இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குறள் : 66
சிறு பிள்ளை தனமாய் பிறந்தநாள் பரிசை எதிர்பார்த்தது மனம். ஆதி பிறந்தநாளிற்கு சர்ப்ரைஸ் தருவதை பெரிதாக விரும்பமாட்டார். எதார்த்தமானவர்.
திருமணம் ஆன புதிதில் வந்த முதல் பிறந்தநாளிற்கு புடவை எடுத்துக் கொடுத்தார். அதுவும் என்னை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று எனக்குப் பிடித்ததை வாங்கித் தந்தார்.
“நீங்களா பார்த்து வாங்கிட்டு வரலாம்ல ஆதி.. “
“அப்புறம் பிடிக்கலைன்னா என்ன பண்றது”
“நீ எது வாங்கிக் குடுத்தாலும் பிடிக்கும். கிப்ட்டா தரும்போது எப்படி குறை சொல்றது” என்றேன் அவரிடம் இருந்தும் அவர் அதற்குப் பின் எதுவும் வாங்கித் தரவில்லை.
காதலிக்கும் பொழுது நான் கேட்டேன் என்பதற்காக காதல் கடிதம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதுதான் எனக்கு அவர் தந்த சர்ப்ரைஸ்.
காலை உணவை முடித்து விட்டு அத்தை வீட்டிற்கு கிளம்பினோம்.
உள்ளூரிலேயே இருந்து கொண்டு பொங்கல் அதுவுமாக அவர்களை பார்க்கா விட்டால் எப்படி.
மதிய உணவிற்கு அங்கே வரச் சொல்லியிருந்தார்.
நாங்கள் செல்லும்பொழுது உணவு தயாராக இருந்தது. அத்தை மாமா காலில் விழுந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டு சாப்பிட அமர்ந்தோம்.
மூன்று பொரியல் வகைகளை செய்து அசத்தி இருந்தார் அத்தை. உண்ட களைப்பில் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி மாடிக்குச் சென்றேன்.
நான் அறைக்குச் செல்வதைப் பார்த்த ஆதி என் பின்னே வந்தார்.
அறை கதவை திறக்க முயலும் பொழுது என் கண்களை ஓடி வந்து மூடினார்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
குறள் : 64
கண்களை திறந்து பார்த்ததும் மெய்சிலிர்த்து விட்டது. திறந்த கண்களில் இருந்து நீர் துளி வழியத் தொடங்கியது.
பால் வடியும் முகம் அதில் அழகான கண் சிவந்த உதடுகள் சிரித்த கண்ணங்கள் குட்டி குட்டி விரல்கள். எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் இப்படித்தான் இருக்குமா!
அறை முழுவதும் குழந்தைகளின் புகைப்படங்கள். சித்தி கர்ப்பமாக இருக்கும் பொழுது சித்தப்பா பேபி வால்பேப்பர் என்று கடையில் கேட்டு வாங்கி ஒட்டினார். அப்படி ஆதியும் இன்று எனக்காக ஒட்டியிருக்கிறாரா..
சுவரெங்கும் குழந்தைகளின் புகைப்படங்கள். தவழ்வது போல படுத்திருப்பது போல மண்டியிட்டு இருப்பது போல அம்மாவுடன் இருப்பது போல என பலவகையான குழந்தைகளின் படங்கள் நடுவில் எங்கள் இருவரின் குழந்தை முகம் சின்னதாக ஒட்டியிருந்தார். அம்மாவிடம் இருந்து என் புகைப்படம் வாங்கி இருப்பார்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
குறள் : 61
அதோடு சேர்த்து ஆங்காங்கே திருக்குறளை அட்டையில் எழுதி ஒட்டியிருந்தார். எல்லாமும் குழந்தை செல்வங்களை பற்றிய குறள்கள். மொத்தம் ஐந்து குறள்கள் இருந்தன.
எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து வியந்து கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து ஆதியும் ஆனந்தம் அடைந்தார்.
“ஹாப்பி யா?”
“ரொம்ப சந்தோசம் ஆதி.. நீ இப்படி பண்ணுவன்னு நினைக்கல”
“மாசமானதும் சொன்னாங்க.. குழந்தைங்க போட்டோ வாங்கி வீட்ல ஓட்டுங்கனு.. சரியான நேரம் வர்ல.. அதான் உன் பர்த்டேக்கு ஒட்டுனா நீ சந்தோசமாவ அதான்.. எனக்கே இதெல்லாம் பண்ண காமெடியா இருந்தது. நம்ம பாப்பாக்காக”
“ஓ.. பாப்பாக்கு தான் இவ்ளோ மெனக்கெட்டு செஞ்சியா”
“பாப்பாக்காகவும் பாப்பா ஓட அம்மாக்காகவும்”
“அது யாரு ரெண்டு குட்டீஸ்”
“அவங்க தான் பாப்பா ஓட அம்மா அப்பா.. பாப்பா வயசுல அவங்க இருக்கும் போது எடுத்தது”
சிரித்துக் கொண்டே அதன் அருகே சென்று ஆதியின் புகைப்படத்தை திறன்பேசியில் படம் எடுத்துக் கொண்டேன்.
அழகாக இருந்தார். அவர் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. திறன்பேசியின் முகப்பில் அவர் முகத்தை வைத்தேன்.
இவர் போலவே என் குழந்தை இருக்குமா.. குட்டி ஆதியை எப்பொழுது பார்க்கப் போகிறேன்.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
குறள் : 67
“இந்த குறள் நம்ம ஸ்கூல்ல படிச்ச மாதிரி இருக்கு”
“ஆமா.. தந்தை மகற்காற்றும் நன்றி மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி என்னன்னு கேள்விலாம் இருக்கும். மக்கட்பேறு அதிகாரம் எல்லாமே குழந்தை பத்தி தான். ஒரு இன்ஸ்டா பேஜ்ல இந்த குறள்லாம் படிச்சேன். ரொம்ப பிடிச்சது. உனக்கும் பிடிக்கும்னு ஒட்டுனேன்”
“எல்லாமே நல்லாருக்கு.. அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை”
“ஆமா கவி.. ஒவ்வொரு குறளோட அர்த்தத்தை உணரும் போது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு.. அப்பா ஆகப்போற இந்த சமயத்துல இதெல்லாம் பாக்கும்போது எனக்கே இவ்ளோ சந்தோசம்னா நீ எப்படி உணரன்னு பாக்க தான் போட்டோவோட சேர்த்து திருக்குறளும் ஒட்டுனேன்”
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
குறள் :69
“தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள். எனக்கு ஈன்ற பொழுது எப்படி இருக்கும்னு தெரில.. அதை விட இப்போ நான் சந்தோசமா இருக்கேன்”
“நீ ஹாப்பினா.. என் மகனும் ஹாப்பி”
“மகனா.. எனக்கு பொண்ணு தான் வேணும்”
“பையன் வேணும்னு சொன்ன?”
“அன்னிக்கு எங்க அப்பா அம்மாக்காக பையன் வேணும் தோணிச்சு.. ஆனா பொண்ணுனா நல்லாருக்கும் தோணுது.. அம்மா பொண்ணு உறவு எப்படி இருக்கும் எனக்கும் என் அம்மாக்கும் இருந்த மாதிரி இருக்குமா.. இல்ல எப்படி இருக்கும்னு அனுபவிக்கனும்”
“அதுக்குள்ள மனசு மாரியாச்சா”
“ஆமா.. இந்த போட்டோலாம் பாரேன்.. பொண்ணுங்க இன்னும் அழகா இருக்கு.. பொண்ணுன்னா வளத்த ஆசையா இருக்கும்ல..”
“எனக்கு எதுனாலும் ஓகே கவி.. நமக்கு குழந்தை பொறக்கு போகுதுல.. சேட்டை பண்ணப் போகுது வந்து”
“ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. குதிக்கணும் போல இருக்கு”
“ஹே பாத்துடி”
படுக்கையில் படுத்தேன். பெரும் ஆனந்தம் அடைந்தேன். அந்த சந்தோசம் உடல் முழுவதும் பரவி சில்லிப்பை ஏற்படுத்தியது.
உடலும் மனமும் புத்துணர்ச்சியோடு இருந்தது.
‘மகிழ்ச்சியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கிறது என் குழந்தையும் அற்புதமாக ஆரோக்கியமாக வளரும் அல்லவா.. உள்ளே வளரும் உயிருக்கு இன்பம் கொடுக்க வேண்டும்’ மனதிற்குள் எண்ணிக் கொண்டே ஆதியின் குழந்தை முகத்தை திறன்பேசியில் பார்த்தேன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings