in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 64) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஒவ்வொரு பெண்ணிற்கும் சுகப்பிரசவம் என்பது எவ்வளவு பெரிய கனவு. எவ்வளவு பெரிய இன்பம். எவ்வளவு பெரிய வரம்.

கர்ப்பமாக இருக்கிறோம் என்று தெரிந்ததும் கடவுளிடம் அவள் வேண்டும் முதல் வேண்டுதல் குழந்தை ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறக்க வேண்டும் என்று தான். நானும் அதற்குத்தான் ஆசைப்பட்டேன்.

தினமும் நடை பயிற்சி செய்தால் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும், தோப்புக் கரணம் போட்டால் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும், உட்கார்ந்து எழ வேண்டும், படி ஏற வேண்டும் என்று என்னென்ன சொன்னார்களோ அவை யாவையும் கர்ப்ப காலத்தில் செய்தேன்.

வெறும் வயிற்றில் வெண்ணை விழுங்கு, கஷாயம் குடி, விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள் போன்ற பெரியோர்களின் அறிவுரைகளையும் பின்பற்றினேன்.

இரத்தம் குறைவு சக்கரை அதிகம் என்று பரிசோதனையில் மருத்துவர்கள் எதாவது கூறினால் கூட அதையும் உணவில் சரி செய்ய முயன்றேன்.

குழந்தை இடுப்பு எலும்பிற்குள் வரவில்லை என்றதும் பயிற்சிகள் செய்து இறங்க வைத்தேன்.

வலி வருவதற்கு அண்ணாச்சி பழம், பப்பாளி, பூண்டு சேர்த்த உணவுகள் சாப்பிட சொன்னார்கள். நல்ல உணவு தானே என்பதால் ஏன் எதற்கு என்று கேட்காமல் அனைத்தையும் செய்தேன்.

இவ்வளவு செய்தும் சுகப்பிரசவம் ஆகாது என்கிறார் மருத்துவர்.

எதுவும் செய்யாமல் வீட்டில் படுத்தே இருப்பவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகிறது.

எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?

எனக்கு அநீதி இழைக்கப்பட்டது போல் உணர்ந்தேன்.

உடல் வலியோடு சேர்ந்து மனவலியும் ஏற்பட்டது.

“எனக்கு ஆபரேஷன் வேணாம்.. நார்மல் டெலிவரி பண்ணுங்க மேம் ப்ளீஸ்” அழுது கொண்டே மருத்துவரிடம் கூறினேன்.

“உனக்கு ப்ராக்ரஸ் ஆகல மா.. நான் என்னை பண்றது”

“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்லாம்”

“எனிமா இப்போ குடுப்பாங்க.. எதுவும் இனி சாப்பிட வேணாம்.. ட்ரை பண்ணி பாக்கலாம் எப்போ வேணா நான் ஆபரேஷனுக்கு ஷிப்ட் பண்ணிடுவேன்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.

“நல்லா வலி வரட்டும் போலாம் சொன்னேன்ல.. இப்போ பாரு கவி.. நல்லபடியா பொறக்கும்னு நம்புனனே” என் அம்மா புலம்ப ஆரம்பித்தார்.

“வேற ஹாஸ்பிடல் போய் பாக்கலாமா? என்னதான் சொல்றாங்க” அப்பொழுது உள்ளே வந்த அப்பா கேட்டார்.

“இல்லை மாமா இந்த டாக்டரும் முடிஞ்சதுலாம் பண்ணிட்டு தான் இருக்காங்க” ஆதி சமாதானம் செய்தார்.

இங்கே எனக்கு இன்னொன்றும் புரிந்தது.

அறுவை சிகிச்சை என்றதும் முதலில் வருத்தப்பட்டது என் பெற்றோர்கள் தான். என் அம்மாவும் அப்பாவும் எனக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதென துடித்தார்கள். ஆதிக்கும் என் மேல் பாசம் தான் எனினும் அவர் குழந்தை பத்திரமாக வரவேண்டும் என்பதில் இன்னும் கவனமாக இருந்தார்.

நான் யாரிடமும் எதுவும் பேசவில்லை. எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.

“கண்ணு குட்டி ஏண்டா சாமி அம்மாவ கஷ்டப்படுத்துற.. அம்மாக்கு சிசேரியன் வேண்டாம்.. நார்மலா நீ வெளிய வரணும்னு ஆசைப்பட்றேன்.. ஓகே யா” வயிற்றில் தடவிக் கொடுத்து குழந்தையிடம் கூறினேன்.

எனிமா கொடுக்க அழைத்துச் சென்றார்கள்.

“எனிமா கொடுத்தா உடனே மோஷன் வர மாதிரி இருக்கும்.. உடனே போகாத கொஞ்ச நேரம் பொறுத்து பாரு முடியாதப்ப போ” என்றார் எனிமா கொடுத்த செவிலியர்.

நான் அறைக்கு வந்து பொறுத்துக் கொள்ள முயன்று பார்த்தேன்.

ஏற்கனவே பிறப்புறுப்பில் வலி, முதுகெலும்பில் வலி அடிவயிறு வலி. இதில் எப்படி என்னால் இதையும் அடக்கிக் கொள்ள முடியும்.

சில நிமிடங்கள் தான் தாக்குப் பிடித்தேன். கழிவறைக்குள் ஓடிச் சென்று மலம் கழித்து விட்டு வந்தேன்.

இப்பொழுது பிரசவ வலி மிகவும் அதிகரித்திருந்தது. படுக்க முடியாமல் நடக்க முடியாமல் கத்த ஆரம்பித்தேன்.

“அம்ம்மா முடில.. ஐயோ வலி தாங்க முடில”

அமுதினியும் கலங்கினாள். கீழே இருந்த கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு திருநீறும் குங்குமமும் எடுத்துக் கொண்டு வந்து எனக்கு வைத்து விட்டாள்.

“ஈஸ்வரா.. முருகா.. முடில.. ஆதி.. முடிலைங்க”

“ஒன்னும் இல்லை.. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ எல்லாம் சரி ஆயிடும்”

கொஞ்ச நேரம் தான் என்றாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கத்திக் கொண்டே இருந்தேன்.

“கவியினியாள் வலி ரொம்ப இருக்கா.. முக்கணும்னு தோணுதா.. புஸ்ஷிங் பீல் இருக்கா” மருத்துவர் கேட்டார்.

“ரொம்ப வலிக்குது மேடம்” படுக்கையில் நெளிந்து கொண்டே பதில் கூறினேன்.

“குழந்தை வயித்துல இருக்கு.. ஆடாம படுமா” உடன் இருந்த செவிலியர் உரக்கச் சொன்னார்.

எத்தனை செவிலியர்கள் நேற்றில் இருந்து என்னை பார்த்துக் கொள்கிறார்கள். பலரிடம் திட்டும் வாங்கி விட்டேன்.

மருத்துவர் பிறப்புறுப்பில் கை விட்டார்.

குழந்தை வெளி வந்து விட வேண்டும் என்கிற ஏக்கத்திலும் கோவத்திலும் துடிதுடித்துக் கத்தினேன். அறைக்கு வெளியில் காத்திருந்த என் வீட்டார்கள் குழந்தையே பிறந்து விடும் என்று நினைத்திருப்பார்கள் அந்த அளவிற்கு கத்தினேன்.

“என்னம்மா நாலு செண்டி மீட்டர் தான் டைலேஷன் ஆகிருக்கு.. குழந்தை தலையும் கொஞ்சம் க்ராசா இருக்கு.. ரொம்ப நேரம் விட்டா நீர் கோத்துக்கும். இரு ஹார்ட் ரேட் பாக்கலாம்” என்றவர் பரிசோதித்து விட்டு ஒரு நிமிடம் யோசித்தார்.

“எனக்கு இது சரியா தோணல.. கவியினியாள் சி செக்சன் பண்ணிக்கோ.. நாளைக்கு காலைலயே உன்னை நடக்க வெக்கறேன்”

“மேம்.. எனக்கு என் குழந்தை சுகப்பிரசவத்துலயே பொறக்கும்னு தோணுது”

“அடி வழியா வரது பெருமை இல்லை, குழந்தை ஆரோக்கியமா இருக்கணும்.. என்னால இனி ரொம்ப நேரம் வெயிட் பண்ண முடியாது அப்புறம் உங்க இஷ்டம்” என்று என்னிடம் கூறியவர் வெளியில் காத்திருந்தவர்களிடம் என்ன கூறினாரோ தெரியவில்லை. அனைவரும் உள்ளே ஓடி வந்தனர்.

“கண்ணு பேசாம ஆபரேஷன்னே பண்ணிக்கலாம்.. குழந்தைக்கு எதாவதுன்னா கண்ணாடி பெட்டிக்குள்ள வெக்கறேன்னு சொல்லிட்டா என்ன பண்றது? பாவம் குழந்தை எப்படி தாங்கும்” பதறியபடி கூறினார் அத்தை.

“நம்மலும் எல்லாமே தான் பண்ணோம். எனக்கு கர்ப்பப்பை ஆபரேஷனே பண்ண வேணாம் சொன்ன. அதுக்கேத்த மாதிரி சாப்டனும் பிடிக்கணும். இந்த காலத்துல அப்படி இருக்க முடியுதா.. உயிரை காப்பாத்துறது தான் முக்கியம்.. ஆபரேஷன் வேணும் வேண்டாம்ன்னு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.. இப்போ உனக்கும் அதான்.. குழந்தை தான் முக்கியம்.. பண்ணிட்டு வா நம்மை உடம்ப தேத்திக்கலாம்” அழுது கொண்டே கூறினார் அம்மா.

“கவி நீயும் உன்னால முடிஞ்சது ட்ரை பண்ண.. நீ வலி தாங்காம இல்லை.. இவ்ளோ வலிய தாங்கிட்டு இப்போவும் நல்லபடியா பொறக்கணும் நினைக்கிற.. ஆனா நம்மை குழந்தை அப்படி வரத விரும்பலையோ என்னவோ” ஆதி என்னை தேற்ற மெல்லிய குரலில் பேசினார்.

அமுதினியும் அமுதினியின் மாமியாரான என் அத்தையும் உள்ளே வந்தார்கள்.

“நேத்து காலைல இருந்து புள்ளை கஷ்டப்பட்றான்னு சொல்றிங்க.. இன்னும் என்ன பாத்துட்டு இருக்கீங்க.. ஆதி நீ போய் ஆபரேஷனுக்கு ரெடி பண்ணச் சொல்லு போப்பா” என்றார்.

நான் ஆதியை பார்த்து வேண்டாம் என்பது போல் தலை அசைத்தேன். என்னவோ என்னால் இதை துளியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயற்கையான முறையில் என் குழந்தை வெளி வர வேண்டும் என்கிற பேராசை.

எனக்கு வலி ஒரு பக்கம் தொடர்ந்து இருந்தது.

“அம்மா” கத்தி அழுதேன்.

வாந்தி வருவது போல் இருந்தது. உடல் மிகவும் சோர்வடைந்தது.  ஆதியின் கண்களிலும் கண்ணீரை கண்டேன். அவர் குழந்தையை நான் பத்திரமாக கொண்டு வர வேண்டும்.

“நம்ம குழந்தைக்கு எது நல்லதோ பண்ணிக்கலாம்” 

இறுதியில் நானும் சம்மதித்தேன் உள்ளுக்குள் பெரிய ஏமாற்றத்துடன்.

வருவது தெரியாமல் பிள்ளை பெற்றுக் கொண்டு போகிறார்கள். இல்லையா சிசேரியன் தான் என்றால் வந்ததும் அறுவை சிகிச்சைக்கு தயாராகி போகிறார்கள். இரண்டும் இல்லாமல் இப்படி போராடித் தோற்று விட்டேனே.

எங்கே தவறு நடந்திருக்கும் இன்னும் நன்றாக சாப்பிட்டிருக்க வேண்டுமா இன்னும் உடற்பயிற்சி வேண்டுமா இன்னும் மனதைரியத்தோடு இருந்திருக்க வேண்டுமா இல்லை இன்னும் வலி தாங்கக் கூடிய சக்தி இருந்திருக்க வேண்டுமா!

ஒருவேளை நான் வந்து சேர்ந்திருக்கும் மருத்துவமனை என்னை ஏமாற்றி விட்டதோ. பணத்திற்காக ஒரு பெண்ணின் உடலில் விளையாடும் மோசம் இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறதா?

எப்பொழுது அவர்கள் தவறை உணரப் போகிறார்கள். ஒருநாள் இல்லை ஒருநாள் நிச்சயம் அவர்கள் அதற்காக மனம் வருந்தத்தான் செய்வார்கள்.

மருத்துவர்கள் பொய் கூறுகிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. உண்மையிலேயே என் குழந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறது என்றால் என்ன செய்வது. இப்பொழுது இவர்கள் தானே என்னையும் என் குழந்தையின் உயிரையும் காப்பாற்றிக் கொடுக்கப் போகிறார்கள்.

கடவுள் இதுதான் எனக்கு சரியென்று நினைக்கிறாரா?

ஒவ்வொருவர் பிரசவத்திற்கு பின்னும் ஒவ்வொரு கதை என் பிரசவக் கதை இப்படித்தான் அமைய வேண்டுமென ஏற்கனவே எழுதப் பட்டிருக்கிறது.  ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். 

எனினும் முழுதாக மனம் அமைதி கொள்ளவில்லை. துக்கமாக இருந்தது. அரை மனதோடு ஏற்றுக் கொண்டேன்.

எல்லாம் வேகமாக நடந்தது. செவிலியர்கள் என் உடையை மாற்றினார்கள். தலை பின்னி விட்டார்கள். என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கும் சில நிமிடங்கள் வலியில் கத்திக் கொண்டு தான் இருந்தேன்.

நேரம் இரவு ஏழு மணி.

“மயக்க ஊசி போட்றோம்” என்றார் புதிதாக இருந்த இன்னொரு மருத்துவர்.

என்னை உட்கார வைத்து குனியச் சொல்லி கீழ் முதுகில் குத்தினார்கள். பின் என்னை படுக்க வைத்தார்கள். சில நொடிகளிலேயே மெல்ல மெல்ல பிரசவ வலி குறைந்தது. இல்லை எனக்கு மரத்து போனது.

உடல் சோர்விலா இல்லை மயக்க ஊசியாலா தெரியவில்லை கண்கள் சொருகியது. இரண்டு மூன்று மருத்துவர்கள் என்னைச் சுற்றி நின்று பேசிக் கொண்டிருப்பது போல் மயக்கத்தில் கேட்டது.

“ரொம்ப அடம் பண்ணிட்டா.. ஆபரேஷன் வேணாம்னு” என்னுடைய மகப்பேறு மருத்துவரின் குரல்.

“ஏன் என்னாச்சு?” வேறொருவரின் புதிய குரல்.

“பேபி ரொம்ப டிஸ்ட்ரஸ் ஆயிடுச்சு.. இந்த பொண்ண கன்வின்ஸ் பண்ணவே இவ்ளோ நேரம்”

என் வயிற்றை யாரோ கத்தியால் அறுக்கும் உணர்வு ஏற்பட்டது. வலி இல்லை ஆனால் எங்கே அறுக்கிறார்கள் என்று தெரிந்தது.

‘பார்த்து செய்யுங்கள் என் குழந்தைக்கு எதாவது ஆகிவிடப் போகிறது’ பேச வாய் எடுத்தேன்.   ஆனால் என்னால் பேச முடியவில்லை. மயக்க உணர்வு அதிகமானது. அதற்கு மேல் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஆழ்ந்த உறக்கம். சுய நினைவு இழந்த மயக்க நிலையில் இருந்தேன்.

“கவியினியாள்.. கவியினியாள்.. இங்க பாருங்க.. கவியினியாள்” என்னை யாரோ தட்டி எழுப்பினார்கள். கண்களை மெல்ல விழித்துப் பார்த்தேன். 

“கங்கிராஜிலேசன்ஸ்” சிரித்த முகத்துடன் உதட்டில் சாயம் பூசி பிங்க் நிற அறுவை சிகிச்சை உடையில் அழகாக நின்று கொண்டிருந்தார் என் மகப்பேறு மருத்துவர்.

“என்ன குழந்தை?” என்றேன் 

“உங்களுக்கு பொண்ணு பொறந்துருக்கு” என்றார்.

ஏனோ எனக்கு அதிலும் மகிழ்ச்சி இல்லை. மயக்க உணர்வோடே இருந்தேன். படுக்கையோடு என்னை தள்ளிக் கொண்டு ஏற்கனவே நாங்கள் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர்.

குளிர் தாங்க முடியவில்லை. பற்கள் நடுங்கியது. உடல் என்னவோ செய்தது. மீண்டும் கண்கள் சொருகியது.

‘ஏன் என் குழந்தையின் அழுகை சத்தம் எனக்கு கேட்கவில்லை. பெண் குழந்தை என்றதும் ஏன் நான் சந்தோசப்படவில்லை. என்ன குழந்தை என்றாலும் சம்மதம் என்ற நிலையில் தானே இருந்தேன் எங்கே என் குழந்தை?’ உள்ளுக்குள் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் பேச முடியவில்லை.

மீண்டும் மயக்க உணர்வு ஏற்பட்டது. என்னவாயிற்று எனக்கு? 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 63) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (இறுதி அத்தியாயம்) – ரேவதி பாலாஜி