in

கானல் நீர் (சிறுகதை) – ✍ ருக்மணி வெங்கட்ராமன்

கானல் நீர் (சிறுகதை)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ழுவூர் கிராமத்தில் ஒரு குடிசை மட்டும் என்றும் கலகலப்பாக இருக்கும். அதற்கு காரணம் அந்த வீட்டு  சுட்டிப் பெண் ‘செல்வி ‘.

“அம்மா….! நான் பள்ளிக் கூடம் கிளம்பறேன் மா…!” என்று  உற்சாகத்துடன் கிளம்பினாள் செல்வி. 

“இரும்மா…. செல்வி….!  கொஞ்சம் நீராகாரம் சாப்பிட்டு போ மா..!” என்றாள் அம்மா மகமாயி 

“சரிம்மா… அக்கா எங்கே…?  ராணி…” என்று அழைத்துக் கொண்டே  வெளியே வந்தாள் செல்வி. 

“அம்மா, திண்ணையில அப்பா படுத்திருக்கிறார். கூப்பிட்டா பதில் பேசலை” என்று  பதட்டத்துடன் கூறிக் கொண்டே உள்ளே வந்தாள் ராணி.

 “இரவு ஷிப்ட் முடிந்து படுத்திருக்கிறார், எழுப்பாதே” என்றாள் அம்மா வாஞ்சையுடன். 

“இல்லைமா, கிட்ட வந்து பாரும்மா” பதறினாள் பதினாறு வயது ராணி. 

அருகில் வந்து பார்த்த மகமாயி அலறினாள்.

“அய்யோ… அப்பா நம்மை விட்டு போய்ட்டார்”

அக்கம் பக்கம் இருப்போர் விரைந்து வந்தனர். 

அடுத்த இரண்டு நாட்களில் எல்லாம் முடிந்தது. பக்கத்து மில்லில் வேலை பார்த்து வந்தார். அப்பா என்றால் பெண்கள் இருவருக்கும் உயிர். அன்று  முதல் செல்வி அமைதியானாள். 

வீட்டு வேலை செய்து வந்த அம்மாவும் படுத்த படுக்கையானார். ராணி அப்பா வேலை பார்த்த மில்லுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். தன்னை விட நான்கு வயது சின்னவளான செல்வியை தொடர்ந்து படிக்க வைத்தாள். 

செல்வி முழு கவனத்துடன் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள். தங்கையை எண்ணி பெருமை அடைந்தாள் ராணி. 

தொலைக்காட்சி பேட்டியில் செல்வி, “தந்தையாக இருந்து என்னை படிக்க வைத்த என் அக்கா ராணிக்கு இந்த வெற்றியை காணிக்கை அளிக்கிறேன்” என்று நெஞ்சுருக தன் சகோதரியையும் அம்மாவையும் அறிமுகப்படுத்தினாள். 

அருகில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் சேர்ந்தாள். கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தாள். இரவில் அந்த கிராமத்து குழந்தைகளுக்கு  பாடம் சொல்லி கொடுத்தாள். அவர் அவர்கள் தங்களால் முடிந்த பணத்தை தந்தனர். 

கல்லூரியில் தங்க பதக்கம் பெற்ற செல்விக்கு உடனே வேலை கிடைத்தது. சம்பளம் வாங்கிய உடன் ஒழுகும் வீட்டை இடித்து கட்டினாள்.

“அக்கா, உனக்கு உன்னோடு வேலை பார்க்கிற ராமன் அவர்களை புடிச்சிருக்கா?”  என்று செல்வி கேட்டதும் ராணி முகம் நாணத்தால் சிவந்தது. அக்கா மனதை புரிந்து கொண்ட செல்வி,  அவள் விரும்பிய ராமனுக்கே ராணியை திருமணம் செய்து வைத்தாள். 

நான்கு வருடங்கள் சென்றன. செல்வியுடன் பணிபுரியும் மதன் “செல்வி… நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ யோசனை செய்து உன் முடிவை கூறு” என்று தன் காதலை கூறினான். 

செல்வி மனம் முழுவதும் வேலையில் முன்னேறுவதில் மட்டுமே இருந்தது. அதனால்  அவனை பிடித்து இருந்தாலும் தான் பெரிய அதிகாரியாக வர வேண்டும் என்ற லட்சியம் சிதைந்து விடுமோ என்று பயந்தாள். அதனால் காதலை ஏற்கவில்லை.

ஆனால் மதன் அவன் அம்மாவுடன் செல்வி வீட்டிற்கே வந்தான்.  

“நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். மதன் அப்பா தன் ஊதாரிதனத்தால் கிராமத்தில் வீடு நிலம் அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் அங்கு வாழ பிடிக்காமல் நகரத்திற்கு வந்து  தையல் வேலை செய்து இவனை படிக்க வைத்தேன்” என்று வருத்தத்துடன் மதன் அம்மா தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதைக் கேட்ட செல்வியின் குடும்பமே நெஞ்சு உருகி தங்கள் பெண்ணைத்  தர சம்மதித்தனர். செல்வியுடன் பேசி சம்மதிக்க வைத்தனர். திருமணமும் முடிந்தது.

நல்ல கணவனாக மதன் நடந்து கொண்டான். செல்வி அவன் அன்பில் மயங்கினாள். வீட்டு நிர்வாகம் அவனே பார்த்து கொண்டதால் தன் சம்பளத்தை அவனிடம் கொடுத்து விடுவாள். தன் அலுவலகமே உலகம் என்று படிப்படியாக முன்னேறினாள். 

மதன் அந்த நிறுவனத்தை விட்டு வேறு அலுவலகத்திற்கு சென்று விட்டான். கார்,  பங்களா என்று வாங்கினான். உல்லாசமாக இருந்தான். செல்வியை தங்கத் தட்டில் வைத்து ஏந்தினான். 

இரண்டு வருடங்கள் கடந்தன. செல்வியின் அம்மா இன்னும் குழந்தை இல்லையே என்று வருத்தபட்டதும் “மருத்துவரை பார்க்கலாமா?”  என்று மதனிடம் செல்வி கேட்டதற்கு “என்ன வயாசுச்சு, வரும் போது வரட்டும். நீ வைஸ் பிரிசடண்ட் ஆனதும் மருத்துவரை அணுகலாம்” என்று அவசரமாக மறுத்தான். 

தினமும் வைட்டமின் மாத்திரை தருவான். மாத்திரையை பிரித்து அன்புடன் வாயில் போட்டு தண்ணீர் ஊற்றுவான். ஒரு நாள் மறந்து விட்டாலும் கோபித்துக் கொள்வான். அவன் பாசத்தின் பிடியில் உலகை மறந்தாள். அம்மா வீட்டிற்கு கூட தனியா அனுப்ப மாட்டான்.

“ஒரு நாள் கூட நீ இல்லாமல் என்னால் தனியா இருக்க முடியாது” என்று கட்டி அணைத்தபடி மதன் கூற

“சரிங்க” என்று போகாமலே இருந்து விடுவாள் செல்வி. அவன் அம்மாவை பார்க்க கூட அழைத்துச் சென்றதில்லை. 

அன்று அலுவலகத்தில் இருக்கும் போது அவள் தலையில் இடி விழுந்தது போல செய்தி வந்தது. அம்மா தான் அலைபேசியில் அழைத்தாள்.

“செல்வி… ஸ்கூட்டரில் சென்ற அக்காவும் மாமாவும் காரில் அடிபட்டு  மலர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எனக்கு பயமா இருக்குமா, நீ உடனே வரயாமா” என்று அழுது கொண்டே கூறினாள். 

அங்கு விரைந்து சென்றாள். மருத்துவமனையில் “யாருமா… ஆக்ஸிடண்ட் கேசு சொந்தக்காரங்க? உடனே பணம் கட்டணும்” கூறிய உடன் தன் கார்டை எடுத்து கொடுத்தாள். அது நிராகரிக்கப் பட்டது. செய்வதறியாது மதனை செல்போனில் அழைத்தாள்.

அவன் பதில் அளிக்கவில்லை.  தன் சினேகிதியிடம் விபரத்தை கூறி பணம் கேட்டாள். அவளை நேரிடையாக மருத்துவமனைக்கு பணம் செலுத்த சொன்னாள். 

அங்கே தங்கி அவர்களை கவனித்துக் கொண்டாள். கடவுள் அருளால் இருவரும் பிழைத்தனர்.

வீட்டிற்கு சென்று அமைதியாக, “மதன்… என் வங்கி கணக்கில் ஏன் பணம் இல்லை?” என்று கேட்டாள்.

“மாதா மாதம் வீட்டு கடன்,  கார் கடன் செலுத்தி விட்டா எப்படி இருக்கும்?” என்று கூறி சமாதானம் செய்தான் மதன். ஒரு வார்த்தை கூட அவர்களைப் பற்றி விசாரிக்கவில்லை. 

“சரி… உங்க வங்கியில் இருந்து என் தோழிக்கு நான் வாங்கிய கடனை செலுத்திடுங்க. அவகிட்ட ஒரு லட்சம் கடன் வாங்கி இருக்கேன்” என்றாள் அமைதியாக. 

“என்னனு நினைச்ச, நீ கண்டபடி செலவு செய்வ நான் அடைக்கனுமா?” என்று கோபமாக கத்தினான. 

செல்வி தன்னை உணர்ந்தாள். இது நாள் வரை பணம் காய்க்கும் மரமாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் தன் சுயத்தை இழந்து வாழ்ந்துள்ளாள் என்பதை உணர்ந்தாள். இவள் சம்பளத்தை வைத்து ஜாலியாக செலவை செய்துள்ளான். 

இரவு முழுவதும் அழுதாள். தன் நிலை உணர்ந்தாள்.

மதன் செல்வியை இழுத்து அனைத்து, “திடீரென கேட்டா நான் என்ன செய்ய?” என்று சமாதானம் செய்ய முற்பட்டான்.

அவன் முகத்தை அருகில் பார்க்கும் போது தன்னை மறந்த நிலையில் “சரிங்க.. நான் லோன் போட்டு கொடுத்துக்கறேன்” என்று விட்டுக் கொடுத்து போக எண்ணி கூறினாள்.

மதனுக்கு வந்ததே கோபம். செல்வி அவனை அது போல் பார்த்தது இல்லை. ருத்ர தாண்டவம் ஆடினான். 

“நான் அம்மா வீட்டிற்கு போகிறேன். சில நாட்கள் இருந்து விட்டு வருகிறேன்” என்று கூறி புறப்பட்டவளை ஆக்ரோஷமாக அடிக்க முற்பட்டான். தற்செயலாக அங்கு வந்த தோழி அவளைக் காப்பாற்றி அழைத்து சென்றாள். 

காவல் நிலையத்தில் “என் மனைவியும் அவள் தோழியும் மயக்க மருந்து கொடுத்து  நகை,  பணம் எடுத்துச் சென்று விட்டார்கள்” என்று புகார் அளித்தான்.

அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அந்த தோழியின் கணவர் வக்கீல். அவர் தன் மனைவி ஜன்னல் வழியாக எடுத்த வீடியோவை காட்டினார். அதில் மதன் செல்வியை அடித்ததில் இருந்து அவர்கள் வெளியே வரும் வரை தெளிவாக இருந்தது. 

செல்வி, தன் கணவன் மேல் குற்றம் கூறி மனு அளிக்க விரும்பவில்லை. காவல்துறை அதிகாரி மதனை கண்டித்து அனுப்பினார். செல்வி அம்மா வீட்டிற்கு வந்து விட்டாள். 

தினமும் தனக்கு கொடுக்கும் மாத்திரையை எடுத்து வந்திருந்தாள். மருந்து கடையில் கேட்ட போது தான் தெரிந்தது அது கர்ப்பம் தரிக்காமல் இருக்க சாப்பிடும் மாத்திரை என்று.  

தன்னையே நொந்து கொண்டாள். பெண்கள் இவ்வளவு முன்னேறிய காலத்தில் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மருகினாள். விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்தாள். கணவன் மேல் தனக்கு ஏற்பட்ட குருட்டுத்தனமான நம்பிக்கைக்கு காரணம் தான் வளர்க்கபட்ட விதம் என்று புரிந்து கொண்டாள். 

“செல்வி… கல்யாணமானா பெண்களுக்கு மாமியார் தான் அம்மா. கணவன் சொல்றது தான் வேத வாக்கு”  என்று அடிக்கடி அம்மா சொல்வாள்.

தான் பார்த்து வளர்ந்த அப்பா,  அக்காவின் கணவர் அனைவரும் நல்லவர்களாக இருந்ததால் தன் கணவன் குணம் தெரியவில்லை. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த செல்வி அனைத்தையும் நேர்மறை எண்ணத்துடன் அணுகினாள். 

விவாகரத்து பெற்றதும் கடந்த கால வாழ்க்கையை மறந்து தன் அக்காவுடன் அந்த  குழந்தைகளுக்காக வாழ ஆரம்பித்தாள்  ‘புது பிறவி ‘ எடுத்த செல்வி. 

கானல் நீரை நம்பி ஏமாந்ததை புரிந்து கொண்டு அன்பானவர்களிடம் சரணடைந்தாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. அருமையான கதை மா
    நல்ல twist உடன் கூடிய கதை
    இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
    மா

  2. ” Nam vaazhkkaiyumE ‘Kaanal Neer’ pOnRathE. Athaip purinthu koNdu puththisaaliththanamaaga vaazhavENdum. Inthak ‘Kaanal Neer” chiRukathai anaiththu makkaLukkum ‘paLich’ enRu uNarththuGinRathu. VaazhththukkaL Smt. RuckmaNi Venkataraman avarGaLukku.

    “M.K.Subramanian.”

காக்க! காக்க! ❤ (பகுதி 12) – ✍ விபா விஷா, அமெரிக்கா

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 24) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்