பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
கடைசியில் கல்யாணத்துக்கு சரி சொல்லி விட்டான் கணேசன். திவ்யாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
எங்கே அண்ணன் இப்படியே ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காலம் பூராவும் கஷ்டப்படுவானோ என்று பயந்து போயிருந்தவளுக்கு, கணேசன் சம்மதம் சொன்னது நெஞ்சில் பாலை வார்த்ததைப் போல இருந்தது.
ஆறு வருடங்களுக்கு முன்புதான் கல்யாணம் பண்ணிக் கொண்டான் கணேசன். அடுத்த வருடமே பிரபு பிறந்தான். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அடுத்த குழந்தை உண்டாகி, பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு போன அவன் மனைவி, குழந்தையுடன் சவப்பெட்டியில் தான் வீடு வந்து சேர்ந்தாள். காரணம், குழந்தையும் வயிற்றிலேயே இறந்துதான் பிறந்தது.
ஒரு வருடம் ஓடிவிட்டது.
ஆரம்பத்தில் மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல், கணேசன் ரொம்பவும் துடித்துப் போனான், தவித்துப் போனான். மூன்று மாதங்கள் கனேசனுடனேயே வந்து தங்கிக் கொண்டாள் திவ்யா.
குழந்தையை வைத்துக் கொண்டு அவனால் ஆபீஸ் போகவும் முடியவில்லை. வீட்டிலும் குழந்தையை முழுதாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. பிரபு ஒன்றாவது போய்க் கொண்டிருந்தான்.
மூன்று மாதங்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டாள் திவ்யா. காரணம் அவளுக்கும் கல்யாணமாகி கணவனும் இரண்டு குழந்தைகளும் தஞ்சாவூரில் இருக்கின்றனர்.
நல்லவேலையாய் அவளுக்கு மாமனார், மாமியார் கூட இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளை பார்த்துக் கொண்டனர். அவர்களும் மருகளின் அண்ணன் கஷ்டப்படுகிறானே என்று மனமிரங்கி அவனுக்கு உதவ வேண்டி அவளை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று மாதங்கள் கூட இருந்து பார்த்துக் கொண்ட திவ்யா, பின்னர் ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தி விட்டாள். ஒருமாதம் கூட இருந்து ஆயாவுக்கு ஒத்தாசை புரிந்துவிட்டு பிறகு, தனது வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள் அவள்.
அப்போதே ஆரம்பித்து விட்டாள் திவ்யா, “நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று.
அவன் மறுக்கும் போதேல்லாம், “உனக்காக இல்லையென்றாலும், பிரபுவின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டாவது நீ சம்மதிக்கத் தான் வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தாள்.
ஆரம்பத்தில் மறுத்தாலும், எப்படியோ பேசிப் பேசி அவனது மூளையைச் சலவை செய்து விட்டாள் திவ்யா.
பெண் பார்க்கும் வேலையையும் தானே பார்த்துக் கொண்டாள். மூன்று புரோக்கர்களிடம் கணேசனின் போட்டோவையும் ஜாதகத்தையும் கொடுத்திருந்தாள்.
அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் போட்டோவையும் வாட்ஸப் மூலம் அண்ணனுக்கு அனுப்பி வைத்தாள். அவன் நிறைய போட்டோக்களை ஒதுக்கி விட்டான். அவன் சரி சொன்ன போட்டோக்களின் ஜாதகங்கள் பொருந்தவில்லை.
இரண்டும் பொருந்தி வந்த பெண்களில் சிலரை நேரில் போய் பார்த்துவிட்டு, வேண்டாம் என்று மறுத்திருக்கிறான். எல்லாம் சரிப்பட்டு வரும்போது, பெண் வீட்டார் சம்மதமில்லை என்று சொல்லி விட்டனர்.
கடைசியில் கும்பகோணத்தில் இருந்து முப்பது வயது முடிந்து விட்ட வனிதாவை பிடித்துப் போனது கணேசனுக்கு. அவர்களுக்கும் முழு சம்மதம்.
கணேசனுக்கு முப்பத்திரண்டு. அதனால் வயது ஒரு பெரிய தடையாக இல்லை இருவருக்குமே. எம்மதமும் சம்மதம் என்று அவன் சொல்லியிருந்ததால், வேறு ஜாதி பெண்ணாக இருந்தும் வனிதாவை மணக்க ஒப்புக் கொண்டான் கணேசன்.
கணேசன் வீட்டிற்கு தன் கணவனுடன் ஒரு நாள் வந்து கல்யாணத்திற்கு உண்டான ஏற்பாடுகளை ஆரம்பித்து வைத்தாள் திவ்யா.
துணிமணிகள், நகைகள், சத்திரம், ரிசப்ஷன், சாப்பாடு என்று கணக்குப் போட ஆரம்பித்தாள் திவ்யா. மொத்த செலவு கிட்டத்தட்ட இருபத்தைந்து லட்சம் வந்தது. ஆடிப் போனாள் திவ்யா.
“அண்ணா… அண்ணியை நீ கட்டிக்கிட்டு வந்தப்போ ஆறு லட்சம்தான் ஆச்சு. எனக்கும் தெரியும். ஆறு வருஷத்துக்குள்ளே நாலு மடங்கு ஆகும்போல இருக்கே. பேசாம, ரிஜிஸ்தர் ஆபீஸ்ல வச்சு சிம்பிளா முடிச்சுக்கலாமே. ஏன் வீனா இவ்ளோ செலவு பண்ணனும்?” என்றாள்.
கணேசனுக்கும் கொஞ்சம் யோசனையாய்த்தான் இருந்தது. இவ்வளவு செய்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா என்று. இரண்டாம் கல்யாணம் தானே, சிம்பிளாக கோவிலில் வைத்து தாலிக் கட்டிக்கொண்டு, ஒரு ஹோட்டல் பார்த்து ஒரு விருந்து வைத்துவிட்டால் போதுமே என்று யோசனை வந்தது.
அப்படி கணக்குப் போடும்போது எட்டு லச்சம் மட்டுமே வந்தது. பதினேழு லச்சம் செலவு குறைகிறதே என்றும் ஒரு நைப்பாசை.
இவனது ஆபீஸிலிருந்து இருபது பேர் வருவார்கள், இவனது சொந்தக்காரர்கள் என்று சுமார் முப்பது பேர் வருவார்கள். பெண் வீட்டார் பக்கமிருந்து எத்தனை பேர் வருவார்கள் என்று புரியமால் தவித்தான். ஒருமுறை கும்பகோணம் போய்விட்டு வரலாமா என்று யோசனை வந்தது.
தானாகவே போனால் சங்கோஜமாக இருக்கும் என்பதால், திவ்யாவை விட்டு வருங்கால மாமனாரிடம் முன்கூட்டியே இது விசயமாய் சொல்லச் சொன்னான். அவர்களும் வரட்டுமே, சேர்ந்து பேசி முடிவு செய்வது நல்லதுதானே என்று சொல்லிவிட்டார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை இங்கிருந்து கிளம்பினான்.
வனிதா தனது கல்லூரித் தோழிக்கு வளைகாப்பு என்று போய் விட்டிருந்தாள். மாப்பிள்ளை வருவார் என்று தெரியும், அதனால் முடிந்தளவு சீக்கிரம் வந்து விடுவதாய் சொல்லிவிட்டுத் தான் போயிருந்தாள்.
ஆனால் பன்னிரண்டு மணி சுமாருக்கு வருவதாகச் சொல்லிவிட்டு, பத்து மணிக்கே போய்ச் சேர்ந்துவிட்டான் கணேசன். உடனே வனிதாவுக்கு கூப்பிட்டு சொல்லி விட்டார்கள், அவளும் கிளம்பி வருவதாகச் சொல்லி விட்டாள்.
முதலில் மாமனார் மாமியாரிடம் மட்டும் பேசினான். கடைசிவரை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கும் அவனது யோசனை சரியாய்த் தான் பட்டது. சிம்பிளாகவே முடித்துவிட ஒப்புக் கொண்டனர்.
பின்னால் வனிதா வந்து சேர்ந்தாள்.
“மாடி ரூமிற்கு போய் பேசுங்க” என்று சொல்லி இருவரையும் மாடிக்கு அனுப்பி விட்டாள் அவளது அம்மா.
முதலில் தனிமையில் போய்ப் பேச, கொஞ்சம் சங்கோஜப்பட்டவன், வனிதா மறுபடியும் மறுபடியும் கூப்பிட மேலே போனான்.
முதலில் கொஞ்சநேரம் மற்ற விசயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, பின்பு தான் வந்த விஷயத்தைச் சொன்னான். பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தவள், தனது ஆசையையும் சொன்னாள். அவனும் பொறுமையாய் அனைத்தையும் கேட்டுக் கொண்டான்.
அவர்கள் கொடுத்த பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு காபியையும் குடித்துவிட்டு, சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
வெளியே வந்தவுடனேயே திவ்யாவுக்கு போன் போட்டான்.
“திவ்யா… அந்தப் பொண்ணு ரொம்ப ஆசையா நிறைய விசயங்களைப் பத்திப் பேசிச்சு. எனக்கு ரெண்டாவது கல்யாணமா இருந்தாலும், அதுக்கு இதுதானே முதல் கல்யாணம். அதை சிம்பிளா நடத்தாம கொஞ்சம் தடபுடலாவே நடத்தினா நல்லா இருக்கும்னு சொல்லுது. அவங்க காலேஜ் கூட்டாளிங்க நிறைய பேரு எப்போ கல்யாணம், எப்போ ரிசப்ஷன், தேனிலவுக்கு எங்கே போறீங்கனெல்லாம் கேட்டு நச்சரிக்கிரான்கலாம். அந்தப் பொண்ணுக்கும் நிறையக் கனவுகள் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால…”
“அதனால….?”
“முப்பது லச்சமே ஆனாலும் சரி, கல்யாணத்தை தடபுடலாவே நடத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன் திவ்யா…அதோட…அதோட…”
“அத்தோட…? சொல்லுண்ணா…”
“கல்யாணம் ஆனதும் ஊட்டி கொடைக்கானல்னு ஒருவாரம் டூர் போலாம்னும் முடிவு பண்ணிருக்கேன்…”
“தேனிலவுக்கா….”
‘ ஆ…மா… அதுவே தான்…’
“சரியண்ணா… நான் கூட உங்க அத்தான்கிட்டே சிம்பிளா பண்ணலாம்னு சொன்னதும், என்னைக் கண்டிச்சார். அந்தப் பொண்ணு எவ்வளவு ஆசையாய் இருக்கும், எவ்வளவு கற்பனை எல்லாம் பண்ணி வெச்சிருக்கும். அதனால ஒரு பெரிய மண்டபமா பார்த்து புக் பணித்து ரெண்டு நாளைக்கு ரிஷப்ஷன், கல்யாணம்னு அசத்திப்புடலாம். உன் முடிவு சரியானதுதான், அண்ணா. அசத்து… அசத்து… அடுத்த வாரம் நாங்க அங்கே வர்றோம், மேற்கொண்டு பேசலாம்” என்றாள்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings