மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
‘சோ’வென்று பெய்யும் கார்கால மழையை ரசிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் கவிதா.தப்பித் தவறி ஜன்னல் அருகில் சென்று விட்டால் போச்சு.
நரசிம்ம அவதாரம் எடுத்து அவளை வார்த்தைகளாலேயே குத்திக் கிழிக்க ஆரம்பித்து, ஏன்தான் இன்னும் உயிரோடு இருக்கிறோமா என்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு அவளை வரவழைத்து விட்டு, திருப்தியாய் வெளியே சென்று விடுவான் அவள் கணவன் சங்கர். அதுவும் அவளை வீட்டினுள் வைத்துப் பூட்டி விட்டு தான் எங்கும் செல்வான்.
கவிதாவின் அழகுக்குக் கொஞ்சம் கூட இணையில்லாதவன் அவள் கணவன் சங்கர். அதனாலேயே அவள் மீது தேவையில்லாத சந்தேகம் கொண்டு வீண்பழி சுமத்தி ஒரு குரூரத் திருப்தியுடன் சுயமகிழ்ச்சி அடைவான்.
கவிதா மெல்லத் தன் வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்த்தாள். தனது இளமைக் காலத்தில் தன்னைச் சுற்றிய அத்தனை பையன்களும் தன்னை ராணி போல் இளவரசி போல் பார்த்துக் கொள்வதாகச் சொன்ன போது ஏற்பட்ட ஒரு கர்வம்.
இப்போது நினைத்துப் பார்க்கும் போது மனதில் பெரிய சோகம் உண்டு பண்ணி… தனது வாழ்க்கையை அழகை ரசிக்கும் ஏன், அழகை விடுத்து ஒரு மனைவியாய், சகமனுஷியாய்ப் பார்த்துப் பழகும் ஒருவனிடம் சேர்க்காமல், நாய் கையில் கிடைத்த தேங்காய் போல். இளமையும், அழகும் கடலில் பெய்யும் மழை போல் வீணாகச் செய்த விதி என்ன விதி!?.
கவிதாவுக்கு மழை ரொம்ப பிடிக்கும், மழையில் நனைதல் மெத்தப் பிடிக்கும்.
கல்யாணம் முடிந்த ஒரு மழைக் காலத்தில் ஆசை ஆசையாய் மழையை வேடிக்கை பார்த்து மெல்ல மெல்ல மழையில் நனைந்து அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், “அவிழ்த்துப் போட்டு உன் அழகைக் காமிக்கறதுக்கு வேணும்னே மழையில் நனைஞ்சு அக்கம் பக்கம் யாராவது கிடைப்பானா நம்ம அழகைப் பாக்கிறதுக்குன்னு அலையறியா?”
அமில வார்த்தைகள் மழை நீரை விட வெகு வேகமாய் அவள் மீது தெளிக்க, அன்று உள்ளே அடங்கியவள் தான் கவிதா. ஆயிற்று, இருபத்தாறு வருஷங்கள் ஓடி விட்டது அவளுக்காக அவள் வாழ்ந்து. இத்தனை வருஷங்கள் கடந்தும் அவன் மட்டும் மாறவே இல்லை.
அவன் சந்தேகத்துக்கு அளவேயில்லை, அவளை விட வயதிலும் தோற்றத்திலும் மிகச் சிறுவனாக இருந்தாலும் சரி, வயதில் மூத்த தாத்தாவாக இருந்தாலும் சரி, அவளிடம் பேசுவதைப் பார்த்து விட்டால் ஒரு ராட்சச ஆட்டம் ஆடி விட்டுத் தான் ஓய்வான்.
அவனைப் பற்றியும் அவன் சந்தேகபுத்தி பற்றியும் நன்றாகத் தெரிந்து கொண்ட அக்கம் பக்கத்தினர் அவளிடம் பேசுவதையே நிறுத்தி விட்டனர். ஏன்… அவள் இருக்கும் திசை பக்கமே வருவதில்லை.
தங்களால் அவளுக்கு எந்த வித திட்டுக்களும், அவமானங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர்கள் காட்டும் பரிதாபத்தையும், பாசத்தையும் அவள் கணவன் சங்கரிடம் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை.
எல்லாவற்றையும் விட, அவன் வெளியில் செல்லும்போது அவளை வீட்டினுள் வைத்துப் பூட்டிச் செல்லும் பழக்கம் அவன் மீது அனைவருக்கும் ஒரு வெறுப்பை உண்டு பண்ணினாலும், யாருக்கும் அவன் விஷயத்தில் தலையிட தைரியமோ, விருப்பமோ வந்ததில்லை.
தப்பித் தவறி ஊருக்குப் புதியவர்கள் யாராவது அவன் அடாவடித்தனத்தை தட்டிக் கேட்டால், “ஏன் பூட்டுப் போடாம போனா நான் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் என் வீட்ல நுழைஞ்சு என் பொண்டாட்டிய மேஞ்சுடலாம்னு பாக்கிறியா?”
இந்த வார்த்தைகள் கேட்ட யாருக்கும் அவனிடம் அடுத்துப் பேசப் பிடிப்பதில்லை.
சங்கரின் அப்பாவும், அம்மாவும் கவிதாவின் காலில் விழாத குறையாக அவளிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அவர்களிருவரையும் விட்டுப் பிரிந்து கிராமத்தில் போய்க் குடியிருக்கின்றனர்.
நாள் கிழமையில் வந்த போதும் தங்கள் மகனின் அயோக்கியத் தனமான நடவடிக்கையில் வெறுத்துப் போய், “அம்மா கவிதா… உன்னப் போல் தேவதைக்கு அவன் தகுதியே இல்லம்மா. நீ ஏன் அவன டிவோர்ஸ் பண்ணி வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?. எங்களோட மகன்தான், ஆனா இப்படி சந்தேக புத்தி வச்சுட்டுருக்கறவனோட எவளாலயும் சேந்து இருக்க முடியாதுமா”
“அப்புறம் அவர் என்னப் பத்தி சொல்லிட்டுருக்கறது உண்மைன்னு ஆயிடாதா? என் விதி, இப்படியே மிச்ச காலத்தையும் கழிச்சிட்டுப் போயிடறேன் அத்தை. நல்லவேளை கடவுள் எனக்குக் குழந்தையக் கொடுக்கல, கொடுத்திருந்தா அந்தக் குழந்தையும் யாரோடதுன்னு தினம் ஒரு சண்டை போடுவார்”
மனசு வெறுத்துச் சொல்லும் போது அவள் மாமியாருக்கும், மாமனாருக்கும் கண்கள் கலங்கும்.
கவிதாவின் அப்பா, அம்மா இவள் விஷயத்தில் நியாயம் கேட்க வந்து, சங்கரிடம் அவமானப்பட்டது தான் மிச்சம். கவிதாவின் தங்கைகள் வாழ்க்கையை நினைத்து அவர்கள் அமைதி காக்க வேண்டிய கட்டாயம், சங்கருக்கு மிகவும் சாதகமாகப் போய் விட்டது.
“இவள ஊர் மேய விட்டுட்டு அப்புறம் என் தலையில கட்டின மாதிரி, இவ தங்கைகளுக்கும் எங்கயாவது இளிச்சவாய் மாப்பிள்ளைங்க கிடைக்காம போயிடுவாங்களாங்கற தைரியத்துல என்கிட்ட வம்புக்கு வந்தீங்கன்னா, ஒரு பய உங்க பொண்ணுங்களக் கட்டிக்க வராமப் பண்ணிடுவேன்”
இதற்கு மேலும் அவனிடம் பேச அவர்களுக்கு எப்படி முடியும். கவிதாவுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.
அவளுக்கே சில சமயம் தோன்றும், ஏன் வீட்டை விட்டு ஓடிப் போகக்கூடாது என்று. ஆனால் அதன் பின் விளைவுகள்… நினைத்துப் பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. அவள் குடும்பத்தின், தங்கைகளின் எதிர்காலம்.. மானம், அவமானம், அவளைக் கட்டுப்படுத்தியது.
இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி, குடும்பத்தோடு கொண்டாடிய தீபாவளி நாட்கள் அவள் நினைவில் வந்து வாட்டியது.
“ஸ்ரீ கிருஷ்ண பகவானே நரகாசுர வதம் பண்ண உனக்கு பூமாதேவி உதவி செய்தது போல் என் புருஷனை வதம் பண்ண நீ எனக்குத் துணையாக வர மாட்டாயா?”.
ஒரு நிமிடம் மனம் துணுக்குற்றது. என்ன மாதிரியான வேண்டுதல் இது? இது நாள் வரை தோன்றாத எண்ணம் இப்போது எப்படி வந்தது?.
வெளியே இருட்டிக்கொண்டு மழை வரும் போலிருந்தது. மனதை சமன்படுத்தி தன் மனதில் தோன்றிய கொலை பாதக எண்ணத்திற்காக வலுக்கட்டாயமாக வருத்தப்பட்டாள் கவிதா.
வெளியே கதவின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு கதவுக் கருகில் வந்து யாரென்று பார்த்தாள்.
பக்கத்து வீட்டுப் பெரியவர் பூட்டை உடைத்து, “உன் கஷ்ட காலம் தீந்து போயிடுச்சும்மா… இனிமே நீ சுதந்திரப் பறவை” என்றார் முகம் மலர.
ஒன்றும் புரியாமல் விழித்த அவளிடம், “அந்த ராட்சசன் செத்துப் போயிட்டாம்மா. வர வழியில ஆக்சிடெண்ட், ஸ்பாட்லயே அவுட். பாடிய GHக்குக் கொண்டு போயிட்டாங்க, மத்த பார்மாலிட்டீஸ்லாம் நீ வந்து தான் செய்யணுமாம்”
தான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்ட நிமிஷங்களில் தான் அந்த ஆக்சிடெண்ட் ஆகியிருக்கிறது என்னும் நினைப்பே அவளுள் ஒரு மகிழ்ச்சியைத் தந்தது.
பாடியை மெடிக்கல் காலேஜ்’க்கு தானம் பண்ணி விட்டு மற்ற பார்மாலிடீஸ் முடித்து டெத் செர்டிபிகேட் வாங்கி எங்கெங்கு கொடுத்து என்னென்ன செட்டில்மென்ட் உண்டோ அனைத்துக்கும் ஏற்பாடு பண்ணி வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் மழை ஆரவாரமாய்ப் பெய்ய ஆரம்பிக்க, அத்தனை வருஷங்கள் கழித்து மழையும், மழைக் காற்றும் உடம்பில் பட சிலிர்த்தது கவிதாவுக்கு.
அசுரனை வதம் செய்து தன் வேண்டுதலை நிறைவேற்றிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்து ஆட்டோவைப் பாதியிலேயே கட் பண்ணி, கார் கால மழையின் அரவணைப்பில் சுதந்திரமாய் நடக்க ஆரம்பித்தாள் நம் நாயகி கவிதா.
“தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்”
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
“எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின் சென்றடும்”
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings