இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதுவரை :
குழந்தையின் அசைவை உணர்ந்தாளா. வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெயர் தேடும் கவியினியாளுக்கு பெயர் கிட்டயதா… இதோ பார்ப்போம்.
இனி :
கையில் இருந்த கண்ணாடி வளையல்களை அசைத்துக் கொண்டே இருந்தேன். எந்த அசைவையும் என்னால் உணர முடியவில்லை. ஒருவேளை என் குழந்தை அசைவை உணர்விக்கும் அளவிற்கு இன்னும் வளரவில்லையோ. ஆனால் ஆசையாக இருந்தது வயிற்றில் வளரும் எங்கள் உயிரை உணர.
“என்ன சொல்லிக் கூப்பிட்டால் நீ அசைவாய் கண்ணே” தடவிக் கொடுத்துக் கொண்டே கேட்டேன்.
பெயர் யோசிக்க நினைத்துக் கொண்டிருந்த பொழுது ஆதி உள்ளே வந்தார்.
“ஆதி நம்ம குழந்தைக்கு பேரு எதாவது யோசிச்சிருக்கிங்களா”
“இல்லையே”
“ஏங்க.. நம்மை குழந்தை பிறந்தப்பறம் என்ன பேர் வெக்கணும்னு யோசிக்கலையா”
“இல்லை கவி.. எனக்கு பையன் பொறந்தாலும் ஓகே பொண்ணுனாலும் ஓகே.. எந்த ஜெண்டர் பேர் யோசிக்கட்டும். பொறந்தப்புறம் ஜாதகம் பார்த்து எழுத்து பார்த்து பேர் வெக்கணும். இப்போவே யோசிச்சிட்டா அது வெக்க முடிலனா கஷ்டமாயிடும்”
“போ ஆதி.. அப்போ நம்மை குழந்தையை இப்போ எப்படி கூப்பட்றது”
“உனக்கு எப்படி தோணுதோ கூப்புடு.. பட்டு தங்கம் கண்மணின்னு கொஞ்சு”
“எப்பவும் கூப்ட ஒரு பேரு வேணும்”
“நானும் யோசிக்கிறேன்”
“ஏங்க.. நம்மை குழந்தை பொறந்தப்புறம் தமிழ்லயே பேரு வெக்கலாம்”
“தமிழ்ல தான வெப்போம்”
“சமஸ்கிரத எழுத்து கலக்காத நல்ல தமிழ் பெயர்”
“சரி அப்படியே வெக்கலாம்”
“கொஞ்ச பேர்லாம் பாக்கலாம்ங்க”
“பாக்கலாம்டி”
மறுநாள் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்பொழுது கீழ் வீட்டில் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
“வாங்க என் தம்பிய வந்து பாருங்களேன். அவன் ரொம்ப அழகா இருப்பான்”
ஒரு நான்கு வயது சிறுமி அதே வயதுடைய சிறுவர்களிடம் கூறிக்கொண்டிருந்தாள்.
விசாரித்ததில் அந்தச் சிறுமிக்குப் போன வாரம் தான் தம்பி பிறந்திருக்கிறது. தன் குட்டித் தம்பியை பார்க்கத் தோழிகளை அழைக்கிறாள்.
இதற்கு முன் அவளை இந்த கட்டிடத்தில் பார்த்ததே இல்லையே யாராக இருக்கும். அம்மாவிடம் விசாரித்ததில் அந்த சிறுமியின் பாட்டி வீடு முதல் தளத்தில் உள்ளதாம்.
அவள் அம்மாவிற்கு இரண்டாம் பிரசவமாம். பிரசவத்திற்கு மட்டும் அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். இரண்டு வாரம் முன்பே தேதி கொடுத்திருந்தார்கலாம். வலி வரவில்லை என்று ஒரு வாரம் காத்திருக்கிறார்கள். போன வாரம் ஊசி போட்டு வலி வர வைத்திருக்கிருக்கிறார்கள்.
“சும்மா சொல்லக் கூடாது அந்த பொண்ணும் ஒரு வாரமா மேல நடையோ நடைன்னு நடந்துச்சு.. படி ஏறி இறங்குச்சு. அப்பவும் வலி வரல.. ஊசி போட்டு வலி வர வைச்சிருக்காங்க.. அப்புறம் ஒரு நாள் பாத்துருக்காங்க.. சுகபிரசவத்துல பையன் பொறந்துடுச்சு. மொதல்ல பொண்ணு இப்போ பையன் நல்லதா போச்சு கவி”
“பரவால்ல நார்மலா”
“ஆமாடி.. நல்லாருக்கான் பையன். மூணு கிலோவாம். டேட் முடிஞ்சி பொறந்துருக்கான்ல”
எப்படி அம்மாவிற்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. வீட்டிற்குள்ளே இருப்பது போல் தெரிகிறது ஆனாலும் சுற்றி நிகழ்வதை அறிந்திருக்கிறார். நமக்கோ ஒரு வாரமாக குழந்தை இருப்பது கூடத் தெரியவில்லை.
பரவாயில்லை இன்னும் சுகப்பிரசவம் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் கடவுளே!
அந்த பெண்ணின் வீட்டு வாசலைப் பார்த்தேன்.
வெளியில் கதவில் அலங்காரப் பொருட்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. கதவில் ‘வெல்கம் ஹோம் மிக்கு தம்பி’ என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. எனக்கு அதை பார்த்ததும் பூரித்துப் போனது.
ஒரு அக்காவாக தம்பி மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் இந்த குட்டி. யாரோ ஒருவர் உதவியுடன் வரப்போகும் தம்பியை வரவேற்று வீட்டை அலங்காரம் செய்திருக்கிறாள். குட்டித் தம்பி அழகாக இருப்பான் வந்து பாருங்கள் என்று ஆசையாக அழைக்கிறாள்.
இப்படி ஒரு அக்கா தம்பி எனக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படியென்றால் இரண்டு குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படுகிறேனா.
ஒன்றை பெற்று வளர்ப்பதே கஷ்டம் என்கிறார்களே. தனியாக ஒரு குழந்தையை பெற்று வளர்க்கவும் பயமாக இருக்கிறது. அதற்கு துணை வேண்டுமே. சரி இதைப்பற்றி பின்னாளில் யோசித்துக் கொள்வோம். இப்பொழுது எனக்கொரு பெயர் கிடைத்திருக்கிறது.
‘மிக்கு’
“ஆதி நம்ம குழந்தைக்கு ஒரு செல்லப் பேர் கிடைச்சிருக்கு”
“என்ன பேரு கவி”
“மிக்கு”
“அந்த குட்டிப் பொண்ணுகிட்ட இருந்து சுட்டுட்டியா அவள் தம்பி பேர”
“ஹாஹா.. நல்லாருக்குல”
“மிக்கு னா என்ன”
“தெரிலயே.. மிக்கி மவுஸ் இல்ல வேற எதாவது கார்ட்டூன் நேம்மா இருக்குமா”
“எனக்கும் தெரில கவி”
“நான் முடிவு பண்ணிட்டேன். பொறந்தப்புறம் அர்த்தமான நல்ல தமிழ் பேர் வெச்சிக்கலாம். இப்போ நான் செல்லமா மிக்குனு கூப்பிட போறேன். அது ஆணோ பெண்ணோ எப்படி இருந்தாலும் சரி”
“நல்லாத்தான் இருக்கு.. கொஞ்சுறது கொஞ்சிக்கலாம்.. கூப்பிடும் போது மிக்குன்னு சொல்லிக்கலாம்”
“ஆமா.. ஒரே மாதிரி கூப்பிட்ட நம்ம குழந்தை நமக்கு ரெஸ்பாண்ட் பண்ண ஆரம்பிக்கும்ல”
“பண்ணும் கவி சீக்கிரமே உனக்கு அசைவு தெரியும். இருபது வாரம் ஆயிடுச்சுல இனி தெரியும்”
“உணரணும்.. அனுபவிக்கனும் சீக்கிரமே”
இருவரும் பேசிக்கொண்டே மொட்டை மாடிக்குச் சென்றோம்.
வானத்தை கருமேகங்கள் மூடியிருந்தன. நல்ல காற்றோட்டம். மரங்களும் செடிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அசைந்தன. உடலும் உள்ளமும் குளுமை ஆனது.
அழகான காற்றோட்டமான சூழலுக்கு எத்தனை மகிமை. மனநிலையை மாற்றும் பெரும் சக்தி கொண்டதாய் இருக்கிறதே. எங்கேயாவது தூரமாக சென்றால் கூட நன்றாக இருக்கும்.
ஐந்தாறு மாதங்களாக ஈரோடு சேலம் வேலை என்றே இருக்கின்றேன். இந்த சமயத்தில் வெளியில் செல்ல முடியுமா!
“ஆதி நம்ம பேபிமூன் போலாமா?”
“பேபிமூனா!! அது எங்க இருக்கு?”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings