டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
தீபாவளி படையல சாமிக்கு போட்டுட்டு, பூஜை செய்ய மகன் மருமகள் வருகைக்காக ஆவலாய் எதிர்நோக்கி, தெருவுக்கும் வீட்டுக்கும் குட்டிபோட்ட பூனைபோல அலைந்து கொண்டு இருந்தாள், ஒத்த புள்ளபெத்த ராஜாவின் தாய் கமலம்.
கடன உடன வாங்கி, பெரிய பெரிய படிப்பு படிக்க வைத்து, உயர் பதவியில் அரசுவேலை வாங்கி கொடுத்து, தன் ஒரே அருமை மகன் தங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற நப்பாசையில், வீட்டின் வெகு அருகாமையிலேயே மருமகளையும் தேடிக் கொண்டாள் கமலம்.
ஆனால் “நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்” எனும் பழமொழிக்கு ஏற்ப, மகன் ராஜாவோ வீட்டோடு மாப்பிள்ளையாக மாமியார் வீட்டில் சங்கமம் ஆகிவிட, தரையில் வீசிய மீன்போல் துடிதுடித்து போனாள் கமலம்.
இன்று அவனுக்கு “தலை தீபாவளி” என்பதால், நேற்றே மருமகளுக்கும் மகனுக்கும் போன் போட்டு கெஞ்சி கூத்தாடி, காலை தீபாவளி படையலுக்க அவசியம் வருமாறு வேண்டி விரும்பி அழைக்கிறாள்!
ஆனால் அவர்கள் இன்னும் பூஜைக்கு வராததால், மனம் வருந்தி இருவருக்கும் மாற்றி மாற்றி போன் போட்டு பார்த்தாள். மகனின் போன் “சுச் ஆஃப்” செய்யப்பட்டிருந்தது. மருமகளோ வழக்கம்போல் “ரிங்” போனதும், பெயரை பார்த்து, ஃபோனை கட் பண்ணினாள்.
மகனுக்கு பிடித்தமான முந்திரி சேர்த்த இனிப்பு போண்டா, சூயம், பால் கொழுக்கட்டை, தோசை வடகறி, கேசரி என அனைத்து பலகாரங்களும் செய்து அவன் வரவுக்காக கண்ணில் நீர் தளும்ப காத்திருக்கிறாள்.
ராஜாவின் அப்பாவோ விரக்தியால் “ஏண்டி ! பூஜைக்கு வர அவனுக்கு மனசில்ல. உம் மருமகளுக்கு நம்ம கண்டால சுத்தமா புடிக்கல. இதுல எதுக்கு அவனுக்கு ஃபோன் பண்ணி பண்ணி தொந்தரவு செய்ற!” என்று பொய் கோபத்துடன் கூறினாலும், தீபாவளி நாளில் தன் மகன் இல்லாமால் இதுவரை அவர் சாப்பிட்டதே இல்லை, என்பதால் அவர் விழிகளும் பனித்திருந்தது.
மீண்டும் மருமகளுக்கு ஃபோன் போட, அவள் இவர்கள் இம்சை தாங்காமல் எப்படியோ மனம் இரங்கி போன் எடுக்க, “அம்மா! சீக்கிரம் வாங்க! படையல் போட்டு காத்துகிட்டு இருக்கேன்! உங்களுக்காக புது துணி பலகாரம் எல்லாம் பண்ணி வச்சிருக்கேன்! ஒரு நட வந்து சாப்ட்டுட்டு போய்டுங்க தாயி ! மாமா உங்களுக்காக காலைல இருந்து எதுவும் சாப்பிடாம, பூஜை செய்ய காத்துக்கிட்டு இருக்கார்மா” என கூற
மறுமுனையில் மருமகள் கொட்டாவியுடன், “அத்த! அவர் நல்லா தூங்கிகிட்டு இருக்கார். நேத்து ஆபீஸ்ல ரொம்ப வேல… எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. நீங்க பூஜை செய்து சாப்டுங்க! எங்களால வர முடியாது அத்த” என கட் அண்ட் ரைட்டா தீர்த்து சொல்ல, அப்படியே மனமுடைந்து போய் நிற்கிறாள்.
வீட்டு வாசலில் துப்புரவு தொழிலாளர்கள் நாலைந்து பேர் “தீபாவளி இனாம்” கேட்டு குரல் கொடுக்க, அந்த படையல் இலையை அவர்களுக்கு சாப்பிட கொடுக்கிறாள்.
ஆனால் அவர்களோ “பலகாரங்க வேண்டாம் தாயே.. ரூபாவை குடுங்க போதும்” என்று பட்சணங்களை நிராகரிக்க, தான் இந்த வயதிலும், காலை முணு மணிக்கே கண் முழிச்சி கஷ்டப்பட்டு செய்த பலகாரங்கள் பலராலும் நிராகரிக்கப்படுவதை எண்ணி… தாரை தாரையாக கண்ணீர் விட்டு, அவமானத்தால் கூனி குறுகி நிற்கிறாள்.
அவளிடம் அன்பாய் வாலை குழைத்து நேசமாக பழகும் நான்கு தெருநாய்கள் ஆவலுடன் ஓடிவந்து நிற்க, அவள் அந்த படையல் பலகாரத்தை நாய்களுக்கு சமர்ப்பித்து, ஏதோ ஒரு தனிமை தன்னை சூழ்வதுபோல்… முதல் முறையாக உணர்கிறாள்!
அந்த நன்றியுள்ள நாய்கள்… தன் பலகாரங்களை பசியுடன் உண்பதை கண்ணிமைக்காமல் விரக்தியுடன் உற்று பார்த்தவண்ணம், அப்படியே சிலையாகி நிற்கிறாள்.
ராஜாவின் அப்பாவோ, கிழட்டு சிங்கம் போல், ஈஸி சேரில் அமர்ந்து பொங்கி வரும் கண்ணீரை மறைக்க “தினத்தந்தி” நாளிதழை விரித்து படிப்பதுபோல் பாவனை செய்கிறார்!
“தலை தீபாவளிகள்” காலப்போக்கில் தலைகீழாய் மாறிப்போவது…இயற்கை சுழற்சியின் ,தவிர்க்க இயலாத மாற்றங்கள் என்பதை, இவர்கள் மனது உள்வாங்கி உணர்ந்து கொள்ள இன்னும் சிலபல காலம் பிடிக்கும்போல!
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings