in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 56) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“பெரியவங்க சொல்றாங்கன்னா எதாவது காரணம் இருக்கும்.. நீ குனிஞ்சி நிமிந்து ஒன்னொன்னா செய்ய முடியுமா.. வயித்துல புள்ளை இருக்கு யாராவது கூட்டத்துல அவசரமா வரும் போது இடிச்சிட்டா என்ன பண்றது.. அதனால தான் மாசமா இருக்கப்ப எந்த சடங்கும் பண்ண வேணாம்னு சொல்றாங்க” என்னருகே வந்து என் காதில் கூறினார் அத்தை.

“வேணுன்னா நெத்தில பொட்டு மட்டும் வெச்சிட்டு ஒரு போட்டோ எடுத்துகோ” என்றும் கூறினார்.

நானும் அமுதினிக்கு பொட்டு வைத்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு நகர்ந்தேன்.

நலுங்கு முடிந்து மாப்பிள்ளை வீட்டார் எங்கள் வீட்டில் இருந்து அமுதினியை அழைத்து செல்ல வந்தனர். அதுவரை தைரியமாக இருந்த என் நெஞ்சம் அவள் கிளம்பும் கணத்தில் தேம்பி தேம்பி அழுதது.

“மாசமா இருக்கும் போது அழாத” 

“எங்க போற உள்ளூர்ல தான குடுக்கறீங்க.. வான்னா வந்துட்டு போற”

“கிளம்பும் போது அழக்கூடாது.. நீயே தைரியமா இல்லைனா உன் தங்கச்சி எப்படி தைரியமா போவா”

சுற்றி இருந்தவர்கள் ஒவ்வொன்று கூறினார்கள்.

“கவியினியாள் நீயும் உன் வீட்டுக்காரரும் சேர்ந்து நில்லுங்க.. தங்கச்சிய ஆசீர்வாதம் பண்ணி அனுப்புங்க”

உண்மையிலேயே நெகிழ்ச்சியான தருணம் என் தங்கை எங்கள் காலில் விழுந்த பொழுது உணர்ந்தேன். என் வயிற்றை தாங்கிக் கொண்டு குனிந்து அவளை ஆசீர்வதித்தேன். 

‘இதோ உனக்கு முன்னே நான் வளர்த்த மகள் இவள்’ என்று என் குழந்தையிடம் சொல்லிக் கொண்டு காலில் விழுந்து இருந்த அமுதினியை ஆசீர்வதித்து தூக்கினேன்.

இருவரும் கட்டிக் கொண்டு இருவரையும் தேற்றிக் கொண்டோம்.

“சரி சரி கொஞ்சிக்கிட்டது போதும் கிளம்புங்க.. மண்டபத்துக்கு ரெடி ஆகணும் நேரம் இல்லை” மலர் அக்கா எங்களை விளக்கிவிட்டு விளையாட்டாகக் கூறினார்.

நானும் சிரித்த முகத்துடன் அவளுக்கு விடைகொடுத்தேன்.

பதினாறு மாதத்திற்கு முன் கட்டிய என் முகூர்த்தப் புடவை. முதலில் திருமணத்தன்று கட்டினேன். இரண்டாவது முறையாக எனக்கு தாலி கோர்க்கும் பொழுது கட்டினேன். பின் இன்று தான் இந்த புடவையை தொடுகிறேன். என் தங்கையின் திருமணத்திற்காக.

ஒவ்வொரு முறை கட்டும் பொழுதும் இது வெவ்வேறு அனுபவத்தை கொடுத்துள்ளது.

பட்டுப்புடவையின் ரவிக்கையில் உள்ள இரண்டு தையல்களை பிரித்து போட்டுப் பார்த்தேன் அப்பொழுதும் கைக்குள் நுழையவில்லை. பின் ஒரு தையலை பிரித்து போட்டுப் பார்த்தேன். கைக்குள் நுழைந்தது ஆனால் கொக்கி போட முடியவில்லை. ஒரு தையலை மட்டும் விட்டுவிட்டு மீதியுள்ளதை பிரித்துவிட்டு இப்பொழுதாவது சரியாக இருக்க வேண்டும் என்று பிராத்தித்தேன். பிராத்தனையின் பலனாய் சரியாக அமைந்தது.

எடை குறைவாக உள்ள ஜிமிக்கி மாட்டல், நெத்திச் சூடி, கை நிறைய கண்ணாடி வளையல்கள், காசு மாலை, சடை பின்னல் குஞ்சம் அணிந்து கொண்டேன். வயிற்றிற்கு மேல் தளர்வாக ஒட்டியாணம் கட்டிக் கொண்டேன்.

தங்கையின் திருமணம் ஆயிற்றே கிட்டத்தட்ட நானும் மணமகள் போல் அலங்காரம் செய்து கொண்டேன்.

புகைப்பட கலைஞர் என்னையும் ஆதியையும் வைத்து பல புகைப்படங்கள் எடுத்தார். பெண்ணின் அக்கா என்றால் சும்மாவா.

வயிற்றில் ஆதி கை வைத்திருப்பது போல் எடுத்த புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது.

ஒன்பதாவது மாசம் இதற்கென்று தனியாக புகைப்படம் எடுக்க நினைத்தோம். இப்பொழுது என் தங்கையின் திருமணத்தில் எடுத்ததே எனக்கு திருப்தியாக இருந்தது. அவ்வப்போது அலைபேசியில் பிடித்த உடைகள் அணிந்து எடுத்த புகைப்படங்கள் இருக்கின்றன என் நினைவுகளுக்கு சுவையூட்ட அதுவே போதுமானதாக இருக்கும்.

அடர் சிகப்பு நிற புடவையில் தங்கை தேவதை போல் இருந்தாள். 

தாலி கட்டும் நேரத்தில் என் கண்கள் கலங்கின. என் தங்கையும் திருமதி ஆகிவிட்டாள். குடும்ப பொறுப்புகளை சுமக்க தயாராகி விட்டாள்.

“சாப்பிட்டியா மா..” மாப்பிள்ளையின் அம்மா கேட்டார்.

“இல்லை அத்தை”

“நிறைமாசமா இருக்க.. போய் சாப்டு.. உன் தங்கச்சிய இனிமே நாங்க பாத்துக்றோம்” 

அத்தை அப்படி கூறியது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

அம்மா அப்பா ஆதி அனைவரும் விருந்தினர் உபசரிப்பில் இருக்க என்னை அண்ணன் செல்வா சாப்பிட அழைத்துச் சென்று சாப்பிட வைத்தான்.

கல்யாண விருந்தில் அப்படி என்னதான் சேர்க்கிறார்களோ சாப்பிட்டு முடித்ததும் அஜீர்ண உணர்வு ஏற்பட்டது.

மாதுளை பழச்சாறு வாங்கி வரச் சொல்லி அருந்தினேன். எனினும் குமட்டல் அடங்கவில்லை. நான்கு மாதங்களாக வாந்தி இல்லாமல் இருந்தது. மீண்டும் இன்று வாந்தி எடுத்தேன். உடல் மிகவும் சோர்வுற்றது.

அமுதினி புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது நான் இப்படி சோர்வுற்று போனேனே.

“சீக்கிரமா எழுந்திரிச்சிட்ட.. சரியான தூக்கம் இல்லை.. சாப்டது சேரல்ல அதான் கவி.. நீ போய் ரெஸ்ட் எடு.. நாளைக்கு அம்மா வீட்டுக்கு மறுவீட்டுக்கு வரேன்.. சண்டே கறி விருந்து அப்போ பேசிக்கலாம்.. நீ மொதல்ல வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு” நான் அமுதினிக்கு அறிவுரை கூறி வழியனுப்ப நினைத்தால் அவள் என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

வீட்டிற்கு வந்து உறங்கி எழுந்த பின் தான் உடல் தெளிவுற்றது.

மறுவீடு கறி விருந்து என எல்லாம் சிறப்புற முடிந்தது. என் பார்வையில் அமுதினி அவளின் திருமண வாழ்வில் பொருந்திப் போனாள்.

தமிழ் மாமாவும் அவளை நன்றாக பார்த்துக் கொண்டார் எல்லோரிடமும் நன்றாக பேசினார்.

சென்னை வீட்டிற்குச் சென்று பால் காய்ச்சி விட்டு பதினைந்து நாட்கள் இருந்து விட்டு என் பிரசவத்திற்குள் வருவதாகக் கூறிவிட்டு கிளம்பினார்கள். 

அவர்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட நேரம் வேண்டும் அல்லவா!

எனக்கு மீண்டும் இன்று பரிசோதனை.

எடை போட்டுப் பார்த்ததில் மூன்று கிலோ கூடியிருந்தேன். 

“ஐம்பத்தி ஏழா.. போன முறை ஐம்பத்தி நாலு தான இருந்திங்க.. பதினஞ்சு நாள்ல மூணு கிலோ ஏறிட்டிங்க”

“ஒரே நிமிஷம் ரெஸ்ட் ரூம் வருது போய்ட்டு வரேன்”

சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் வந்து எடை போட்டேன். எண்ணூறு குறைந்து இருந்தது.

“56.2 இத எழுதிக்கோங்க டாக்டர் திட்டுவாங்க” என்றேன்.

உதவிப் பெண்ணும் சிரித்துக் கொண்டே எடையை மாற்றினாள். 

“அய்யய்யோஓஓ அம்ம்மாஆஆஆ” பிரசவம் பார்க்கும் அறையில் இருந்து ஒரு பெண் கத்தும் சத்தம் கேட்டது.

“மேல டெலிவரி ஆயிட்டு இருக்கு.. டாக்டர் வர கொஞ்ச நேரம் ஆகும் வெயிட் பண்ணுங்க” என்றாள் உதவிப் பெண்.

“முடில.. அம்மாஆஆஆ அய்யோ.. தாங்க முடில.. அம்மாஆஆ” சத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பயத்தில் என் கண்கள் கலங்கின. 

“ஒன்னும் இல்லை பாத்துக்கலாம் கவி” பக்கத்தில் இருந்து என் கைகளை பிடித்துக் கொண்டு தேற்றினார்.

ஆனாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் பதினைந்து இருபது நாட்களில் நானும் இந்த வலியை தான் அனுபவிக்கப் போகிறேன். எப்படி தாங்கிக் கொள்ளப்போகிறேன். கண்ணீர் சொட்டிக் கொண்டே இருந்தது.

ஏன் பெண்களுக்கு மட்டும் கடவுள் இவ்வளவு பெரிய வலியை கொடுத்து விட்டார். 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 55) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 57) – ரேவதி பாலாஜி