இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்ன கவி ஏன் இப்போ அழற” அறைக்குள் வந்த ஆதி என்னைப் பார்த்துக் கேட்டார்.
அவர் கேட்ட நொடியில் அவரைப் பிடித்துக் கொண்டு அழுதேன். மனதில் இருந்ததை எல்லாம் புலம்பித் தள்ளினேன்.
சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் என் கையைப் பிடித்துக் கொண்டு அமைதியாகக் கேட்டார்.
“ஒன்னும் இல்லை கவி.. சரியாயிடும்” என்றவர் தோளில் சாய்ந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.
“தூங்கு.. காலைல பேசிக்கலாம்.. மாத்திரைலாம் சாப்பிட்டியா”
“எனக்கு எதுவும் வேணாம்”
“சரி வேணாம் விடு.. நீ தூங்கு” ஆதி பேசும் வார்த்தைகளில் ஈரம் இருந்தது. ஏனோ தெரியவில்லை அவர் என்னருகில் இப்படி அமர்ந்து பேசிய சில நிமிடங்களிலேயே என் மனபாரம் சற்று இறங்கியது.
பின் சிறிது நேரத்திலேயே உறங்கிப் போனேன். நல்ல உறக்கும் நடுவில் ஆசையக் கூட வில்லை. விடிந்து தான் எழுந்தேன். தூக்கம் என் மன எண்ணங்களை மாற்றி இருந்தது. அமைதிப்படுத்தி இருந்தது.
“அப்போவே தூங்கிட்டனா” காலையில் எனக்கு முன் எழுந்து அமர்ந்திருந்த ஆதியை கேட்டேன்.
“ஆமா கவியினியாள்”
“நான் அவ்ளோ பொலம்புனேன் நீங்க எதுமே சொல்லல”
“எனக்குத் தெரிஞ்சது.. உன் மூட் சரியில்லைன்னு அதான் நீ பேசுறப்ப நான் கூடக் கூடப் பேசல.. அப்புறம் அது வாக்குவாதம் ஆயிடும்”
“தேங்க் யூ ஆதி”
“நான் ரொம்ப ராவ்டி பண்றேன்ல..”
“ஹாஹா.. எனக்கு புரிது கவி.. இந்த டைம்ல உனக்கு ஹோர்மோன் செக்ரீஷன் அதிகமா இருக்கும். அதோட எஃபெக்ட் தான். நார்மலா ஒரு மடங்கு இருக்கிற விஷயம் திடிர்னு பல மடங்கு ஆனா அதை உன் உடம்பு ஏத்துக்கணும்ல”
ஆதியும் இதையெல்லாம் அறிந்திருக்கிறார். பரவாயில்லை மகிழ்ச்சி தான்.
அன்றைய மாலைப் பொழுதிலும் வீட்டிற்கு வந்ததும் நேற்று போலவே தலை வலி கோவம் சோர்வு வெறுப்பு எல்லாம் தொற்றிக் கொண்டது. ஆதியிடம் சென்று என் மனநிலையை கூறினேன்.
“ராதா இப்போ ஏழு மாசம் எதாவது படிக்க புக் இருந்தா உன்னை கேட்டா.. நீ இப்போ ப்ரீனா அவளுக்கு கால் பண்ணி பேசு”
அப்பொழுது தான் எனக்கும் உரைத்தது. நாமும் புத்தகம் படித்துக் கொண்டு தானே இருந்தோம். ஏன் இப்பொழுது படிப்பதில்லை. ஒருவேளை புத்தகங்கள் படித்தால் மனம் அமைதியடையும் நல்ல சிந்தனைகள் பெரும்.
பெரியம்மா பையன் செல்வாவின் மனைவி தான் ராதா. எல்லோரும் சம வயதினர் தான். ஆதிக்கு என் அண்ணன் செல்வா கல்லூரி நண்பன்.
ராதா என் அழைப்பை எடுக்காததால் செல்வாவை அலைபேசியில் அழைத்தேன்.
“டேய் எப்படி இருக்க”
“நான் நல்லாருக்கேன்.. நீ எப்படி இருக்க கவியினியாள்”
“நல்லா இருக்கேன். ராதா எப்படி இருக்கா”
“நல்லா இருக்கா.. தூங்குற.. கை கால் வலியா இருக்குனு சொன்னா”
“என்னாச்சு”
“அப்பப்ப எதாவது சொல்லுவா.. வயிறு பெருசாகுதுல முதுகு வலிக்கும்பா.. இன்னிக்கு கை கால் ஒரு மாதிரி இருக்குனு குளிச்சா.. அப்படியே தூங்கிட்டா”
“எழுந்ததும் சொல்லு.. அவகிட்ட பேசுறேன்”
“கூப்பிட சொல்றேன். மருமகள் என்ன சொல்றா.. மூவ்மென்ட் தெரியுதா”
“அவ அம்மாவ ராவ்டி பண்றா.. மூவ்மென்ட் இன்னும் தெரிய ஆரம்பிக்கல.. வயிறும் பெருசா தெரில”
“தெரியும் தெரியும்.. நாலு மாசம் தான.. அஞ்சுக்கு மேல தெரியும்”
“சரி டா.. எனக்கும் ஆசையா இருக்கு.. பாப்பா வளர்றத பாக்க”
“நாள்லாம் சீக்கிரம் போய்டும்.. அப்புறம் ராதாக்கு புக் வாங்கலான்னு இருக்கேன்.. லவ் இல்லாத ஹார்ரர் இல்லாத க்ரைம் இல்லாத ஒரு குட் வைப் புக் சொல்லேன்”
“ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” அவன் கேட்டதும் சட்டென்று நினைவிற்கு வந்தது.
“யாருது”
“ஜெயகாந்தன் எழுதுனது. எனக்கு பிடிச்ச புத்தகம்”
“அப்படியா.. என்ன கதை”
“ஹென்றின்னு ஒருத்தர் தன் சொந்த கிராமத்துக்கு திரும்பி வர்ராரு அப்படித்தான் கதை போகும்.. ஆனா அது போற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ‘எப்பவும் சந்தோசமாக இருக்கணும்னா நாம்ப மனசார சின்ன குழந்தையா இருக்கணும்னு தெரியுது. சின்ன பசங்களா இருந்தப்போ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எவ்வளவு ஆச்சர்யமா இருந்துச்சு’ அப்படினு வரும். ரொம்ப ரசிக்க வைக்கிற கதை தான். கதைல ஹென்றி ரொம்ப நல்ல குணம் பரந்த மனசு யாருமேலயும் கோவம் வெறுப்பு காட்டாத கதை. நிறைய இடத்துல வியக்க வைக்கும்”
“சொல்லும்போதே சுவாரஸ்யமா இருக்கே”
“உங்களுக்கு நான் ஏதோ பழமைவாதம் பேசுவது போல் இருக்கும். நீங்கள் சொல்லுங்கள் அதோ அந்த அகல் விளக்கு அழகாயில்லை? வெளிச்சத்துக்கு அது போதாது? சரி, உங்களுக்கு ஒருவேளை அது அழகாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் செய்கிற வேலைக்கு அந்த வெளிச்சம் போதமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு அது போதும் அதுதான் வேண்டும். இந்த உலகம் பூராவும் யந்திரங்களும், மின்சார வெளிச்சமுமாய் கோலாகலப் படட்டும். என் வீட்டில் எனக்கு இந்த வெளிச்சமும் இந்த அமைதியும் நிலவட்டும் உதாரணத்திற்குச் சொல்கிறேன் என்பார் ஹென்றி.. செல்வா எவ்வளவு தெளிவான சிந்தனை இது.. இத படிச்சிட்டு எனக்கு கண்ல இருந்து தண்ணியே வந்துடுச்சு.. அவ்ளோ புரிதல்”
“நீ சொல்லும்போது எனக்கே ஒரு மாதிரி இருக்கு.. சிலுக்குது”
“நல்ல புக்.. வாங்கிக் கொடு..”
“வேறென்ன இருக்கு இப்படி”
செல்வா இப்படி கேட்டதும் நானும் யோசித்தேன். ஒரு கர்ப்பமாக இருக்கும் பெண் படிப்பதற்கு என்ன புத்தங்கள் இருக்கின்றன?
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings