பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“என்னங்க!.. நான் எத்தனை வாட்டி சொன்னாலும் கேக்க மாட்டேங்கறீங்களே? நம்ம வாழ்க்கை உங்களுக்கு முக்கியமாப் படலியா!?”
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது நன்றாகத் தெரிந்ததால் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவது போல் நடித்தான் சங்கர்.
அவள் விடவில்லை. போர்வையை இழுத்து அவனை எழுப்பி உசுப்பி விட்டாள்.
“இங்க பாருங்க… உங்க குழந்தையயும் வச்சுக்கிட்டு உங்க அம்மாவையும் என்னால பாத்துக்க முடியாதுங்க. கொஞ்ச நாள் உங்க தங்கச்சி வீட்ல இருக்கட்டும். அவ வேற அம்மாவப் பாக்கற சாக்கில வாரத்துக்கு ஒரு நாள் இங்க டேரா போட்டு எனக்கு இன்னும் வேலை கொடுக்கறா”
“உன்ன மருமகளா செலக்ட் பண்ணினத்துக்கு எங்கம்மாக்கு நீ காட்ற நன்றிக் கடன் ரொம்பவே நல்லாருக்கும்மா. இதுவே உங்கம்மாவை உங்கண்ணன் உன்கிட்ட அனுப்பி வச்சா நீ என்ன பண்ணுவே?”
‘வச்சுப்பேன்னு சொன்னா உங்கம்மாவ வச்சுக்க முடியும், எங்கம்மாவ பாத்துக்க முடியாதான்னு கேள்வி வரும். முடியாதுன்னா உன்னால மட்டும் முடியாது. எந்தங்கச்சியால மட்டும் முடியுமா!?’
திருதிருவென்று முழித்தாள்
“என்னங்க நீங்க… நான் என்ன சொல்றேன்? நீங்க என்ன சொல்றீங்க? எங்கண்ணன் எங்கம்மாவ நம்பகிட்ட கொண்டு வந்து விடும்போது அதப் பாத்துக்கலாம். இப்ப உங்கம்மா பிரச்சனையப் பத்தி மாத்ரம் பேசுவோம்”
“எனக்குத் தூக்கம் வர்றது. ஒரு ரெண்டு நாள் டைம் கொடு, ஒரு நல்ல முடிவ எடுப்போம்”
தூக்கம் சுத்தமா போய் கண்கள் கலங்கித் தன் அம்மாவை நினைத்து அழுகையாய் வந்தது சங்கருக்கு.
பாவம் அம்மா… கணவனை இழந்து இரு பிள்ளைகளையும் வளர்க்க ஒண்டியாய் என்ன பாடுபட்டாள். நல்லவேளை, தன் கல்யாணத்துக்கு முன் தங்கச்சி கல்யாணத்தைப் பண்ணி முடித்ததால் அதில் எதுவும் குழப்பம் பண்ண வில்லை சுமதி.
அம்மாவுடன் அனுசரித்து வாழ இவள் ஏன் ஒரு சிறுமுயற்சி கூட எடுக்க மாட்டேங்கிறாள். பலவாறு யோசித்தவாறே தூங்கிப் போனான் சங்கர்.
காலையில் மறுபடியும் சுமதி, அம்மா மேட்டர் ஆரம்பிக்கு முன் அவசர அவசரமாய் ஆபீஸ்க்குக் கிளம்பிப் போகும் வழியில், அவனது தாய் மாமா பூபதியைச் சந்தித்து அவரது அக்காவான தனது தாயைத் தன் மனைவி பாரமாய் நினைத்து ஒதுக்குவதைக் கவலையுடன் பகிர்ந்தான்.
மெல்லச் சிரித்த பூபதி மாமா, “இது வீட்டுக்கு வீடு நடக்கறதுதான்ம்பா. நான் ஒரு ஐடியா பண்றேன், கவலைய விடு. சாயங்காலம் நான் வீட்டுக்கு வந்து இதுக்கு சூப்பரா ஒரு முடிவு கட்டறேன்”
ஒரு பெரிய பாரம் நெஞ்சை விட்டு நீங்கியது போல் நிம்மதியானான் சங்கர்.
சாயங்காலம் வீட்டுக்கு அவன் திரும்புவதற்குள் அங்கு பூபதி மாமா காத்துக் கொண்டிருந்தார்.
“வாங்க மாமா, எப்ப வந்தீங்க?”
“சும்மா… ஒரு தகவல் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்ம்பா. எனக்கே நேத்திக்குத்தான் விஷயம் வந்தது”
“என்ன மாமா?”
“அது ஒண்ணுமில்லப்பா, உங்கம்மாவுக்கும் எனக்கும் ஒரு பிதுரார்ஜித சொத்து இத்தனை வருஷமா லிட்டிகேஷன்ல இருந்து நேத்திக்கு தீர்ப்பு வந்திருக்குப்பா. ஆளுக்கு ஒரு அம்பது லக்ஷம் வரும்பா, கோர்ட் FDல போட்டு அஞ்சு வருஷம் கழிச்சு எங்களுக்குக் கிடைக்கற மாதிரி பண்ணியிருக்காங்கப்பா”
பிரமித்து நின்றாள் சுமதி. முழித்துப் பார்த்தான் சங்கர். சுமதி பார்க்காத நேரம் சங்கரைப் பார்த்துக் கண்ணடித்தார் மாமா.
மாமாவை அவரது வீட்டில் விடுவதற்கு அழைத்து வரும்போது சொன்னார்.
“சங்கரு… இன்னும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு உங்கம்மாவ ராணி மாதிரி வச்சுப்பாப்பா உம்பொண்டாட்டி. நீ கவலைய விட்டுட்டு நிம்மதியா இருக்கற வழியப் பாரு”
இருவரும் மனநிறைவுடன் சிரித்தனர்.
மறுநாள் சங்கரின் தங்கையின் வீட்டிலிருந்து வந்த சங்கரின் தாய், தன் மருமகளின் வழக்கத்துக்கு மாறான பாச வரவேற்பில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனார்.
“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்”
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து அறம் வளர்ந்து பெருகும்.
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings