இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
யாராவது ஒருவர் உடன் இருந்து கேட்பதை பிடித்த மாதிரி சமைத்துக் கொடுத்து சாப்பிட வைத்து அழகு பார்த்தால் எப்படி இருக்கும். அம்மாவைத் தவிர வேறு யார் அதை சிறப்பாகச் செய்ய முடியும்.
அம்மாவை சில நாட்கள் என்னுடன் வந்து தங்க அழைத்தேன். அமுதினியும் அப்பாவும் ஊரிலே வேலை இருக்கிறது என்று வரவில்லை. அம்மா மட்டும் எனக்காக வந்தார்.
“பாவக்காய் குழம்பு சாப்பிட்டா சுகர் குறையும்” இப்படி அவருக்குத் தெரிந்த பல குறிப்புகளை சொன்னது மட்டும் இல்லாமல் செய்தும் கொடுத்தார். தினையரிசிகள், காய்கறிகள், கீரை வகைகளை செய்து கொடுத்தார்.
நானே இதையெல்லாம் செய்து சாப்பிடும் பொழுது எனக்கு அவ்வளவாக பிடிக்காதது இன்று அம்மா செய்து கொடுக்கும் பொழுது சாப்பிடப் பிடித்தது. சுவையும் வித்தியாசமாக இருந்தது. அதுதான் அம்மாவின் கைபக்குவமோ!
மூன்று வேளையும் இல்லை இப்பொழுது தான் நான்கு வேளையாக சாப்பிடுகிறேனே. நான்கு வேளைகளுக்கும் வித்தியாசமான ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுத்தார்.
இது ஒரு புறம் நன்றாக போக, அலுவலகத்தில் எது வேண்டும் எது வேண்டாம் என்பதை தைரியமாக சொல்லப் பழகிக் கொண்டேன்.
இனிப்புகளையோ, கேக் வகைகளையோ, விரைவு உணவுகளையோ சாப்பிடுவதைத் தவிர்த்தேன்.
“சுகர் லைட்டா இன்கிரீஸ் ஆகுது மதி, டாக்டர் சாப்பிட வேணாம் சொல்லிருக்காங்க”
“பொறிச்சது சாப்பிட்டா அலர்ஜி ஆகுது சார் எனக்கு வேணாமே”
இது போன்ற பதில்களை சொல்லப்பழகிக் கொண்டேன்.
இரண்டு வாரங்கள் எப்படியோ இதையெல்லாம் பின்பற்றினேன். மருத்துவமனைக்கு செல்லத் தயாரானேன்.
“ஆதி நாளைக்கு ஹாஸ்பிடல் போலாமா.. சுகர் செக் அப்க்கு பத்து நாள்ல வர சொன்னாங்க.. பதினாளு நாள் ஆச்சு”
“போலாம் எனக்கும் நாளைக்கு சனிக்கிழமை லீவு தான”
“நாளைக்கு போறிங்களா” நாங்கள் பேசுவதை கேட்ட அம்மா எங்களை கேட்டுக் கொண்டே சமையலறையில் இருந்து கூடத்திற்கு வந்தார்.
“ஆமாம்மா”
“நாளைக்கு கிராணம்.. நீ வெளியவே போகக்கூடாது”
“என்னம்மா சொல்ற.. அப்புறம் ஞாயித்துகிழமை ஹாஸ்பிடல் இருக்காது. திங்ககிழமை ஆபீஸ் போணும்”
“பரவால்ல.. என்னனாலும் நாளைக்கி நீ வெளியவே போகக் கூடாது. மாசமா இருக்க பொண்ணு கிராணத்தப்ப வெளிய போகுமா.. அதெல்லாம் குழந்தைய பாதிக்கும் கவி”
“அம்மா சொல்றது கேளு.. நான் சண்டே இருக்கானு கேக்கறேன்” என்றார் ஆதி
மருத்துவமனை எண்ணிற்கு அழைத்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி வரை மருத்துவர் இருப்பார் என்றனர். அதனால் நானும் ஒத்துக் கொண்டேன்.
ஏன் சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக் கூடாது? அதைப் பற்றி தேடினேன் படித்தேன்.
கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் சூரிய ஒளி படும்போது, கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர்.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதன் காரணமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கிரகணத்தால் பிறப்புக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றும் அறிவியல் கூறுகிறது. பொதுவாக சூரிய கிரகணத்தைக் கண்ணாடி இல்லாமல் யாருமே நேரடியாகக் கண்களால் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். கர்ப்பிணி பெண்கள் இன்னும் பாதுகாப்பாகத் தானே இருக்க வேண்டும்.
இயற்கை ஏதோ சொல்ல வருகிறது. அதை ஏன் ஆராய வேண்டும். மூன்று, நான்கு மணி நேரம் வீட்டிற்குள் அமைதியாக படுத்திருந்தால் என்ன கெட்டுவிடப் போகிறது.
குறிப்பிட்ட அந்த கிரகண நேரத்தில் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டேன். தண்ணீர் கூட குடிக்க வேண்டாம் என்றார் அம்மா.
ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உள்ளே போனேன். சிறிது நேரம் படித்து விட்டு தூங்கினேன். கிரகண நேரம் முடிந்தப் பின் அம்மா என்னைத் தலைக்கு குளித்துவிட்டு சாப்பிடச் சொன்னார்.
வீட்டையெல்லாம் சுத்தம் செய்து துடைத்துவிட்டு சமைத்தார். மூவரும் குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம்.
“நாளைக்கு என்ன சமைக்கிறது.. காலைல எத்தனை மணிக்கு ஹாஸ்பிடல்”
“அம்மா நாளைக்கு ஏழு மணிக்கு கிளம்பிடுவோம். குளுகோஸ் டெஸ்ட் தான் சொல்லிருக்காங்க. முடிச்சிட்டு வந்து வீட்லயே சாப்பட்றோம். ரெடி பண்ணி வை”
நானும் ஆதியும் ஞாயிற்றுகிழமை சீக்கிரமே எழுந்து மருத்துவமனைக்குச் சென்றோம்.
வெறும் வயிற்றில் முதலில் இரத்தம் எடுத்துக் கொண்டு பின் குளுகோஸ் குடித்து ஒன்றரை மணி நேரம் கழித்து எடுத்தார்கள். மருத்துவர் வருவதற்கு முன் எடை மற்றும் இரத்த அழுத்தம் பார்த்தார்கள். இன்னும் ஒரு கிலோ கூடியிருந்தேன்.
உணவு முறைகளை மாற்றியும் நல்ல வேளையாக எடை கூடித் தான் இருந்தது. என் இத்தனை வருட வாழ்வில் ஐம்பது கிலோவை இப்பொழுது தான் முதல் முறை கடந்துள்ளேன். குழந்தையோடு சேர்த்து ஐம்பது கிலோ ஆக வேண்டும் என்று இருந்தது போல.
சிறிது நேரத்தில் மருத்துவர் வந்தார்.
“குழந்தை எப்படி இருக்குன்னு பாத்தரலாம். உள்ள வாங்க”
வயிற்றில் கை வைத்து அளந்தார்.
“பத்தொன்பது வாரம் முடிஞ்சிருச்சி. குழந்தை வளர்ச்சியும் கரெக்ட்டா இருக்கு”
இதயத்துடிப்பு மானியை வைத்து குழந்தையின் இதயத்துடிப்பையும் என் இதயத்துடிப்பையும் சரிபார்த்தார்.
“ஹார்ட் பீட் நல்லாருக்கு”
கையிலேயே குழந்தையின் வளர்ச்சி பார்த்துவிட்டாரே. பரவாயில்லை. இந்த முறை ஸ்கேன் இல்லாமலே பரிசோதித்து விட்டார்.
“உள்ள வாங்க.. சுகர் ரிப்போர்ட் பாத்தரலாம்”
நான் படுக்கையில் இருந்து எழுந்து உள்ளே நடந்தேன். ஆதியையும் அழைத்து வரச் சொன்னார்கள்.
சரியாக இருந்த இதயத்துடிப்பு, சுகரின் நிலை எப்படி இருக்குமோ என்றென்னி அதிகமாகி படபடத்தது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings