இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
குறள் : 942
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை என்கிறார் திருவள்ளுவர்.
மருந்தே என்ற ஒன்று வேண்டாம் என சொல்லும் காலத்தில் இருந்து உடலில் ஒரு உறுப்பு வேண்டாம் என்று சொல்லும் காலத்திற்கு வந்துவிட்டோமா!
கடவுள் கொடுத்த உடம்பில் இது வேண்டாம் என்று ஒரு உறுப்பை அகற்றுவது நியாயமா! அந்த அளவிற்கு நம் உடலை பாதுகாக்க தவறிவிட்டோமா!
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
குறள் : 948
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் உடலுக்கு பொருந்தும் படியாக மருத்துவம் செய்ய வேண்டும்.
இதையாவது இன்றைய சூழல் செய்கிறதா!
“ஆபரேஷன் பண்ணி மூணு நாலு வருஷம் கழிச்சி உடம்பு வீக் ஆனா என்ன பண்ணுவம்மா” அம்மாவிடம் கோபமாக பேசினேன்.
“வீக் ஆகும் தான் அதுக்காக கட்டியோடயே இருக்கச் சொல்றியா…”
“உனக்கு இப்போ உதிரப் போக்கு பரவால்ல தான”
“இப்போ கொஞ்சம் பரவால்ல”
“மூணு மாசம் பாக்கலாம்.. நல்லா சாப்புடு தூங்கு நிம்மதியா இரு.. அப்புறம் மறுபடியும் ஸ்கேன் பாக்கலாம்”
“அப்பவும் இப்படியே இருந்தா ஆபரேஷன் பண்ணிக்கிறேன்”
“ஆப்ரேஷன் பண்றது தான் உன் நினைப்பு இருக்கா.. நீ ஒழுங்கா இருந்திருந்தா இந்த பிரச்சனை வந்துருக்குமா”
“நான் என்னடி பண்ணேன்”
“பிரிட்ஜ்ல வெச்சி பழசு திங்கறது.. லேட்டா சாப்பட்றது.. லேட்டா தூங்குறது.. கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்கிறது.. ஒரு பழம் வாங்கி வெச்சா சாப்பட்றது இல்லை”
“இதனால தான் வந்துச்சா”
“எதுனால வேணா வரும்ம்மா.. உன்மேலயும் இந்த தப்புலாம் இருக்குல்ல”
“எல்லாரும் பண்றது தான பண்றேன்”
“எல்லாரும் பண்ணுவாங்க.. நம்ம நேரம் நமக்கு தான் கடைசில பிரச்சனை வரும்”
“நீதான் இத ரொம்ப பெருசு பண்ற”
“எனக்கு இது பெருசு தான்ம்மா”
“அத்தை.. அவ சொல்றதும் கரெக்ட் தான.. எதுக்கு அவசர அவசரமா ஆபரேஷன் பன்னனும்” எங்களுக்கு நடுவே வந்த ஆதி கூறினார்.
“மூணு மாசம் ஒழுங்கா சாப்பிடு.. அப்புறம் ஸ்கேன் பாக்கலாம்.. சதை கட்டி கூட பெருசா இல்லை.. நீர் காட்டியாம்.. ஈசியா கரஞ்சிடுமாம்”
“பாக்கலாம்”
“அதுக்கப்புறம் அப்படியே இருக்கா குறையுதா பாக்கலாம்.. ரொம்ப முடிலனா என் டெலிவரி அப்புறம் மூணு மாசம் கழிச்சி ஆபரேஷன் பண்ணிக்கோ..”
“ஆபரேஷன் பண்ணாம குணமான்னாலும் சந்தோசம்.. வேறெதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு கவி”
“அப்படி எதாவது பிரச்சனைனா நானே ஆபரேஷனுக்கு ரெடி பண்றேன்.. இப்போதைக்கு அதெல்லாம் எதும் நினைக்காம இரும்மா”
“இவ்ளோ தூரம் சொல்ற.. பாக்கலாம்”
“பாக்கலாம்னு எதும் பண்ணாம இருந்தா குறையாது.. மாத்திரையோட சேர்த்து பழம் காய்லாம் சாப்பிடு.. கீரைலாம் சாப்ட்டா இரத்தம் அதிகமாகும்.. வாழைப்பூ சாப்பிடு கர்ப்பப்பைக்கு ரொம்ப நல்லது.. கர்ப்பப்பை அந்த ஷேப்ல தான் இருக்குமாம்”
“சரிடி சாப்பட்றேன்.. மாப்பிள்ளை.. பொங்கலுக்கு அழைக்க வரணுமா.. மாசமா இருக்கப்ப வந்து அழைக்கக் கூடாது.. சும்மா வந்து கூப்டுட்டு வந்துடவா”
“அதெல்லாம் வேணாம் அத்தை பரவால்ல.. போன்ல சொல்லுங்க வந்தட்றோம்”
“இருந்தாலும் அம்மாகிட்ட வந்து நேர்ல சொன்னாதான நல்லாருக்கும்”
“அதான் முதல் வருஷம் அழைச்சிட்டிங்க.. தலை பொங்கலுக்கு எல்லாம் பண்ணிட்டீங்க.. பரவால்லமா”
“கவி நீ என்ன சொல்ற.. உனக்கு என்ன ஆசை”
“நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற மா”
“அதான் ஆபரேஷன் வேணான்னு சொல்லிட்ட.. அப்புறம் பாத்துக்கலாம் நானும் உடம்பு பாத்துக்கிறேன்”
“சும்மா சொல்ற.. இப்போ கூட நைட் குழம்பு சூடு பண்ணி சாப்பட்ற”
“வேஸ்ட்டா போகுதுடி”
“உன் வயிறு என்ன குப்பை தொட்டியா.. வேஸ்ட் ஆகுறத கொட்ட.. பழைய சாப்பாடு மட்டும் தான் ஒரு நாள் வெச்சு சாப்பிடணும்.. அப்பப்ப செஞ்சி சாப்பிடு குழம்பு பொரியல்லாம்..”
அம்மா தலையசைத்து விட்டு உள்ளே காபி போடச் சென்றார்.
“ஏண்டி கூடவே இருக்க.. இதுகூட அம்மாக்கு சொல்ல மாட்டியா.. நீ கூட உக்கார்ந்து சாப்டுட்டு இருக்க”
“நைட் குழம்புல ஒரு வாய் காலைல குழம்புல ஒரு வாய்ன்னு தோசை சாப்ட்டு பாரு செம்ம டேஸ்ட்டா இருக்கும்”
“அடியே…. உன்னை திட்றேன் டி”
“அம்மாட்ட சொல்லிட்டு தான்டி இருக்கேன்.. சீக்கிரம் சாப்பிடு.. தூங்கு காய்லாம் சாப்டுன்னு.. அம்மா கேக்க மாட்டிக்குது”
“நீயும் கூட உட்கார்ந்து சீக்கிரம் சாப்டு.. மீதி ஆனா யாருக்காவது குடுத்துடுங்க”
“பாத்துக்கலாம்.. பொங்கலுக்கு எப்போ வீட்டுக்கு வர”
“ஹாஸ்பிடல்லாம் போற வேலை இருக்கு.. பாத்துட்டு வரேன்”
சூழல் சற்று நிம்மதியை தந்தது.
கொஞ்சம் காபியின் ருசியையும் பொங்கல் வரப்போகிற மகிழ்ச்சியையும் ஒட்டிக்கொண்டு கிளம்பினோம் நானும் ஆதியும்.
எதையோ சாதித்த உணர்வு இருந்தது அம்மா ஒத்துக் கொண்டது. இப்படியே விட்டு விடாமல் தொடர்ந்து அம்மாவை பார்த்து கொள்ளவும் வேண்டும் ஆதியிடமும் கூறினேன்.
விடுமுறையில் நான்கு நாட்கள் முடிந்தது. இன்னும் பொங்கலுக்கு நான்கு நாட்கள் தான் இருக்கிறது. அடுத்த வேலையாக ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பதிவு செய்ய வேண்டும்.
நானும் ஆதியும் சென்றோம். ஆதார் அட்டை வாங்கிக்கொண்டு என்னைப் பற்றிய ஆதியை பற்றிய விவரங்களையெல்லாம் கேட்டு படிவத்தை நிரப்பிக் கொண்டார்.
ஒரு வாரத்தில் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துவிடும் அதில் ஆர்.சி.எச் ஐடியும் வந்து விடும் என்றார். முதல் தடுப்பூசி போட வலியுறுத்தினார். போட்டதில் இருந்தே கை வலிக்கத் தொடங்கியது.
பின் இரத்த பரிசோதனை எடுக்கச் சொன்னார்கள். ஏற்கனவே எடுத்ததை காண்பித்தோம். ஹிமோகுளோபின் மற்றும் சில வேண்டிய காரணிகளை எனக்கேன்று போட்டிருந்த அட்டையில் குறித்துக் கொண்டார். எடை மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து எழுதிக் கொண்டார்.
“எச். ஐ. வி டெஸ்ட்டும் எடுத்தாச்சுல” அழுத்தமாகக் கேட்டார்.
பதட்டத்தில் அறிக்கையை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.
“எடுத்தாச்சு.. நெகட்டிவ்..” என்று கூறிக்கொண்டே சோதனை முடிவை காண்பித்தேன். அதையும் குறித்துக் கொண்டார்.
“ஒரு வாரத்துல ஐடி வந்துடும்.. இல்லனா வாங்க.. பக்கத்துல இருக்க பால்வாடி பள்ளிக்கூடத்துல பதிவு பண்ணிடுங்க.. மாசம் மாசம் வந்து சத்துமாவு பாக்கெட் வாங்கிக்கோங்க”
“சரிங்கக்கா”
எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு கிளிம்பினோம். பள்ளிக்கூடத்திலும் பதிவு செய்தோம். அடுத்த மாதத்தில் இருந்து சத்து மாவு வரும் என்றனர்.
திட்டமிட்ட வேலைகளை ஒருபுறம் நாங்கள் செய்து முடிக்க அங்கே எங்கள் பெற்றோர்கள் உறவினர்களிடம் என் நான்கு மாத கர்ப்பத்தை ஆனந்தமாக பகிர்ந்து கொண்டிருந்தனர்.
வாழ்த்துக்கள் குவியத் தொடங்கின.
மகிழ்ச்சியோடு நாளை பிறக்கவிருந்த பொங்கல் பண்டிகையை எதிர்கொண்டோம்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings