ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
காலைப் பொழுதின் வரவை வரவேற்கும் பறவைகளின் சங்கீதத்துடன் வராண்டாவில் அன்றைய செய்த்தித்தாளில் மூழ்கியிருந்த விஜயாவை, காம்பௌண்ட் கேட் அருகே அழைத்த குரல் கவனத்தை ஈர்த்தது.
திரும்பிப் பார்த்தவர், “அடடே விவேக, இருப்பா கேட் திறக்கிறேன்” என்று நடந்து சென்று கேட்டை திறந்தார்.
“ஹாய் ஆண்ட்டி…. எப்படிருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன்… நீ எப்படியிருக்கே?”
“நல்லா இருக்கேன் ஆண்ட்டி… இந்தாங்க ஸ்வீட்”
“என்ன விசேஷம் விவேக்?”
“எனக்கு ஐஐடி சென்னையில சீட் கிடைச்சிருக்கு ஆண்ட்டி”
“வாவ் வாழ்த்துகள். ம்… அப்புறம் இந்துவுக்கும் கோவை மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு”
“என்னுடைய வாழ்த்துகளை சொல்லிடுங்க ஆண்ட்டி”
“அட இருப்பா, இந்துவ கூப்பிடறேன் நீயே வாழ்த்து சொல்லிடு”
“இல்ல பராவாயில்ல நான் கிளம்புறேன்”
“கொஞ்ச இருப்பா, காபி போட்டுட்டு வரேன். இந்துவையும் வரச் சொல்றேன், நீ உட்காரு” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் இந்துவை அழைத்த விஜயா, “இந்து… நீ பத்தாவதுவரை படிப்பு, ஸ்போர்ட்ஸ், கலை எல்லாத்துலயும் சிறந்து வந்த. ஆனா இப்ப சமீப காலமா உன்னுடைய நடவடிக்கையில வித்யாசம் தெரியுதே”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லமா”
“நான் கண்டிப்பான அம்மாவா பேசல, உன் தோழியா கேக்குறேன். நானும் உன் வயச கடந்து வந்தவதான், பருவ வயசு என்ன செய்யுன்னு தெரியும். உன் பிரச்னை என்னன்னு சொன்ன எனக்கு தெரிந்த ஆலோசனை சொல்வேன்”
பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த தன் தாய், உளவியலில் ஆய்வு செய்தவர் போல் பேசியது இந்துவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“அம்மா… ஒரு பையன் இரத்தத்தால் லவ் லெட்டர் எழுதி வந்து கொடுத்திருக்கான். நான் லவ் பண்ணலேன்னா தற்கொலை பண்ணிக்குவேணு மிரட்டுறான், எனக்கு பயமா இருக்கு”
“இத என்கிட்ட சொல்லியிருக்கலாமே?”
“பயமா இருந்துச்சு மா”
“சரி சரி… நீ ஒன்னும் கவலப்படாத. நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரேன், எல்லாம் பேசிக்கலாம்”
“அம்மா ப்ளீஸ்… ஸ்கூலுக்கு வர வேண்டாம். விஷயம் பெருசானா என்னால படிக்க முடியது”
“எதுவும் ஆகாது, நான் பார்த்துகிறேன்”
மறுநாள் மாலை, பள்ளி வேளை முடிந்ததும் மாணவர்கள் வெளியேறும் கேட்டுக்கு அருகே காத்திருந்தார் விஜயா.
இந்து வந்ததும், “இந்து… யார் அந்த பையன்?”
“அதோ நம்மை பார்த்துட்டு பார்க்காத மாதிரி போறானே, அந்த பையன்தான் மா” என்று ஒரு மாணவனைக் காட்டினாள்.
விஜயா அந்த பையனைப் பின்தொடர்ந்த சென்று தோள்மீது கை வைத்து, “தம்பி கொஞ்சம் நில்லுப்பா” என்றார்.
திரும்பிப் பார்த்தவன் முகத்தில் அச்சத்தின் அறிகுறிகள் தென்பட்டன. இதமான மாலையிலும் இதயத்தின் படபடப்பு காரணமாக வியர்வை வடிந்துக் கொண்டிருந்தது.
“என்கூட கொஞ்சம் வா” என்று அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று காபி கொடுத்தார்.
“தம்பி… நான் சுத்தி வளைச்சு பேசல, நேரடியா விசயத்துக்கு வாரேன். நீ செஞ்சியிருக்கிற காரியம், பருவ வயது கோளாறு. இந்த வயசுல எதிர் பாலினத்தினர் மீது ஈர்ப்பு வரும், அது ஹார்மோன்கள் செய்யும் வேலை. பார்க்கிற எல்லா பொண்ணும் அழகா தெரியும், அதுக்காக இரத்தம் சிந்த முடியுமா? உங்களுடைய இலட்சியம், இலக்கை நோக்கி இருக்கணும். கனவுகள்… வானளவு வாழ்வில் முன்னேறுவதாக இருக்கணும்”
தலை கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தான், மேலும் விஜயா தொடர்ந்தார்.
“தம்பி… ஓடுகிற கால வெள்ளத்துல எதிர் நீச்சல் போட்டு முன்னேறணும். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு முடித்து சிக்கல்கள் நிறைந்த சமூகத்துக்கு வரணும். வாழ்வில் வெற்றி பெறணும். அந்த வெற்றி எங்கு இருக்கிறது? ‘தொட்டுவிடும் தூரந்தான்’ வீணா மனச போட்டு குழப்பிக்க வேண்டாம். நாங்க மற்ற பெற்றோர் போல உன் மீது புகார் கொடுத்தோ, ஆள் வைத்து மிரட்டவோ செய்ய மாட்டோம், அது உன் வாழ்க்கையை பாழாக்கும். அந்த மாதிரி செஞ்சா உன்னுடை எண்ணங்கள் தவறான வழியில் போயிடும். என்ன தம்பி ரொம்ப அறுத்துட்டேனா?”
பேசாமல் அமைதியாய் இருந்தான்.
“காப்பி ஆறிடுச்சுப்பா… குடி?”
அன்று காபி காபி குடிக்காமல் போனவன், இன்று காபி குடித்துக் கொண்டிருக்கிறான், திரும்பி வந்த விவேக்.
வீட்டினுள் இருந்தது வெளியே வந்த இந்துவுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு கிளம்பியவன், “தேங்க்ஸ் ஆண்ட்டி…. தொட்டுவிடும் தூரந்தான் வெற்றி, எல்லாமே உங்களால் தான்” என்றான். மூவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
(முற்றும்)
தொட்டுவிடும் தூரம் தான் – கதை நல்லாருக்கு. வாழ்த்துகள் எழுதியவருக்கும், சஹானாவிற்கும்.
கீதா