இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சனிக்கிழமை காலை ஏழு மணி.
எழுந்து குளித்து தயாராகி நின்றேன். காலை உணவிற்கு இட்லியும் கொஞ்சம் கொத்தமல்லி சட்னியும் செய்தேன். ஆதிக்கு ஹாட்பாக்ஸ்சில் எடுத்து வைத்து விட்டு எனக்கும் நான்கு இட்லியை டப்பாவில் போட்டுக் கொண்டேன்.
ஆதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவர் அருகே சென்றேன். சொல்லாமல் எப்படி செல்வது. தட்டி எழுப்பினேன்.
“ஏங்க.. நான் ஹாஸ்பிடல் கிளம்பறேன்.. அங்க எல்லாம் பாத்துட்டு கால் பண்றேன்”
ஒரு நேரம் என்னங்க.. ஒரு நேரம் ஆதி.. ஒரு நேரம் என்னடா.. எப்படியெல்லாம் என் கணவரை அழைக்கிறேன். காதலிக்கும் பொழுது உரிமையோடு தான் கூப்பிட்டேன். திருமணத்திற்குப் பின் உறவினர்களுக்காக மரியாதையாக கூப்பிட ஆரம்பித்தேன். இப்பொழுது எல்லாம் கலந்து கூப்பிடுகிறேன். எந்த சமயத்தில் எப்படி கூப்பிடத் தோன்றுகிறதோ அப்படி!
“என்ன கவி.. ரெடி ஆகிட்டியா.. என்னை எழுப்பிருக்கலாம்ல”
“பரவால்ல.. நைட் ரொம்ப நேரம் முழிச்சிருந்து ஒர்க் பண்ணல்ல.. தூங்கு ஆதி நான் பாத்துட்டு கால் பண்றேன்”
“எப்படி போவ”
“பஸ்ல.. இல்லனா ஆட்டோ எதாவது ஏறிக்கிறேன்”
“பாத்துப் போ.. எதாவதுன்னா கூப்புடு”
வெகு நேரம் நின்றும் பேருந்து கிடைக்காததால் ஆட்டோவில் கிளம்பினேன்.
இன்று குளுக்கோஸ் டெஸ்ட் எடுக்க மருத்துவனைக்கு வரச் சொன்னார்கள்.
வெறும் வயிற்றில் எடுத்துவிட்டு பின் குளுக்கோஸ் குடித்து எடுக்க வேண்டுமாம். பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டுவிட்டு அதற்கு பின் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சோதனையாம்.
அடுத்து முறையில் இருந்து குளுக்கோஸ் குடித்து அல்லது உணவிற்கு பின் எதாவது ஒரு முறையில் மட்டும் சக்கரை பரிசோதிக்கப் படுமாம். இந்த முறை இரண்டுமே பார்ப்பார்கலாம்.
நேற்று இரவு அத்தையும் மாமாவும் சேலம் கிளம்பி விட்டார்கள். அங்கே வேலை இருக்கிறது என்றார்கள். எனக்கும் வார விடுமுறை என்பதால் நானே வேலைகளை சமாளித்துக் கொள்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தேன்.
சமையல் செய்வது கூட இப்பொழுது சுலபமாக இருக்கிறது. பாத்திரம் கழுவது தான் கஷ்டம். ஆதி அதை பார்த்துக் கொள்வார். நாங்கள் இருவர் மட்டும் இருந்தால் இந்த மாதிரி உதவிகளை முன் வந்து செய்வார்.
ஆனால் எப்படித்தான் பெற்றோர் உதவி இல்லாமல் வாழ்கிறார்களோ. அதுவும் கர்ப்ப காலத்தில் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ.
ஆட்டோ மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. இதற்கு போய் எதற்கு ஆதியை தொந்தரவு செய்ய வேண்டும். கர்ப்பத்திற்கு முன்பும் என் வேலைகளை நானே செய்து கொள்வேன். பக்கத்தில் செல்ல வேண்டுமென்றால் முடிந்தவரை நானே செல்வேன்.
எதற்காக இவ்வளவு நேரம் ஆதியும் காத்திருக்க வேண்டும். அவருக்கும் வேலை இருந்தது சரியாக தூங்கவே இல்லை. வேண்டுமென்றால் அழைத்துக் கொள்ளலாம்.
“டீ, காபி எதாவது குடிச்சிருக்கிங்களா” இரத்தப் பரிசோதனை எடுக்க இருந்தவர் கேட்டார்.
“இல்லை.. தண்ணி மட்டும் குடிச்சிருக்கேன்”
“அது பரவால்ல”
சோதனைக்காக இரத்தம் எடுத்தனர். இந்த முறை கத்தவோ முகம் சுளிக்கவோ இல்லை. ஏற்கனவே எடுத்த தைரியம் ஒரு காரணம், யாரும் இல்லாமல் தனியாக இருந்த தைரியம் ஒரு காரணம்.
இரத்தம் எடுத்து முடித்ததும் இருநூறு மில்லி அளவுள்ள தண்ணீரில் குளுக்கோஸ் கலந்து குடிக்கச் சொன்னார்கள். கடகடவென குடித்து முடித்தேன்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து வரச் சொன்னார்கள். அதுவரை தண்ணீர் கூட குடிக்க வேண்டாம் என்றார்கள்.
ஒரு மணி நேரத்தை கடப்பது சற்று கடினமாகத் தான் இருந்தது. வீட்டிற்கு சென்று வந்தால் கூட நேரம் போகும் எதற்கு பாப்பாவை சுமந்து கொண்டு அலைச்சல் இங்கேயே இருக்கலாம்.
திறன்பேசியில் கதைகள் படித்துக் கொண்டிருந்தேன். புத்தகம் கூட கொண்டு வந்திருக்கலாம். புதக்கத்தை தொட்டு படிக்கும் இன்பம் திறன்பேசியில் கிடைக்குமா. புத்தகமாக இல்லாத கட்டுரைகள் கதைகளை வேண்டுமானால் திறன்பேசியில் படித்துக் கொள்ளலாம்.
மருத்துவமனையும் வெறிச்சோடி இருந்தது. வெளி நோயாளிகள் யாரும் இன்னும் வரத் தொடங்கவில்லை.
ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் இரத்தம் எடுத்தனர்.
“போய் சாப்டுட்டு வந்துடுங்க.. சாப்பிட்டு முடிச்சிட்டு சரியா ஒரு மணி நேரம் கழிச்சி வாங்க.. அடுத்த டெஸ்ட் எடுத்தரலாம்”
சாப்பிடுவதற்கு ஒரு அறையையும் ஒதுக்கினார்கள்.
பிரசவத்திற்கு பின் தங்கும் அறை. மேல் மாடியில் அறைகள் இருந்தாலும் அவசரத்திற்கு இங்கும் பயன்படுத்தி கொள்வார்கள் போலத் தெரிந்தது. ஒருவர் படுக்கும் படுக்கைக்கு அருகில் தொட்டில் ஒன்றும் இருந்தது. தொட்டிலை ஆசையாக பார்த்தேன்.
இட்லி சூடாறி இருந்தது. கொத்தமல்லி சட்னியில் காரம் அதிகம் உப்பு குறைவு. ருசி பார்க்காமல் அரைத்தேன். சுமாராக இருந்தது. அதனாலா இல்லை மருந்து நெடி வீசும் அறையில் இருப்பதாலா இல்லை குளுக்கோஸ் குடித்ததாலா தெரியவில்லை இரண்டு இட்லிக்கு மேல் உண்ண முடியவில்லை. கஷ்டப்பட்டு மூன்று இட்லியை உண்டு முடித்தேன்.
அவர் என்ன செய்கிறார். எழுந்து சாப்பிட்டாரா தெரியவில்லையே. திட்டிக் கொண்டே சாப்பிடப் போகிறார். ஆதியை மனதில் நினைத்துக் கொண்டிருந்த நொடியில் திறன்பேசி சிணுங்கியது.
“இப்போதான் உன்னை நினைச்சேன்.. கூப்பட்ற”
“டெஸ்ட் எடுத்தாச்சா” இன்னும் தூக்க கலக்கத்தில் இருந்தது ஆதியின் குரல்.
“குளுக்கோஸ் டெஸ்ட் முடிஞ்சது. இப்போதான் சாப்ட்டேன். ஒன் ஹவர் அப்புறம் இன்னொரு டெஸ்ட் இருக்கு”
“கொஞ்ச நேரத்துல வரேன்”
“ரெடி ஆய்ட்டு சாப்டுட்டே வா.. இட்லி ஊத்தி வெச்சிருக்கேன்”
“ம்ம்”
இப்பொழுது திரைப்படம் பார்க்க காதில் ஹெட்செட்டை சொருகினேன்.
ஒரு மணி நேரத்திற்குப் பின் இன்னொரு முறை இரத்தம் எடுக்கப்பட்டது. உடல் சோர்வானது போல் இருந்தது.
“ரிப்போர்ட் எப்போ கிடைக்கும்”
“கொஞ்ச நேரத்துல வந்துடும். பத்து மணிக்கு டாக்டர் வந்துடுவாங்க பாத்துட்டே போய்டுங்க”
மருத்துவமனைக்குள் கூட்டம் வரத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஆதியும் வந்தார்.
“டாக்டர் பத்து மணிக்கு வந்துடுவாங்கலாம்.. பாத்துட்டே போய்டலாம் ஆதி”
“ஓகே கவி.. மரபணு சோதனை ரிப்போர்ட்டும் கேக்கணும். பாத்துட்டே போய்டலாம்”
காத்திருந்தோம். அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிட்டாரா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன்.
என்னுடைய பிபி மற்றும் உடல் எடையை சரிபார்த்தனர். இரண்டு கிலோ ஏறியிருந்தேன். பொங்கலில் வீட்டில் இருந்து நன்கு சாப்பிட்டது எடையை கூட்டத் தொடங்கியுள்ளது. வாந்தி இருந்ததில் இதுவரை எடை ஏறவில்லை. இனி ஏறட்டும்.
பதினோரு மணிக்கு எங்களை உள்ளே அழைத்தனர்.
“மரபணு சோதனை உங்களுக்கு லோ ரிஸ்க் தான் வந்துருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” சிரித்த முகத்தோடு பேச ஆரம்பித்தார் மருத்துவர்.
“வெயிட்டும் பரவால்ல.. சுகர் தான் உங்களுக்கு மைல்டா இருக்கு” மருத்துவர் இப்படி கூறியதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
“மூணு மாசம் ஆவெரேஜ் சுகர் பாத்தது உங்களுக்கு 5.6 இருக்கு. அதான் பார்டர்.. குளுகோஸ் குடிச்சு எடுத்ததுல உங்களுக்கு 180 இருக்கு.. நீங்க இன்சுலின் தான் போட்ற மாதிரி வரும். பேபி இருக்கனால மாத்திரை சாப்டா பேபிய அபக்ட் பண்ணும்”
“என்னது இன்சுலின் ஊசி போடணுமா!!!” அதிர்ச்சியில் நான்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings