in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 35) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“எப்படி இருக்கீங்க அண்ணி” அம்மா என் மாமியாரை அண்ணி என்று தான் அழைப்பார். அதுதான் முறையாம்.

“நல்லாருக்கேன் நீங்க.. கவியினியா எப்படி இருக்கா”

“எல்லாரும் நல்லாருக்கோம்”

“சாப்பாடு ஆச்சா அண்ணி”

“ஆச்சு அண்ணி. அண்ணன் எப்படி இருக்காரு”

“நல்லாருக்காங்க.. அமுதினி தனியா சமாளிச்சுக்கிறாளா”

“பாத்துக்குறா வரேன்னு சொன்னா சனி ஞாயிறு அப்புறம் ஏதோ வேலைன்னு வரலை.. நாளைக்கு வராங்க ரெண்டு பேரும்”

“ஓ பரவால்ல அண்ணி”

“அப்புறம் நம்ம கவியினியாளுக்கு அஞ்சு மாசம் நடக்குதுல அண்ணி. அவளுக்கு நாங்க எதாவது செய்யணுமா. வளையல் எப்போ போடலாம்”

“எங்க முறைல நாங்க வளைகாப்பு பெருசா பண்ற வழக்கம் இல்லை. குலதெய்வம் கோவிலுக்கு கூட்டிட்டுப் போய் சாமி கிட்ட வளையல் வெச்சி வாங்கி போடுவோம்” 

‘என்னது வளைகாப்பு பெருசா பண்ற பழக்கம் இல்லையா’ ஸ்பீக்கரில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த நான் அதிர்ந்தேன்.

“அப்படிங்களா.. நாங்க குலதெய்வம் கோவிலுக்கு மாசமா இருக்கும்போது கூட்டிட்டுப் போக மாட்டோம். உங்களுக்கு பொம்பள சாமில”

“ஆமாங்க அங்காளம்மன். அதுவும் ஏழாவது மாசம் ஒருமுறை கூட்டிட்டு போவோம் அவ்ளோதான்”

“நாங்க இப்போ அஞ்சாவது மாசம் வளையல் போடலாமா”

“அது உங்க விருப்பம். உங்க முறை எப்படியோ நீங்க பண்ணிக்கோங்க”

“சரிங்க அண்ணி.. நீங்களும் வாங்க வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்ல”

“வரனும். அண்ணனுக்கு வேலையே சரியா இருக்கு”

“சரிங்க அண்ணி பாத்துட்டு வாங்க”

“ஹ்ம்ம் சரிங்க வெச்சட்றேன்”

“ம்ம்மா.. எனக்கு வளைகாப்பு இல்லையா”

“கோவில்ல சிம்பிள்லா பண்லானு உங்க மாமியார் சொல்றாங்க”

“என்னம்மா.. எனக்கு வளைகாப்பு வேணும்”

“ஏழாவது மாசம் பாத்துக்கலாம் விடு”

“இப்போ நீ ஏதோ வளையல் போடறேன்னு சொன்னியே அது என்ன”

“கடைல வாங்கிட்டு வந்து குடுப்பேன். நீ கைல போட்டுக்கணும்”

“அவ்ளோதானா”

“பின்ன உனக்கு என்ன பண்ணனும்”

“எனக்கு பெருசா விருந்தெல்லாம் வெச்சு பண்ணனும்”

“உனக்கு என்ன வேணும் சொல்லு பண்ணித் தரேன். ஏழாவது மாசம் உங்க சித்தப்பாங்க.. அத்தைங்க செஞ்சி போடுவாங்க..”

“என்னவோ சொல்றிங்க”

“இனிமே ஜாக்கிரதையா இருக்கணும். வயிறு பெருசாகுது பாத்து உக்காரு பாத்து போ இடிச்சிக்காத. ஒருக்களிச்சு படுக்கணும் அதும் இடது புறம் படுக்குறது நல்லது. இனிமே நிமிர்ந்து நேராலாம் படுக்கக் கூடாது”

“எனக்கு அப்படி படுத்தா தூக்கம் வராதே மா”

“வேற வழியில்லை அப்படித்தான் படுக்கணும். படுத்துட்டே இருந்தா பழகிடும்”

“ட்ரை பண்றேன்”

பொதுவாகவே படுக்கும் போது இடதுபுறம் படுப்பது நல்லது என்று சொல்வார்கள். இதனால் செரி மான பிரச்சனை உண்டாகாது. மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. இதயத்தின் பணி சிறப்பாக இருக்கும். இதயத்துக்கு இரத்த ஓட்டம் சீராக செல்வதோடு இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைக்கும் இது தான் சௌகர்யம் என்கிறார்கள் இப்படியே இனி உறங்குவோம்.

“இனிமே போட்டோலாம் யாருக்கும் அனுப்பாத”

“புரியுதா கவி இனி வயிறு தெரிற மாதிரி ஸ்டேட்டஸ் போடாதன்னு அம்மா சொல்றாங்க”

“நல்லாவே புரியுது ஆதி. எனக்கும் சென்டிமெண்ட் இருக்கு. நான் என்ன போட்டோ ஷேர் பண்ணிட்டா இருக்கேன். எப்போவாது ஆசைக்கு போடுவேன். அதுவும் இப்போல்லாம் போடறது இல்லல்ல”

“இருந்தாலும் சொல்றோம்”

“என்ன சமைக்கிறது கவி.. இன்னிக்கு பிரதோஷம்ன்னு கறி எடுக்கலை.. கீரை வாங்கிட்டு வந்துருக்கீங்க.. வேற”

“மதியம் எனக்கு கலர்ன சாப்பாடு மாதிரி செஞ்சிடுமா”

“செய்யறேன்.. வேறெதாவது சாப்பிடணும்னு ஆசையா இருக்கா”

“வர வழியில நுங்கும் நாவல் பழமும் பார்த்தேன். எனக்கு இப்போ அது வேணும்”

“வரும்போதே கேட்டா வாங்கிற்பேன்ல” என்றார் ஆதி 

“இப்போதான் தோணுது.. கீரை கடை பாட்டி கீரை தந்த சந்தோஷத்துல கேக்க மறந்துட்டேன்”

“நாவபழம் சாப்ட்டா குழந்தை கருப்பா பொறக்கும்னு சொல்லுவாங்க”

“ம்மா அதெல்லாம் சும்மா மா.. நாவ பழம் சாப்ட்டா கருப்பா பொறக்கும்ங்கிறது குங்குமப்பூ சாப்டா வெள்ளையா பொறக்குங்கிறது. அதெல்லாம் இல்லை. எல்லாம் அம்மா அப்பாவோட ஜீன் தான்”

“எனக்கு சொன்னாங்க.. நான் உனக்கு சொல்றேன் அப்புறம் உன் இஷ்டம்டி.. நுங்கு வேணா சாப்புடு”

“மறுபடியும் வெளிய போனா வாங்கிட்டு வரேன் கவி”

“ம்ம் ஓகே ஆதி”

“நான் எதாவது சமைச்சி தர மாதிரி கேளு”

“அம்மா திடீர்னு சீம்பால் சாப்டனும் போல இருக்கு”

“கண்ணு குட்டி பொறந்ததும் மாட்டுக்கு முதல் இரண்டு மூணு நாள் வர பால் தான”

“ஆமா ஆதி.. அதை எங்கம்மா ஏலக்காய் நுனுக்கி போட்டு வேகவெச்சி குடுப்பாங்க.. செம்மயா இருக்கும்”

“அப்போல்லாம் வீட்டு பக்கத்துல மாடு வளத்துனாங்க மாப்பிள்ளை. கண்ணு பொறந்தாவே கொஞ்சம் சீம்பால் வீட்டுக்கு குடுப்பாங்க.. இவங்களுக்கு சத்து கிடைக்கணும்னு அடிக்கடி செய்வேன். அமுதினியும் கவியும் விரும்பி சாப்டுவாங்க”

“ஓ.. எங்க வீட்ல அதிகம் செஞ்சது இல்லை. எனக்கும் அவ்வளவா பிடிக்காது”

“ஒரு டைம் அம்மா செஞ்சி தர சொல்றேன். உனக்கும் பிடிக்கும் ஆதி”

“இப்போ அந்த பாலுக்கு எங்க போறது”

“இல்லை எனக்கு வேணாம்”

“இப்போ தான் கேட்ட வேணாம்ங்கிற”

“அந்த பால் கண்ணு குட்டிக்கு. பாவம்ல கண்ணு குட்டி”

“அய்யோ முடில கவி”

“செஞ்சா நல்லா சாப்டுவா.. இப்போ கண்ணு குட்டி மேல பாசம் வந்துடுச்சா”

“அம்மா எனக்கு அலாப்புட்டு வேணும்”

“அடுத்தது ஆரம்பிச்சிட்டியா கவி”

“நீ சும்மா இரு ஆதி.. அம்மா அலாப்புட்டு வேணும்”

“அலாப்புட்டு தான.. அரிசி ஆட்டறேன். மாவு எடுத்து செஞ்சிட்றேன். ஈசியான வேலை தான்.. வெல்லம் ஏலக்காய் எல்லாம் இருக்கு”

“ஜாலி”

அம்மா எழுந்து சமையல் அறைக்குள் சென்றார். இனியும் அமர்ந்து இருந்தால் வேறு எதாவது கேட்டு விடுவேன் என்று பயந்து விட்டார்களோ என்னவோ!

வேக வேகமாக சமையல் வேலை செய்தார். இடையில் ஒரு முறை கடைக்கு வேறு சென்றார். 

ஆதி தானே செல்கிறேன் எனக் கேட்டும் அம்மா விடவில்லை. வரும்போது வாழை இலையை கையில் பிடித்துக் கொண்டு வந்தார்.

பையில் இருந்து கண்ணாடி வளையல்களை எடுத்தார்.

“இதுல ஒரு டசன் வளையல் இருக்கு.. ஒன்னு விட்டுட்டு ஒரு கைல அஞ்சும் ஒரு கைல ஆறும் போட்டுக்கோ”

சாமி படத்தின் முன் நின்று வேண்டிக்கொண்டு போட்டுக்கொண்டேன். பதினொன்று வளையல்களை இரு கைகளிலும் போட்டுக்கொண்டேன். ஒற்றைப்படி எண்ணில் இருக்க வேண்டும் என்பதால்.

“அவ்ளோதானா மா.. கை நிறைய போட்டுக்கணும் போல இருக்கு”

“சும்மா சாங்கியத்துக்கு நான் போட்டேன். ஏழாவது மாசம் உங்க மாமியார் கோவிலுக்கு கூட்டிட்டுப் போய் போடுவாங்க.. சாப்பிடவா இதே நேரம் ஆச்சு.. அவரும் நீயும் வந்து உக்காருங்க”

இருவருக்கும் இலை போட்டார்.

சுடச் சுட அலாப்புட்டை வைத்தார். பின் மூன்று வகையான சாதங்கள் தக்காளி சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதத்தை வைத்தார். இரண்டு பொரியல் கீரையும் சுண்டலும். அதோடு சேர்த்து அப்பளமும் வைத்தார்.

“மூணு சோறு செஞ்சிட்டியா”

“ஆமா.. நீதான விருந்து கேட்ட.. என்னால முடிஞ்சது செஞ்சிருக்கேன். நல்லாருக்கா”

“தக்காளி சாதம் சூப்பர்”

“நினச்சேன் நீ அதைத்தான் சொல்லுவனு”

“உங்களுக்குங்க”

“எல்லாமே நல்லாருக்கு அத்தை”

“ஆதிக்கு தேங்காய் சாதமும் பிடிக்கும்.. எலுமிச்சையும் பிடிக்கும்மா”

“எல்லாமே சூப்பர் அத்தை.. ஸ்வீட்டும் நல்லாருக்கு”

“இட்லி துணில ஊத்தி வெச்சிருக்கேன்.. ஆறுனா இன்னும் நல்லாருக்கும்”

“எனக்கு இன்னும் ரெண்டு வேணும்”

“இப்போதான் சுகர் கண்ட்ரோல் ஆயிருக்கு.. பாத்து கவி”

“இன்னிக்கி மட்டும் ப்ளீஸ்”

திருப்தியாக சாப்பிட்டு முடித்தேன். அறைக்குள் வந்து அமர்ந்தேன்.

நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைத்ததாலா.. கர்ப்பமாக இருக்கிறேன் என்பதால் பிரியமாக கிடைத்த கீரையாலா.. அம்மா வாங்கித் தந்த கண்ணாடி வளையலாலா.. கேட்டதும் கிடைத்த அலாப்புட்டுவால தெரியவில்லை. உவகையில் திளைத்தேன்.

ஒருக்களித்துப் படுத்தேன். கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. இனி இப்படியே படுத்துப் பழகத் முடிவெடுத்தேன்.

மெல்ல கண்கள் மூடி வயிற்றில் வளரும் குழந்தையிடம் பேசத் தொடங்கினேன்.

“என்னம்மா பண்றிங்க.. நல்லா சாப்ட்டீங்களா” 

பதில் எதுவும் வரவில்லை.

நான் மட்டும் தனியாக பேசும் உரையாடல். என் குழந்தைக்கு கேட்கும் என்கிற நம்பிக்கையில்.

பெயர் வைத்து கூப்பிட வேண்டுமா. என் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?

மெல்ல பேசிக் கொண்டே வயிற்றில் கை வைத்தேன். எதாவது அசைவுகள் தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்தேன். கண்ணாடி வளையல்களை ஆட்டிக் கொண்டே அசைவுகள் தெரிய காத்திருந்தேன்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 34) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 36) – ரேவதி பாலாஜி