in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 58) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“நான் இங்க உனக்காக கோதுமை அடை செஞ்சி வெச்சா நீ கடைல சாப்டுட்டு வரியா?”

“நான் இப்போ உன் அடைய சாப்டலன்னு சொன்னனா.. அதையும் சாப்பிட தான் போறேன்”

“அத்தை இவள வாக்கிங் கூட்டிட்டு போனா உளுத்தங்கஞ்சி குடிக்கிறா.. அவல் சுண்டல் வேணும்கிறா”

“சேலம் வந்துட்டு காலைல அவல் சுண்டல் சாப்டலன்னா எப்படி.. அதான அம்மாபேட்டை ஸ்பெஷல்லே”

“அது கூட பரவால்ல கடைல வந்துட்டு நாய்ய பாத்துட்டு கத்திட்டா.. இவ கத்துனதுல நாய் பயந்து ஓடிடுச்சி”

“ஆமாம்மா கடிச்சிட்டா மாசமா இருக்கும் போது எப்படி விஷத்த குறைக்கிற ஊசி போடுவாங்க அதான் பயந்துட்டேன்”

“நாய்கிட்ட வந்தா விரட்டுன்னா ஓடிடப் போகுது என்ன பயம்”

“கால்கிட்டயே வந்துடுச்சு மா”

“விரட்டுனா போய்டும்டி.. எதுக்கும் பத்திரமாவே இருந்துக்கோ” என்று கூறிவிட்டு உள்ளே சென்று கரைத்து வைத்திருந்த மாவில் அடை சுட்டுக் கொண்டு வந்தார். 

எனக்கும் ஆதிக்கும் தட்டில் வைத்து தக்காளி சட்னியுடன் பரிமாறினார்.

“எனக்கு வேணாம் அத்தை வீட்டுல அம்மா சமைச்சிருப்பாங்க” என்றார் ஆதி 

“பரவால்ல ரெண்டு சாப்பிடுங்க..”

அம்மாவின் அன்பு கட்டளையை ஏற்று ஆதியும் சாப்பிட்டார்.

கோதுமையில் முருங்கை கீரை, வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்ந்து ருசியாக இருந்தது. 

சாப்பிட்டுவிட்டு ஆதி கிளம்பினார். எனக்கு இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை.

இந்த வேலையை நான் செய்தே ஆக வேண்டும் என்று எதுவும் இல்லை. இப்படி இருப்பதும் எனக்கு நிம்மதியாக இருந்தது.

வயிற்றில் இருந்து குட்டி என்னை உதைத்தது. கை விரல்களா கால் விரல்களா தெரியவில்லை ஐந்து விரல்கள் நன்கு அழுந்தியது வயிற்றில். அதே இடத்தில் நானும் கை வைத்து வருடிக் கொடுத்தேன்.

“நல்லா சாப்டியா மிக்கு.. அம்மா இன்னிக்கு நிறைய பிடிச்சதெல்லாம் சாப்டிருக்கேன்” சத்தமாக பேசிக்கொண்டே வருடினேன்.

பின் அமைதியாக வயிற்றில் கையை வைத்துக் கொண்டு சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தேன்.

தண்ணீர் குடிக்க சமையல் அறைக்குள் சென்றேன். சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தண்ணீர் குடித்தேன்.

பாத்திரங்கள் நிறைய சேர்ந்து இருந்தது. அம்மாவிற்கு உதவும் எண்ணத்தில் கழுவி வைக்க ஆரம்பித்தேன்.

கழுவ முடியவில்லை. வயிறு இடித்தது. அதுவும் பெரிய பாத்திரத்தை பிடிக்கவே முடியவில்லை. குக்கரை தூக்கி வயிற்றின் பக்கத்தில் வைத்து விளக்கவே முடியவில்லை. முடிந்தவரை செய்தேன்.

“நீ போய் உக்காரு போ நான் பாத்துக்குறேன்”

“இல்லை மா.. சும்மாவே உக்கார ஒரு மாதிரி இருக்கு அதான்”

“அப்படின்னா கீரை இருக்கு உருவி வை”

“சரி மா”

பாட்டு போட்டுக் கொண்டு வேலையைத் தொடங்கினேன். கமலின் அந்த கால பாடல்கள் ரேடியோவில் இசைக்கத் தொடங்கியது.

‘வாழ்ந்திடத்தான்

பொறந்தாச்சு வாசல்கள்

தான் தொறந்தாச்சு

பாடுங்கடா இசைப்பாட்டு

ஆடுங்கடா நடைப்போட்டு

பெருசு என்றாலும்

சிறுசு என்றாலும் சொகுசு

என் வேலத்தான்

தர ரம்பம் பம்

இந்த ராஜா கைய

வச்சா ராஜா கைய

வச்சா அது ராங்கா

போனதில்லை’

முதல் பாடலிலே மனம் லேசாகி துள்ளல் போடத் தொடங்கியது.

‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ 

தென்னாட்டு வேங்கை தான் 

ஒத்துக்கோ ஒத்துக்கோ’

அடுத்த பாடல் கேட்கும் பொழுது எனக்கும் எழுந்து ஆட வேண்டும் போல் இருந்தது.

‘என் ஜோடி மஞ்சக்குருவி

சாஞ்சாடு நெஞ்சத் தழுவி

ஆட்டம் போடடி….

ஹோ ஓ ஓ..

பாட்டுப் பாடடி..

ஹோ ஓ ஓ..

சூடான பொட்டல் காடு

ஜோராக கத்திப் பாடு

ஒன்னப் பாரு மண்ணப் பாரு

பொன்னப் போல

மின்னும் பாரு..’

அடுத்த பாடலில் எழுந்து ஆடவே ஆரம்பித்து விட்டேன். எதிரில் இருந்த கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டே ஆடினேன். கையில் இருந்த கண்ணாடி வளையல்கள் ஆடும் போது நளினமாக இருந்தன.

பூசிய உடம்பு நிறைமாத வயிறு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து என்னை நானே ரசித்துக் கொண்டே ஆடினேன்.

‘நான் வெற்றி பெற்றவன்

இமயம் தொட்டு விட்டவன்

பகையை முட்டி விட்டவன்

தீயை சுட்டுவிட்டவன்

என் வீரமே வாகையே சூடும்.

விக்ரம்.. விக்ரம்..

விக்ரம்.. விக்ரம்..’

இந்த பாடலின் வரிகளை ரசித்துக் கொண்டே மெல்லமாக ஆடுவதை நிறுத்தினேன். தொடர்ந்து பாடல்களை ரசித்துக் கொண்டே கீரையை உருவி முடித்தேன். மனம் பரவசமாக இருந்தது.

சிறிது நேரம் படிகளில் ஏறி இறங்கினேன் சுகப்பிரசவத்திற்கு உதவும் என்றார்கள். பின் இருபது தோப்பு கரணங்கள் போட்டேன்.

கொஞ்சம் பழங்களை சாப்பிட்டு விட்டு உறங்கினேன். தூங்கி எழும் பொழுதே ஏலக்காய் இஞ்சி மணக்க அம்மாவின் கை பக்குவத்தில் தேநீர் மணம் வீடெங்கும் வீசியது.

கர்ப்பம் ஆனதில் இருந்து டீ, காபி குடிப்பதை தவிர்த்து வருகிறேன். இன்று குடிக்க வேண்டும் போல் இருந்து.

நானே அம்மாவிடம் கேட்டு வாங்கி குடித்தேன். வெளியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டே குடித்தேன் சுகமாக காற்று வீசியது.

சிறிது நேரம் வெளியே நின்று விட்டு உள்ளே வந்து அம்மாவுடன் அமர்ந்து தொலைகாட்சி தொடர்கள் பார்த்தேன். 

இரவு உணவை சமைக்க அவருக்கு உதவியாக இருந்தேன். ஒன்பது மணிக்குள் உணவை சாப்பிட்டு முடித்தேன்.

உணவிற்கு பின் நடைப்பயிற்சி செல்ல அப்பா என்னை அழைத்தார். எங்கள் தெருவிலேயே இருபது நிமிடங்கள் நானும் அப்பாவும் நடந்தோம்.

“கவி சாப்பிட்டியா?” அவ்வப்போது என்னை அலைபேசியில் அழைத்து விசாரித்துக் கொண்டே இருந்தார் ஆதி 

“சாப்பிட்டேன் ஆதி நீங்க”

“இனிமே தான்”

“டைம்க்கு சாப்புடு”

“சாப்பட்றேன் கொஞ்சம் ஒர்க்.. சும்மா தான் கூப்பிட்டேன்..”

“சாப்ட்டேன்.. கொஞ்ச தூரம் நடந்தேன்.. தூங்கதான் போறேன்”

“தூங்கு… நாளைக்கு காலைல வேறொரு பார்க் போலாம் வாக்கிங்”

“அப்படியா ஜாலி”

“எழுந்ததும் கால் பண்ணு.. தூங்கு”

“ஓகே ஆதி”

உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நாளே இனிமையாக இருந்தது. பெரிதாக ஒன்றும் செய்யவில்லை ஆனாலும் இன்பமாக இருந்தேன். நிம்மதியான உறக்கம் வந்தது.

கர்ப்ப காலத்தில் வரும் கோபம் மட்டும் அல்ல.. மகிழ்ச்சி கூட தாறுமாறாக சுரக்கிறது.

ஏதோ ஒர் அதிசயத்தை உள்ளுக்குள் இருக்கும் குட்டி நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் என்னவெல்லாம் நிகழப் போகிறதோ!

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 57) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 59) – ரேவதி பாலாஜி