இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பதினொன்றாம் வகுப்பு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டே வெகுநேரம் அமர்ந்திருந்தேன்.
காலையில் அம்மாவுடன் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் பொழுது என் பழைய தமிழ் புத்தகங்கள் கிடைத்தன.
பள்ளி புத்தகங்களில் சிலவற்றை மட்டும் தூக்கி ஏறிய மனம் இல்லாமல் வெகு நாட்களாக பத்திரமாக வைத்திருந்தேன்.
தமிழ் புத்தங்களை பார்க்கும் பொழுது பால்ய கால இனிமையான நிகழ்வுகள் வருகின்றன.
என்னுடைய பழைய புத்தகங்களின் வாசனையில் நான் பாவாடை அணிந்த சிறு பிள்ளையாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். புத்தகத்தில் அங்கேங்க எழுதி வைத்திருந்த குறிப்புகளை தொட்டுப் பார்த்து சிலாகித்தேன்.
வெகுநேரமாக பக்கங்களை புரட்டிக் கொண்டே அமர்ந்திருந்தேன். துணைப்பாட கதைகளை மீண்டும் படித்துப் பார்த்தேன்.
“கவியினியாள் மல்லிப் பூ வந்துருக்கு.. பூ கட்றியா.. இருபது ரூபாய்க்கு வாங்கட்டுமா?”
அம்மாவின் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தேன்.
“கொஞ்சமா வாங்கு மா கட்டலாம்” என்றேன்.
பூக்கள் வந்ததும் நூலை எடுத்துக் கொண்டு கட்ட அமர்ந்தேன்.
எனக்கு காலில் கட்டித்தான் பழக்கம் கையில் கட்ட வரவில்லை. காலில் கட்ட வயிறு அனுமதிக்கவில்லை.
பூவின் மணத்தை நுகர்ந்து கொண்டே மெல்ல மெல்ல கட்டினேன். பூவின் வாசம் என்னவோ செய்தது. நல்ல வாசனைக்கு கூட எத்தனை சக்தி.
முடிந்தவரை கட்டினேன். கொஞ்சம் சாமிக்கு வைத்து விட்டு கொஞ்சம் நான் வைத்துக் கொண்டேன்.
கண்ணாடி முன் நின்று பலமுறை ஜடையில் இருக்கும் பூ தெரிகிறதா என்று சோதித்து பார்த்தேன்.
அன்று நடைப்பயிற்சி நான் மட்டும் சென்றேன். அப்படியே நடந்து சித்தி வீடு வரை சென்றேன். அவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது மனதிற்கு இன்பமாய் இருந்தது.
திரும்பி வரும் போது சித்தியும் என்னுடன் நடந்து வீடு வரை வந்தார்கள்.
என் துணிகளை நானே துவைத்தேன். குனிந்து நிமிர்ந்து அலசும் பொழுது உடல் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பதாய் தோன்றியது. சில நேரம் மூச்சு வாங்கும் அப்போது ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் செய்வேன். துணிகளை துவைத்து காய வைத்து விட்டு உள்ளே வரும்பொழுது அலைபேசி சிணுங்கியது.
“கவியினியாளா?”
“ஆமா நான் தான் பேசுறேன்”
“நாங்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேசுறோம்”
“சொல்லுங்க”
“மாசமா இருக்குறதா பதிவு பண்ணிருந்திங்க.. இப்போ குழந்தை புறந்துடுச்சா?”
“இல்லை இன்னும் பொறக்கல”
“சொந்தமா ஹாஸ்பிடல்ல பாக்கறீங்களா”
“ஆமாக்கா”
“இங்க ப்ரீ செக் அப் பண்றோம் வந்து பண்ணிக்கோங்க”.
“சரிங்க கா”
“அப்புறம் நாளைக்கு ஒன்பது மாசம் கர்ப்பமா இருக்கவங்களுக்கு யோகா சொல்லித் தறோம்.. அதும் இலவசம் நாளைக்கு பத்து மணிக்கு வந்துடுங்க”
“அப்படியாக்கா சரி வரேன் கா”
ஆதியிடம் இதுபற்றி கூறினேன்.
“போறதுனா போய் பாரு.. என்னதான் சொல்றாங்கனு கேளு” என்றார்.
அடுத்தநாள் எழுந்து சீக்கிரமே குளித்து தயாராகி எங்கள் வீட்டிற்கு பத்து நிமிட நடை பயண தூரத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றேன்.
என்னைப் போல் கர்ப்பமான பெண்கள் பலர் இருந்தனர். நிறைமாதமாக நான்கு பேர் இருந்தார்கள்.
மூச்சு பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தார்கள். ஒவ்வொன்று செய்ய எளிதாக இருந்தது. ஒவ்வொன்று செய்ய கஷ்டமாக இருந்தது.
பின் கைக்கு பயிற்சி காலுக்கு தனி பயிற்சி சுகப்பிரசவம் ஆக என்னென்ன பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் தெளிவாக சொல்லிக் கொடுத்தார்கள். பயனுள்ளதாக இருந்தது.
பல பெண்கள் இதனால் நன்மை பெருகிறார்கள். அரசாங்கத்தின் நல்ல முயற்சி இது. எல்லோராலும் பணம் கட்டி வகுப்பிற்கு செல்ல முடியாது. சிலருக்கு செல்ல வாய்ப்பு கிடைக்காது அப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டு மணி நேர வகுப்பிற்கு பின் சோர்ந்து போனேன். மூச்சு பயிற்சி செய்யும் பொழுது வியர்த்தது. சில பயிற்சிகள் செய்ய எளிதாக இருந்தது.
உட்கார்ந்து எழுந்து செய்யும் பயிற்சிகளை சுலபமாக செய்தேன். தோப்புக் கரணங்கள் சில மாதங்களாக பயிற்சி செய்து வருவதால் இருக்கலாம்.
வீட்டிற்கு சென்று நன்கு உறங்கி விட்டேன். தொடர்ந்து இந்த பயிற்சிகளை அவ்வப்போது செய்து பார்த்தேன்.
சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்கிற ஆசை வந்தது. வெறும் வயிற்றில் வெண்ணை விழுங்க வேண்டும் என்று அத்தை வெண்ணை வாங்கி வந்தார்.
அது உண்மையா பொய்யா தெரியாது. அத்தையின் நம்பிக்கைக்காக நான் சாப்பிட்டேன். வெண்ணை கெடுதல் செய்யாது என்ற ரகசிய காரணமும் உண்டு.
முப்பத்தி ஏழாவது வாரம் ஆரம்பித்தது.
அலைபேசியில் தேடிப் பார்த்தேன் இந்த வாரம் குழந்தை பிறந்தால் எத்தனை கிலோ எடை இருக்கும் உடல் உறுப்புகள் நன்றாக வளர்ந்து இருக்குமா என்றெல்லாம்.
குழந்தை முழு வளர்ச்சி அடைந்து விட்டதாக வந்தது. மகிழ்ச்சியில் உறங்கச் சென்றேன்.
சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது. எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன். வந்து படுத்த ஐந்தே நிமிடங்களில் மீண்டும் சிறுநீர் வந்தது.
கர்ப்பமாக இருக்கும் பொழுது இப்படியெல்லாம் நிகழ்வது இயல்பு தான். வயிறு பெரிதாக பெரிதாக இந்த பிரச்சனையை சில மாதங்களாக சந்தித்து வருகிறேன்.
மீண்டும் போனேன். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தது. இப்படி ஒரு மணி நேரத்திற்குள் ஏழு முறை எழுந்து போனேன். உள்ளுக்குள் பயம் தோன்றியது.
தண்ணீர் தாகமாக இருந்தது. தண்ணீர் குடித்த அடுத்த நிமிடம் மீண்டும் சிறுநீர் வந்தது. பயம் அதிகரித்தது.
அம்மா என்ன செய்கிறார் என்று பார்த்தேன். அம்மா நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்.
ஆதியை அழைக்கலாமா நேரம் பார்த்தேன் மணி பன்னிரண்டு.
இல்லை அம்மாவை எழுப்பிக் கூறலாமா?
“அம்மா…”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings