2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
கதைக்கான முன்னுரை
நம் கதையின் நாயகி கவியினியாள் அவளின் கர்ப்ப கால இனிய பயணத்தை அவளே சொல்லப் போகிறாள். தற்காலத்தில் கருவுற்ற பெண்ணிற்கு அவள் உடலை பார்த்துக் கொள்வதும் மனதை பார்த்துக் கொள்வதும் தேவையற்ற கருத்துக்களை எதிர்கொள்வதும் எத்தனை சவாலானதாக இருக்கின்றன என்பதை கூறப் போகிறாள். இப்போதைய மருத்துவ சூழல் எப்படி உள்ளது, வேலைக்கு செல்லும் இடத்தில் கர்ப்பிணி பெண்ணை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் அலசப் போகிறாள். அவள் மனம் நெகிழ்ந்ததையும் குழந்தை வயிற்றில் சொன்ன ரகசியங்களையும் கூட சொல்லப் போகிறாள். இந்த நாவலின் ஊடே ஈன்ற பொழுதில் மட்டுமா இன்பம், இல்லை இந்த ஒன்பது மாத பயணமே எத்தனை உன்னதமானது என்னும் அதிசயத்தை உடைக்கப் போகிறாள் கவியினியாள்.
இனி கதைக்குள் செல்வோம்
‘காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
உனது உயிரை எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்’
சில நேரம் திருமண விஷேசங்களில் பாடும் பாடல்களை கேட்கும் பொழுது எதற்கு இந்த தேவையற்ற இரைச்சல் என்று தோன்றும். உறவினர்களுடன் பேச கூட முடியாமல் கத்தி கத்தி வார்த்தைகளை பகிர நேரும். ஆனால் இந்த கச்சேரி அப்படி இல்லை. இனிமையான பாடல்கள் ரம்மியமான இசை மிதமான சத்தத்தில் இசைத்து கொண்டிருந்ததில் நானும் அதனோடு ஒன்றி மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
இசையை முதலில் உள்வாங்கி அது உடல் முழுவதும் பரவும்பொழுது வரியின் அர்த்தம் புரிந்து உயிரை வருடும் நொடியில் மெய்சிலிர்த்து, ஒரு ஓரமாய் சிரிப்பு தெரிய கூட்டத்தை பார்த்து சிரிப்பை அடக்க முயன்று அதையும் தாண்டி கசிந்ததை அதன் போக்கில் விட்டு நெகிழ்ந்து கொண்டிருந்தேன்.
“கவியினியாள்” என் அம்மா என்னை அழைத்ததும் திரும்பிப் பார்த்தேன்.
“வரேன் மா” என்னை அழைத்த அவர்களை நோக்கி நடந்தேன்.
“இவ தான் என் மொத பொண்ணு கவியினியாள். ஈரோட்டுல வேலை பாக்கிறா” சொந்தக்கார பெண் ஒருவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் அம்மா
“சின்ன வயசுல பாத்தது.. கல்யாணம் ஆயிடிச்சா” என்று அவர் கேட்டார். என் நெற்றியை பார்த்துமா இப்படி கேட்டிருப்பார் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
“கல்யாணம் ஆயிடுச்சு.. ஆறு மாசம் ஆகுது.. மாப்பிளை அங்க நிக்கிராரே அவரு.. சென்னைல வேலை.. இப்போ ஒர்க் பிரம் ஹோம்”
“சந்தோசம்.. அப்புறம் எதாவது விஷேசம் உண்டா?”
எங்கள் இருவர் முகமும் மாறியது அவர் இப்படி கேட்டதும்.
“இப்போதானக்கா கல்யாணம் ஆயிருக்கு. ஒரு வருஷம் ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கட்டுமே..” என் அம்மா பதில் அளித்தார்.
“சரி.. அவருக்கு ஒர்க் கனெக்ட் பண்ணும் மா.. நாங்க கிளம்பறோம்” என்று கூறிவிட்டு நானும் அங்கிருந்து கிளம்பினேன். உண்மையில் அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாமல் கிளம்பினேன்.
இந்த கேள்வி திருமணம் முடிந்த அடுத்த மாதத்தில் இருந்தே எங்களிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படி கேட்பதால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. கர்ப்பமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன.. எதற்கு இந்த கேள்வியை வெகு இயல்பாய் திருமணம் முடிந்த மாதத்தில் இருந்தே கேட்கத் தொடங்குகிறார்கள்.
எல்லாரும் அப்படித்தான் என்றும் கூறிவிட முடியாது. அந்த காலம் மாதிரி இல்லாமல் இப்பொழுது பலர் மாறிவிட்டார்கள்.
“கொஞ்ச நாள் சந்தோசமா டூர்லாம் போய்ட்டு வாங்க.. அப்புறம் குழந்தை பெத்துக்கோங்க.. குழந்தைன்னு வந்துட்டா நீங்க முழுசா அவங்களுக்காகவே வாழணும். அதுக்கு தயாராகிட்டு பெத்துக்கோங்க” என்றார் சித்தி திருமணம் முடிந்த அடுத்த நாளே.
“முதல்ல உன் உடம்ப தேத்து.. வருஷம் ஆவட்டும் அப்புறம் கூட பெத்துக்கோங்க” என் அம்மாவும் ஆரம்பித்திலேயே இப்படி கூறிவிட்டார்.
என் பயம் எல்லாம் புகுந்த வீட்டாரைப் பற்றித் தான் இருந்தது. மாமியார் என்ன சொல்லுவாரோ என்று!
திருமணம் முடிந்து முதல்முறை மாதவிலக்கு ஏற்பட்ட போது பயந்து பயந்து அவரிடம் கூறினேன்.
தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து ஊற்றிவிட்டு பருப்பு சாதம் செய்து கொடுத்தார்கள், முதல் முறை ஆனால் செய்யும் சடங்கு என்றார்கள். அப்பொழுதே இன்னொன்றையும் கூறினார்கள், அதில் தான் எனக்கு ஆச்சர்யமே
“எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சி தான் குழந்தை உண்டாச்சு.. உன் நாத்தனாரு பொறந்தா.. ஆறு வருஷம் கழிச்சி தான் ஆதி உன் புருஷன் பொறந்தான்.. அதனால நான் உங்கள அவசர படுத்த மாட்டேன்.. இதெல்லாம் உங்களுக்கே தெரியும். நாங்க ஏன் இதெல்லாம் கேட்டு உங்கள தொந்தரவு பண்ணனும்”
இப்படி அவர் சொன்னதும் எனக்கு மெய்சிலிர்த்து விட்டது.
அன்று முதல் நானும் என் கணவரும் எங்கள் பயணம் எங்கள் வேலை எங்கள் காதல் என்று இருந்து விட்டோம்.
இப்படி யாராவது உறவினர்கள் கேட்டால் தான் இன்னும் ஏன் குழந்தை இல்லை என்று ஒரு நிமிடம் தோன்றும்.
இருவருக்கும் சொந்த ஊர் சேலம் என்றாலும்.. அவர் வாரம் ஒருமுறை சென்னை வேலைக்காக செல்வார் மீதி நாட்கள் வீட்டிலிருந்து வேலை. நான் ஈரோட்டில் இருப்பேன். வார இறுதியில் இருவரும் சேர்ந்து சிறு சிறு பயணங்கள் மேற்கொள்வோம்.
எப்பொழுது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கிளம்புவோம். காலையில் எழுந்து கூட அன்றைய பயணத்தை திட்டமிடுவோம். பேருந்தில் பயணித்து கிடைப்பதை உண்டு புதியதை சுவைத்து நடந்து வியர்த்து சுற்றித் திரிந்து வீடு வந்து சேர்ந்தோம். புதுப் புது அனுபவங்களை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டோம்.
நாட்கள் நகர ஆரம்பித்தன.
இப்பொழுது மனம் மெல்ல மெல்ல வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
நமக்கும் ஒரு குழந்தை வேண்டாமா.. இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்.. ஏன் காத்திருக்க வேண்டும். தஞ்சாவூரையும் பார்த்தாயிற்று.. தாஜ்மஹால்லயும் பார்த்தாயிற்று.. இன்னும் செல்ல பல இடங்கள் இருக்கின்றன தான். அதை அடுத்த அடுத்த கட்டத்தில் கூட பார்த்துக்கொள்ளலாமே.. குழந்தையையும் கூட்டிச் செல்லலாமே.. உடனே முடியாது என்றாலும் மூன்று நான்கு வருடங்கள் கூட ஆகட்டுமே என்ன அதனால் என்கிற மாற்று சிந்தனைக்குள் மனம் சென்றுவிட்டது.
நாங்கள் இருவர் மட்டும் செல்லும் பயணங்களில் எங்களுக்குள் சண்டை எழ ஆரம்பித்துவிட்டது. எங்களுடன் மகளோ மகனோ இருந்தால் அவர்களுக்காக நாங்கள் விட்டுக் கொடுத்து அவர்களுக்காக வாழ ஆரம்பிக்கும்பொழுது இன்னும் தானே எங்கள் காதல் அதிகரிக்கப் போகிறது.
இருவரும் மனதார குழந்தையின் வருகைக்காக காத்திருந்தோம்.
இன்னும் நான்கு நாட்களில் எங்கள் திருமண நாள். ஒரு வருடம் நாங்கள் எங்களுக்காக மட்டும் வாழ்ந்து விட்டோம். இனி குழந்தைக்காக வாழ முடிவெடுத்தோம்.
ஆச்சு இருவருக்கும் இருபத்தி ஏழு வயது முடிவடைந்து விட்டது. எங்கள் திருமணம் காதல் திருமணம் என்பதால் இருவருக்கும் ஒரே வயது. ஆறு மாதம் தான் வித்தியாசம். இயற்கையோடும் சில நேரம் இயைந்து வாழ வேண்டும். இந்த வயது எங்கள் குழந்தை செல்வத்தை வரவேற்க சரியானதாக இருக்கும்.
கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பார்த்தும் மாதவிலக்கு ஆனது. இந்த முறையும் அப்படியே ஆகி விடுமோ.. அப்படியென்றால் எங்களுக்கு எதாவது பிரச்சனை இருக்குமோ..
அய்யோ இதை எப்படி நாங்கள் கண்டறிவது.. எங்கள் குழந்தை ஆசை நிறைவேறுமா??
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings