இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒரு பெண்ணிற்கு தன் உடல் மேல் தன் மேல் எவ்வளவு மரியாதை இருக்கும். அவள் எப்படி பொத்தி பொத்தி தன்னை பாதுகாத்து இருப்பாள். குழந்தை பிறப்பின் போது அப்படியே தலை கீழாய் என்னவெல்லாம் நிகழ்கிறது. அந்த கோபம் தான் எனக்குள் இருந்து கண்ணீராய் சிந்துகிறதா?
“கவி நம்ம குழந்தைக்காக தான”
“குழந்தைக்காக இன்னும் என்ன என்னலாம் செய்வாங்க ஆதி?”
“எல்லாம் சரி ஆயிடும் டெலிவரி வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”
அதற்கு மேல் எனக்கு ஆதியிடம் எதுவும் பேச பிடிக்கவில்லை. அங்கிருந்து கிளம்பினோம். வீட்டிற்கு வந்தோம்.
“என்னடி கீழ உட்கார்ந்துருக்க.. எழுந்து மேல உக்காரு”
“ஏன் மா நீ மாசமா இருக்கும் போது கீழ உக்காந்தியா?”
“உக்கார்ந்தேன்”
“அப்புறம் ஏன் என்னை உட்கார வேணாம்னு சொல்ற”
“இல்லை நீ சிரமபடுவியேன்னு”
“என்ன மா சிரமம்.. இந்த மாதிரி சின்ன சின்ன சிரமப்படாம பெருசு பெருசா அனுப்பவிக்கிறோம் பரவால்லயா உங்களுக்கு”
“என்னடி ஆச்சு”
“என் அத்தை ஒரு பக்கம் வீடு கூட்டாத.. இத பண்ணாத அத பண்ணாத சாஞ்சி உக்காருன்னு சொன்னாங்க.. பாத்தா அதெல்லாமே தப்பு.. சாஞ்சே உக்கார்ந்தா எப்படி குழந்தை இடுப்பு எலும்புகுள்ள வரும்”
“இப்போ என்ன சொன்னாங்க ஹாஸ்பிடல்ல?”
“குழந்தை இன்னும் கீழ இறங்கலை.. சுத்திட்டே தான் இருக்கு”
“இன்னும் நாள் இருக்குல்ல.. கடைசி நேரத்துல கூட தலை இறங்கும்”
“அதுக்கு நான் எல்லா வேலையும் பண்ணணும்ல.. நீங்க என்னை பாத்துக்குறேன்ற பேர்ல எதுவுமே செய்ய விடமாட்டிங்கிறிங்க”
“நீயும் எல்லாம் பண்ணிட்டு தான இருக்க.. வாக்கிங் போற தோப்பு கரணம் போட்ற, படி ஏறி இறங்குற”
“இதெல்லாம் பண்ணா போதுமா.. நீ மாசமா இருக்கும் போது வீட்டு வேலை எல்லாமே நீ தானமா செஞ்ச”
“ஆமாடி.. நீதான் வேலைக்கு போய்ட்டு இருந்தியே”
“விடுங்க.. இனி ஒன்னும் பேசி ஆகப்போறது இல்லை.. என்னை விடுங்க நான் போய் தூங்கறேன்”
நான் கோவமாக என் அறைக்குள் நுழைந்தேன்.
ஆதியிடம் அம்மா என்னவாயிற்று என்று கேட்டது நடந்து கொண்டிருந்த என் காதிற்குள் விழுந்தது.
ஆதி என்ன பதில் சொன்னார் என்று நின்று கேட்கவில்லை. அவர் மட்டும் என்ன சொல்ல முடியும் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை தான் ஆனால் எனக்கு எல்லோர் மேலும் கோவமாக இருந்தது.
பேசாமல் படுக்கைக்கு சென்று உறங்கினேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனக்கு அமுதினியின் குரல் தூக்கத்தில் கேட்டது. எழுந்து பார்த்தேன் அமுதினியும் தமிழ் மாமாவும் வந்திருந்தனர்.
அவர்களை பார்த்ததும் மகிழ்ச்சியோடு எழுந்து சென்று பேசினேன். ஆதியும் இங்கு தான் இருந்தார்.
“எப்போடி வந்த”
“காலைல தான் ட்ரெயின்ல வந்தோம்”
“சொல்லவே இல்லை வரேன்னு”
“சர்ப்ரைஸ்”
“அங்க வீடுலாம் செட் ஆயிடிச்சா?”
“அதெல்லாம்”
“என்ன சாப்பட்றீங்க?”
“நாங்க சாப்ட்டோம். நீதான் சாப்பிடாமயே தூங்கிட்டன்னு அம்மா சொன்னாங்க”
“ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து அப்படியே தூங்கிட்டேன்”
“போய் சாப்புடு போ”
சாப்பிட்டு முடித்துவிட்டு அருகில் இருந்த கோவிலுக்கு நால்வரும் சென்றோம். பின் பழச்சாறு பருகிவிட்டு வந்தோம். அமுதினி இரண்டு நாட்கள் தன் புகுந்த வீட்டில் தங்கிவிட்டு வருவதாக கூறிவிட்டு கிளம்பினாள்.
“ஆதி” நானும் ஆதியும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தோம்.
“சொல்லு கவி”
“சாரி நான் காலைல ரொம்ப கத்திட்டேன்”
“இல்லை உன் கஷ்டத்தை தான சொன்ன பரவால்ல”
“குழந்தைக்காக தான எல்லாம் எனக்கும் தெரியும்.. ஆனாலும் மனசு ஒரு மாதிரியா இருந்தது அதான் ஏதேதோ பேசிட்டேன்”
“இருக்கட்டும் விடு”
“அம்மாகிட்டயும் கத்திட்டேன்”
“இல்லை அவங்களும் புரிஞ்சிகிட்டாங்க.. ஹாஸ்பிடல்ல நடந்ததெல்லாம் சொன்னேன்.. நீ ஏன் கோவமா இருக்கன்னு அவங்களும் புரிஞ்சிகிட்டாங்க”
“நான் இன்னும் கொஞ்சம் வாக்கிங் வீட்டு வேலை அப்புறம் பயிற்சிலாம் பண்ண போறேன்”
“கவி அதுக்காக நீ ரொம்பவும் ஸ்ட்ரைன் பண்ணிக்காத”
“இல்லை என்னால முடிஞ்சத பண்றேன்”
“எதுல பாத்து பண்ற.. நெட் ல பாத்து கண்டதும் பண்ணாத”
“இல்லை எப்போவும் பண்ற வாக்கிங், பட்டர்பிளை எக்சஸைஸ், தோப்பு கரணம் அப்படிதான்”
“உன்னால முடிஞ்சா பண்ணு இல்லைனா விடு எதுனாலும் பாத்துக்கலாம்”
“இதுக்குன்னு நிறைய ஆன்லைன்ல கோர்ஸ்லாம் இருக்குங்க.. கொஞ்ச பேரு பணத்துக்காக பண்றாங்க கொஞ்ச பேர் உண்மையாவே நிறைய நல்லது சொல்லித் தராங்க”
“ஹ்ம்ம் நானும் நிறைய வீடியோஸ் பாத்துருக்கேன்”
“ஆதி எனக்கு சுகப்பிரசவம் ஆகுமா?”
“எல்லாமே கடவுள் நினைக்கிறது தான். உனக்கு என்ன ஆகணும்னு இருக்கோ அதான் நடக்கும்”
“பயமா இருக்கு”
“பயந்துக்காத இந்த நேரத்துல தான் நீ ரொம்ப தைரியமா இருக்கணும்” என்ற ஆதி என்னருகே வந்து அமர்ந்தார். வயிற்றை தடவி கொடுத்தார்.
“என்னடி முட்டுது?” இடது பக்க வயிற்றில் கை வைத்திருந்த ஆதி குழந்தையின் அசைவை உணர்ந்தார்.
“ஆமா ஆதி அதான் தலை உனக்கு தெரியுதா?”
“நல்லாவே தெரியுது” என்றவர் வெகுநேரம் குழந்தையை வருடிக் கொடுத்தார்.
“நார்மல் ஆகாம ஆபரேஷன் ஆனா என்னால ஏத்துக்க முடியுமா தெரிலங்க”
“நான் முதல்ல சொன்னது தான் நீ உன்னால முடிஞ்சது பண்ணு அப்புறம் அது கடவுள் கைல.. உனக்குன்னு என்ன இருக்கோ அதான் நடக்கும்.. லாஸ்ட் மினிட்ல என்ன வேணா நடக்கும் பாக்கலாம்”
ஆதி சொன்னது போல் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று!
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings