2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சிவந்த நிறத்தை தன் ஒளிக்கிரணங்களால் மேற்கு வானில் ஓவியம் தீட்டி இன்னும் சிறிது நேரத்தில் தன் ஒளியை குறைக்கப் போவதாக அறிவித்த சூரியன் மெல்ல மெல்ல மறையத் தொடங்கினான்.
அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்த, குடிசையிலிருந்து வந்த சத்தம் கேட்டு, இரண்டு வீடு தள்ளி குடியிருந்த அந்த கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார் தினகரன் வேகமாக வந்தார்.
“அடி செருப்பால, நாயே.. இந்த எழவுக்குத் தா நா காலேஜ் சேர்க்க மாட்டேன்னு தல பாடா அடுச்சுக்கிட்டே.. உங்க ஆத்தா கேட்டாளா? நீ பெரிய படிப்பு படிச்சு இந்த குடும்பத்த அப்டியே மல மேல ஏத்திருவன்னு அடம்புடுச்சாவ….இப்ப என்னாச்சு பாத்தேல்ல காதல் கடுதாசி எளுதி எம்மானத்த வாங்கிட்ட… இதுக்குத்தே படிக்கணும்னு ஒத்த கால்ல நின்னியோ?”
குடிசைக்குள் வந்தவர் உரிமையுடன் “என்னாச்சு மாரியப்பா?” என்று கேட்டார்.
கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த மாரியப்பன், அவரைக் கண்டதும் மரியாதைக்காக எழுந்தான் கோபம் கொஞ்சம் தணிந்த குரலில், “வாங்க ஐயா நீங்களே.. இவன விசாரிங்க” என்றான்.
“என்ன சரவணா, உங்க அப்பாரு இது நா வரைக்கும் குரல் உசத்தி கோவத்துல பேசி நான் பார்த்ததே கிடையாது என்ன ஆச்சு?” என்றார்.
“வாங்கய்யா,.. லட்சுமியும், புள்ளையும் நல்லாருக்குங்களா?” என்று கேட்டபடியே சமைத்துக் கொண்டிருந்த சரவணனின் தாய் கருத்தம்மா, தடுப்பின் உள்ளிருந்து வந்தவள், “நீங்க வளத்தது,…. உங்ககிட்ட தா எல்லாஞ் சொல்லுவன். வூட்டுக்கு இழுத்துட்டுப் போய் வ்சாரிங்க” என்றாள்.
தினகரன், “வா சரவணா” என்றபடி நகர அவர் பின்னாடியே சென்ற மகனை வேதனையுடன் பார்த்தபடி நின்றனர் .
“சொல்லு சரவணா” என்ற வாத்தியாரைப் பயமில்லாமல்
நேருக்கு நேர் பார்த்து… “நம்ம பக்கத்து ஊரு பண்ணையாரு மவ பவானி என்னோட காலேஜ்ல தான்,… செகண்ட் இயர் படிக்கிறா” மேற்கொண்டு சொல்ல கொஞ்சம் தயங்கினான் கண்களை தாழ்த்தினான்.
“சரி…. ,அவளுக்கு உன்ன பிடிச்சு போச்சு”
“ஆமாங்கய்யா எனக்கும் அவள புடிச்சு போச்சு நாங்க சாதாரணமா ஊர்காரங்கற மாதிரி பேசி பழக ஆரம்பிச்சோம்”
“அப்புறம் ரெண்டு பேரும் டூயட் பாட ஆரம்பிச்சுட்டீங்களா?” என்றபடி உற்சாக குரலில் அவனை குஷி படுத்தினார் வாத்தியார்.
அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது சிரித்துக் கொண்டே “அதெல்லாம் இல்ல சார்” என்றான்.
“ஏன்டா அங்க தான் மரங்கள் நிறைய இருக்குமே மரத்தை சுத்தி சுத்தி பாட்டு பாட வேண்டியதுதானே” என்றார் தினகரன் அவனின் தோளை தட்டியவாறே.
“கிண்டல் பண்ணாதீங்க ஐயா”
“அத ஏண்டா, .. இப்பவே உங்க அப்பாகிட்ட போய் சொன்ன?” கேட்ட வாத்தியாரிடம் கொஞ்சம் கோவமான குரலுடன் சொல்ல ஆரம்பித்தான் சரவணன்.
“நான் ஒன்னும் சொல்லல, ஐயா….அந்த முருகேசு தான் அவன் தான் பவானியோட அத்த மவன் அவனும் அங்க தான் படிக்கிறான்,.. எங்க படிக்கிறான்…. ஊர சுத்துறான்…. அவனா ஒரு கடுதாசி எழுதி நான் எழுதுன மாதிரி அப்பாருகிட்ட நண்பன் மூலமா கொடுத்துட்டான். அப்பாரு எம் மேல கோபப்படுறாரு.”
“தெரிஞ்சோ தெரியாமலோ உன்னோட விஷயத்தை ஓபன் பண்றதுக்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கான்…அப்படி எடுத்துக்கலாமே நம்ம” என்றார் வாத்தியார்.
“பவானி அப்பாருக்கு தெரிஞ்சிருச்சுன்னா படிப்பை நிறுத்திருவாரு… அவளுக்கு இன்னும் இரண்டு வருஷம் படிப்பு இருக்கு.” என்றான் சரவணன் கண்களில் நீர் கோர்த்தபடி
அவனின் அக்கறைக்கு மனம் நெகிழ்ந்த தினகரன் வாத்தியார் அவன் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்தார். “சரி…. இந்த பிரச்சனையை என்கிட்ட விடு… நான் பாத்துக்குறேன்”
“பவானி தான்,.. பயப்படுது சார். படிப்பு முடிஞ்சதும் அந்த பய முருகேசனுக்கு கட்டி குடுத்துருவாங்க -னு.. அப்டி எதனாச்சும் நடந்துச்சு…னா..அவ உசிர போக்கிக்கிருவேன்னு சொல்லுது” குரல் கம்மியது சரவணனுக்கு.
“ம்….சரி…உங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். கவலைப்படாம இருங்க , பவானிட்ட நான் சொன்னேன்னு சொல்லு..அதுக்கு முன்னாடி நீங்க ரெண்டுபேரும் எந்த தப்பான முடிவுக்கும் போகக் கூடாது. எனக்கு ப்ராமிஸ் பண்ணு.”
தினகரன் வாத்தியார் நீட்டிய கையில் சத்தியம் செய்தான் சரவணன்.
“சரவணா,.. காதல் எவ்வளவு ஆழமா இருக்கோ?..அதே அளவுக்கு ஜெயிக்கணும்கிற வைராக்கியமும் இருக்கணும். பண்ணையாரு தம் பொண்ணு மேல எவ்வளவு நம்பிக்கை இருந்தா விவசாய கல்லூரில, அதுவும் ஆம்பள பசங்க நிறைய படிக்கற இடத்துல சேர்த்துப்பாரு….அதனால அவர் நம்பிக்கைக்கு பாத்திரமாக நீ நடந்துக்கணும். சரி நல்லா படி,.. நாளைக்கு லீவு முடிஞ்சு ஊருக்கு கிளம்புறியா?. எனக்கு செஞ்சு கொடுத்த ப்ராமிஸ் ஞாபகம் இருக்கு இல்ல” என்றார் தினகரன் வாத்தியார் அவனை அழுத்தமான பார்வையுடன்.
“கண்டிப்பா சார்,…”
“இந்த உறுதி எப்போதும் மனசுல இருக்கணும்”. அவரின் காலைத் தொட்டு கும்பிட்டு விட்டு கிளம்பினான் சரவணன்.
பசுஞ்சோலை கிராமத்திலுள்ள பேருந்து நிலையத்திற்கு வந்த சரவணன் பவானிக்கு பிடித்த மஞ்சள் ரோஜாவை வாங்கிக் கொண்டான். மனது இறக்கை கட்டிக்கொண்டு காற்றில் மிதந்தது.
காலேஜ் நூலகத்தில் காத்திருந்த பவானி சரவணனைக் கண்டதும் முகம் சிவக்கும் சிரிப்புடன் எதிர்கொண்டாள். அவன் தந்த ரோஜாப்பூவை கையில் வாங்காமல் தலையைக் காட்டினாள். வழக்கமான மரத்தினடியில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.
பவானி கேட்டாள் “வாத்தியார்கிட்ட பேசினியா?”
நடந்த எல்லாவற்றையும் சரவணன் சொன்னான்.
அதற்கு பவானி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான்.
“நா சொல்றத கேளு…அடுத்த வாரம் இந்த ஊர்ல இருக்கற கோயில்ல போய் கல்யாணம் பண்ணிக்கணும். அப்புறம் ரிஜிஸ்டர் பண்ணிட்டோம்னா பிரச்சனையை ஈஸியா சமாளிக்கலாம்”. என்று பவானி தெளிவான குரலில் அழுத்தமாக கூறினாள்.
“கொஞ்சம் பொறுமை…யா..”
அவன் பேசி முடிப்பதற்குள் அழ ஆரம்பித்தாள்.
“ஏய்…என்னாச்சு…டா…பவா….அழாத…யாராவது பாத்துரப் போறாங்க….”
மரத்தின் பக்கமாக திரும்பி அமர்ந்து கொண்டு அழகையினூடே திக்கி திக்கிப் பேசினாள்.
“முருகேசு…அப்பாக்கு ஃபோன்ல சொல்லிட்டான். அப்பா என்னையக் கூப்பிட்டு திட்டினாரு. இந்த வாரம் சனிக்கிழம இங்க வரேன்றிக்காரு….. எனக்கு பயமாயிருக்கு…படிப்ப நிறுத்திருவாரு..ன்…னு…..” தேம்பி தேம்பி அழுதாள்.
சரவணனுக்கும் பயமாக இருந்தது. அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“சரி..நீ சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்கிருவோம். அப்புறம்.. படிப்பு…அத எப்டி…?” என்று கேட்டான்.
“பரவால்ல…அப்பறமா நா உங்க வீட்டுக்கு வந்தப்புறம் நீ என்னை படிக்க வைக்க மாட்டி யா என்ன?…”
“எனக்கு இன்னும் ஆறு மாசத்துல டிகிரி முடிஞ்சிடும்.. அப்பறம் உன்ன கூட்டிட்டு எங்க வீட்டுக்கு போலான்றியா?”
“ம்…ஆமா” என்றாள் பவானி கண்கள் மின்ன.
சரவணனுக்கு குழப்பமாக இருந்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings