இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதுவரை:
ஏழாவது மாத விருந்தின் திளைப்பில் இருக்கிறாள் கவியினியாள். இன்னும் அவள் கர்ப்ப காலத்தில் என்னென்ன சுவாரஷ்யங்கள் இருக்கின்றன என்பதை அறியலாம் வாருங்கள்.
இனி:
‘சில்லென ஒரு
மழை துளி என்னை
நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஓஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளா ஹோ நான்
மாறினேன் கண்ணே’
தொலைகாட்சியில் ஒரு படம் பார்ப்பதற்கும் திறன்பேசியில் ஒரு படம் பார்ப்பதற்கும் திரையரங்கில் பெரிய திரையில் அதே படத்தை பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.
தோழிகளோடு கல்லூரியில் படிக்கும் பொழுது அதிகப்படியான திரைப்படங்களை தியேட்டரில் காண நேர்ந்தது. தியேட்டரில் அப்படி தோழிகளோடு படம் பார்ப்பதே அலாதியான இன்பம் கொண்டது.
திரையில் மட்டும் அல்ல நம்மையும் மழை துளி நனைக்கும் உணர்வு ஏற்படும். அப்படி ஒரு நெருக்கமான அனுபவத்தை திரையரங்கம் கொடுக்கும்.
காமெடி படம் காதல் படம் பேய் படம் சண்டை படம் என எதுவானாலும் திரையரங்கில் பார்க்கும் பொழுது இன்னும் கதையோடு இயைந்து போக முடியும்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை குடும்பத்தோடு திரையரங்கில் பார்க்க வந்தோம். ஏற்கனவே தெரிந்த கதை எனினும் பாகம் ஒன்று திரையில் பார்க்கும் பொழுது மேலும் ரசிக்க வைத்தது பாகம் இரண்டையும் அதே எதிர்பார்போடு பார்க்க அமர்ந்தேன். திரைக்கதையோடு ஒன்றி அந்த காலத்தோடு கலந்து போனேன்.
பல இடங்களில் பெண்களின் குரல் ஓங்கி இருக்கும். குந்தவையின் கதாபாத்திரம் நந்தினியின் கதாபாத்திரம் பூங்குழலி மற்றும் மந்தாகினி ஆகியோரின் கதாபாத்திரம் எல்லாமும் பெண்களின் பலத்தை அறிவை மற்றும் திறனை எடுத்துரைக்கும் விதம் படைக்கப் பட்டிருக்கும்.
பல காட்சிகளில் வயிற்றில் இருக்கும் குட்டி உதைத்தது. பெண்ணாக இருக்குமோ இப்படி வீரம் கொண்டு உதைக்கிறது!
பயந்த அளவிற்கு சத்தம் இல்லை திரையரங்கில். சில காட்சிகளில் அதிர்வு இருந்தது தான் எனினும் பொறுத்துக் கொள்ளும் அளவில் இருந்தது. சில காட்சிகளில் பூரித்தது. சில காட்சிகளில் கண்ணீர் சிந்தியது. எல்லாம் கலந்த உணர்வை பெற்று மகிழ்ச்சியோடு திரைப்படம் பார்த்தேன்.
கிளம்பும் பொழுது எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அப்பொழுது நான் இடது கையால் கீழ் வயிற்றையும் வலது கையால் மேல் வயிற்றையும் தாங்கிப் பிடித்து புன்னகைத்து நின்றேன் புகைப்படத்திற்கு. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்கிற பெருமையை அந்த தோரணை தந்தது.
வீட்டிற்கு வந்தும் என் குழந்தையின் அசைவு துள்ளலாக இருந்தது.
“ஆதி இங்க சீக்கிரம் வாயேன்”
“என்ன கவி”
“என் வயித்துல கை வையேன்”
“மிக்கு உதைக்குதா”
“ஆமா”
வேகமாக ஓடி வந்து ஆதி கை வைக்க இந்த முறை அவரை ஏமாற்றாமல் அவர் கை இருந்த இடத்திலேயே உதைத்தது மிக்கு.
“உதைக்குது கவி” ஆதியின் கண்கள் கலங்கின.
“என்ன உணர்வு கவி இது.. என் குழந்தையோட முகத்தை பாக்குறதுக்கு முன்னாடி இதயத்துடிப்பு கேட்டேன். இப்போ உதைக்கிறது உணரேன்”
“ஆமா ஆதி பூரிப்பா இருக்கும் கை நல்லா அழுத்தி வை”
“இல்லை பயமா இருக்கு கவி”
“நல்லா வை”
“கூசுது கவி”
“ஹாஹா நல்லாருக்கும்.. அசைறது உணரது”
ஆதியும் நானும் சேர்ந்து எங்கள் மிக்குவின் அசைவை ரசித்து கொண்டிருக்கும் பொழுது வெளியே யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது.
“என்ன காலைல இருந்து கவிய ஆளே காணோம்” எதிர்வீட்டு அக்கா என் அத்தையிடம் கேட்டார்.
“அவங்க சித்தப்பா வீடு சாப்பாடு செஞ்சு போட்டாங்க அங்க போயிருந்தாங்க”
“ஓ சந்தோசம்”
“ஆமாக்கா இப்போதான் அங்க போய்ட்டு வெளிய போய்ட்டு வந்தோம்”
“வீட்டுல இன்னிக்கு பிரியாணி செஞ்சோம் அதான் குடுக்கலான்னு கூப்பிட்டேன்”
“அச்சோ நாளைக்கு வேற ஈரோட்டுக்கு போறேன் உங்க பிரியாணிய மிஸ் பண்ணுவனே”
“அதனால என்ன காலைல எழுந்து செஞ்சி குடுக்குறேன்”
“வேணாம் வேணாம்க்கா மறுபடியும் வருவோம் இரண்டு வாரத்துல அப்போ நானே கேக்கறேன்”
“எப்போ வேணாலும் கேளு உடம்பு பாத்துக்கோ.. அனிதாக்கும் மதியானம் தான் பிரியாணி குடுத்தேன்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.
எங்கள் தெருவில் கர்ப்பமாக இருக்கும் பக்கத்து வீட்டுப் பெண். அவளுக்கும் ஜூலை மாதம் தான் பிரசவம் என்றாள்.
“அனிதா நல்லா வெயிட் போட்டுட்டா” என்றார் அத்தை
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. கர்ப்பமாக இருக்கும் இருவர் அருகருகே இருக்கும் பொழுது இந்த ஒப்பீடு இருக்கத்தானே செய்யும்.
“ஒவ்வொருத்தர் உடம்பு வாக்கு.. குழந்தை நல்லா இருந்தா சரி” ஒரு நிமிடம் கழித்து இதையும் அவரே கூறினார். என் முகம் மாறியதை பார்த்தாரோ என்னவோ.
“கவி ஈரோட்டுல பக்கத்து வீட்டு மாங்காய் சாதம்.. இங்க பாய் அக்கா பிரியாணியா.. மாசமா இருந்தா இவ்ளோ கவனிப்பு கிடைக்குமா?” ஆதி சிரித்துக் கொண்டே கேட்டார்.
“போன மாசம் ரம்ஜான் நோம்பு கஞ்சி பிரியாணி ஷர்மிளா அக்கா தந்தப்ப நீங்க என்னை விட அதிகம் சாப்டிங்க.. அப்புறம் எதுக்கு கண்ணு வெக்கறிங்க”
“கரெக்ட்டு தான் உன் பேர சொல்லி நானும் இந்த ரெண்டு மூணு மாசம் நல்லா சாப்டுக்குறேன்”
உடல் அசதியாக இருந்தது. ஆதியிடம் உரையாடிக் கொண்டே உறங்கினேன்.
காலையில் ஆறு மணிக்கு எழுந்து மொட்டை மாடியில் சில நிமிடங்கள் நடப்பதற்காக சென்றேன்.
எங்கள் வீட்டு மாடியில் இரண்டு மயில்கள் இருந்தன. பார்த்ததும் எனக்கு கொள்ளை இன்பம். உடனே ஆதியையும் அழைத்து வந்தேன்.
“மயில் பாருங்க எவ்ளோ தூரம் பறந்து வந்துருக்கு”
“ரெண்டு மாடி தான வந்துருக்கு.. இந்த உயரத்துக்கு பறக்கும்.. பின்னாடி ஏரி இருக்குல்ல அங்க இருந்து வந்துருக்கும்னு நினைக்கிறேன் கவி”
“பாக்கவே அழகா இருக்கு”
“என்ன ஊருக்கு கிளம்பலையா.. ரெண்டு பேரும் மயில்ல ரசிச்சிட்டு இருக்கீங்க”
“பத்து நிமிஷம் நடக்கலாம்னு வந்தேன் அத்தை”
“தோசை ஊத்திட்டேன்.. ஷர்மிளா அக்கா கோதுமை ரவை உப்புமா குடுத்துருக்காங்க.. அடுத்த முறை பிரியாணி செஞ்சி தரேன்னு சொல்லிட்டு குடுத்துட்டு போச்சு”
“குளிச்சிட்டு வந்தட்றேன் அத்தை”
“பொறுமையா போ.. தண்ணில கால் வெக்கும் போது நல்லா ஊனி வெச்சி நடை.. எட்டாவது மாசம் பொறந்துடுச்சில இனி ரொம்ப பத்திரமா இருக்கணும்”
மேலே எங்களை தேடி வந்த அத்தை சொன்ன அறிவுரையை கேட்டுக்கொண்டு கீழே சென்று வேகவேகமாக எனினும் நிதானமாக தயாரானேன்.
கோதுமை ரவை உப்புமா மிகவும் சுவையாக இருந்தது. இதற்கும் பிரியாணி சலவைகள் போட்டிருந்தார்கள். அவரின் கை பக்குவமே தனி தான். அந்த சுவை தந்த புத்துணர்ச்சியோடு ஈரோடு கிளம்பினோம்.
நானும் ஆதியும் மட்டும் இந்த முறை இருந்தோம். நான்கு நாட்கள் தான் சென்றிருக்கும் ஊரில் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“கவி ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“சொல்லு மா”
“பதட்டப்படமா கேளு”
“என்னன்னு சொல்லுமா”
“அமுதினிக்கு வரன் வந்துருக்கு.. அப்பாக்கு பிடிச்சிருக்கு எனக்கு ரெண்டு மனசா இருக்கு.. நீ ஊருக்கு வந்தன்னா என்னன்னு முடிவு பண்ணலாம்”
“என்னமா சொல்ற அமுதினிக்கு கல்யாணமா?”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings