in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 24) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘அதெப்படி அவ்வளவு சந்தோசமாக இருந்த மனம் இன்று இவ்வளவு வருத்தமாகவும் கோவமாகவும் இருக்கிறது’ எனக்குள் நானே புலம்பினேன்.

போன வாரம் முழுவதும் சொந்தங்கள் சூழ பண்டிகையின் மகிழ்ச்சியில் திளைத்தேன்.

மீண்டும் இன்று காலையில் வேலைக்காக ஈரோடு வந்துவிட்டோம்.

அத்தை மாமாவும் உடன் வந்திருக்கிறார்கள். மாமா ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு வாரம் இங்கே இருந்துவிட்டு போவதாகக் கூறினார்கள்.

காலையில் ஊருக்குக் கிளம்பவே பிடிக்கவில்லை. பள்ளி செல்லும் மாணவி விடுமுறை முடிந்து செல்லும் திங்கட்கிழமை காலையைப் போல் அவ்வளவு வெறுப்பாக இருந்தது.

அலுவலகத்திலும் வேலை அதிகம். தலை வலியாக இருந்தது. தலை பாரமும் இன்னும் குறையவில்லை.

இரவு உணவும் சாப்பிட பிடிக்கவில்லை. உப்பும் காரமும் கம்மியாக போடச் சொல்லி பலமுறை என் அத்தையிடம் சொல்லியிருக்கேன். என் அம்மா வீட்டு உணவில் உப்பும் காரமும் இருப்பதே தெரியாது. அப்பொழுது தானே உணவின் மற்ற சுவை மேலோங்கி தெரியும்.

இன்று குழம்பு வாயில் பட்டதும் உப்பு கரித்தது. விழுங்கும் பொழுது காரம் தாங்க முடியவில்லை. ஒரு தோசையோடு எழுந்து விட்டேன். எனக்காக என்னுடன் வந்து சமைத்துக் கொடுத்து பார்த்துக் கொள்கிறார் தான், அதற்காக பிடிக்காமல் எப்படி உண்பது. எழுந்து சென்றேன்.

பின் எதாவது வேலை செய்ய எண்ணி பாத்திரம் கழுவ சமையல் அறைக்குப் போனேன். பாத்திரத்தில் ஒட்டியிருந்த மீதமான உணவுகள் பழைய குழம்பின் நெடி தண்ணீர் போகாமல் ஓட்டையை அடைத்திருந்த தக்காளி கருவேப்பிலை சக்கைகள் டீ வைக்கும் பாத்திரத்தில் ஒட்டியிருந்த டீத்தூள் இவையெல்லாம் பார்த்து குமட்டிக் கொண்டு வந்தது.

பத்து நாட்களாக குமட்டல் இல்லாததால் குமட்டல் நின்று விட்டதென நினைத்தேன். இன்று மீண்டும் சோர்வு குமட்டல் தலை வலி.

யாரிடமும் பேசக் கூட பிடிக்கவில்லை. எல்லோர் மேலும் கோபம் வந்தது.

ஆதி என்ன செய்கிறார் என்று எட்டிப் பார்த்தேன். மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நான் என்ன செய்கிறேன் சாப்பிட்டேனா எதையும் கண்டுகொள்ளாமல் கணினியையேப் பார்த்துக் கொண்டிருப்பார். கேட்டால் வேலை என்பார்.

இரண்டு முறை சாப்பிட அழைத்தும் வரவில்லை. அதையும் மீறி கூப்பிட்டால் கோவப்படுவார். ஏன் தான் இப்பொழுதெல்லாம் அடிக்கடி சண்டை போடுகிறார் கோவப்படுகிறாரோ.

நேற்று நண்பர்களோடு என்னை வெளியே அழைத்துச் சென்றார். ஒரு பெரிய உணவகம் ஒன்றில் உணவருந்தினோம்.

ஏழு பேர் சென்றிருந்தோம். அசைவம் அது இதுவென என்னென்னவோ சாப்பிட்டார்கள். நான் ஒரு சூப்பும் பன்னீர் ரைஸ் மட்டும் வாங்கினேன். வெளியில் அசைவம் சாப்பிட பிடிக்காததால்.

பன்னீரை அவ்வளவு மோசமாக நான் சாப்பிட்டதே இல்லை. மசாலாவில் பிரச்சனையா வறுத்த விதத்தில் பிரச்சனையா தெரியவில்லை. வாயில் வைத்து சிரமப்பட்டு விழுங்கினேன். சூப்பில் இருந்த காய்கறியின் சுவையும் நன்றாக இல்லை.

ஒருவேளை பழையதை கொடுத்திருப்பார்களோ.. கெட்டுப் போன பன்னீராக இருக்குமோ..

பாதி கூட சாப்பிடவில்லை. உண்ணும் பொழுதே சரியாகத் தோன்றவில்லை அதனால் பாதியிலேயே நிறுத்தி விட்டேன்.

அது கூட சாப்பிட்டிருக்கக் கூடாது. உணவகத்தை நம்பி பணம் கொடுத்து சாப்பிடச் சென்றால் உணவகங்கள் இப்படி செய்கிறார்களே இது என்ன நியாயம். காசு கொடுத்து பிரச்சனைகளை வாங்கும் கதையாக இருக்கிறதே.

ஒரு நாள் முடிந்து ஜீரணமே ஆகி விட்டது இன்னும் ஏன் நான் அதை யோசிக்கிறேன். மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒருவரின் உடல்நிலையை கெடுக்க எப்படி அவர்களுக்கு மனம் வருகிறது. கெட்டுப் போனதை சுகாதாரம் இல்லாமல் சமைத்ததை தந்து உயிரோடு விளையாடுகிறார்களே.. கடவுள் அவர்களை சும்மா விடுவார்களா.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் ஒரு மனிதாபிமானம் கூடவா இல்லை.

நினைக்க நினைக்க வருத்தமும் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் வந்தது. இந்த உலகை என் வயிற்றில் வளரும் குழந்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ.

தேவையற்ற பதட்டம் வந்தது. எதற்கு இவ்வளவு வருந்த வேண்டும் இதுவும் குழந்தையை பாதிக்குமே. உடனே எண்ணங்களை மாற்றி ஆசுவாசப்படுத்த முயன்றேன்.

திரைப்படம் பார்க்கலாமா?

என்ன திரைப்படம் பார்ப்பது. அடிதடி சண்டை இல்லையென்றால் பேய் படம் இல்லையென்றால் சோகப் படமாகத்தான் வருகிறது புதுப்படங்கள்.

நல்ல கலகலப்பான புதுப்படம் வருகிறதா.. குடும்ப கதை காதல் கதை கொண்ட நெகிழும் பாடங்கள் வருகிறதா.. அப்படி எதுவும் தெரியவில்லை. தேவையில்லாமல் கதை தெரியாத படம் பார்த்து மனதை இன்னும் வருத்திக் கொள்ள வேண்டாம்.

பழைய படம் அல்லது காமெடி காட்சிகள் பார்க்கலாமா என எண்ணி திறன்பேசியிலே காமெடி காட்சிகள் போட்டேன்.

நான் கர்ப்பமாக இருப்பது திறன்பேசிக்கு எப்படி தெரியுமோ அது சம்மந்தப்பட்ட வீடியோக்களை பரிந்துரை செய்து கொண்டே இருக்கும்.

‘குழந்தை ஆரோக்கியமாக பிறக்கணுமா இத செஞ்சாலே போதும்’ என்றொரு வீடியோ இருந்தது. அதை ஓடவிட்டேன்.

‘ஸ்ட்ரெஸ் இல்லாமல் பாசிட்டிவிட்டியுடன் இருந்தால் தான் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்’ என்பதை மையமாகக் கொண்டு பல கருத்துகள் சொன்னார்கள்.

ஹார்மோனல் மாற்றங்களால் தான் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்றும் கூறினார்கள்.

எல்லாம் சரி தான் ஆனால் என்னால் தான் இப்பொழுது இருக்கும் மனஅழுத்தத்தை விட்டு வெளி வர முடியவில்லை. விடியோவை பார்க்க பார்க்க இன்னும் அழுத்தம் ஏற்பட்டது. எங்கே என் குழந்தையின் ஆரோக்கியத்தை இது பாதித்து விடுமோ என்று.

திறன்பேசியை அணைத்துவிட்டு தூக்கி எறிந்தேன்.

அம்மா வயிற்றில் நான் இருந்தபொழுது இவ்வளவு மனஅழுத்தம் சோர்வு இருந்திருக்குமா.. இருக்காது. அந்த காலத்துச் சூழல் இந்த அளவிற்கு கடினமாக இருந்திருக்காது.

ப்ரக்னென்சி மூட் ஸ்விங் என்றால் என்ன என்று கூட அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பின் ஏன் இப்பொழுது மட்டும் இப்படி. கோவமும் அழுகையும் மேல் ஓங்கியது. 

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தேம்பினேன்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 23) – ரேவதி பாலாஜி

    தீம் தரிகிட பாரதி மகள்கள் (அத்தியாயம் 4) – பாரதியின் பைத்தியம்