பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
என் கிளினிக்குள் நுழைந்து, “டாக்டர் சார்! டாக்டர் சார்!” என பதற்றத்துடன் குரல் கொடுக்க
“எஸ் கம் இன்” என்றேன்.
அந்த 20வயது இளைஞன், “சார் ஏனோ தெரியவில்லை ஒரு வாரமா தல சுத்தலா இருக்கு. பசி, தாகம் அதிகமாக இருக்கு. இரவில் பலமுறை யூரின் வந்து தூக்கத்த கெடுக்குது. அதிகமா எட கூடிடிச்சி, என்னன்னே புரியல சார். எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்” என்று தன் மொத்த மருத்துவ பிரச்சனைகளையும் ஒரே மூச்சில் கவலையுடன் சொல்லி முடித்தான்.
“மாரியை” எனக்கு சிறுவயது முதலே நல்லா தெரியும். அவன் லேசாக தும்பினால் கூட, அவன் தாய் என்னிடம் உடனே அழைத்து வந்து வைத்தியம் செய்து கொண்டு போவாள். சிறுவயதில் அழகாக துறுதுறு என்று இருப்பான்.
என்னிடம், ஆங்கிலம் தமிழ் கலந்த “தங்லீஷில்” சரளமாக வாயாடுவான். முதல் மார்க் வாங்கும் கெட்டிக்கார பையன். அவன் தாய்க்கு அவன் மேல் கொள்ளை பிரியம். அவனை எப்பாடுபட்டாவது பெரிய டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பதே அவளின் வாழ்நாள் கனவு.
அதனால், அவனை அழைத்து வரும்போதெல்லாம், டாக்டருக்கு படிக்கும் வழிமுறைகள் பற்றி அதிக நேரம் என்னிடம் நோண்டி நோண்டி கேட்டு என் பொறுமையை சோதிப்பாள். நானும் எல்லா விவரத்தையும் விளக்கமாக எடுத்து சொல்ல முயல்வேன்.
சிலபல வருடங்கள் கழித்து, இன்றுதான் அவனை மீண்டும் பார்க்கிறேன்!
நான் அவனை அடையாளம் காணாத அளவுக்கு குண்டாகி போயிருந்தான். பார்க்கவே வியப்பாக இருந்தது.
நான் அவனை பார்த்ததும் கேட்ட முதல்கேள்வி, “மாரி! எங்க உங்க அம்மாவை காணோம்?” என்பதே.
என் கேள்வி அவனை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அவன் ஒரு நீண்ட அமைதிக்கு பிறகு சோகமான குரலில் “அம்மா காலமாகி இரண்டு வருடம் ஆகுது சார்” என தழுதழுத்த குரலில் பதில் கூறும் போதே, அவன் கண்களில் தேங்கிய விழிநீர் கன்னத்தில் உருண்டோடுவதை கண்டு, ஏண்டா இந்த கேள்வியை அவனிடம் கேட்டோம் என்றாகிவிட்டது.
நிலைமையின் சோகம் போக்க, பேச்சை மாற்றி, “இப்ப என்ன பண்ற? கொஞ்சம் வெய்ட் போட்டுட்ட போல?” என சிலபல வினாக்களை அடுக்க
அவன் தன் கண்ணை துடைத்தபடி, “அம்மா என்ன உயிருக்கு உயிரா பாசம் வெச்சி வளத்தாங்க சார்! அவங்க போன பிறகு, எங்க அப்பாவும் நானும், சமைக்க தெரியாததால் சாப்பாட்டுக்கு திண்டாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! சமையல்காரிகள் வைத்தோம், அவர்கள் மளிகை பொருட்களை திருடுவதிலேயே குறியாக இருந்தார்கள். எதுவும் சரிப்பட்டு வராததால், கண்ட கண்ட வேளையில் கண்ட கண்ட உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.
பர்கர், பீட்ஸா, சோலாபூரி, நான், ரோட்டி, சமோசா, போளி, இவைகளுடன் சிக்கன், மட்டன், பிரியாணி என்று கணக்கில்லாமல் நான் விரும்பியதையெல்லம் சாப்பிட்டதால் என் வயிறும் உடலும் உபாதைகள் கொடுக்க ஆரம்பித்தன. வெயிட் ஏகத்துக்கு ஏறி போச்சி சார்! அப்பாவுக்கும் அடிக்கடி மார்வலி வயிற்று கோளாறு வந்து அவதிபட்றார் சார். இப்ப நான் லயோலா கல்லூரில பீ.காம் படிக்கிறேன் சார்!” என்று தன் சொந்தக்கதை சோகக்கதையை சொல்லி முடித்தான்!
உடனே அவனது ரத்த அழுத்தம், ரேண்டம் பிளட் சுகர், இவற்றை சோதித்து பார்த்தேன். அதன் முடிவுகள் கண்டு அரண்டு போனேன்.
ஆம் அவன் சுகர் லெவல் 400மில்லி கிராமை தாண்டி இருந்தது. பீ.பியும் எகிறி இருந்தது கண்டு “இந்த இருபது வயதில் ஏன் இப்படி?” என்று குழம்பி போனேன்.
என் முகபாவனை கண்டு அவன் “என்னாச்சு சார்” என டென்ஷனாக
“ஒண்ணுமில்ல கண்ணா! கொஞ்சம் அதிகம்தான் காட்டுது. மேலும் லிப்பிட் புரோஃபைல், தைராய்டு டெஸ்ட், போன்ற சில பல டெஸ்டுகள் எழுதி கொடுக்கிறேன். அதன் முடிவுகளுடன் நாளை வந்து என்னை பார். ஒன்றும் பயப்பட வேண்டாம்” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள் ஆஜரான அவன் முகத்தில் கவலையின் ரேகைகள் அதீதமாய் அப்பி கிடக்க, அவனை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தேன். அவன் சமர்ப்பித்த அனைத்து பரிசோதனை முடிவுகளும் மோசமானதாகவே இருந்தது.
அவனிடம் மிகுந்த ஆதரவுடன், “உன் அப்பா அம்மா தாத்தா பாட்டி, இவர்களில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்ததா?” என கேட்க
“இல்லை சார். நிச்சயமாக இல்லை” என உறுதியுடன் கூற
“உனக்கு வேறு ஏதேனும் கெட்ட பழக்கங்கள் உண்டா?” என வினவ
அவன் தலை குனிந்தவாறு, “இப்பதான் சார் ஒரு ஆறு மாசமா! நண்பர்கள் சகவாசத்தால் ட்ரிங்க்ஸ் கொஞ்சம் பழகிட்டேன் சார்! என் அப்பாவுக்கு தெரியாது சார்! தெரிஞ்சா உயிரை விட்டுடுவார் சார்! பாவம், அவர் மறுமணம் கூட செய்து கொள்ளாமல் எனக்காகவே வாழறார் சார்! என் அம்மா இருந்திருந்தால் இது எல்லாம் நிச்சயம் நடந்திருக்காது சார்” என்று கூறி சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.
அவன் அழுகை தொடர, நான் அமைதியாய் அனுமதி அளித்தேன்! துன்பம் விலக கண்ணீரை விட சிறந்த மருந்து வேறு ஒன்றும் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவன் நான்.
அவன் அழுகை நின்றதும் மெல்ல அவனிடம், “தம்பி இன்றைய காலக்கட்டத்தில் உணவே விஷமாகி பற்பல நோய்களை உற்பத்தி செய்கிறது. நம் தமிழகத்தின் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு,சோளம், சாமை, வரகு, தினை போன்ற சிறுதானிய உணவுகள் நம்மிடம் இருந்து விடைபெற்று மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மைதா, ரவை, ஆட்டா, மேகி, போன்ற உடலுக்கு தீங்கு தரும் கெமிக்கல்ஸ் நிறைந்த உணவினை நாம் அதிகம் விரும்பி உட்கொள்வதால்தான் சர்க்கரை நோய் என்ற கொடும் நீங்கா வியாதி உருவாகிறது.
மைதா என்பது கோதுமையின் நார்ச்சத்து முழுவதையும் நீக்கி, வெறும் மாவுச்சத்தை மட்டும் பிரித்தெடுத்து செய்யப்படும் ஒரு உணவுப்பொருள் ஆகும். இதனுடன்… பென்சாய்க் ஆசிட்(benzoic acid), பென்சைல் பெர் ஆக்சைடு (benzyl per oxide), சிட்ரிக் ஆசிட் (citric acid), போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயன பொருட்கள், மைதாவை தும்பை பூ போல் வெண்மையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இது போதாதென்று, அதற்கு மேலும் சுவையூட்ட அலாக்சான் (alloxan) என்ற ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது நேரடியாக கணையத்தை(pancreas) தாக்கி, அதன் இன்சுலின் உற்பத்தி செய்யும் ‘ஐலெட்ஸ் ஆஃப் லாங்கர்ஹன்’ (islets of Langerhan)ல் உள்ள ‘பீட்டா’ செல்களை குறிவைத்து அழிக்க வல்லது. இதனால் இன்சுலின் உற்பத்தியின் அளவு வெகுவாக குறைந்து நீரழிவு நோய் ஏற்படுகிறது.
மேலும் மைதாவில் நார்சத்து நீக்கப்படுவதால், மலச்சிக்கல், இதய நோய்கள், குடல் நோய்கள் ஏற்பட்டு உங்கள் ஆரோக்கியம் அழிக்கப்படுகிறது. நாம் இப்போது தினமும் விரும்பி உண்ணும் பரோட்டா, நான், ரோட்டி, பிரெட், பன், கேக்குகள், பிஸ்கட், பிஸ்ஸா, பர்கர், சமோசா, பாணி பூரி, சோலாபூரி, மற்றும் பாதுஷா குலாப் ஜாமூன் சூரியகலா, போளி போன்ற எண்ணற்ற இனிப்பு வகைகளிலும மைதா அதீதமாக சேர்க்கப்படுவதால், சர்க்கரை நோய் மற்றும் அன்றி வேறுபல நோய்களும் நம்மை தாக்குகின்றன.
இதுவும் போதாதென்று, பரோட்டா போன்ற மைதாவால் செய்யப்படும் பலகாரங்களில், சுவையை மென்மேலும் கூட்ட டால்டா, அஜனமாட்டோ, ஆப்ப சோடா போன்றவை கலக்கப்படுகிறது. இதை தினப்படி ஆர்டர் செய்து காசை விரயம் செய்து சாப்பிடும் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் ஆகியோரின் உடல் நலத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கி விடுகிறது. ‘சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளுதல்’ என்னும் பழமொழி இதற்கு சால பொருந்தும்!
மேலும் இதனுடன் குடிப்பழக்கமும் சேர்ந்து கொண்டால், கல்லீரலும் அதிகமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்! தம்பி நீ பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டிய இளைஞன். இதெல்லாம் உனக்கு தேவையா? நன்றாக சிந்தித்து பார்” என நீண்ட ஒரு அறிவியல் பிரசங்கம் செய்ய, அவன் முகம் பயத்தால் பேய் அறைந்தது போல் வெளிறி போயிற்று.
“இதுமட்டுமன்றி சீஸ், நெய், பன்னீர், வெண்ணெய், டால்டா போன்ற அதிக கொலஸ்டிரால், மற்றும் கொழுப்பு சத்துக்கள் உணவில் அதீதமாக சேர்க்கப்படுவதால், உடல் பருமன் அதிகமாகி, இதயம், இரத்த நாளங்கள், ஜீரண மண்டலம் போன்றவை பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் என்பது ஒரு கேள்வி குறியாகி போகிறது!
குறிப்பாக, ஓயாத ஒழியாத பற்பல விளம்பரங்கள் வாயிலாக, பச்சை குழந்தைகள் உந்தப்பட்டு, இவற்றை அடம்பிடித்து கேட்டு வாங்கி உண்டு, நோய்வாய்ப்பட்டு அவர்கள் எதிர்காலமே கேள்வி குறியாகி விடுகிறது” என்று அவனுக்கு விலாவாரியாய் எடுத்துரைக்க, அவன் அப்படியே ஆடிப்போய் விட்டான்!
“சார்! உண்மையை சொல்லப்போனால், நான் தினமும் பரோட்டா குருமா, முட்ட பரோட்டா, கொத்து பரோட்டா, என பரோட்டா வகையறாக்களை அதிகம் வாங்கி உண்பதால் எனக்கு, என் கல்லூரி நட்புகள் ‘பரோட்டா மாரி’ என்று பட்டப்பெயர் சூட்டி, அழைத்து ஓவரா கிண்டல் செய்கின்றனர். என் குண்டாகிப் போன உடம்பை நினைத்தால் எனக்கே அவமானமா இருக்கு சார். நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் சார், இனி நான் பிழைப்பேனா சார்?” என்று மேலும் விழிகலங்கி வருத்தப்பட
“கவலைப்படாதே மாரி, இது ஆரம்ப கட்டம்தான். நீ என்னுடன் ஒத்துழைத்து, நான் கொடுக்கும் மருந்துகளை ஒழுங்காக சாப்பிட்டு, நல்ல சத்தான உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு, சிறுதானிய உணவுகளை அளவாக உட்கொண்டு, உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டால்… நிச்சயம் உன்னை பரிபூரணமாக குணப்படுத்தலாம்” என்று ஆறுதல் தந்து சிகிச்சையை தொடங்கினேன்.
ஒரிரு மாதங்களில் நல்ல பலன் கிடைத்தது. அவன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டது!
ஆறு மாதங்களுக்கு பிறகு…
ஒருநாள் சினிமா தியேட்டரில் யாரோ என்தோளை உலுக்கி “சார் சார்” என்று அழைப்பதை கேட்டு சட்டென திரும்பி பார்த்தேன்.
அந்த பாதி இருட்டில், “ஸ்லிம்மாக கியூட்டான” ஒரு அழகிய வாலிபன், தன் “அப்சரஸ்” போன்ற காதலியுடன் நின்றிருந்தான்.
‘யார் இவன்?’ என்று குழம்பிப்போய் நிற்க
“டாக்டர் சார்! என்ன அடையாளம் தெரியல்லையா? நான்தான் சார் உங்களால் உருமாற்றப்பட்ட ‘பரோட்டா மாரி’ எனும் மாரீஸ்வரன் சார்” என்று என்னை பாசத்துடன் நேசத்துடன் கட்டி தழுவி கொண்டான்.
எனக்கு ஏதோ கேரள லாட்டரியில் ஒரு கோடி பரிசு கிடைத்தது போல் பேரானந்தம் ஏற்பட்டது!
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings