இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதுவரை :
நிறை மாத கர்ப்பனியாக இருக்கும் கவியினியாளிற்கு அவ்வப்போது உடல் அசௌகர்யம் ஏற்படுகிறது. பரிசோதனைக்கு செல்லும் கவியினியாளிடம் மருத்துவர் என்ன சொல்லப் போகிறார். எப்பொழுது பிரசவம் ஆகப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இனி :
“அம்மா எனக்கு கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை யூரின் வந்துட்டே இருக்கு”
“என்னடி சொல்ற என்ன பண்ணுது..”
“கொஞ்சம் கொஞ்சமா யூரின் வருது மா”
“தண்ணியா போகுதா.. பனிக்குடம் உடைஞ்சிருச்சா”
“இல்லை யூரின் தான்.. எனக்கு யூரின் போற உணர்வு இருக்கு”
“அப்புறம் ஏன் பயந்துக்குற”
“கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை வந்துட்டே இருக்கு”
“தண்ணீ குடிக்காத.. கொஞ்ச நேரம் பாக்கலாம்.. இல்லைனா ஹாஸ்பிடல் போலாம்”
“சரிம்மா”
அரைமணி நேரம் பார்த்தோம்.
சிறுநீர் போக வேண்டும் என்கிற உணர்வு வரவில்லை. தூக்கம் தான் வந்தது.
“ம்மா உன்னை எழுப்புறதுக்கு முன்னாடி பத்து தடவை போனேன். இப்போ வரலை”
“என்ன பண்ணலாம் ஹாஸ்பிடல் போலாமா?”
“வேணாமா தூங்கு.. நாளைக்கு செக்அப் தான் போணும். நானும் அவரும் போய்க்கிறோம்”
“நடுவுல எதாவது பண்ணா எழுப்பி விடு எந்நேரம் நாலும் கூப்புடு”
“சரிம்மா”
“தூங்கு கண்டதும் நினைக்காம”
“ம்ம்”
தூக்கம் மெல்ல என்னை அணைத்து கொண்டது.
“ஏன் உங்களுக்கு இவ்ளோ யூரின் ப்லேடர்ல இருக்கு.. யூரின் வருதா இல்லையா?”
காலையில் முதல் வேலையாக எழுந்து தயாராகி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தோம்.
அங்கே என் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர் என்னிடம் கேட்டார்.
“யூரின் வருது ஆனா கொஞ்சம் கொஞ்சமா வருது மேம்”
“இப்போ யூரின் போய்ட்டு வாங்க மறுபடியும் செக் பண்றேன்”
மருத்துவர் அறையில் இருந்த கழிவறைக்கு போய் வந்தேன்.
“கொஞ்சம் தான் கம்மி ஆயிற்கு..”
மீண்டும் சோதித்து விட்டு கூறினார்.
“கொஞ்சம் கொஞ்சமா வர மாதிரி இருக்கு”
“ப்ரக்னண்ட் அப்போ சிலருக்கு இந்த பிரச்சனை வரும்.. உங்களுக்கு டெலிவரி வேற நெருங்குது.. இப்படி யூரின் நின்னா குழந்தை தலை இறங்காதே.. செக் பண்ணிக்கலாம்.. பவித்ரா இங்க வா”
மருத்துவர் அழைத்ததும் செவிலியர் ஒருவர் வந்தார்.
கீழே இருந்த என் ஆடைகளை நீக்கச் சொல்லிவிட்டு என் மேல் போர்வையைப் போர்த்தினார். கால்களை விரித்து படுக்கச் சொன்னார்.
என்ன செய்யப் போகிறார்கள் என்கிற பயம் வந்தது. பதட்டமானேன்.
எனக்குள் கைகளை கொண்டு சென்றார் மருத்துவர். நான் கத்த ஆரம்பித்தேன்.
“கத்தாத.. குழந்தை பயப்படும்.. ரிலாக்ஸ்சா படு..” அருகில் இருந்த செவிலியர் திட்டினார்.
நான் சத்தம் போட்டு கத்துவதை நிறுத்தினேன். பல்லை கடித்துக் கொண்டு வலி தாங்கினேன். கண்களில் இருந்து நீர் கொட்டியது.
“தலை இன்னும் இடுப்பு எலும்புக்குள்ள வரல.. எத்தனை நாள் ஆச்சு? “
“முப்பத்தி ஏழு வாரம் நாலு நாள்” அருகில் இருந்த செவிலியர் பதில் கூறினார்.
“நாலு நாள் கழிச்சி மறுபடியும் வாங்க செக் பண்ணிட்டு பேசிக்கலாம்.. இவங்க ஹஸ்பண்ட்ட உள்ள கூப்டுங்க”
ஆதி உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் இன்னும் அழுகை அதிகமானது. என் கண்களில் கண்ணீரரை பார்த்ததும் அவரும் பயந்தார்.
“குழந்தை நல்லா மெச்சூர் ஆயிடுச்சு.. ஆனா இன்னும் குழந்தை இடுப்பு எலும்புக்குள்ள வர்ல.. யூரின் வேற வயத்துல நிக்குது.. இன்னும் ரெண்டு வாரம் தான் வெயிட் பண்ண முடியும்.. நடுவுல எதாவது பிரச்சனைன்னா உடனே பாக்கணும். எதுக்கும் ரெடியா இருங்க.. சிசேரியன் கூட ஆகலாம்”
மருத்துவர் பேசப் பேச நான் தேம்ப ஆரம்பித்தேன்.
“எதுக்குமா அழற எழுந்திரி” என்றார் செவிலியர்.
“அழற அளவுக்கு நான் பெருசா எதுவும் சொல்லலையே.. நாலு நாள் கழிச்சி வாங்க பாக்கலாம்..”
“பயந்துக்கிற மாதிரி ஒன்னும் இல்லல்ல மேம்” ஆதி ஒன்றும் புரியாமல் கேட்டார்.
“நத்திங் டு வரி. வீட்டுல போய் நல்லா சாப்பிடுங்க.. வாக்கிங் நல்லா போங்க.. வீட்டு வேலை செய்ங்க.. திரும்ப நாலு நாள் கழிச்சி வாங்க என்னன்னு சொல்றேன்”
“ஓகே மேம்”
“எக்கோ டெஸ்ட் ஒன்னு எடுக்கணும்.. டெலிவரிக்கு முன்னாடி எல்லாருக்கும் பாப்போம்.. ஹார்ட் டாக்டர் வராங்க.. பாத்துட்டு போய்டுங்க”
“பாத்தட்றோம் மேம்” இதற்கும் ஆதியே பதில் கூறிவிட்டு என்னை வெளியே அழைத்து வந்தார்.
வெளியில் வந்தும் நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். அவ்வப்போது கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் சிந்திக் கொண்டிருந்தது.
“கவியினியாள்” எக்கோ எடுக்க உள்ளே அழைத்தனர்.
அதையும் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். எல்லாம் இயல்பாக இருப்பதாகக் கூறினார்கள். இருந்தும் என் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது.
“என்னாச்சு கவி.. ஏன் அழுதுட்டே இருக்க”
“தெரில”
“டெலிவரி நினைச்சி பயமா இருக்கா?”
“…”
“ஆபரேஷன் ஆனாலும் பரவால்ல கவி.. நம்ம பாப்பா தான் நமக்கு முக்கியம்”
“…”
“சொல்லு என்னாச்சி.. எங்கயாவது வலிக்குதா கவி?”
“ஆதி நான் எப்படிலாம் இருப்பேன் தெரியும்ல.. நீட்டா ட்ரெஸ் பண்ணி தலை சீவி ஒரு பொண்ணா ரசிச்சு துப்பட்டா நகரமா இருக்க பாத்து பாத்து அழகா பின் பண்ணி.. நேர்த்தியா புடவை கட்டி இன்னும் எப்படிலாம் என்னை பாத்துப்பேன்.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா.. ட்ரெஸ் கழட்டிட்டு அங்க கை வெக்கறாங்க.. வலி உயிர் போகுது.. நானும் மனுஷி தான எனக்கும் உணர்வு இருக்குல்ல.. ஹார்ட் டாக்டர் மேல கழட்டுன்னு சொல்லி என்னன்னவோ ஒட்டி பாக்குறாங்க.. எனக்கு எதுவுமே பிடிக்கல.. எல்லாமே வெறுப்பா இருக்கு.. என் மேல எனக்கு இருந்த சுயமரியாதையை போகுது.. நான் வெறும் உடம்பு தானா?.. டெலிவரி முடிறதுக்குள்ள இன்னும் என்னலாம் என்னை செய்யப் போறாங்க ஆதி?”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings