மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
விடியற்காலையில் ஒலித்த மொபைல் சேகரின் உறக்கத்தை கலைத்தது. அவசரமாக மொபைலை ஆன் செய்து “ஹலோ” என்றான்.
எதிர்முனையில் பேசியவர், “சார், நான் அவ்வை முதியோர் இல்ல நிர்வாகி தாமோதரன் பேசுகிறேன். உங்க அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம், நீங்கள் உடனே புறப்பட்டு வாருங்கள்” என்றார்.
அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி கவிதாவை எழுப்பி விஷயத்தை கூறிவிட்டு இருவருமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தனர். காரில் சென்று கொண்டிருக்கும்போது சேகருக்கு முந்தைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.
சேகரின் அப்பா அவனது சிறு வயதிலேயே இறந்து விட்டார், பள்ளிக்கூட ஆசிரியரான தாயார் சாந்தா அவனை நல்லமுறையில் படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்ந்த பிறகு திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டார்.
அதன் பிறகும் மகன், மருமகளுடன் சேர்ந்து வசித்து வந்த சாந்தாவிற்கு எல்லா குடும்பங்களிலும் ஏற்படுவது போல மாமியார் மருமகள் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கவே, குடும்பத்தில் மேலும் விரிசலை ஏற்படுத்த விரும்பாத சாந்தா, தானே ஒரு முடிவு எடுத்து செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அவ்வை முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டார்.
மகனும் மருமகளும் முதியோர் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் என பலமுறை எடுத்துக் கூறியும் சாந்தா பிடிவாதமாக இல்லத்திற்கு சென்று விட்டார்.
இருந்த போதிலும் சேகர் அவ்வப்போது மனைவியுடன் முதியோர் இல்லத்திற்கு சென்று அம்மாவிடம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி விடுமாறு பலமுறை வற்புறுத்தியும் சாந்தா மீண்டும் வீட்டிற்கு திரும்ப விரும்பவில்லை.
சாந்தா அரசு பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதால் முதியோர் இல்லத்தின் அலுவலக பணிகளில் நிர்வாகிக்கு மிகவும் உதவியாக செயல்பட்டு வந்தார். மேலும் அங்கே தங்கி இருந்த மற்ற முதியவர்களுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வந்தார். அதனாலேயே அங்கு தங்கியிருந்த அனைத்து முதியவர்களுக்கும் சாந்தாவைமிகவும் பிடிக்கும்.
சேகரின் நினைவலைகளை கலைக்கும் விதமாக, கவிதா, “ஏங்க ஆஸ்பத்திரி வந்திருச்சு, வாங்க போய் பார்க்கலாம்” என பதட்டத்துடன் காரிலிருந்து இறங்கினாள்.
அவசர சிகிச்சை பிரிவில் விசாரித்த போது, சேகரின் தாயார் இறந்த விபரம் தெரிவிக்கப்பட்டு, அவரது உடலை முதியோர் இல்லத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்த சேகர் மனைவியுடன் முதியோர் இல்லம் நோக்கி விரைந்தான். அவ்வை இல்லத்தின் நடுஹாலில் வைக்கப்பட்டிருந்த அம்மாவின் உடலை பார்த்து சேகர் கதறி அழுதான்.
அங்கு கூடியிருந்த முதியோர் இல்லத்தின் முதியவர்கள் அனைவரும் கண்ணீருடன் அனைத்து மத பாடல்களையும் பாடிக் கொண்டிருந்தார்கள்.
சேகரை பார்த்தவுடன் முதியோர் இல்ல நிர்வாகி தாமோதரன் அவன் அருகே வந்து முதுகில் தட்டிக் கொடுத்தபடியே அவனுக்கு ஆறுதல் கூறினார்.
கவிதா தனது கணவரை தனியாக அழைத்துச் சென்று, “சரி சரி ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள். ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அம்மாவின் உடலை நம் வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி காரியங்களை செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்றாள்.
சேகரும் ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு, நிர்வாகியிடம் சென்று “அம்மாவிற்கு இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் உடலை ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்” என அவரிடம் கேட்டார்.
அவர் சேகரிடம் “உங்களது தாயார் அவர் இறந்த பிறகு, தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கும்படி விருப்பம் தெரிவித்து எழுதி கொடுத்துள்ளார்கள்” என்றார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சேகர், “நான் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன், என்னுடைய அம்மாவிற்கு உரிய இறுதி மரியாதையை நான் செய்ய வேண்டும். உடனடியாக எனக்கு ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுங்கள்” என்றான்.
ஆனால் நிர்வாகி சேகரிடம் “சார், நீங்கள் ஒரு நிமிடம் என்னுடைய அறைக்கு வாருங்கள்” எனக் கூறி அவனை அவருடைய அறைக்கே அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த அலுவலக பீரோவில் இருந்து ஒரு கோப்பினை எடுத்து சேகரிடம் கொடுத்து “இதை படித்துப் பாருங்கள்” என்றார்.
அவன் அதை படித்துப் பார்த்தபோது, அவனுடைய அம்மா சாந்தா, தான் இறந்த பிறகு தன்னுடைய உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக அளிக்க விருப்பம் தெரிவித்த, அதனை மருத்துவ கல்லூரியில் பதிவு செய்தமைக்கான அவள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் இருந்தது.
மேலும் சேகரிடம் பேசிய நிர்வாகி, “மருத்துவ கல்லூரியிலிருந்து சில அலுவலர்கள் அம்மாவின் உடலை பெற்று செல்வதற்காக வந்துள்ளார்கள்” என்றார்.
“இருந்த போதிலும், நீங்கள் உங்கள் விருப்பப்படியே அம்மாவிற்கு செலுத்த வேண்டிய இறுதிமதசடங்குகளை இங்கேயே நிறைவேற்றலாம், அதன் பிறகு அவர்கள் உங்களது தாயாரின் உடலை அவர்கள் மருத்துவ கல்லூரிக்கு எடுத்துச் செல்வார்கள்” என்றார்.
இதையெல்லாம் கேட்ட சேகரும் கவிதாவும் கண்ணீர் விட்டு அழுதார்கள். சேகர் “என்னுடைய அம்மாவிற்கு என்னால் இறுதி சடங்குகளை கூட செய்ய இயலாமல் போய்விட்டதே” என அழுதான்.
அவனை ஆறுதல்படுத்திய நிர்வாகி தாமோதரன், “இது போன்ற ஒரு தாயாரை பெற்றிருப்பதற்கு நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும். அவர் உயிருடன் இருந்தபோதும் இந்த இல்லத்தில் உள்ள பல முதியவர்களுக்கும் உதவியாக இருந்து வந்துள்ளார். மேலும், தான் இறந்த பின்பும் தன்னுடைய உடல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காவது பயன்படட்டுமே என்ற உயரிய எண்ணத்தில் தான் அவர் இவ்வாறு எழுதி வைத்துள்ளார்” என்றார்.
பிறகு சேகர் ஒருவாராக மனதை திடப்படுத்திக் கொண்டு அம்மாவிற்கு செய்ய வேண்டிய சில இறுதி சடங்குகளை இல்ல நிர்வாகி உதவியுடன் செய்து முடித்தான். இல்லத்தின் சார்பாகவும் மற்றும் மருத்துவக் கல்லூரி அலுவலர்களும் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
பிறகு சாந்தாவின் உடல் மருத்துவக் கல்லூரியில் இருந்து வந்திருந்த குளிரூட்டப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.
சேகரும், கவிதாவும் முதியோர் இல்ல நிர்வாகிக்கும், மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அம்மாவின் உயர்ந்த, தியாக மனப்பான்மையை எண்ணி பெருமிதத்துடனும், அதேசமயம் அம்மாவை இழந்த துயரத்துடனும் கனத்த இதயத்துடனும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings