இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“உங்களுக்கு பெண் குழந்தை பொறந்துருக்கு”
அப்பாவின் முகத்தில் எவ்வளவு சந்தோசம். குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. ஒரு உயிரை இந்த மண்ணிற்கு கொண்டு வருவதென்றால் அவ்வளவு சுலபமா அதற்காக இந்த வலியை தாங்குவதில் கூட இன்பம் தான்.
நாங்கள் மருத்துவனைக்கு பரிசோதனைக்கு வந்த பொழுது அங்கே நிகழ்ந்த பிரசவ சூழலை கண்டேன்.
வலியில் அந்தப் பெண் கத்தும் சத்தம் கேட்கும் பொழுது ஒருபுறம் பயமாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் இன்னொருபுறம் ஒரு உயிர் கைக்கு வருவதை கண்டு எவ்வளவு இன்பம் தோன்றுகிறது.
“நானும் இப்படிதான் சந்தோசமா இருப்பேன்ல நம்ம குழந்தை வரும்போது” என்றார் ஆதி
“ஆமா எனக்கும் ஆர்வமா இருக்கு”
“இப்படியே இரு.. பயப்படாத.. உன்னை நான் பாத்துக்கிறேன் கவி”
“குழந்தைய பாத்ததும் என்னை மறந்துடுவிங்க”
“இல்லல்ல ரெண்டு பேருமே எனக்கு முக்கியம்.. கவி இன்னொன்னு சொல்லட்டுமா நீ ரொம்ப அழகா இருக்க”
“என்ன திடீர்னு சொல்றிங்க?”
“இப்போதான் சொல்லணும்னு தோணிச்சி, கை கால்லாம் மிருதுவா.. முகம் லட்சணமா.. சாப்ட்டா.. பாப்பா இருக்க வயிரோட.. அழகா இருக்க”
பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்தில் சிரித்தேன்.
“அப்பப்ப நடக்குறது தான் காமெடியா இருக்கும்.. சாஞ்சி உக்காரதுலாம் சிரிப்பா இருக்கும்”
“நான் கஷ்டப்பட்டு நடக்குறது உனக்கு காமெடியா.. போடா” பொய் கோபம் கொண்டேன்.
“கவியினியாள்”
அந்நேரம் என்னை உள்ளே பரிசோதனைக்கு அழைத்தனர்.
“முப்பத்தி ஆறு வாரம் ஆச்சு.. உங்க வெயிட் தான் ஏறிற்கு பாப்பா வெயிட் பெருசா ஒன்னும் ஏறலை.. இன்னொரு டூ வீக்ஸ் அப்புறம் டெலிவரி ஆனா பெட்டரா இருக்கும்..”
“ஓகே மேம்”
“தண்ணீ நிறையா குடிங்க.. இப்போ வாட்டர் லெவல் ஓகே.. குறையாம பாத்துக்கோங்க.. அதுக்கு ஒரு பவுடர் எழுதி தரேன்”
“ஓகே மேம்.. வாக்கிங் போறது வீட்டு வேலை செய்றதுலாம் பண்லாமா?”
“தாராளமா எல்லாமே பண்லாம்.. அதே நேரம் சேப்டி முக்கியம்.. பிளட் லெவல் திரும்ப குறையுது”
“வீட்ல ஒரு விஷேசம்.. சரியா சாப்பிட முடியல.. இனிமே அதெல்லாம் பாத்துக்குறேன் மேம்”
“அடுத்த வாரம் செக்அப் வாங்க.. நடுவுல அடிவயிறு வலி இருந்தாலோ, அதிக வலி உடம்புல இருந்தாலோ, உதிரம் போனாலோ நீர் மாதிரி வந்தாலோ உடனே வரணும்”
தலை அசைத்து விட்டு கிளம்பினோம்.
இனி எப்பொழுது வேண்டுமானாலும் பிரசவம் இருக்கலாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
எங்கள் வீட்டில் இருந்து அம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். இனி பிரசவம் முடிந்து குழந்தையோடு தான் வீட்டிற்கு திரும்பி வரப் போகிறேன். எல்லோரிடமும் விடைபெற்றுவிட்டு அம்மா வீட்டிற்குச் சென்றேன்.
“தினம் காலைல ஆறு மணிக்கு எழுந்திரிச்சி ரெடி ஆகு நான் வாக்கிங் கூட்டிட்டு போக வரேன்”
“ஆபீஸ் இல்லை அம்மா வீட்டுக்கு போய் நல்லா தூங்கலான்னு பாத்தேன்”
“உனக்காகத்தான் சொன்னேன்.. தூங்குறதுன்னா உன் இஷ்டம்”
“சும்மா சொன்னேன்.. வாக்கிங்கே போலாம்.. நான் மதியானம் தூங்கிக்கிறேன்”
“உன்னை நடக்க பார்க் கூட்டிட்டு போறேன்”
“ஜாலி.. நாளைக்கே போலாமா?”
“நாளைக்கே போலாம்.. ரெடி ஆய்ட்டு கால் பண்ணு”
அம்மா வீட்டில் இருந்ததும் ஆதி கூறியது போல் அலாரம் வைத்து ஆறு மணிக்கு எழுந்தேன்.
ஆதியை அலைபேசியில் அழைத்தேன் அவரும் பத்து நிமிடங்களில் வந்தார். அருகில் இருந்த பூங்கா ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்.
எப்பொழுதும் தெருக்களில் தான் நடப்போம் இன்று பூங்காவிற்கு சென்றது புத்துணர்ச்சியைத் தந்தது.
“எவ்ளோ பேர் நடக்குறாங்க ஆதி”
“ஆமா இங்க ப்ரண்ட்ஸ் ஓட எப்போவது ஷட்டுல் விளையாட வருவோம்.. நிறைய பேர் நடப்பாங்க”
வயதானவர்கள் கூட நடந்தார்கள். அவர்கள் உடம்பில் எத்தனை அக்கறை கொண்டிருக்கிறார்கள்.
காலையில் எழுந்து அவசர அவசரமாக அலுவலகம் செல்வதில் எங்கே இதற்கெல்லாம் நேரம். இப்பொழுது எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடலாம்.
இருபது நிமிடங்கள் பூங்காவை சுற்றி நடந்திருப்பேன்.
“எதாவது குடிக்கலாமா ஆதி?”
“இன்னும் கொஞ்ச நடை.. ஏன் முடிலயா?”
“நடக்க முடியுது லைட்டா மூச்சு வாங்குது கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு நடந்தா சரி ஆயிடும்.. எதாவது குடிக்கணும்னு தோணுது அதான்”
“இளநீர் குடிக்குறியா”
“வெறும் வயிரா இருக்கு வேண்டாம்”
“ஆமா நீ அன்னிக்கு இளநீர் குடிச்சு வாந்தி எடுத்ததே போதும்”
“ஹாஹா அது மூணாவது மாசம்.. இப்போ பாப்பா வளந்துட்டா ஒன்பது மாசம் ஆச்சு”
“உளுத்தங்கஞ்சி குடிக்கிறியா.. பார்க் வெளியவே விக்கறாங்க”
“குடிக்கலாம் ஆதி அதும் பாப்பாக்கு நல்லது”
இருவரும் ஆளுக்கொரு டம்ளர் வாங்கி குடித்து விட்டு மேலும் இரண்டு சுற்றுகள் பூங்காவில் நடந்தோம்.
பின் இளைப்பாற ஒரு மரத்தில் கீழ் அமர்ந்தோம். கிளைகளின் வழியே என்னை வந்து தொட முயற்சித்த சூரிய ஒளிகள் தங்கமாய் மின்னியது.
எட்டு மணி வெயில் இதமான சூட்டை தந்தது. பறவைகளின் குயில்களின் சத்தம் பூங்காவெங்கும் கேட்டது இனிமையாய் இருந்தது.
“என்னங்க”
“சொல்லு கவி”
“லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு”
“சரி வா வீட்டிக்கு போலாம்”
“இல்லை எனக்கு அவல் சுண்டல் சாப்புடனும் போல இருக்கு”
“ரெண்டு நடை நடக்க ரெண்டு டிஷ் வேணுமா உனக்கு”
“வாங்கித் தாங்களேன் பசிக்குது”
“பசிக்குதுன்னா வீட்டுக்கு போலாம் வா”
“அம்மா சமைச்சாங்களோ என்னவோ அவல் சுண்டல் வேணும்”
“விடவா போற.. போலாம் வா”
அவல் சுண்டல் கடையில் நின்று சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது என்னருகே இரண்டு தெரு நாய்கள் வந்தன
“ஆதி அதை தூரத்து”
“ஒன்னும் பண்ணாது கவி பயப்படாத”
“இல்லை போ சொல்லு நாய் கடிச்சா மாசமா இருக்கும் போது விஷ ஊசி கூட போட முடியாது” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு நாய் என் கால் அருகே நெருங்கி வந்தது.
பயத்தில் நான் கண்களை மூடிக் கொண்டு வீச்சென்று கத்தினேன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings