in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 2) – ரேவதி பாலாஜி

 2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1

முன்கதை சுருக்கம்:

மகிழ்ச்சியான திருமண வாழ்வில் இருக்கும் கவியினியாளுக்கு திருமணம் முடிந்து ஒருவருடம் ஆகப்போகும் நிலையில் குழந்தை ஆசை அதிகரிக்கிறது. நிறைவேறியதா கவியினியாளின் ஆசை என்பதை பார்ப்போம்.

இனி:

இரண்டு கோடு வந்து விடாதா என்ற ஏக்கத்தில் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நிமிடங்கள் கடந்தன. ஆனால் ஒரு கோடு ஒரு கோடாகவே நின்று விட்டது.

ஒன்றிரண்டு நாள் கழித்து மீண்டும் டெஸ்ட் செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அன்று மதியமே வீட்டிற்கு தூரமானேன். சரி பரவாயில்லை அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

மறுபடியும் அடுத்த மாதம் எடுத்துப் பார்த்தேன். அதிலும் ஒரே கோடு தான் வந்தது.

இதைப் பற்றி தோழி ஒருத்தியிடம் கேட்டேன்.

“அதெல்லாம் கிடைக்கும் போது தானாக வரும்” என்றாள்

அதோடு சேர்த்து அவள் இன்னொன்றும் கூறினாள்

“குழந்தைங்கிறது கடவுள் கொடுக்கிற வரம் கவி.. நம்மை நினைச்சிட்டா மட்டும் போதாது. அந்த வரம் கிடைக்கணும்.. அதுவரைக்கும் காத்திருக்கணும்”

அவள் அப்படி கூறியது என் மனதை என்னவோ செய்தது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று நினைத்து கொண்டு இந்த மாதமே இரண்டு கோடு வரவேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட விஷயம் இல்லை இது. ஒரு உயிர் இந்த மண்ணில் பிறக்க ஆசிர்வதிக்கப் பட வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

எல்லாம் புத்திக்கு புரிந்தாலும் மனம் தவிக்கத் தான் செய்கிறது.

எப்பொழுது கிடைக்கும் என்று தவியாய் தவிக்கிறது. ஒரு நாள் தள்ளிப் போனால் கூட பேரானந்தம் அடைந்து விடுகிறது.

தாங்க முடியாமல் சோதனை செய்து பார்க்கிறேன் அது ஒரு கோடோடே நின்று விடுகிறது.

இந்த மாதமும் மாதவிலக்கு ஒரு நாள் தள்ளிப் போய் இருக்கிறது. சோதித்து பார்த்து விட மனம் ஏங்குகிறது. காத்திரு என்று புத்தி கூறுகிறது. இந்த இரண்டும் சண்டைப் பிடித்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு யோசனை. இன்னும் நான்கு நாட்களில் எங்கள் திருமண நாள் வரப் போகிறது அன்று சோதித்து பார்த்தால் என்ன ஒருவேளை இரண்டு கோடு வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் நியாபகமாக இருக்கும் அல்லவா.

நல்ல யோசனையாக தோன்றவே அப்படியே செய்ய முடிவு எடுத்தேன்.

இன்னும் நான்கு நாட்கள் தூரம் ஆகாமல் இருந்து விட வேண்டும் என் வயிற்றில் சிசு இருந்தால் அது தங்கிவிட வேண்டும் இறைவா.. மனதிற்குள் வேண்டினேன்.

ஏற்கனவே என் கணவர் வாங்கித் தந்த இரண்டு ‘கிட்’டையும் கடைசி இரண்டு மாதங்களில் பயன்படுத்தி விட்டேன். இந்த முறை புதிதாக வாங்க வேண்டும். ஆதியிடம் சொல்லி வாங்கலாமா வேண்டாம் உறுதி ஆனால் அவனுக்கு நான் தரும் திருமண நாள் பரிசாக இருக்கட்டும்.

நானே அருகில் இருக்கும் மருந்து கடைக்கு சென்றேன். அந்தக் கடையில் சற்று கூட்டமாக இருந்தது. அங்கே சென்று கேட்க எனக்கு கூச்சமாக இருந்தது. நாப்கின் வாங்கக் கூட தைரியமாக போவேன். எத்தனை ஆண்கள் இருந்தாலும் இதில் என்ன கூச்சம் இதுவும் தேவையான பொருளே என எண்ணுவேன். ஆனால் இதை கேட்கக் கூச்சமாக இருந்தது. நான் கர்ப்பமாக இருக்கிறேனா என்பதை பார்க்கப் போகிறேன் என்று எப்படி கூறுவேன் அவர்களிடம்.

இன்னும் இரண்டு தெரு தள்ளிப் போனால் அங்கே ஒரு மருந்து கடை இருக்கிறது. அங்கு இவ்வளவு கூட்டம் இருக்காது. எடுத்து கொடுப்பதற்கும் பெண்கள் தான் உள்ளனர் பேசாமல் அங்கேயே போகலாம்.

நடந்து சென்றேன். உள்ளுக்குள் பல எண்ண ஓட்டங்கள் ஒரு வேலை நான் கர்ப்பம் என்றால் இந்த வேகத்தில் நடக்கலாமா குனிந்து நிமிரலாமா இதனால் அந்த குட்டி உயிருக்கு ஒன்றும் ஆகாது தானே.. எதற்கும் பொறுமையாகவே செல்வோம்.

நான் நினைத்த மாதிரி அந்த கடையில் யாரும் இல்லை. அங்கே வேலை செய்யும் பெண் மட்டும் இருந்தாள்.

“அக்கா.. ப்ரக்னென்சி டெஸ்ட் கிட் இரண்டு குடுங்க”

நான் இப்படி கேட்டதும் அந்த பெண் முதலில் என் கழுத்தைப் பார்த்தாள் பின் நெற்றியைப் பார்த்தாள்.

அவள் அப்படி பார்த்தது எனக்கு பிடிக்கவில்லை.

நல்லவேளையாக நான் நெற்றியில் குங்குமம் நன்கு தெரியும்படி தான் வைத்திருந்தேன்.

வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

வீட்டிற்குள் போனதும் மாமியார் மாமனார் கேட்பார்களே.. ஆதி வீட்டிற்கு வந்திருந்தால் எங்கே சென்றாய் என்று கேட்பாரே.. சரி பொட்டு வாங்க சென்றதாய் கூறி சமாளிப்போம்.

பர்ஸில் நன்கு ஒளித்து வைத்துக் கொண்டேன் வாங்கியதை. யாரும் எதுவும் கேட்கவில்லை பர்ஸோடு பத்திரமாக வைத்தேன்.

அறையில் பர்ஸை வைத்து விட்டு ஹாலிற்கு வந்தேன். என் அத்தை பப்பாளி அரிந்து கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் தட்டை நீட்டினார். எனக்கு என்ன செய்வதேன்றே புரியவில்லை. உடலிற்கு பப்பாளி நல்லது தோளுக்கு நல்லது என்று போன வாரம் வரை சாப்பிட்டு வந்ததை தான் அத்தை இப்பொது என்னிடம் தட்டில் நீட்டினார். ஆனால் இப்பொழுது சாப்பிட பயமாக இருந்தது. இதெல்லாம் சாப்பிட்டாலும் கருவிற்கு ஒன்றும் ஆகாது என்று இன்றைய கால இணைய உலகம் கூறுகிறது. இது உடல் சூட்டை அதிகரித்து மாதவிலக்கு ஏற்படுத்தி விடும் என்று அன்றைய பாட்டிகள் கூறுகிறார்கள்.

இரண்டிற்கும் மத்தியில் எது சரி எது தவறு என்று சோதிக்கும் நிலையில் நான் இல்லை. இப்போதைக்கு எனக்கு பப்பாளி வேண்டாம்.

“இல்லை அத்தை இப்போதான் சாப்பாடு சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடறேன்”

மீண்டும் அறைக்குள்ளே சென்றுவிட்டேன்.

இரண்டு நாட்கள் கழிந்தன. உறுதி செய்ய இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. மனம் அதையே பெரும்பாலான நேரத்தில் சிந்தித்தது.

எப்படித்தான் இதையெல்லாம் யோசிக்காமல் நாட்களை கடப்பது. எப்படித்தான் நாட்கள் தள்ளிப் போவது கூட தெரியாமல் இயல்பாக பரிசோத்திக்கிறார்களோ. நான் எதிர்பார்ப்பதால் இப்படி சிந்திக்கிறேனோ என்னவோ.

வேலை முடித்து வீட்டிற்குக் கிளம்பும் பொழுது திடீரென வயிறு வலிக்க ஆரம்பித்தது.

பேருந்தில் பயணிக்கவே முடியவில்லை. அடிவயிறும் முதுகும் இழுத்து பிடித்து வலித்தது.

அரைமணி நேர பயணமும் வலியோடே வந்தேன். மனதில் இருந்த குழந்தை ஆசை எல்லாம் மெல்ல சரிந்தது. ஏன் வலிக்கிறது என்ன நடக்கிறது எனக்குள். மாதவிலக்கு ஆனது போல் வலிக்கிறதே. இந்த முறையும் நான் பார்க்க போவது இரத்த கறையை தானா!

ஏதாவது பிரச்சனை இருக்குமோ எங்களுக்கு.. ஏன் குழந்தை பாக்கியம் கிட்ட வில்லை. காத்திருந்தால் தானாக அமையும் என்கிறார்களே எத்தனை நாள் தான் காத்திருக்க வேண்டும். பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்பதை எப்போது தான் தெரிந்து கொள்வது.

இறைவா.. ஏன் எங்களை சோதிக்கிறாய்!

பேருந்தை விட்டு கீழ் இறங்கி வேக வேகமாய் வீட்டுற்குள் நுழைந்து நேராக பாத்ரூமிற்குள் சென்றேன். சரிபார்த்ததில் எங்கும் கறை இல்லை. அப்புறம் ஏன் இவ்வளவு வலி. யோசனையோடே படுக்கை அறைக்கு சென்று சோர்வில் உறங்கிப் போனேன்.

“கவி ஏன் சாப்பிடாமயே படுத்துட்ட” கணவரின் குரல் கேட்டு எழுந்தேன்.

மணியை பார்த்தேன். ஒன்பதாகி இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு மேல் தூங்கி விட்டேன். நல்ல உறக்கம். வயிற்று வலி இப்பொழுது இல்லை. நன்றாகவே குறைந்து இருந்தது.

“இல்லை ஆதி கொஞ்சம் டையர்டு”

“கொஞ்சமா சாப்டுட்டு வந்து படுத்துக்கலாம் வா”

எழுந்து முகம் கழுவிக் கொண்டேன். மீண்டும் பார்த்தேன் கறை எதுவும் இல்லை. இணையத்தில் தேடினேன். கர்ப்பத்திற்கான அறிகுறிகளில் வயிற்று வலியும் இருந்தது. ஒருவேளை அதற்குத் தான் வலித்திருக்குமோ. மீண்டும் மனதில் சரிந்த கோட்டையை மேல் எழுப்பினேன்.

எதுவாக இருந்தாலும் நாளை மறுநாள் தெரிந்து விடப் போகிறது. ஏன் நாளை மறுநாள் சோதிக்க வேண்டும். திருமண நாள் அன்று பரிசோதித்து இல்லை என்று வந்துவிட்டால் முதல் வருட திருமண நாள் சோகத்தில் செல்லுமே.. நாளையே பார்த்து விடலாம். நாளை பார்த்தால் கர்ப்பம் உறுதி ஆகவில்லை என்றாலும் திருமண நாளில் மனதை தேற்றிக் கொண்டு மகிழ்ச்சியோடு அடுத்த ஆண்டை வரவேற்கலாம்

அதுவே இரண்டு கோடு வந்து விட்டால் திருமண நாள் பரிசாக கணவரிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிரலாமே. நினைக்கும்பொழுதே நெகிழ்ச்சி தலைக்கேறியது.

காலை வரை காத்திருக்க வேண்டும். இரவே சோதித்து விடலாமா. காலையில் பார்த்தால் தான் சரியாக இருக்கும் என்கிறார்களே. காலையில் எடுத்தால் தான் சிறுநீரில் ஹார்மோன்(HCG) சுரப்பு அதிகம் இருக்குமாம். அப்பொழுதே பார்த்துக் கொள்ளலாம். எனினும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

பர்ஸில் இருந்த டெஸ்ட் கிட்டை எடுத்துச் சென்று பாத்ரூமில் வைத்தேன். காலையில் எழுந்து தேட வேண்டாம். முன்னேற்பாடாக எட்டும் தூரத்தில் ஆனாலும் கணவனுக்கு தெரியாத இடத்தில் வைத்து விட்டு வந்தேன்.

படுக்கை அறையில் கண் மூடி படுத்தேன். உறக்கமே இல்லை.

சிறு வயதில் அடுத்த நாள் தீபாவளி அல்லது பொங்கல் என்றால் இரவு எப்பொழுது விடியும் எப்பொழுது புது துணி போடலாம் என்ற ஆர்வத்தில் தூக்கமே வராதே அப்படி ஒரு எதிர்பார்ப்பு.

என்னென்னமோ யோசனைகள் வயிற்றை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இனம் புரியாத உணர்வுகளோடு உறங்கிப் போனேன்.

எப்பொழுது உறங்கினேன் தெரியவில்லை. முழிப்பு வந்து கடிகாரத்தை பார்க்கும்பொழுது மணி ஐந்து. மீண்டும் உறங்க கண் சொக்கிய கணத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்ற எண்ணம் வரவே பட்டென எழுந்து அமர்ந்தேன்.

அருகில் என் கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரை மெல்லத் தாண்டி கீழே இறங்கினேன். கீழே இறங்கி விட்டு மீண்டும் ஆதியின் முகத்தை பார்த்தேன். நல்ல உறக்கத்தில் இருந்தார்.

“நமக்கு பையன் பொறந்தா உன் ஜாடையா இருக்குமா.. இல்லை பொண்ணு பொறந்தா உன் ஜாடையா இருக்குமா” அவருக்கு கேட்காத சத்தத்தில் மெல்ல முணுமுணுத்தேன்.

ஆதியின் முகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு பாத்ரூமிற்குள் சென்றேன்.

வயிறு முட்டி இருந்தது. சிறுநீர் போக வேண்டும் போன்ற உணர்வு எழுந்தது. வேக வேகமாக டெஸ்ட் கிட்டை பிரித்தேன். பில்லர் போன்று ஒன்று இருந்தது அதில் சிறுநீர் சொட்டுகள் பிடித்து கிட்டில் விட வேண்டும். சி(C – Control) மற்றும் டி (T – Test) என இரண்டு கோடுகள் இருக்கும். ஏற்கனவே பரிசோதத்தப் போது சி யோடு நின்று விட்டது கோடு. இந்த முறை என்ன ஆகுமோ? கைகள் நடுங்க சிறுநீரை கிட்டில் விட்டுவிட்டு காத்திருந்தேன்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வெற்றி நிச்சயம் (சிறுகதை) – சத்திய பானு

    தாமரையும் மாறிவிடுவாளோ (சிறுகதை) – மைதிலி ராமையா