in

உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 1) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

உன் வாழ்க்கை... (பகுதி 1)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

லர்ந்தும், மலராத மொட்டு போல, விடிந்தும் விடியாத அதிகாலை. நவம்பர் மாத விடியலின் குளிரில், சோம்பல் முறித்தபடி விழிக்கத் தொடங்கியிருந்தது சென்னை மாநகரம்.

நள்ளிரவு வரை அந்த நாளைக் கடத்தி விட்டு, அதன் பின் உறங்கியவர்கள் இன்னமும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, இரவுப் பணியில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள், சிவந்த கண்களுடன் எப்போது வீட்டிற்குப் போய்த் தூங்கலாம் என்ற ஆவலில் வேலையை முடித்துக் கொண்டிருக்க, இன்னும் சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து வேலைக்குப் போகும் பரபரப்பில் அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து, சோம்பலுடன் அந்த நாளைத் தொடங்கி இருந்தார்கள்.

துரை எழுந்து, குளித்துத் தயாராக இருந்தான். தன் மனைவி கொடுத்த காஃபியைக் குடித்தபடி உடைகளைச் சரி செய்து கொண்டிருந்தான்.

துரைக்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். முரட்டுத் தோற்றம். பார்வையில் ஒரு வில்லத்தனம் எப்போதும் குடியிருக்கும். பேச்சும், நடையும் கூட தெனாவட்டாகத் தான் இருக்கும்.

காலையில் சுத்தமாக இருக்கும் போதே பேச்சில் மரியாதை என்பதை யாருக்கும் தர மாட்டான். மாலையில் வீடு திரும்பும் முன் கண்டிப்பாக தினமும் குடிக்காமல் வர மாட்டான். குடித்து விட்டால் வார்த்தைகள் காது கொடுத்துக் கேட்க இயலாது.

அடாவடியாகச் சுற்றிக் கொண்டிருந்தவனை, கால்கட்டு போட்டு விட்டால்  கொஞ்சம் வழிக்கு வருவான் என்று வழக்கம் போல் எல்லா பெற்றோரும் செய்யும் அதே தவறை, துரையின் அம்மாவும் செய்தார்.

சுற்றி வளைத்து சொந்தத்தில் இருந்து  செல்வியை துரைக்குக் கட்டி வைத்தார். ஆனால் துரையின் நடவடிக்கையில் மாற்றம் இல்லை.

செல்வி, துரையைக் கல்யாணம் செய்து கொண்டு வந்ததில் இருந்து எல்லா பேச்சுக்களையும் கேட்டு விட்டாள். துரை குடிப்பதும் நிற்கவில்லை, கெட்ட வார்த்தைகளும் குறையவில்லை. வீட்டை நிர்வகிக்க பெயருக்கு மனைவி என்ற பெயரில் செல்வியை வைத்திருந்தான்.

இப்போது மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனாலும் துரை அப்படியே தான் இருக்கிறான். காபியைக் குடித்து முடித்திருந்தான் துரை. டம்ப்ளரை எடுக்க வந்த செல்வி, மெதுவாகத் தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள்.

“என்னங்க, இன்னிக்காவது சீக்கிரம் வருவீங்களா? தினமும் சீக்கிரம் கிளம்பிப் போயிடறீங்க, ராத்திரி லேட்டா வரீங்க. நம்ம பொண்ணு தினமும் உங்களைப் பார்க்கணும்னு தூங்காம முழிச்சிருப்பேன்னு அடம்பிடிக்கறா. அப்புறம் அழுதுட்டே தூங்கிடறா. நானும் தினமும் சொல்றேன், நீங்க கேக்கவே மாட்டேங்கறீங்க.”

“தா, சொம்மா காலைலயே ஆரம்பிக்காதே. எப்போ முடியுதோ அப்ப தான் வருவேன்.”

“உங்களுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம், குழந்தை? தெனமும், பொழுது விடியறதுக்குள்ள வீட்ட விட்டுப் போனா, பொழுது சாஞ்சும் வீடு வந்து சேர மாட்டேங்கறீங்க. நீங்க டிரைவரா வேலை பார்க்கற இடம் ரொம்பப் பெரிய  இடம்னு எல்லாரும் சொல்றாங்க. அப்போ சம்பளமும் நிறைய இருக்கும் தானே. ஆனா வீட்டுக்கு ஒழுங்கா எதுவும்  தர மாட்டேங்கறீங்க. குழந்தையை வச்சுட்டு நான் சிரமப்படறேன்.”

“சரி, இப்போ என்ன? உனக்கு ஒத்து வரலேன்னா கிளம்பிப் போயிட்டே இரு. நான் இப்படித் தான் இருப்பேன். உனக்கு என்ன குறை இருக்கு இங்க? இருக்கறதுக்கு ஒரு வீடு, உடுத்திக்க துணி, வேளைக்கு சாப்பாடு எல்லாம் கிடைக்குதில்ல. பேசாம இருப்பியா… வேலைக்குக் கிளம்பற நேரத்துல சொம்மா நச்சு நச்சுன்னு.”

கத்தி விட்டு வெளியே கிளம்பினான் துரை. செல்வி தன் விதியை நொந்து கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள்.

துரை ட்ரைவராக வேலை செய்கிறான். நல்ல கவனிப்பு தான். ஏனென்றால் அந்த முதலாளியும் துரையைப் போல் தான். என்ன… துரை வேலை செய்பவன், அவர் படியளப்பவர்…. அவ்வளவு தான் வித்தியாசம்.

தன் இருசக்கர வாகனத்தை முறுக்கினான் துரை. அந்தத் தெருவில் அவனது வண்டிச் சத்தம் தனியாக எல்லாருக்கும் தெரியும். வண்டியை முறுக்கிக் கொண்டே கெத்தாகத் தான் ஓட்டுவான். துரைக்கு தன் வேலையில் ஒரு தனி ஈடுபாடு.

அவனுக்குப் பிடித்தபடி கறாராக, மிகவும் அலட்டிக் கொள்ளாமல் வேலை. ஒரு பெரிய இடத்தில் ட்ரைவராக வேலை. முதலாளிக்கு நம்பிக்கையான வேலையாட்களில் ஒருவன். அதனால் கவனிப்பும் நல்ல முறையில் கிடைக்கும். சம்பளம் தவிர சில நேரங்களில் தனியாக வருமானமும் வரும்.

தான் வேலை பார்க்கும் வீட்டை நோக்கிக் குதூகலமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். இன்னும் இருபது நிமிடப் பயணம்.

இன்னும் வாகனங்களின்  பரபரப்பு தொற்றிக் கொள்ளாத சாலையில், வெளிச்சம் இன்னும் பரவலாக வராத அந்த நேரத்தில் சாலையில் தனியாக துரையின் இரு சக்கர வாகனம் தட தடத்துக் கொண்டிருந்தது.

சட்டென்று வண்டியில் பாரம் அதிகமான உணர்வு. துரை பின்னால் திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை… வண்டியிலும் சரி, சாலையிலும் சரி, ஒருவரும் இல்லை.

ஏதோ பிரமை என்று நினைத்துக் கொண்டு வண்டியை முறுக்கினான் துரை. மீண்டும் வண்டியில் பாரம் அதிகமானது. பின் சீட்டில் யாரோ உட்கார்ந்திருப்பது போல ஒரு பாரம். வண்டியின் வேகம் குறைந்தது. துரை வேகத்தை அதிகப்படுத்த முயற்சித்தான்… முடியவில்லை.

வண்டியின் வேகம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. வண்டியில் பாரம் அதிகமாகிக் கொண்டே போனது. துரை மீண்டும் பின்னால் திரும்பிப் பார்த்தான். சத்தியமாக யாரும் இல்லை.

வண்டியின் வேகம் அப்படியே குறைந்து நின்று போனது. வண்டியை ஸ்டாண்ட் போட்டு விட்டுக் கீழே இறங்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் கீழே இறங்க முடியவில்லை.

வண்டியின் பின்னால் இருந்து யாரோ அவனை எழுந்திருக்க விடாமல் பிடித்து அழுத்தினார்கள். அடிக்கண்ணால் பின்னால் பார்த்தான். யாரையும் காணவில்லை.

மனதின் ஓரத்தில் லேசாக பயம் எட்டிப் பார்த்தது. சுற்றி யாராவது இருந்தால் உதவிக்குக் கூப்பிடலாம் என்று சுற்று முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. ஆனால் அவன் கழுத்தை யாரோ பிடித்து பின்னால் இழுத்தார்கள். தடுமாறி கீழே விழுந்தான்.

யாரோ அவன் மேலே ஏறி உட்கார்ந்து அழுத்தினார்கள். காற்றில் கையால் துழாவினான். கைக்கு யாரும் கிடைக்கவில்லை. ஆனால் துரையின் மேல் அழுத்தம் இப்போது அதிகமாக ஆரம்பித்தது.

மூச்சுத் திணறுவது போல ஒரு அசௌகரியம். பயம் வேறு அதிகமானது. யாரும் இல்லாத இடத்தில், யாரோ மேலே உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது என்றால் என்னவாக இருக்கும்?

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று தன் கழுத்தை நெரிப்பதைப் புரிந்து கொள்ளும் முன்பே, துரையின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டுப் போய்க் கொண்டிருந்தது.

“உன்  வாழ்க்கை  உன் கைலன்னு  நினைச்சியா? என்  கைல  டா…”

ஓவென்று  இரைச்சலுடன்  குரல் மட்டும் கேட்டது. திடுக்கிட்டான் துரை. 

“நீ… நீ…”

வார்த்தைகளை முடிக்கும் முன்னே, ஆள் அரவமற்ற சாலையில், விடியலுக்கு முன்னே துரையின் உயிர் அவனை விட்டுப் போயிருந்தது.

(தொடரும் – சனி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 5) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

    வைராக்கியம் ❤ (பகுதி 6) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை