இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதுவரை:
கர்ப்பகால நீரிழிவு நோயை விரட்ட உணவிலேயே பல முயற்சிகள் செய்கிறாள் கவியினியாள். பின் இரத்தப் பரிசோதனை செய்துவிட்டு காத்திருக்கும் கவியினியாளிற்கு என்ன முடிவு வந்தது. இனி தெரிந்து கொள்வோம்.
இனி:
“இன்ஜெக்ஷன்லாம் கரெக்ட்டா போட்றீங்களா”
மருத்துவர் இப்படி கேட்டதும் ஆதி என்னைப் பார்த்தார். கிட்டத்தட்ட முறைத்தார்.
“போட்றோம்”
மருத்துவரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டது. ஒருவேளை சுகரின் அளவு குறையவில்லை என்றால் இனி போட்டுக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்.
“ரிப்போர்ட் நல்லாருக்கு.. குளுக்கோஸ் குடிச்சே உங்களுக்கு நூறு தான் இருக்கு. வெறும் வயித்துல எண்பது இருக்கு”
எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தேர்வில் இரவு பகலாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்தது போல் இந்த தேர்வில் வெற்றி பெற்ற சந்தோசம்.
ஆதி இப்பொழுது என்னைப் பார்த்த பார்வையில் பெருமிதம் இருந்தது.
“ஊசி தொடர்ந்து போட்டுக்கோங்க”
“வேணாம் மேம். கொஞ்சம் புட்லயே கண்ட்ரோல்லா இருக்கேன்”
“ஊசி போட்டு தான் குறைஞ்சிருக்கு. இந்த அளவே மெயிண்டைன் பண்ணா தான் பேபிக்கு நல்லது”
“நான் சாப்பாட்டுலயே பாத்துக்குறேன் மேம்”
“அப்புறம் உங்க இஷ்டம்”
“இதயத்துடிப்பு வளர்ச்சி எல்லாமே நல்லாருக்கு. இருபது வாரம் ஆயிடுச்சு. அஞ்சாவது மாச முடிவுல ஒரு ஸ்கேன் எடுக்கணும். நம்மை அத இருபத்தி மூணாவது வாரம் கூட பாத்துக்கலாம்”
காலண்டரில் தேதியைப் பார்த்தார்.
“மார்ச் 16 வாங்க”
இன்னும் இருபத்தி எட்டு நாட்கள் இருந்தன. அடுத்த செக் அப் ஒரு மாதம் கழித்து வந்தால் போதும் என்கிற நிம்மதி வந்தது.
“ஹிமோகுளோபின் பத்து இருக்கு. ஓகே தான் குறையாம இருக்கணும். இரும்பு சத்து மாத்திரை முழுங்குங்க.. பதினொன்னுக்கு மேல இருந்தா நல்லது”
“ஓகே மேம்”
“வெயிட் நார்மல்லா இருக்கு.. சேப் ஆ இருங்க.. நல்லா சாப்பிடுங்க.. அடுத்த செக் அப் கரெக்ட்டா டேட்ல வாங்க”
“கண்டிப்பா மேம்”
மகிழ்ச்சியோடு வெளியேறினோம்.
“எப்படியோ சொன்னதை செஞ்சிட்ட கவி”
“அதான் கவியினியாள்”
“இதை நீ கரெக்ட்டா மெயின்டைன்னும் பண்ணனும்”
“பண்ணிக்கலாம் ஆதி.. ஈசி தான்”
அம்மாவிடம் உடனே சொல்ல வேண்டும் போல் இருந்தது.
“அத்தை கீரை வாங்கிட்டு வரச் சொன்னாங்க கவி”
“அப்படியா.. வாங்கிக்கலாம்”
போகும் வழியில் கீரை வைத்திருந்த பாட்டிக் கடையில் நின்றோம். பத்து பதினைந்து வகை கீரைகள் வைத்திருந்தார்.
நேற்று தான் அம்மா பொன்னாங்கண்ணி கீரையும் பருப்பையும் கடைந்து இருந்தார். பாலக்கீரை சப்பாத்தியும் அன்று தான் சாப்பிட்டோம். மணத்தக்காளி என்று சேலத்தில் சொல்வார்கள் மிளகு தக்காளி என்று பள்ளிபாளையத்தில் சொல்வார்கள். முன்தினம் தான் அதில் முட்டை உடைத்து அம்மா சமைத்து இருந்தார்.
கொள்ளும் முருங்கை கீரையும் சேர்த்து சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். முருங்கை கீரை வாங்கிச் சென்றால் பக்கத்து வீட்டிலேயே மரம் இருக்கிறது அவர்களே கேட்டால் கொழுந்து கீரையாக உடைத்து தருவார்கள் ஏன் கடையில் வாங்கி வந்தாய் என்று அம்மா திட்டுவார். செங்கீரை கூட இருக்கிறது. பலதும் யோசித்து பின் சிறுகீரை இரண்டு கட்டு எடுத்தேன்.
“எவ்ளோ பாட்டி”
“பதினஞ்சு கண்ணு”
“என்னங்க.. பதினஞ்சு ரூபா குடுங்க”
பர்ஸில் தேடிய ஆதி விழித்தார்.
“ஜி பே நம்பி காசே எடுக்குறது இல்லை கவி இரு பாக்கறேன்”
பின் சில்லறைகளை பொருக்கி பத்து ரூபாயை நீட்டினார்.
“பாட்டி ஒரு கட்டு போதும். மறுபடியும் வாங்கிக்கிறேன்” என்று கூறிவிட்டு பத்து ரூபாய் பணத்தையும் ஒரு கட்டு கீரையையும் திருப்பிக் கொடுத்தேன். அப்பொழுது என் வயிற்றை பார்த்தார் பாட்டி.
“மாசமா இருக்கியா?”
அவர் இப்படி கேட்டதும் ஒரு நிமிடம் கிறங்கிப் போனேன்.
“ஆமா பாட்டி.. அஞ்சு மாசம்”
“மாசமா இருந்துட்டு பணம் குடுக்குறியே.. காசு வேணாம் ரெண்டு கட்டையும் எடுத்துட்டு போ”
“இல்லை வேணாம் பாட்டி இருக்கட்டும்”
“எடுத்துட்டு போ கண்ணு பரவால்ல” என்றவர் பணத்தையும் வாங்கவில்லை கீரையையும் திரும்பிப் பெறவில்லை.
என் வயிற்றை பார்த்தே நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை கண்டறிய தொடங்கி விட்டார்களா! இவருக்கு என் மேல் என்ன கருணை வயிற்றில் ஓர் உயிரைச் சுமக்கிறேன் என்பதால் இந்த பாசமா!
காசு பணம் தாண்டி அன்பைப் பெறக் கூடிய தகுதியுடையவளாக இருக்கிறேனா இப்பொழுது. நெகிழ்ச்சியாக இருந்தது. கீரையுடனும் நிறைந்த மனதுடனும் கிளம்பினோம்.
“அம்மா இன்னிக்கு ஒரு பாட்டி என் வயிறு பாத்துட்டே மாசமா இருக்கேன்னு கண்டுப்பிடிச்சிட்டாங்க.. அது மட்டும் இல்லை. கீரைக்கு காசும் வாங்கலம்மா”
“எனக்கே ஒரு வாரமா உன் வயிறு மேடா தெரிஞ்சது. கண்ணு வெக்கக் கூடாது. சொல்லக் கூடாதுன்னு சொல்லுவாங்க அதான் சொல்லல”
“வெயிட் போட்ட மாதிரி இருந்துச்சு. உங்ககிட்ட கேட்டா ஒன்னும் இல்லன்னு சொன்னிங்க.. யாருக்கும் தெரில நினைச்சேன். சந்தோசமா இருக்கு”
“இன்னும் நல்லா பெருசாகும் அஞ்சு மாசம் தான ஆயிருக்கு. இன்னும் அஞ்சு மாசம் இருக்கு”
என் குழந்தை முகத்தைப் பார்க்கப் போகும் பயணத்தில் பாதி கடல் தாண்டி விட்டேனா!
“சுகர் டெஸ்ட் என்னாச்சு”
“நல்லாருக்கு மா. சப்பாட்டுலயே கொறச்சிட்டேன்”
“சந்தோசம்”
“உனக்கு அதுக்குத்தான் சொன்னேன். ஒவ்வொருத்தரோட உடம்பும் அவங்களுக்கு தான் தெரியும். ஹாஸ்பிடல்ல ஒரு அளவு வெச்சிட்டு நம்மள நோயாளி ஆக்கிடுவாங்க”
“அதான் நான் ஆபரேஷன் பண்ணிக்கலல்ல”
“ஒழுங்கா சப்பட்றியா மா”
“நல்லாத்தான் சாப்பட்றேன். நல்லாருக்கேன் இனிமே நீ என்னை பத்தி யோசிக்காம வயித்துல வளர குழந்தைய பாரு”
“சரிம்மா”
“உன் அத்தைக்கு போன் பண்ணுடி.. மாப்பிளையோட அம்மாக்கு. வளையல் எப்போ போடலாம். நாங்க எதாவது சடங்கு பண்ணனுமான்னு கேட்டுக்குறேன்”
அம்மா என்ன கேட்கக் போகிறார்கள் அத்தை என்ன சொல்லப் போகிறார்கள் எனக்கு வளைகாப்பு எப்பொழுது செய்யப் போகிறார்கள் என்கிற கேள்விகளோடு அலைபேசியை எடுத்தேன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings