in

விடியலைத் தேடும் விழிகள் (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பை

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

புயல் மழை அடித்து ஓய்ந்ததில் ஊரே போர் முடிந்த போர்க்களமாக காட்சியளித்தது அஞ்சலைப் பாட்டிக்கு. தன் குடிசையும் தன் சொத்துக்களுக்கான இரண்டு பசு மாடுகளும், ஒரு ஆட்டுக்குட்டியும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்ததை தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

அஞ்சலைப் பாட்டியின் கணவன் இறந்ததிலிருந்து, அந்தப் பசு மாடுகளும் ஆட்டுக் குட்டியும் வியாபாரமும் தான் அவள் வயிற்றையும் அவள் விதவை மகள் தேவகியையும் பசியாற்றிக் கொண்டிருந்தன.

மண் குடிசை இருந்த இடம் கட்டாந்தரையாகிப் போயிருந்தது. தன்னுடைய மாற்றுச் சேலை அந்தப் பனைமரத்தில் கொடியாகக் கிழிந்து பறந்து கொண்டிருந்ததைக் கூட எடுக்க முடியாது தவித்தாள்.

ஊரில் உள்ள உறவு என்று சொல்லிக் கொண்டிருந்த தேவகியின் கணவன் குடும்பமும் பெய்த மழையைக் கண்டு பயந்து வேறு இடம் மாறிப் போய் விட்டார்கள்.

என்ன செய்யப் போகிறேன் என் று எண்ணியவாறு தவித்துக் கொண்டிருந்த போது, கேவல் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அஞ்சலைப் பாட்டி.

தன்னுடைய விதவை மகள் கேவிக் கேவி அழுது  கொண்டிருந்தாள். புயலுக்குத் தப்பிய அந்த பூவரசு மரத்தடியில் அமர்ந்து கொண்டு.

தன்னைப் போலவே தேவகிக்கும் பசி கண்டிப்பாக இருக்கும்.  முந்தா நாள் மந்திரிமார்கள் வந்து உணவுப் பொட்டலங்கள் வழங்கிய போது இவளுடைய தள்ளாமையைப் பார்த்து அதிகமாக கிடைத்த உணவு நேற்று வரை வயிற்றை நிரப்பி விட்டது.

இனி என்ன செய்வது? அறுத்துவிட்டு தன்னிடம் வந்து நிற்கும் தேவகியின் மேல் கோபமும் இரக்கமும் கலந்து வந்தது. அழுது விட வேண்டுமென்று பலமுறை முயற்சி செய்தும் முடியாமல் தவித்துக் கொண்டு அவள் கைக்கம்பு கூட வெள்ளத்தில் சென்று விட, நடப்பதற்கு கஷ்டப்பட்டு தேவகியின் அருகில் வந்தாள்.

“அம்மா நாம் மெதுவாக பட்டனம் போய் விடலாமா? எதாவது நாலு இடங்களிலே பத்துப் பாத்திரம் விளக்கியாவது பிழைத்துக் கொள்ளலாம்” என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு சொன்னாள்  தேவகி.

“இல்லேம்மா… எம்பது வருஷம் இந்த மண்ணோடு எனக்கு சிநேகம். இனி நான் போறதா இருந்தா இந்த மண்ணுலே தான் போகனும்னு ஆசைப்படுகிறேன். நீ சொல்ற மாதிரி டவுனுக்கு போனாலும் சாப்பாடு கிடைக்கும். தங்குவதற்கு எங்கே போவது? இவ்வளவு இளமையா இருக்கிர உன்னை வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாம தவிச்சிண்டிருக்கேன். அங்கெல்லாம் போனா எத்தனைப் பேர் கண்கள் உன்னைத் தாக்கும். உன்னை எளிதில் டவுன் பாழ்படுத்திடுமே தேவகி. அப்புறம், நான் உயிர் வாழ மாட்டேன் மகளே” என்று அழ ஆரம்பித்தாள் அஞ்சலைக் கிழவி.

“சரி அம்மா அழாதே, எதாவது செய்யலாம். நாம் தங்குவதற்கு  ஏதாவது வசதி செய்ய வேண்டும். நாலா பக்கமும் இருந்த ஊர்கள்  எல்லாம் வெள்ளம் கொண்டு போய்விட்டது. பாரு, உடம்பிலே வலுவும், காசும் இருக்கிறவங்க புதுசா வீடு கட்ட ஆரம்பிச்சாச்சு. வயல், தோட்டமெல்லாம் திரும்ப உருவாக ஆரம்பிச்சாச்சு. நமக்கு  ஏதாவது வழி பிறக்காமலா போகும்? அழாதே எழுந்திரு”  என்றவாறு தன் தாயை இழுத்துக் கொண்டு காற்றிற்கு மறைவான அந்த பூவரசு மரத்தடியில் உட்கார வைத்தாள். 

பனை மரத்தில் கிழிந்து கொடியாகப் பறந்த அந்தச் சேலையை  ஒரு கம்பை எடுத்து கொக்கிப் போட்டு இழுத்து அஞ்சலைக்கு  மேலே வெயில் வராத வாறு கிளைகளில் கட்டினாள் தேவகி.

என் மகள் கொஞ்சம் தெளிந்து விட்டாள். பால் கறக்கக் கூட  குடிசையை விட்டு வெளியே வர விரும்பாத தேவகி இதோ உனக்கு உதவி செய்ய ஆரம்பித்து விட்டாள்.

தன் கணவனை இழந்து  வீட்டிற்குத் திரும்பியதிலிருந்து அவள் பேசிய நான்கு அல்லது  ஐந்து வார்த்தைகள் தான் இருக்கும். இப்போது அந்தப் புயலும்  வெள்ளமும் இவளை எத்தனையோ மாற்றியிருக்கிறது. இவள் பிழைத்துக் கொள்வாள். இனி எனக்குப் பயம் வேண்டாம் என்று  அஞ்சலைப் பாட்டி எண்ணிக் கொண்டிருக்க, வெயிலுக்கு ஒதுங்கி  அம்மாவின் அருகில் வந்தமர்ந்தாள் தேவகி.

“பசிக்குதே, இனி என்ன செய்வது?” என்று முனங்கினாள்  தேவகி. தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு.

‘இந்தத் தள்ளாத வயதிலே இந்தக் கருமாரியம்மன இப்படிப்  பண்ணிட்டாளே. என் ஊருக்கு இந்தப் புயலையும் வெள்ளத்தையும்  அனுப்பி என் உடமைகளை இழுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் இத்தனை நாளும் பூசை புனஸ்காரம் பண்ணி  கடவுளைக் கும்பிடுப் போட்டது கூட தப்பாய்யா. இப்போது பசிக்கும் என் மகளுக்கு என்னத் தரப் போகிறேன்’ என்று யோசித்து கொண்டிருக்கும் போது தூரத்தில் தரை மட்டத்திற்கு மேல் சில தளிர்கள் தென்பட்டன.

“அந்தா பனங்கிழங்கு பிளிர் வந்து கொண்டிருக்கு தேவகி… அவைகளைப் பிடுங்கிக் கொண்டு வா. கொஞ்சம் சுள்ளிப்  பொறுக்கி சுட்டு சாப்பிடலாம்” என்ற போது அஞ்சலைக்குள் மகிழ்ச்சி தென்பட்டது.  தேவகி கிழங்கு பிடுங்குவதற்குள் கம்பு தேடி அலைந்து கொண்டிருந்த போது அந்தப் பக்கமாக வந்த மன்னார் கோனார்.

“என்ன பாட்டி எல்லாம் போச்சு, பாதி பேரு வேற இடத்துக்கு மாறிப் போயிட்டாங்க. சர்க்காருல கூட தங்குறதுக்கு இடம் கொடுக்கிறாங்க. நீ இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்கே” என்றார்.

“யாரு? மன்னாரு கோனாரா? நான் என்ன செய்யட்டும். இந்த மண்ணுலே வாழ்ந்தாச்சு. இனி எங்கே போய் சாகப் போறோம்.  ஆனா நீரு ஆயிரத்துக்கு மேலே ஆடுகள் வச்சிருந்தீரே என்னாச்சு? எல்லாம் போயிருச்சா. மிச்சம் மீதி ஏதாவது இருக்கா?” என்று வருத்தமாகக் கேட்டாள்.

“என்ன சொல்றது பாட்டி, வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி  வந்த வருமானத்திலே ஆடாக வாங்கிச் சேர்த்தேன். ரெண்டாயிரத்துக்கு மேலே ஆடு சேர்த்தேன். ஆனா ஒண்ணு கூட தங்காம வெள்ளம் கொண்டு போயிடுச்சி. ஏதோ சர்க்கார் மானியம் தாறங்களாம். நீயும் போறியா? வயசான பொண்ணை வச்சிண்டு நீ ஏன் தள்ளாத வயசுலே இங்கே கஷ்டப்பட்டுண்டு கிடக்கணும். வாயேன்” என்றார்.

“இல்லே மன்னாரு. நீங்க போங்க பொழைப்புள்ள காட்டைப் பார்த்துட்டு போனால் தான் உங்களுக்கும் காரியம் நடக்கும். இடுப்பிலே தீப்பெட்டி இருந்தால் கொடுத்துப் போட்டு போ” என்றாள்.

இடுப்பு முந்தியிலே செருகி வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து அஞ்சலைப் பாட்டியிடம் கொடுத்து விட்டுப் போக, தேவகி தோண்டி எடுத்த பனங்கிழங்குகளோடு அம்மாவிடம் வந்தாள்.

“இதைப் பார்த்துக்கோ, நான் போய் சுள்ளி பொறுக்கிட்டு வர்றேன்” என்று கிளம்பினாள்.

“சரிம்மா” என்று திரும்பிய போது எங்கிருந்தோ ஓடி வந்த இரண்டு ஆட்டு குட்டிகள் அஞ்சலையிடம் வந்து ஒட்டிக்கொண்டு நின்றவாறு  “ம்மே…”  என்றன.

அவைகளை அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்த அஞ்சலைப் பாட்டிக்கு கண்களில் கண்ணீர் பொங்கினாலும் தன் வாழ்வின் விடியல் வந்து விட்டதாக எண்ணி பூரித்துப் போனாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாடகைத் தாய் (குறுநாவல்) – ✍ பேராசிரியர் முனைவர். வளர்மதி சுப்ரமணியம், சென்னை

    தென்றலான புயல் (சிறுகதை) – ✍ பீஷ்மா