2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ச்சை!… இத்தோட இருபது இருபத்தியஞ்சு வரனுக்கும் மேல வந்தாச்சு…வந்த வேகத்திலேயே எல்லாம் திரும்பிப் போயாச்சு!… காரணம்… “பொண்ணு கருப்பு”…. ஹூம்… எந்த செவுத்துல போய் நான் முட்டிக்கறது?” வீட்டிற்குள் வரும் போதே புலம்பிக் கொண்டு வந்தார் பொன்னுரங்கம். வியர்வையில் அவர் சட்டை மொத்தமாய் நனைந்திருந்தது.
சமையலறையிலிருந்து தண்ணீர் செம்புடன் வெளியே வந்த அவர் மனைவி செண்பகம், “என்ன பேசறீங்க நீங்க?… அவ யாரு?… நாம பெத்த பொண்ணு!… என்னமோ யார் வீட்டுப் பொண்ணையே கரிச்சுக் கொட்டற மாதிரியல்ல நம்ம பொண்ணையும் பேசறீங்க?” சன்னக் குரலில் பதில் சொன்னாள்.
“க்கும்… புள்ளையப் பெத்துக் குடுன்னா… இப்படியொரு கரிக்கட்டையைப் பெத்துக் குடுத்திட்டு வியாக்கியானம் வேற பேசறியா நீ?” தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதது போல் பேசினார் பொன்னுரங்கம்.
கூடத்தில் அமர்ந்து குத்து விளக்கைத் துடைத்துக் கொண்டிருந்த அம்பிகா, கூனிக் குறுகி, தாழ்வு மனப்பான்மையோடு தந்தையைக் கீழ்ப் பார்வை பார்த்தாள்.
“க்கும்… பார்க்கறதைப் பாரு… கரும்பூதம்!.. அட்டைக்கரியாட்டமா பொறந்து தொலைச்சு எங்க உயிரை வாங்குது… சனியன்… சனியன்… இது கழுத்துக்கு ஒரு தாலி கொண்டார்றதுக்குள்ளார உன் கழுத்துத் தாலி காணாமல் போயிடும் போலல்ல இருக்கு” என்றான் மனைவியைப் பார்த்து.
தந்தையின் சாட்டையடி வார்த்தைகளைத் தாங்க முடியாமல், வேகமாய் எழுந்து உள் அறைக்குச் சென்று குலுங்கிக் குலுங்கி அழுதாள் அம்பிகா. “ஆண்டவா என்னை ஏன் இப்படிக் கருப்பா பொறக்க வெச்சே?… பேசாம என்னைக் கருவிலேயே சாகடிச்சிருக்கலாமல்ல?… என்னோட விளையாடிய… என் கூடப் படிச்ச பொண்ணுங்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டிகளோட இருக்காங்க!… நான் மட்டும்தான் இன்னும் தாலி ஏறாத மொட்டைக் கழுத்தாய்க் கிடக்கேன்!… சொல்லு ஆண்டவா அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்”
அறைக்கு வெளியே தன் தாய் தனக்காக கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பது அம்பிகாவிற்கு ஒரு புறம் வேதனையாகவும், இன்னொரு புறம் சிரிப்பாகவும் இருந்தது. “இந்த உலகத்துல கருப்பா பொறந்தவங்க யாருமே வாழலையா?… சாதிக்கலையா?… அப்பாவைப் பெத்த பாட்டி கூடக் கருப்புத்தானே?… அவங்க தொண்ணூறு வயது வாழ்ந்து… பரம்பரைக்கே பெருமை சேர்த்திட்டுப் போகலையா?”
நீண்ட நேர அழுகைக்குப் பின் அவளையுமறியாமல் உறங்கிப் போன அம்பிகாவை கனவுலகம் கை நீட்டி வரவேற்றது.
கனவில்…
***
வீட்டிற்குள் வேக வேகமாய் வந்த ஒரு சாமியார், “இங்கே பொன்னுரங்கம் என்பவர் யார்?” கேட்க,
“சொல்லுங்கள் ஸ்வாமி!… நான்தான் பொன்னுரங்கம்” குனிந்து பவ்யமாய்ச் சொன்னார்.
“போன பிறவியில் நீங்க செய்த ஒரு பாவத்தின் பலனாய் உங்கள் மகள் கருப்பு நிறத்துடன் பிறந்திருக்கிறாள்!…”
“அய்யய்யோ…” என்று அரண்டு போன பொன்னுரங்கம், குரலைச் சற்றுத் தாழ்த்திக் கொண்டு, “சாமி அந்தப் பாவத்தைத் த்ர்ர்க்கா ஏதாச்சும் மார்க்கமுண்டா ஸ்வாமி?” கேட்டார்.
“ம்… இருக்கு!…. அதை மாற்ற ஒரு மார்க்கமுண்டு!… நீங்க விரும்பினால் அதைச் செய்யலாம்!” சாமியார் சொல்ல,
“சொல்லுங்க ஸ்வாமி… எதுவானாலும் நான் செய்யறேன்” விழிகளை விரித்துக் கொண்டு சொன்னார் பொன்னுரங்கம்.
“இந்த வினாடியே என் சக்தியால் உங்கள் மகளை பொன் நிறப் பாவையாய் மாற்றுவேன்!…”
“மாத்துங்க ஸ்வாமி… மாத்துங்க” பரபரத்தார் பொன்னுரங்கம்.
“ஆனால்…. பதிலுக்கு நான் ஒன்று கேட்பேன்… அதை நீங்க செய்யணும்?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டார் ஸ்வாமி.
“செய்கிறேன் ஸ்வாமி”
“உங்கள் மகளுக்கு இந்த ஜென்மத்தில் வாய்த்திருக்கும் கருப்பு நிறம்… உங்கள் தாயின் நிறம்…. உண்மைதானே?”
“ஆமாம் ஸ்வாமி என் அம்மாவும் கருப்புத்தான்” என்றார் பொன்னுரங்கம்.
“ஆக… அது நிச்சயம் இந்தக் குடும்பத்தில் இருந்தே தீரும்… அதனால் உங்கள் மகளின் நிறத்தை மாற்றும் போது அந்நிறத்தை கண்டிப்பாக உங்கள் குடும்பத்தில் உள்ள வேறொருவருக்குத் தந்தே ஆகணும்!… ஆகவே அதை உங்களுக்குத் தருகிறேன்… பெற்றுக் கொள்கிறீர்களா?” சாமியார் தன் தாடியைத் தடவிக் கொண்டே கேட்டார்.
“என்னது… எனக்கா?… அய்யோ… எனக்கு வேண்டாம் ஸ்வாமி… வேண்டுமென்றால் என் மனைவிக்குக் கொடுத்து விடுங்கள்” அவசரமாய்ச் சொன்னார் பொன்னுரங்கம்.
அதைக் கேட்டு “பக…பக”வென்று சிரித்த சாமியார் சட்டென்று மறைந்து போக…
****
அறைக்கு வெளியே, “அய்யா… அய்யா” என்று உரத்த குரலில் அழைத்தபடியே ஓடி வந்தான் ஆட்டுப்பட்டி சின்னான். அவன் கை அனிச்சையாய் தலை மீதிருந்த துண்டை அவிழ்த்து கக்கத்தில் செருகியது.
அந்தக் குரல் கேட்டு உறக்கம் கலைந்து, கனவுலகிலிருந்து வெளியேறிய அம்பிகா “மலங்க… மலங்க’ விழித்தாள்.
“என்னடா சின்னான்?… எதுக்கு இப்படிக் கத்திட்டு வர்றே?” கோபத்தை அவன் மேல் காட்டினார் பொன்னுரங்கம்.
“அய்யா… நம்ம பெரிய ஆடு… குட்டி ஈனுடுச்சுங்க அய்யா!… மூணு குட்டிங்க அய்யா!” சின்னானின் குரலில் சந்தோஷம் வழிந்தது.
“அப்படியா?… என்ன நெறம்?” உடனே கேட்டார் பொன்னுரங்கம்.
“ஆண்டவன் புண்ணியத்துல… மூணுமே கருப்பு நெறமுங்க அய்யா”
“ஹா… ஹா… ஹா..”வென வாய் விட்டுச் சிரித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பொன்னுரங்கம். “பட…பட”வென்று கைகளை வேறு தட்டினார்.
“நல்லதாப் போச்சு… அடுத்த மாசம் கிடாவெட்டு வரப் போவுது… கருங்குட்டிகளைப் பலி கொடுத்தால்தான் கண் திருஷ்டி போகும்னு… ஜனங்க எல்லோரும் கருப்புக் குட்டிகளுக்காக அலைவாங்க!… அப்ப கருங்குட்டிகளுக்கு நல்ல கிராக்கியாயிடும்… செமையா வெலை போகும்!.. பத்தாயிரம்… இருபதாயிரம் சொன்னாலும் போட்டி போட்டிக் கொண்டு வாங்குவாங்க!”
“விருட்”டென்று தலையைத் தூக்கி, அறைக்குள்ளிருந்தவாறே தந்தையை வெறுப்போடு பார்த்தாள் அம்பிகா.
“பேசாம நானும் ஆடாய்ப் பொறந்திருக்கலாமோ?” அவள் மனம் எண்ணியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings