in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 51) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இவர் தான் சரியான வாழ்க்கை துணை என்று எப்படி முடிவு செய்வது?

நான் எப்படி ஆதியை தேர்வு செய்தேன். இருவரும் காதலித்தோம். காதலிக்க என்ன காரணம் என்று கேட்டால் சொல்வதற்கென்று பெரிதாக ஒன்றும் இல்லை.

பார்த்ததும் பிடித்தது. அவர் எண்ணங்கள் பிடித்தது. பேசும் விதம் பிடித்தது. நான் பேசுவதை புரிந்து கொண்டு பதில் அளித்த விதம் பிடித்தது.

அவர் மேல் ஈர்ப்பு வந்தது. காதல் மலர்ந்தது. வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள பெரும் நம்பிக்கை தோன்றியது. பகிர்ந்து கொண்டோம். இது எங்கள் முடிவு எங்கள் வாழ்க்கை.

நமக்கு நெருங்கியவருக்கு வாழ்க்கை துணையை நாம் எவ்வாறு முடிவு செய்வது? அப்படி முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டால் என்ன செய்வது?

“அமுதினிக்கு ஒரு மாப்பிள்ளை வந்துருக்கு”

“என்னம்மா திடீர்னு சொல்ற”

“திடீர்னு தான் வரும்” அப்பாவும் எங்களிடம் பேச அமர்ந்தார்.

“யாரு மாமா.. தெரிஞ்ச பையனா”

“எனக்கு ஒன்னு விட்ட அக்கா முறை தான் மாப்பிள்ளை.. அவங்க பையன்.. அமுதினிக்கு அத்தை பையன் கணக்கு தான்”

“நான் பாத்ததே இல்லை.. அத்தை பையன்னு சொல்றிங்க அப்பா”

“நம்ம சொந்தம் பெருசு எல்லார்கிட்டையுமா பேசுறோம்”

“போட்டோ காமிங்க”

அப்பா அத்தையின் புகைப்படத்தையும் அவர் மகனின் புகைப்படத்தையும் காட்டினார்.

“அத்தைய எங்கயோ பாத்த மாதிரி தான் இருக்கு..”

“தமிழ் தம்பிய பாத்தது இல்லையா”

“அவர் பேரு தமிழா”

“என்ன கவி உங்கப்பா சொந்தம்னு சொல்றாரு.. நீ இப்போதான் பேரு கேக்கற.. போட்டோலாம் பாக்குற”

“அத்தைய நியாபகம் இருக்கு.. பாத்துருக்கேன்.. தமிழ் மாமாவ தெரில”

“அவர் சென்னைல வேலை பாக்குறாரு… படிச்சதும் சென்னை அதனால தெரிஞ்சிருக்காது”

“மாப்பிள்ளை எப்படி மாமா.. குடும்பம் எப்படி?”

“குடும்பம் நம்ல மாதிரி.. எங்கக்கா நல்ல குணம்.. ரெண்டே பசங்க.. பெரிய மருமகளை நல்லா பாத்துக்குறாங்.. அமுதினிய ரெண்டாவது பையனுக்கு கேட்ருக்காங்க.. இவ போனா இவளையும் பொண்ணு மாதிரி பாத்துப்பாங்க”

“சரிப்பா பையன் எப்படி?”

“சின்ன வயசுல பாத்துருக்கேன்.. மரியாதையா பேசுவான்.. சாந்தமான குணம் விசாரிச்சுட்டோம்.. சென்னைல வேலை நல்லா பாத்துப்பான் அமுதினிய”

“வயசு வித்தியாசம்”

“அமுதினிக்கு இருபத்தி நாலு அவருக்கு இருபத்தி எட்டு”

“வீடும் சென்னையா”

“அத்தை வீடு சேலம் தான்.. நம்ம வீட்டுல இருந்து பக்கம்.. அமுதினிய எங்கயோ வெளிய பாத்துட்டு வந்து அவங்களா கேட்டாங்க.. நானும் சரவண சித்தப்பாகிட்ட தெரிஞ்சவங்க கிட்டலாம் கேட்டுட்டேன்.. எல்லாரும் நல்ல விதமா தான் சொல்றாங்க”

“பிடிச்சிருக்குன்னா கல்யாணம் எப்போ வெச்சிக்கிற மாதிரி”

“அடுத்த மாசம்.. உன் பிரசவத்துக்கு அப்புறம் நகர முடியாது.. அதனால இப்போ சித்திரை நடக்குது வைகாசில கல்யாணம் வெச்சிக்கலாம்”

“அதுக்குள்ளயா”

“ஆமா வேற வழி இல்லை”

“நீ மொதல்ல அமுதினி மனசுல என்ன இருக்குனு கேளு கவி” அம்மா முக்கியமானதை நினைவுபடுத்தினார்.

“கேக்கறேன் மா.. நம்ம எப்போ மாப்பிள்ளைய பாக்குறது.. இப்போ அவகிட்ட போய் என்னன்னு சொல்றது”

“கல்யாணம் விஷயமா பேசுறாங்க.. உனக்கு கல்யாணம் செஞ்சிக்க இஷ்டமானு கேளு”

எழுந்து அமுதினி இருந்த அறைக்குள் நுழைந்தேன். அவள் கண்களில் கண்ணீர் சிந்த படுத்திருந்தாள்.

அவளுக்கு இது பிடிக்கவில்லையா இல்லை பயத்தால் அழுகிறாளா தெரியவில்லை. மெல்ல அவள் அருகே சென்றேன்.

“அமுதினி”

“நீ வரேன்னு சொன்னதும் எவ்ளோ நம்பிக்கையா இருந்தேன்.. நீயும் அப்பாவோட சேர்ந்துகிட்ட எனக்கு கல்யாணம் பண்ணி வெக்க பாக்கிறல்ல”

சொல்லிக் கொண்டே அழுதாள். அவள் அழுவது குழந்தைத்தனமாக இருந்தது. அவளே எங்களுக்கு குழந்தை தான் அதற்குள் அமுதினிக்கு திருமணமா என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தான்.

“லூசு ஏண்டி இப்படி அழுற”

“எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்”

“ஏன் வேணாம்.. வேற யாரையாவது விரும்புறியா”

“உனக்கு தெரியாம நான் என்னடி பண்ணப் போறேன்.. அதெல்லாம் ஒன்னும் இல்லை”

“அப்புறம் என்ன.. நம்ம போய் பாக்கலாம்”

“முடியாது எனக்கு வேணாம்”

“அதான் ஏன்?”

“நான் எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா உனக்கு பாப்பா பொறந்ததும் நீ இங்க வருவா.. நான் பாப்பாவ வளத்தணும்னு.. இப்போ திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு போன்னு சொல்றிங்க.. என்னால முடியாது” அமுதினி பேசப் பேச என் கண்கள் கலங்கின. நானும் வார்த்தைகள் அற்று போனேன் சில நிமிடங்கள்.

“போய் பேசி பாக்கலாம்.. உனக்கு பிடிச்சாதான் இல்லைனா வேணாம்”

“கல்யாணமே வேணாம்னு சொல்றேன் என்ன பிடிக்கணும்”

“நல்ல பையன நல்ல வாழ்க்கையா இருந்தா ஏன் வேணாம்னு சொல்லணும்.. கல்யாணம் பண்ணிட்டு கூட வந்து பாப்பாவ பாத்துக்கோ”

“அது எப்படி விடுவாங்க.. எத்தனை நாள் விடுவாங்க.. நான் எவ்ளோ ஆசையா இருந்தேன்.. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க சுத்தமா இஷ்டம் இல்லை… இங்க இருந்து போ நீ” கத்தி அழ ஆரம்பித்தாள் அவளை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை.

அறையை விட்டு வெளியேறினேன். ஆதியிடம் கூறினேன்.

“கொஞ்ச நேரம் அவள தனியா விடு.. அவ பொறுமையா யோசிக்கட்டும்.. பட்டுன்னு கல்யாணம்ன்னு சொன்னா பாவம் அவ என்ன பண்ணுவா கவி”

ஆதி சொல்வதும் சரிதான். ஆனால் அவள் சொல்லும் காரணம் என்னால் மற்றும் என் குழந்தையால் என்கிற போது மகிழ்ச்சி ஒரு பக்கம் நல்ல வாழ்க்கையை தவற விட்டு விடுவாளோ என்கிற பயம் ஒரு பக்கம்.

அம்மாவிடம் இதைப்பற்றி கூறினேன். அம்மா வருத்தம் அடைந்தார்.

“நான் மறுபடியும் நாளைக்கு பேசுறேன் மா”

“ஹ்ம்ம்”

“நீ ஏன் டல்லா இருக்கு”

“நேத்து இருந்து தீட்டு போகுது”

“அம்மா முடிலனா சொல்லுமா டாக்டர்கிட்ட போலாம்”

“இல்லை நல்லாத்தான் இருக்கேன்”

“அம்மா ஆபரேஷன் வேணாம்னு உனக்காக தான் சொன்னேன்.. அதையும் மீறி வலியோ முடிலனாவோ சொல்லிடு”

“எனக்கே ஆபரேஷன்னா பயம்.. நல்லாத்தான் இருக்கேன்.. லேசா தீட்டு போகுது பாத்துக்கலாம்”

“ஆறு மாசத்துக்கு ஒருதடவை ஸ்கேன் பண்ணி பாரு மா”

“சரி டி.. நீ என் பிரச்சனைய விடு.. அமுதினிகிட்ட பேசு.. கல்யாணம் பண்லாமா பையன் ஓகே வான்னு நீயும் மாப்பிள்ளையும் சொல்லுங்க.. நீங்க சொல்றது தான் செய்வோம்” என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் சென்றார்.

இன்னொருவருக்காக நாம் முடிவு செய்வது எவ்வளவு கடினமானது.

அம்மாவின் உடல் நிலை நல்லபடியாக இருக்க வேண்டும் என்கிற ஆசையில் அவரிடம் சொல்லிவிட்டேன், இருந்தும் அவர் சோர்ந்தால் அவ்வப்போது பயம் எழுகிறது.

இதில் இன்னொரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய சூழலில் என்னை விட்டு செல்கிறாரே அம்மா. அமுதினிக்கு சரியான வாழ்க்கையை நான் தேர்ந்தெடுப்பேனா?

கர்ப்பமாக இருக்கும் பொழுது தோன்றும் எண்ணங்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுமே. அதையும் தாண்டி தெளிவான முடிவு எடுப்பேனா?

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 50) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 52) – ரேவதி பாலாஜி