எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மாலை அலுவலகம் விட்டு வெளியே வரும்போதே தலைவலி மண்டையைப் பிளந்தது அசோகனுக்கு. இது போல் எப்போதாவது வந்து, அவனை இந்த வலி இம்சிப்பதுண்டு. இந்த வலி வந்து போகும் போதெல்லாம் அந்த எரிச்சலில் வீட்டில் மனைவியிடமும் ஒரு பெரும் யுத்தம் வந்து போவது வழக்கம்.
ஒரு நல்ல காபி குடித்தால் தலைவலி குறையுமோ என்ற நப்பாசையில் அன்னபூர்ணாவில் நுழைந்து காபிக்கு ஆர்டர் கொடுக்கும் போது யோசித்துப் பார்த்ததில், இந்தத் தலைவலி தொடங்கிய அந்த நாள் அவன் நினைவில் வந்து முட்டிச் சென்றது.
அக்காவின் கணவர் இறந்து, சப்தமும் மனிதக் கூட்டமும் நிரம்பியிருந்த அந்த மரண வீட்டில் தங்கி இருந்த அந்த மூன்று நாட்களில்தான் தலைவலி ஆரம்பித்தது அசோகனுக்கு. பெண்களின் தொடர் அழுகுரலும், சம்பிரதாயங்களின் பரபரப்பும், நேரத்திற்கு ஓய்வு எடுக்க முடியாத இயலாமையும் கூட காரணமாக இருக்கலாம்.
இரக்கமும், துக்கமும் பொங்கும் அளவிற்கு இறந்து போன மாமா அப்படி ஒன்றும் நல்ல மனிதர் அல்ல. ஒரு பையனைப் பெற்ற சாதனையை மட்டும் வைத்துக் கொண்டு, குடியும் கூத்தியுமாக இருந்து சுயநலமாக வாழ்ந்து அவன் அக்காவை தனிமரமாய் சிறு பையனுடன் விட்டு மரணித்தவர்.
ஆரம்பத்தில் இருந்தே அக்காவின் குடும்பத்தோடு எந்த ஒரு ஒட்டுதல் உணர்வும் இல்லாமல் இருந்த அசோகனுக்கு மாறாக, அவனின் தம்பிகள் நல்லசிவன் மற்றும் மணிகண்டன் இருவரும் அக்கா குடும்பத்தோடு நெருக்கமாகவே இருந்தனர்.
அக்கா கணவரின் காரியங்கள் முடிந்து, எல்லோரும் கிளம்ப ஆயத்தமாகையில் தம்பிகள் இருவரும் அசோகனிடம் நெருங்கி வந்தனர். ‘அண்ணா… மாமாவுக்கு அவரோட பையன் சுந்தர் கொள்ளி போட்டிருக்கிறான். அதற்கு மாமங்க என்கிற முறையில நாம் மூணு பேரும் சீர் செய்யணும். ஆறு பவுன்ல நானும் தம்பியும் போய் தங்கச்செயின் வாங்கிக்கிட்டு வந்திருக்கிறோம். மூத்தவங்க நீங்க, இதை அவன் கழுத்திலே போட்டு விடுங்க..’ என்றான் பெரிய தம்பி நல்லசிவன்.
‘என்னது? ஆறு பவுன் செயினா? அதில் என்னோட பங்கே ஒரு லட்சத்துக்குப் பக்கம் வரும்போல இருக்குது. எதுக்கு ஆறு பவுன்? வாங்குவதற்கு முன்பு என்னைக் கேட்க வேண்டாமா?’ என்றான் அசோகன் கோபத்துடன்.
செய்யக் கூடாது என்ற எண்ணத்தை விட, அவ்வளவு காசு அவனிடம் இல்லை என்ற இயலாமையால் அவன் குரல் உயர்ந்தது.
‘அண்ணா, நாம மூணு பேரு மாமன்காரங்களா இருந்து, கொஞ்சமா செஞ்சா நல்லா இருக்குமா? ஊர்ப்பழக்கம்ணு ஒண்ணு இருக்கில்ல… அது மாத்திரம் இல்ல ..இதுதான் கடைசிச் சீர். இனி அக்காவுக்கு நாம ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை..’ என்றான் நல்லசிவன் நிதானமாக.
‘என்னதான் சொன்னாலும் இது அதிகம்டா நல்லசிவா..’ என்றான் அசோகன் கடுப்புடன்.
‘நீ ஒண்ணும் கொடுக்க வேண்டாம்… நாங்க ரெண்டு பேரும் போட்டுக்கறோம்..’ என்றான் மணிகண்டன் கோபத்துடன்.
இதுவரை அவன் தன் பெரிய அண்ணனை எதிர்த்து இதுபோல் பேசியதே இல்லை. வார்த்தைகள் தடிக்க ஆரம்பிக்க அங்கே வந்த அக்கா பையன் சுந்தர் இடைமறித்தான்.
‘எது செய்வதாக இருந்தாலும் முழு மனசோடு செய்யுங்க. சலிப்போடு எதுவும் செய்யத் தேவை இல்லை… அப்படி செய்ய விருப்பம் இல்லாதவங்க, இங்க இருந்தாலும் சரி… போனாலும் சரி..’ என்று சொல்ல, அசோகன் கோபத்தின் உச்சத்திற்குச் சென்றான்.
‘நான் பார்க்கப் பிறந்த பையன் என்னை வீட்டை விட்டு போகச் சொல்கிறான்… என்னோடு பிறந்த நீங்க ரெண்டு பேரும் அதை ரசிச்சுக்கிட்டு இருக்கீங்க…’ என்றவன் மனைவியையும் மகனையும் இழுத்துக் கொண்டு அப்போதே பெட்டியுடன் கிளம்பினான்.
அடுத்த ஆறு மாதங்கள் மனைவியிடம் மனம் பொறுக்காமல் புலம்பிக்கொண்டே இருந்தான் அசோகன். தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு தம்பிகளையும், அக்கா குடும்பத்தையும் அவ்வப்போது சபித்துக் கொண்டே இருந்தான். மனைவியின் மென்மையான சமாதானம் அவனுக்கு ஆறுதல் தரவில்லை.
ஒரு நாள் அலுவலகத்திலிருந்து உற்சாகமாக வீட்டிற்கு வந்தான் அசோகன். ‘உனக்குத் தெரியுமா? கடவுள் தான் இருக்கேன்ணு காண்பிச்சுட்டார்…’ என்றான் மனைவியிடம் .
‘புரியும்படி சொல்லுங்க… என்ன ஆச்சு?’ என்றாள் அவன் மனைவி.
‘அத்தனை உறவுகளுக்கு நடுவில், வயதில் பெரியவன் என்று கூடப் பார்க்காமல் என்னை அவமதிச்சு அனுப்பினானே என் அக்கா பையன் சுந்தர், அவன் பைக் ஏக்சிடெண்ட் ஆகி கால் முறிந்து ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறானாம். எழுந்து நடக்க ஒரு வருடம் ஆகுமாம். செய்த பாவம் சும்மா விடுமா? நல்லவர்களின் சாபம் பலிக்காமல் போகுமா? ஊரிலிருந்து மாமா போன் பண்ணியிருந்தார்..’ என்று பூரித்தான் அசோகன். மனிதாபமில்லாமல் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் கணவனை வியப்போடு பார்த்தாள் அவன் மனைவி.
மறுநாள், போனில் பதட்டமாகப் பேசும் கணவன் அசோகனின் குரல் சரியாகக் கேட்காமல் கேட்டாள் மனைவி. ‘பதட்டப்படாமல் சொல்லுங்க… என்ன நடந்தது?’
‘நம்ம பையன் படிக்கும் பள்ளியிலிருந்து போன் வந்தது. வகுப்பறையில் விளையாடும்போது, டெஸ்க் இடித்து தலையில் அடிபட்டு ரத்தம் வருகிறதாம். உடனே வரச் சொன்னார்கள். நான் ஆபீசிலிருந்து வந்து விடுகிறேன். நீயும் கிளம்பி பள்ளிக்கு வந்து விடு..’ என்றான் பதட்டம் குறையாமல்.
காயத்தைப் பரிசோதித்த டாக்டர் சொன்னார், ‘பயப்படும்படி காயம் பெரிதாக இல்லை.. லேசாக நெற்றியில் மேல் தோல் மாத்திரம் கீறி ரத்தம் வந்துள்ளது… நல்ல வேளை… கொஞ்சம் கீழே அடி பட்டிருந்தால் ஒரு கண் பாதிக்கப்பட்டிருக்கும்.. மருந்து தருகிறேன். இரண்டு நாள் கழித்து வாருங்கள். அதிகமாக வீங்கினால் உடனே கூட்டி வந்து விடுங்கள்..’ என்று எச்சரித்து அனுப்பினார்.
வீட்டுக்கு வரும் வழியில் அசோகன் சொன்னான், ‘யார் செய்த புண்ணியமோ… கண்ணில் அடிபடவில்லை’.
அமைதியாகச் சொன்னாள் அவன் மனைவி ‘ஏகன் அனேகன்’
‘என்ன சொன்னாய்?’ என்றான் அசோகன் புரியாமல்.
‘ஒருவன் பல ரூபங்களில்..’ என்றாள் மறுபடியும்.
திருதிருவென்று விழித்த அசோகனிடம் சொன்னாள், ‘அக்கா மகனுக்கு அடிபட்டால் அது அவர்கள் செய்த பாபம்… நம் பிள்ளைக்கு அடிபட்டாலும் கூட அது நாம் செய்த புண்ணியம்… அப்படித்தானே? ஒரே மனிதன்.. பல ரூபங்களில்..’ என்றாள் ஞானியைப் போல .
எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings