலைந்தனர்.
மாலை சூரியன் மலையின் பின்னால் மறைவதை ஃபோனில் உள்ள காமிரா வழியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள் சவிதாவும், பவானியும்.
“என்ன,…இன்னிக்கு எப்படி போச்சு?” என்றபடியே இவர்களை நோக்கி வந்தாள் ரேச்சல்.
“கேன்டீன் சாப்பாடத் தவிர மத்ததெல்லாம் நல்லாருக்கு” என்றாள் சவிதா.
“அது….நாம இது நா வரைக்கும் அம்மாவ டார்ச்சர் பண்ணி , சாப்பாட்டை குறை சொல்லி, என்னவெல்லாம் அட்டகாசம் பண்ணிருக்கோம்…. அதுக்கு பனிஷ்மென்ட் தான்” என்று சொல்லி சிரித்த ரேச்சலுடன் சேர்ந்து சிரித்தனர் இருவரும்.
“இன்னிக்கு சரவணன் பேச்சை கேட்டீங்களா?….மெடிக்கல் சீட் கிடைக்காத மனவருத்தம் இப்போ மாறிடுச்சா?” என்று பவானியின் தோளைத் தட்டிக் கேட்ட ரேச்சலின் பேச்சைக் குறுக்கிட்டு
“நான்தான் சொன்னேன் உங்ககிட்ட” என்றாள் சவிதா.
“ஓ….ஸாரி …..கன்ஃபியூஸ் ஆயிட்டேன்” என்று தன் தலையில் கை வைத்தாள் ரேச்சல்.
“நீங்க சொன்னது சரிதான். அவங்க பேச்சால என்னோட மனசுல,… இந்தப் படிப்பு மேல இருந்த எண்ணம் மாறிடுச்சு”
“ம்…அதான் சரவணன். அவனுடைய இலட்சியம் ரொம்ப பெரிசு. அவனை மாதிரி உயர்ந்த எண்ணங்கள் கொண்ட மனிதரால் தான் நாட்டை உயர்த்த முடியும்” என்று அழுத்தமாகக் கூறினாள். சரவணனைப் பற்றிய உயர்வான எண்ணம் பவானி மனதில் ஈர நிலமாகப் படிந்தது.
மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு…. ரேச்சல் சவிதாவையும் பவானியையும் எழுப்பினாள்.
“எழுந்திருங்க ரெண்டு பேரும் இன்னைக்கு உங்களுக்கு ஃபீல்டு ஒர்க் கிளாஸ் ஆரம்பம். சீக்கிரமா கிளம்புங்க… ஆறு மணிக்கு எல்லாம் அங்க இருந்தாகணும். நானே உங்களுக்கு குரூப் ஹெட்டா வந்தாலும் வருவேன்”
ரூமைப்பூட்டி விட்டு, மூவரும் கிளம்பி, படிகளில் தடதடத்து கீழே இறங்கி ஹாஸ்டல் காம்பவுண்டு அருகே வரும்போது, பதினைந்து சீருடையணிந்த மாணவர்கள் எதிரே வந்தனர். அதில் சரவணனைத் தேடியது பவானியின் கண்கள்.
எல்லோரும் நடந்து வயலுக்கு வரவும், சூரியன் கீழ்வானில் எட்டிப்பார்க்கவும் சரியாக இருந்தது. குரூப் பிரிக்கப்பட்டனர். பவானி, சவிதாவுடன் இன்னும் மூன்று மாணவிகள் சேர்ந்த குழுவிற்கு பயிற்சித் தலைவனாக சரவணன் வந்தான்.
பவானியின் மனம் சரவணனின் முகத்தை அருகில் கண்டதும் துள்ளிக் குதித்தது. சரவணன் எவ்வாறு மண்ணை உழுது விதை தூவ வேண்டும் என்பதை செய்து காண்பித்தான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings