2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ கோலீ… கோலீ… கோலி இருக்கா கோலி…’
கூவிக் கொண்டே போய்க்கொண்டிருந்தவன் ஒரு ஆலமரத்தடியைப் பார்த்ததும், மொபெட்டிலிருந்து ஒரு காலை ஊன்றி நின்று கொண்டான். துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டான். மறுபடியும் குரல் கொடுத்துக்கொண்டே மொபெட்டை விட்டான். ‘ கோலி இருக்கா கோலி..’
‘ இந்தாயா கோலீ… ‘ என்று ஒரு பெண்குரல் கேட்டது. மொபெட்டை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். மூன்று வீடுகள் தள்ளி ஒரு சந்தில் ஒரு பெண்மணி கையை அசைத்துக்கொண்டிருந்தாள். இறங்கி மொபெட்டை தள்ளிக்கொண்டே போய் நின்றான்.
‘ கோலீ என்ன விலைலயா எடுக்கறே ‘
‘ அம்மா… கோலியக் காட்டு, நான் பாத்துட்டு சொல்றேன். ’ என்றான்.
‘ இருய்யா அவசரப்படாத… சந்தை செலவுக்கு காசில்லைனுட்டு, ரெண்டு கோலிய வித்துக்கச் சொல்லிட்டு வேலைக்கி போய்டுச்சு என் மாமன்… விடியும்போதே மறந்து போயி கோலிய வேற தெறந்து உட்டுட்டேனா. இப்போ எல்லாம் எங்கே அலையிதுகளோ தெரியல… கொஞ்சம் அப்படி வேப்பமரத்து நிழல்ல உட்காரூ… ஒரு அஞ்சு நிமிஷத்தில புடிச்சுத் தர்றேன் ‘ என்றவள், மடமடவென ஒரு பஞ்சாரக் கூடையை எடுத்து கவிழ்த்து ஒரு சின்ன குச்சியை முட்டுக் கொடுத்து நிற்கவைத்துவிட்டு ஒரு மெல்லிசான வெள்ளை நூலை குச்சியில் கட்டி மறு நுனியை தூரமாய் கொண்டு வந்து போட்டாள். கம்பு சோளம் கலந்த தீவனத்தை அள்ளிவந்து கூடைக்குள் கொஞ்சம் கொட்டி விட்டு, வெளியேயும் லேசாய் கொஞ்சம் தெளித்தாள்.
குட்டிச்சுவர் பக்கமும் வைக்கோல்போர் பக்கமும் பத்துப் பதினைந்து கோழிகள் கொக்கரித்துக் கொண்டு நின்றன. ‘ சூ ‘ என்றபடி அவைகளை பின்புறமாய் போய் விரட்டினாள். எல்லாம் ஆளுக்கொருபக்கமாய் ஓட நான்கைந்து கோழிகள் மட்டும் அங்குமிங்குமாய் ஓடி பின்பு மெல்ல மெல்ல வாசல் பக்கமாய் வந்தன. கம்பு சோள தீவனத்தைப் பார்த்ததும் கொக்கரித்துக்கொண்டே கூடையருகில் வந்தன. அவளோ அரவம் போடாமல், கொஞ்சம் வேகமாய் ஓடி வந்து நூல் நுனியை பிடித்துக் கொண்டு குத்துக்காலிட்டு உஷாராய் உட்கார்ந்து கொண்டாள்.
வெளியே கிடந்த தீனிகளை கொத்திக் கொண்டே முன்னோக்கி வந்த கோழிகள், கூடைக்குள் போகலாமா வேண்டாமா என்பது போல தலையை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு, கொஞ்சம் கவனமாய் கூடைக்கு வெளியில் இருந்த தீனிகளை கொத்தி கொத்தித் தின்றபடி கொஞ்சம் கொஞ்சமாய் உடம்பை உள்ளே நுழைத்தன… அவ்வளவுதான், அவள் நூலை இழுக்க கூடை கவிழ்ந்தது. மூன்று கோழிகளும் உள்ளே அகப்பட்டுக் கொண்டன.
‘ கோலீ காரரே… இந்த மூனையும் பாருய்யா….. பாத்துட்டு என்ன விலை தருவேன்னு சொல்லு. சீக்கிரம்… ‘ என்றாள். மூன்றையும் தூக்கிப் பார்த்தவன், ‘ பாரும்மா, இந்த ரெண்டு பொட்டைக் கோலிகளுக்கும் தலைக்கு எழுபத்தஞ்சும், இந்த சேவலுக்கு நூறுரூபாயும் தாரேன்.’ என்றான்.
விரல்விட்டு எண்ணிப்பார்த்தவள், கண்களை உருட்டிக்கொண்டு சொன்னாள், ‘ என்னாது மூனுக்கும் சேர்த்தே இருநூத்தம்பது தான் தருவியா…கட்டுப் படியாகாதுயா, கட்டுப் படியாகாது…. எனக்கு சந்தை செலவுக்கு நானூறு ரூபா தேவை ‘
‘ அம்மா தாயே… நான் சரியான விலையத்தான் சொல்றேன். வேணும்னா இன்னும் ரெண்டு கோலி புடிச்சுக் குடு. மேல நூறோ நூத்தம்பதோ போட்டுத் தாரேன் ’ என்றான் பாண்டி.
‘ உக்கூம் இதுக்கேத்தான் தாவு தீர்ந்து போச்சு…சரி மேல நூறு ரூபா போட்டுக் கொடு ‘ என்றாள். இவன் மறுக்க, பின் அவள் மறுக்க, ஒரு வழியாய் மூன்றுக்கும் சேர்த்து முன்னூறு என்று பேரம் படிய, பணத்தைக் கொடுத்துவிட்டு கோழிகளை பிரம்பு கூடைக்குள் போட்டு மூடியை இழுத்துக் கட்டினான்.
துண்டால் முகத்தை மறுபடியும் துடைத்துக் கொண்டவன் அவளைப் பார்த்து, ‘ அம்மா…வெயில் சுள்ளுன்னு அடிக்குது. எதாச்சும் நீரகாரம் இருந்தா கொடேன்… ’ என்றான்.
‘ சித்த இருய்யா ‘ என்றுவிட்டு உள்ளே போனவள் ஒரு கிண்ணத்தில் பழைய சோற்றை உப்புப் போட்டு கலக்கி எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். கூடவே கடித்துக் கொள்ள இரண்டு தோலுரித்த வெங்காயத்தையும் அதில் வைத்திருந்தாள். வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே கடகடவென சோற்றுத்தண்ணியையும் சோற்றையும் ஒருசேர குடித்து விட்டு பெரியதொரு ஏப்பம் விட்டபடி, ‘ ரொம்ப சந்தோஷம்மா…நல்லாயிரும்மா…’. என்றுவிட்டு கிளம்பினான்.
இப்படியே இன்னும் இரண்டு ஊர்களுக்குள் போய் கூவிக் கூவி பதினைந்து கோழிகள் பிடித்து விட்டான். வாரச் சந்தைக்குப் போனால் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும். இன்றைக்கு புத்தூர் சந்தை. அங்கே அவளும் வருவாள் என்ற நினைப்பு வந்தவுடனே உடம்பு சிலிர்த்தது அவனுக்கு.
முப்பது வயது இருக்கும் அவளுக்கு. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆனாலும் கருப்பாய் கலையாய் பந்தயக்குதிரை மாதிரிதான் இருப்பாள்.
அவன் போகிற சந்தையிலெல்லாம் அவளும் வந்து கடை விரிப்பாள். அதிலும் அவனுக்கு பக்கத்து கடையாகப் பார்த்து தான் கடை விரிப்பாள். ரொம்பவும் விவரமானவள். பேசியே ஜெயித்து விடுவாள். பத்து ஆட்டை ஒட்டி வருவாள். விளக்கு வைக்கும் நேரத்துக்கெல்லாம் எல்லாவற்றையும் விற்று தீர்த்து விடுவாள். பிறகு இவனுடன் வந்து உட்கார்ந்து கொள்வாள். இவனாவது யாரேனும் பத்து இருபது குறைத்து கேட்டால் மனமிளகி கொடுத்து விடுவான். ஆனால் அவள் இருக்கிறாளே, குறைப்பதற்கு பதிலாக பேசிப் பேசியே பத்து இருபது கூடுதல் விலைக்குத்தான் விற்பாள். அவ்வளவு வாய் ஜாலம், திறமை.
ஒரு பெரிய ஏரியைக் கடக்கும்போது நிறையபேர் தாங்களும் குளித்துக் கொண்டு, தங்களது ஆடு மாடுகளையும் குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். இவனுக்கும் குளிக்கலாம் போல இருந்தது. மொபெட்டை நிறுத்திவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு ஏரியில் இறங்கிவிட்டான்.
மூழ்கி மூழ்கித் திளைத்தவன், மேலே வந்து அவிழ்த்து வைத்த துணிகளையே மாட்டிக்கொண்டு ஈரத் துண்டை பிழிந்து உதறி, ஹேண்ட்பாரில் தொங்கவிட்டுக்கொண்டு கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான்.
‘ பாண்டி.. நீ அழகன்டா… மிளகாப் பழம் மாதிரி செவப்பா இருக்கே… உன்னை எந்த கிளி வந்து கொத்திக்கிட்டுப் போகப் போகுதோ ‘ என்று சிரித்துக் கொண்டான். இந்நேரம் சில்க் சந்தைக்கு வந்திருப்பளோ என்று நினைத்துக் கொண்டான். முப்பது வயதாகியும் இன்னும் யாருக்கும் கழுத்தை நீட்டாமல் இருக்கிற நாட்டுக் கட்டை. காந்தக் கண்ணழகி. ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தான். இழுத்து வளையங்களாய் விட்டான். அந்த வளையங்களுக்கிடையில் அவளது முகம் தெரிவது போல இருந்தது. உடம்பும் சிலிர்த்தது. அதேவேகத்துடன் சந்தையை அடைந்தான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings