இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘பேபிமூன்’ என்பது ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுது தன் கணவருடன் செல்லக்கூடிய ஒரு மினி சுற்றுலா எனலாம். குழந்தை வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் போது செல்லக்கூடிய சுற்றுலா என்பதால் ‘பேபிமூன்’ என்று கூறப்படுகிறது.
‘பேபிமூன்’ என்பதை ஆதிக்கு விளக்க இணையத்தில் தேடிய போது இப்படி ஒரு விளக்கம் கிடைத்தது.
“மாசமா இருக்கும் போது யாராவது ட்ராவல் பண்ணுவாங்களா”
“முதல் ட்ரைமஸ்டர் கடைசி ட்ரைமஸ்டர் தான் ட்ராவல் பண்ணக் கூடாது. நாலாவது மாசத்துல இருந்து ஆறாவது மாசம் வரை பண்ணலாம்”
“அப்படி போயே ஆகணுமா”
“குழந்தை புறந்தப்பறம் மறுபடியும் எப்போ நம்மை வெளிய போ முடியும் சொல்லு.. பாப்பாவ பாத்துக்கணும் கண்டிப்பா ஒரு வயசு வரை போக முடியாது. அப்படியே போனாலும் குழந்தைக்கு தேவையானது எடுத்துட்டு போகணும். குழந்தையை பாத்துக்கணும்னு தான் இருக்குமே தவிர சுத்தி பாக்க முடியுமா”
“நீ சொல்றது கரெக்ட் தான். இப்போ எங்க போறது”
“எனக்கு பெருசா ஆடம்பரமா இங்க போணும் அங்க போணும்னுலாம் இல்லை. சென்னை கூட்டிட்டு போங்க.. செல்வா வீட்ல ரெண்டு மூணு நாள் இருக்கேன். பீச் போய் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு வரேன். அவ்ளோதான் என் ஆசை”
“உன் மைண்ட்டும் எனக்கு புரியுது. வீட்ல ஒரு டைம் கேட்டுட்டு முடிவு பண்ணலாம்”
“ம்ம்ம் பாப்போம் ஆதி”
இரண்டு நாட்களுக்குப் பின் அமுதினியும் அப்பாவும் ஊரில் இருந்து வந்தார்கள்.
ஒரு வாரம் அனைவரும் இருந்துவிட்டு போவதாகக் கூறினார்கள்.
“நம்ம புடவை படைக்கிறோம்ல. சாயங்காலம் போய் உனக்கும் மாப்பிளைக்கும் துணி எடுத்துட்டு வரலாம்” என்றார் அப்பா
ஐவரும் சென்றோம்.
இப்பொழுதெல்லாம் இறுக்கமான உடைகள் அணியவே பிடிப்பதில்லை. அலுவலகத்திற்குப் போட்டுச் செல்ல கொஞ்சம் பெரிய அளவுள்ள இரண்டு சுடிதார்களை எடுத்துக் கொண்டேன்.
பின் புடவைகளை பார்த்தோம்.
ஒரு சிலர் என் வயிற்றைப் பார்த்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை கண்டுப்பிடித்தனர். ஒரு சிலர் என் கையில் இருந்த கண்ணாடி வளையல்களை வைத்து யூகித்தனர்.
அதனால் செல்லும் இடமெல்லாம் கவனிப்புதான். நிற்கவே விடாமல் சுற்றிச் சுற்றி நாற்காலியில் அமர வைத்து துணிகளை காண்பித்தார்கள்.
நானும் அமுதினியும் ஒரே மாதிரி புடவை எடுத்துக் கொண்டோம். ஆதிக்கும் சட்டை எடுத்தோம். அம்மாவும் அப்பாவும் சேலத்திலேயே துணி வாங்கிக் கொண்டதாகக் கூறினார்கள்.
“ஜூஸ் குடிச்சிட்டு போலாமா மாமா” துணிகளை எடுத்து முடித்தவுடன் ஆதி என் அப்பாவை அழைத்தார்.
“வேணாம் மாப்பிள்ளை வீட்டுக்கே போலாம்”
“நான் டிபன் தான் சாப்பிடலாம் சொன்னேன்.. கவி தான் வீட்டுல சாப்பாடு இருக்கு வேணாம்னா”
“ஆமா மாப்பிள்ளை எல்லாம் செஞ்சி வெச்சிட்டு தான் வந்தேன்”
“அப்போ ஜூஸ்சே குடிக்கலாம் அத்தை”
“போலாம் மாமா.. அடிக்கிற வெயிலுக்கு ஜூஸ் குடிச்சாதான் நல்லாருக்கும்”
“போலாம் அமுதினி”
நாங்கள் சென்ற கடையில் பல வகையான பழச் சாறுகள் இருந்தன.
“பலாப் பழ ஜூஸ்சா எனக்கு பலாப் பழம் ஜூஸ் வேணும்” முதலில் நான் கேட்டேன்.
“கவி இத மறந்துட்ட”
“என்னடி”
“சுகர் கம்மி ஐஸ் கம்மி”
“ஆமா ஆமா.. ஆதி எனக்கு சுகர் கம்மியா ஐஸ் கம்மியா சொல்லிடுங்க”
“எப்படித்தான் அப்படி சப்புன்னு குடிக்கிறியோ கவி..”
“அவ்ளோ சுகர் ஐஸ் போட்டு குடிச்சா என்ன சத்து இருக்கு அதுல”
“அட போடி நீயும் உன் ஜூஸ்சும்.. மாமா எனக்கு மேங்கோ ஜூஸ்”
அம்மாவும் அப்பாவும் ஆப்பிளும் முலாம்பழமும் வாங்கிக் கொண்டார்கள்.
ஆதி மாதுளை வாங்கிக்கொண்டார். அவரும் சர்க்கரையும் ஐஸ்சும் குறைவாகத் தான் குடிப்பார்.
பலாப்பழச் சாறை சுவைத்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. பழத்தின் சுவை நன்கு இறங்கி தித்தித்தது. என்னுடையதை ஆதியும் அமுதினியும் குடித்துப் பார்த்தனர். நானும் அவர்களுடையதை சுவைத்தேன்.
“சூப்பரா இருக்குடி பலாப்பழம்”
“ஐஸ் இல்லாம எப்படி இருக்குனு சொன்ன.. பாத்தல்ல.. ரியல் டேஸ்ட்”
“இந்த ஜூஸ்க்கு அது செட் ஆயிடுச்சு.. அதை விடு ஒரு முக்கியமான விஷயம் அம்மாக்கு ரெண்டு புடவை கிடைச்சிருக்கு”
“அப்பா இரண்டு எடுத்துக் குடுத்தாரா”
“இல்லை அம்மாக்கு அவங்க அம்மா வீட்டுல இருந்து எடுத்துக் குடுத்தாங்க”
“எதுக்கு”
“உனக்குத் தெரியாத கவி.. பாட்டி வீடும் சாமி செய்றாங்க”
“அப்படியா”
“ஆமா கவி.. சொல்ல மறந்துட்டேன் பாட்டியும் குல தெய்வ சாமி செய்றாங்க”
“அது எப்போம்மா”
“வர ஞாயிறு நம்ம செய்றோம். அடுத்த ஞாயிறு அவங்க பண்றாங்க..”
“மாசி மாசம் தான் வரும்ல.. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை பண்ணுவாங்க.. இப்போதான் பண்ண மாதிரி இருக்கு.. அதுக்குள்ள அஞ்சு வருஷம் ஆயிடுச்சா”
மெல்ல மெல்ல பழைய நினைவுகள் மனதிற்குள் எழுந்தன.
திருச்செங்கோடு அருகில் உள்ள உலகப்பம்பாளையத்தில் உள்ளது எங்கள் பாட்டி வீட்டு குலதெய்வம்.
விவரம் தெரிந்து பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது சாமி செய்ய போனோம். ஊரே ஒன்று சேர்ந்து திருவிழாவை கொண்டாடியது. வெண்ணிலா கபடி குழு படத்தில் வருவது போலச் சின்னச் சின்ன தெருக்கள், ஓட்டு வீடுகள் குடிசை வீடுகள் திண்ணை வைத்த வீடுகள் கொண்ட கிராமம்.
மூன்று நாட்கள் திருவிழாவிற்கு மொத்த குடும்பமும் வந்தோம். அம்மாவுடன் பிறந்த பெரியம்மாக்கள் மாமா அத்தைகள் எல்லோரும். அக்கா தங்கை தம்பிகள் என பெரிய படையோடு போனோம்.
மூன்று நாட்கள் அங்கிருந்த அரசு பள்ளியில் தங்கினோம். திருவிழா சமயத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து இந்த ஏற்பாடு செய்திருந்தன. பாதுகாப்பாக இருக்கும் பல குடும்பங்கள் அங்கு வந்து தங்கிக் கொள்வார்கள்.
சாமி கும்பிட செல்ல வேண்டியது சாப்பிட வேண்டியது மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு வந்து தங்க வேண்டியது. பாட்டு கேட்க ரேடியோ விளையாட தாயம் என எல்லாம் எடுத்து சென்றிருந்தோம். பெரியம்மா அத்தையோடு தாயம் விளையாடியது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கின்றன. அலைபேசி இல்லாத நிதானமான மனித சிரிப்புகளோடு உறவாடிய நாட்கள்.
பின் அடுத்ததாய் கல்லூரி மூன்றாம் வருடம் படிக்கும் பொழுது சாமி செய்தார்கள். அப்பொழுது மூன்று நாட்கள் இருக்க முடியவில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருந்தன. எனினும் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வந்தோம்.
இந்த முறை ஹோட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப் போவதாய் அம்மா கூறினார். என்னால் தங்க முடியுமா தெரியவில்லை. ஒரு நாளாவது முழுதாக இருந்துவிட்டு வர வேண்டும். குதூகலத்தோடு மனதிற்குள் கோட்டை கட்டினேன்.
வீட்டுற்கு வந்ததும் என் புடவையை அம்மா என்னிடம் கொடுத்தார்.
“அலசிட்டு கட்டு.. மாசமா இருக்கும் போது புதுத் துணி போடக் கூடாது”
“சரிம்மா”
எப்போழுதுமே புதுத் துணியை ஒரு முறை அலசிவிட்டு போட்டுக் கொள்வது நல்லது. அதுவும் கர்ப்பமாக இருக்கும் பொழுது புதுத்துணியால் குழந்தைக்கு எதுவும் அழற்சி ஏற்பட்டு விடக்கூடாது.
“பாட்டி வீட்டு கோவிலுக்கு நீங்க எப்படி போறீங்க.. நானும் ஆதியும் எப்படி வரட்டும்”
“நீ எங்க வர.. மாசமா இருந்துட்டு அங்கல்லாம் வரக் கூடாது”
“என்னம்ம்மா சொல்ற.. நானும் வரேன்”
“நீ வரக்கூடாது கவி.. நம்ம கோவிலுக்கும் சரி அங்கயும் சரி நீ வரக்கூடாது”
“ரெண்டு கோவிலுக்குமே நான் வரக்கூடாதா… ஏன் மா???”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings