2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
முன்கதைச் சுருக்கம்
பாண்டி ஒரு கோழி வியாபாரி. மொபெட்டில் கூடையைக் கட்டிக்கொண்டு ஊர்களில் கோழிகளை வாங்கிகொண்டு போய் வாரச் சந்தையில் விற்பது அவன் தொழில். அன்றும் அவன் அப்படி வியாபாரத்திற்கு கிளம்பினான். இரண்டு மூன்று ஊர்களில் கோழிகளை வாங்கிக் கொண்டான். அன்று புத்தூரில்தான் வாரச்சந்தை. போகிற வழியில் ஒரு ஏரியில் குளித்து முடித்து உடுத்திக்கொண்டு மறுபடியும் கிளம்பினான். அதற்குள் ஒரு பீடியை எடுத்து புகை விட்டான். புகை வளையங்களுக்கு இடையே சில்க்கின் முகம் தெரிவது போல இருந்தது. சிலிர்த்துக் கொண்டான். அதே வேகத்துடன் சந்தையை அடைந்தான்.
இவனைக் கண்டதும், ‘ வாயா… கோழீ… இன்னிக்கி கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டாப்புல இருக்கு.’ என்றாள் சில்க் உதட்டோரம் புன்னகையை சிந்தியபடி..
‘ இன்னிக்கி சீக்கிரமே கோழி நிறைய கிடைச்சுடுச்சு, வழியில நீராகாரம் குடிச்சேன். வீட்டுக்கு போகலே, நேரா வந்துட்டேன். நீ எப்போ வந்தே ‘ என்றான். பதிலுக்கு ‘ அரை மணிநேரம் ஆச்சுய்யா. இன்னிக்கு ஆறு ஆடுதான் இழுத்தாந்தேன். இதுகளை வித்து முடிச்சதும் உன்னோட சேர்ந்துக்கறேன்… நிறைய கோழிங்க வச்சிருக்கே போல… நானும் கூட வந்து உட்கார்ந்தேனா வித்து முடிச்சிட மாட்டேன்? ‘ என்றாள் புன்னகையுடன்.
‘ நீ சந்தைல மட்டும்தான் கூடவந்து உட்காரறே ‘ இது அவனது மைன்ட் வாய்ஸ்.
‘ என்னய்யா எதாச்சும் சொன்னியா ‘ அவள் கேட்டாள்.
பாவி….என் மனசுல ஓடறதை அப்படியே படிச்சுடறாளே என்று நினைத்துக் கொண்டு பற்களை மட்டும் பதிலாய் காட்டினான். சிரித்துக் கொண்டே கோழிகளை இறக்கி கயிறு போட்டு கட்டினான்.
‘ பரவாயில்லியே இன்னிக்கு எல்லாம் கொஞ்சம் பெரிய சைஸ் கோழிகளா இருக்கே. இருபது தேறும் போல இருக்கே ‘ என்றாள்.
‘ இல்ல பதினேழு ‘ என்றான். அந்த நேரம் வாரச்சந்தை குத்தகை தாரர் வரி வசூலிக்க வந்தார்.
‘ அண்ணாச்சி இப்பத்தான் கடையே விரிசிருக்கேன் இன்னும் வியாபாரம் ஆரம்பிக்கலே, இப்போவே வரி கேட்டு வந்தா எப்படி… ஒரு ரவுண்டு போயிட்டு வாயேன்.’ என்றான் பாண்டி. ‘ இதுக்கு ஏன்யா அவரை போயிட்டு திரும்ப வரச்சொல்றே… நான் தாரேன் கணக்குல வச்சுக்க.’ என்று சொன்னாள்.
‘ கணக்குல மட்டும் தானா ‘ இது அவனது மைன்ட் வாய்ஸ்
‘ என்னய்யா எதாச்சும் சொன்னியா ‘ அவள் கேட்டாள்.
பற்களை மட்டும் பதிலாய் காட்டினான்.
ஆரம்பத்தில் கொஞ்சம் காற்று வாங்கிய சந்தை, பொழுது சாயச் சாய கூட்டம் முட்டியது. சில்க் நான்கு ஆடுகளை விற்றுவிட்டாள். பாண்டி ஆறு கோழிகளை விற்று விட்டான்.
ஒரு பெரியம்மா பாண்டியிடம் ரொம்ப நேரமாய் பேரம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சில்க், குறுக்கிட்டு ‘ ஆத்தா…. சொன்ன விலைக்கு வாங்கிட்டு போ, கறி நுங்கு மாதிரி இருக்கும்…. காச பாக்காத… புள்ளங்களுக்கு ஆக்கிக் குடுத்தோமா, புள்ளைங்க சந்தோசமா தின்னுச்சானு பாரு…’ என்றாள். அந்த பெரியம்மா பணத்தைக் கொடுத்து கோழியை வாங்கிக் கொண்டு போனாள்.
‘ இந்த வாய்த்தான் எனக்கு புடிச்சது..’ இது அவனது மைன்ட் வாய்ஸ்.
‘ ஏன்யா ஏதும் சொன்னே… ‘ என்றபடி மாராப்பை சரிசெய்தாள் அவள்.
பாவி….என் மனசுல ஓடறதை அப்படியே கண்டுபிடிச்சுடறாளே என்று மறுபடியும் வியந்தான்.
கூட்டம் சேர சேர மிச்ச ஆடுகளையும் விற்றுத் தீர்த்தாள் சில்க். பிறகு பாண்டியுடன் வந்து சேர்ந்து கொண்டாள். இன்னும் ஆறு கோழிகள் பாக்கி இருந்தன இவனுக்கு.
அவனை இடித்துத் தள்ளிக்கொண்டே, ‘ யோவ் நீ வித்தவரை போதும், கொஞ்சம் பேசாம ஒதுங்கி நின்னு… நான் எப்படி விற்கிறேன்னு மட்டும் பார்..’ என்று சொல்லியபடி தனது கண்டாங்கி சேலையை இழுத்து கட்டிக் கொண்டாள்.
அப்போது வந்தவரிடம், ‘ அண்ணே…. கடையில போனா ஒரு லெக் பீஸ் நூறு ரூபா…ரெண்டு லெக் பீஸ் இருநூறு ருபாய். மீதி கோழியை வறுத்தா அது முன்னூறு ரூபாய் ரொக்கம் காணும். மொத்தத்துக்கு இந்த கோழிய வறுத்தா ஐநூறு ரூபா… நாங்க சொல்ற விலை இருநூறு ரூபா. வாங்கிட்டு போங்கறேன் ’ என்று இழுத்தாள். அவன் வழிந்துகொண்டே வாங்கிக்கொண்டு போனான். ஒரு கோழியை விற்றுத் தீர்த்தாள்.
இன்னொரு அம்மா கோழியை பார்த்துக் கொண்டே நின்றாள். ‘ அக்கா ஒன்னை எடுத்துக்கிட்டு போய் ஆக்கி அரிச்சுப்போட்டு தின்னுட்டு உடம்ப தேத்துவியா, அதா உட்டுட்டு இப்படி சீக்குக் கோழியாட்டம் மசமசன்னு நிக்கறியே.. காச குடு கோழிய வாங்கு, ஆள விடு ‘ இன்னொரு கோழியையும் விற்றுத் தீர்த்தாள்.
இப்படி சொல்லி சொல்லியே கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எல்லாமே விற்றுத் தீர்த்தாள். பெட்ரோல் போட்டது, வரி கட்டினது, வடை டீ சாப்பிட்டது போக ஆயிரம் ரூபாய் நிற்கும் என்று மனக்கனக்கு சொன்னது அவனுக்கு.
கோழி விற்ற பணத்தை நீட்டியபடி ‘ இந்தாய்யா உன் பணம், அம்பது ரூபா மட்டும் எனக்கு ’ என்று சொல்லி அந்த பணத்தை ஜாக்கட்டுக்குள் செருகிக்கொண்டாள். சிரித்தான். உடனே அவன் முணுமுணுத்தான்… ‘ சொலீக்கே பீச்சே க்யா ஹே…’ அவள் ஒன்றும் புரியாமல் இவனைப் பார்த்தாள்.
‘ இன்னிக்கு உன்கிட்டே பேசணுமே… ‘ இது அவனது மைன்ட் வாய்ஸ்
‘ என்னய்யா, ஏதாவது சொன்னியா..’ என்றாள் இவள்
பற்களை பட்டும் காட்டினான் பதில் சொல்லாமல்.
‘ இன்னிக்கி என் தம்பி சைக்கிள் கொண்டாரலை. உன் மொபெட்டுலையே கொண்டுபோய் என்னை எங்கவீட்டுல இறக்கி விட்டுட்டு, அப்பால உன் வீட்டுக்கு போய்யா ‘ என்றாள் சில்க் புன்முறுவலுடன். அவனுக்கும் அவளை ஏற்றிக் கொண்டு டபுள்ஸ் போகத்தான் ரொம்ப நாளாய் ஆசை. இப்போது அது கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது.
அவளை மொபெட்டில் உட்காரச் சொன்னான். ‘ இல்லைய்யா கொஞ்ச தூரம் நடக்கலாம்…’ என்று கூடவே வந்தாள். கொஞ்ச தூரம் நடந்ததும் மெல்ல கொக்கிப் போட்டான். ‘ சில்க் நீ என்னப் பத்தி என்ன நினைக்கற ‘
ஒன்றும் தெரியாதவள் போல ‘ என்னய்யா திடீர்னு நூல் விடறே… ‘ என்றாள். பிறகு, அவனை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு சொன்னாள், ‘ என்ன…தண்ணி போட மாட்டே,.. வெத்தல பாக்கு போட மாட்டே, பொய் பித்தலாட்டம் பேசமாட்டே…. பீடி மட்டும் குடிப்பே… இது போதாதாய்யா ஒரு நல்ல மனுஷனுக்கு அடையாளம்…. சரி இப்போ இதையெல்லாம் ஏன்யா என்கிட்டே கேட்கறே.’ என்றாள், கண்களில் கொஞ்சம் விஷமத் தனத்துடன்.
தொடர்ந்து, ‘ வளையம் வளையமா புகை உடுவியே அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்… ‘ என்றவள், ‘ எங்கே ஒரு வளையம் உடேன்… ‘ என்று அவள் சொல்ல, அவன் ஒரு பீடியை பற்றவைத்து வளையம் வளையமாய் புகை விட்டான்.
சட்டென சிரித்தான் அவன். ‘ ஏன்யா சிரிச்சே ‘ என்றாள்
‘ இல்ல… நான் மட்டும் கோழி வித்தேனா லாபம் கம்மியா வருது… நீயும் என்னோட சேர்ந்துக்கும்போது நல்லா லாபம் வருதே…’ என்று இழுத்தவன், அவளைப் பார்த்தபடி, ‘ நீ என்னோட வாழ்க்கையிலேயும் ஒன்னு சேர்ந்தா எவ்வளவு நல்லாயிருக்குமேன்னு தோனுச்சு….! உன் மனசுலயும் அப்படி ஏதாவது இருந்தா நல்லா இருக்குமேன்னும் தோனுச்சு…’ என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே சத்தமாய் சொன்னாள், ‘ யோவ்…கொஞ்சம் நில்லுய்யா ‘
கொஞ்சம் அதிர்ந்து போய் அப்படியே நின்றான். அவளோ சிரித்துக்கொண்டே சொன்னாள், ‘ ஏன்யா பயந்துட்டியா…’ உடனே ரோடு ஓரமாய் உட்கார்ந்திருந்த பூக்காரியைக் காட்டி, ‘ ரெண்டு முழம் பூ வாங்குய்யா ‘ என்றாள்.
அவளுக்கும் தெரியும் அவனுக்கும் அவள் மேல் ஒரு கண் என்று. அவனை அப்படியே ஒருதடவை ஏற இறங்க பார்த்தாள். முப்பத்திரண்டு வயசாகியும் கல்யாணம் ஆகாத ஜல்லிக்கட்டுக்காளை. அதுவும் முரட்டுக்காளை. கருந்திறல் கொண்ட மேனி. அடர்ந்த முடி. கருத்த மீசை,,. அடர்த்தி கிருதா.,,
அவனோ, ‘ எதற்காக பூ வாங்கச் சொல்கிறாள் ’ என்ற கேள்வியுடனே இருபது ரூபாய் கொடுத்து மல்லிகைப்பூவை வாங்கினான். அவனைப் பார்த்தவள, ‘ யோவ் என்னையா முழிச்சிக்கிட்டு நிக்கறே. அப்படியே உன் கையாலேயே என் தலையில் வெச்சு விடுயா…’ என்றவள் தலையை அவனுக்கு காட்டியபடி திரும்பி நின்றாள். அவன் விக்கித்து போய் நிற்க ‘ டியூப் லைட்… டியூப் லைட்….உன் .பொண்டாடிட்டிக்கு பூ வெச்சு விட இப்படியா யோசிப்பே ‘ என்றாள். அவளது உதட்டோரம் புன்னகைச் சிந்தியது.
இரண்டு வியாபாரிகளும் இப்போது வாழ்விலும் கூட்டு சேர்ந்து கொண்டனர்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings