எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கடைத்தெருவில் நின்றிருந்த ராகவன் தற்செயலாக திரும்பி பார்த்தார். வந்து கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ந்தார். ஏதாவது மறுபடியும் பேசி விடுவாளோ என்ற பயத்தில் வேக வேகமாக வீட்டை நோக்கி நடைபோட்டார்.
போன மாதம் அவளிடம் அகப்பட்டுக் கொண்டு அவர் பட்ட பாடு நினைவுக்கு வந்தது. அன்று நடந்தவை அத்தனையும் மனக்கண் முன் விரிந்தது.
‘நீதான் அந்த வாத்தியாராய்யா?’ என்று கேட்டுக் கொண்டே புயலாக வந்து நின்றாள். பின்னால் பாபு அவர் வகுப்பு மாணவன் பம்மிக் கொண்டு நின்றான்.
கசங்கிய சேலையும் கலைந்த கூந்தலுமாக தோற்றமளித்தவள் கண்கள் சிவந்திருந்தன. அவளை அவர் நிறைய முறை பள்ளி செல்லும் வழியில் பார்த்திருக்கிறார்.
நடைபாதையில் காய்கறி விற்றுக் கொண்டிருப்பாள். எப்போது அவளை கடந்து போகும் போதும் யாருடனாவது சண்டை யிட்டுக் கொண்டிருப்பாள்.
பாவம் என்று நினைத்துக் கொண்டு கடந்து போவார். வீதியில் விற்பனை செய்பவள் கொஞ்சம் கடுமையாக இருந்தால்தான் முடியும். முகமூடியை அணிந்து அணிந்து நிஜ முகமே மறந்து போய்விடுகிறார்கள் என்று நினைத்ததுண்டு. ஆனால் இன்று அவரிடமே வந்து மோதுகிறாளே. பாபுவை அவர் எதுவும் சொல்ல வில்லையே.!
‘.’என்ன ஆச்சு?’ என்று திகைத்துப்போய் கேட்டார் அவர்.
‘என்ன ஆச்சா? உங்களை பாடம் தானே எடுக்க சொன்னாங்க? எதுக்கு வேண்டாததெல்லாம் சொல்லி கொடுக்கிறீங்க?’ சீற்றமாக கேட்டாள் அவள்.
பாபு தயங்கி தயங்கி முன்னால் வந்தான். எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்தவன் ‘ஒண்ணும் இல்லை சார். நேற்று அம்மாவுக்கும் பாட்டிக்கும் சண்டை வந்து விட்டது. எப்போதும் நான் சும்மா பார்த்து கொண்டு தான் இருப்பேன். எதுக்கு வம்புக்கு போறே ! என்று பாட்டிக்கு சப்போர்ட் பண்ணி பேசினேன் அதுதான் ‘என்று இழுத்தான்.
இன்னும் அவருக்கு புரியவில்லை. மாமியார் மருமகள் சண்டை போல் இருக்கிறது.’இதில் நான் எங்கே வந்தேன்? ‘புரியாமல் கேட்டார் அவர்.
‘என்னய்யா புரியாத மாதிரி கேட்கிறே? நீதானே சொல்லி கொடுத்திருக்கே. !எங்கே தப்பு கண்டாலும் தட்டிக் கேளு என்று ‘, அவள் மறுபடியும் சீறினாள்…
‘ஆமாம் சார். நான்தான் நேற்று சொன்னேன். பாட்டியை ஏன் இப்படி படுத்துகிறாய்? உனக்கு பிடிக்கா விட்டால் ஒதுங்கிப் போய் விடேன் என்று’ பாபு முன் வந்து சொன்னான்.
அவருக்கு இப்போது புரிந்தது. அவர் சொன்ன வார்த்தைகள் மகனை மாற்றி விட்டது என்று நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது.
தன்னுடைய நாட்டாமை பறி போய் விட்டது என்ற ஆங்காரத்தில் தான் இந்த கத்தல். யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் மேலும் மேலும் கத்தினாள்.
‘என்ன சார் சொல்லி கொடுக்கிறே !அம்மாவே தெய்வம் என்றும் இருக்கிறதில்லையா!. அதெல்லாம் சொல்ல மாட்டியா?’
அவள் வெறி பிடித்து கத்துவதை கேட்டு அங்கே ஒரு சின்ன கூட்டமே சேர்ந்து விட்டது. அவர் மிகவும் அசூயையாக உணர்ந்தார்
அதுவே அவளுக்கு வெற்றியாக தோன்றியது. ஆத்திரத்துடன் மேலும் கத்த தொடங்கியவளை அவர் கையமர்த்தி தடுத்தார்.
‘இதோ பாரும்மா உன் பையனுக்கு மட்டும் தனியாக எதுவும் சொல்லித் தரவில்லை’
‘அம்மா தான் தெய்வம் என்கிறது சரிதான். ஆனால் அதற்கு நீ நியாயத்து பக்கம் இருக்கணும்.நியாயம் உன் பக்கம் இருக்கணும்னு நினைக்க கூடாது.’
உசுப்பேற்றி விட்டவளாக அவள் தொடர்ந்தாள்.
‘இது என்னய்யா நியாயம். என் பையன் என் பேச்சுக்கு கட்டுப்படணும்னு சொல்றது தப்பா?’
அவள் ஏதோ ஒரு திட்டத்துடன் தான் பேசுகிறாள் என்பது புரிந்தது. அவருக்கும் எரிச்சல் வந்தது.பேசாமல் இருந்தால் இவள்குரலை அடக்க முடியாது.
பொறுமையை இழந்து “இப்போ கேட்கிறது சரி. அவனுக்கு வேலை கிடைத்து கல்யாணம் ஆன பிறகும் உன் பேச்சை கேட்பானா?”
அவரும் திருப்பி கேட்டார்’
‘ஆமாம் . கேட்பான் . கேட்க வைப்பேன்.’ அமர்த்தலாக கூறினாள் அவள்.
‘அப்போ அதே மாதிரி இந்த பாபுவோட அப்பா அவரும் அம்மா பேச்சை கேட்கலாம் இல்லையா? குறைந்தபட்சம் அம்மாவை நிம்மதியாகவாவது வைத்துக் கொள்ளலாம் இல்லையா?’
கூட்டம் ரசித்து கை தட்டியது. அவளால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
‘வாத்தியாரில்லை !அதான வக்கணையா பேசுறே. இதோ பார், இனி மேல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதே ,சொல்லிட்டேன்.’
ஆங்காரத்துடன் சொல்லி விட்டு ‘வாடா’ என்று பாபுவைப் பிடித்து இழுத்துக்கொண்டு நகர்ந்தாள் அவள்.
ஒரு புயல். அடித்து ஓய்ந்தது மாதிரி இருந்தது அவருக்கு.
இது என்ன நியாயமோ தெரியவில்லையே! அடாவடியாக பேச தெரிந்தால் போதும். அவர்கள் சொல்வது தான் சரி என்று ஆகி விடுகிறது.. அதில் அங்கிருந்த ஒருவன் ‘உனக்கு எதுக்கு சார் இந்த வம்பெல்லாம்!’ என்று எல்லாம் தெரிந்தது போல அறிவுரை கூறினான்
மனம் வெறுத்து போய் அங்கிருந்து நகர்ந்தார் அவர்.
அதற்கு பிறகு வகுப்பில் கூட அவர் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை.
தேவையானவற்றை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. எதற்கு எதையாவது சொல்ல போய் எந்த மாணவன் வீட்டிலிருந்தாவது வம்பு வந்து விட்டால் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்
இத்தனைக்கும் காரணமான அந்தப் பெண்ணப் பார்த்ததும் சட்டென்று விலகிப்போய் விட தோன்றியது.
வீட்டிற்கு வந்து அலுப்புடன் சோஃபாவில் சாய்ந்தார்.
இப்போதெல்லாம் அதட்டலாக பேசுபவர்களுக்கு தான் காலம்.நியாயம் நேர்மை மரியாதை எல்லாம் எங்கேயோ போய் ஒளிந்து கொள்கிறது.
கசப்புடன் நினைத்து கொண்டிருந்தவர் கதவு திறக்கும் ஒலி கேட்டு எழுந்தார்.
‘இந்த வீடு தான் அம்மா ‘பாபுவின் குரல் கேட்டது.அந்த பரிமளா தான் பையனுடன் வந்து கொண்டிருந்தாள்.
‘இப்போ என்னம்மா புது பஞ்சாயத்து!என்ன விஷயம்?’ அவர் குரலில் எரிச்சலுடன் கோபமும் எட்டி பார்த்தது.
அவள் தயங்கி நின்றாள். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரும் பாபுவைப் பார்த்து கேட்டார்.
“என்ன ஆச்சு?”
அவள் முன்னால் வந்து கை கூப்பினாள்.
‘மன்னிச்சுக்கோ சார் .நான் அன்னிக்கு பேசுனதல்லாம் தப்பு தான்.எனக்கே ஒரு கஷ்டம் வந்து மாட்டிக்கிட்டப்போதான் நீ சொன்னது எல்லாம் புரிஞ்சுது.’
அவர் அதிசயித்து போய் பார்த்தார்.
‘என்ன இது !சண்டைக் கோழி சமாதானக்கோழியா வந்திருக்கு.!’
அவளே தொடர்ந்தாள்.
‘இல்லே சார் .நேத்திக்கு கடைக்கு சாமான் வாங்க போயிருந்தேன்.’கண்கள் கலங்க அவள் விவரித்தாள்.
நூறு ரூபாய் கொடுத்து பலசரக்கு சாமான்கள் வாங்கி இருக்கிறாள். முதலிலேயே ரூபாயை வாங்கி உள்ளே போட்டு விட்டு இல்லவே இல்லை என்று சாதித்து விட்டானாம். எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லையாம். கூட்டம் கூடியும் அவள் பக்கம் நியாயம் கேட்க யாருமே முன்வரவில்லையாம். கெஞ்சல் மிரட்டல் எதற்கும் பலனில்லாமல் போகவே அவள் பயந்து விட்டிருக்கிறாள் .
கலக்கம் நடுக்கம் எதிர்ப்பு என்று எல்லா உணர்வுகளையும் ஒரு சேர அனுபவித்தவள் தனக்கு உதவிக்கு யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கி இருக்கிறாள்.
‘நீ தான் தடாலடியாக பேசுவாயே உன்னால் அவனை வழிக்கு கொண்டு வர முடியவில்லையா?’
அவர் வியப்புடன் கேட்டார்.
‘இல்லை சார். இத்தனைக்கும் நான் கொண்டு போன நோட்டு மஞ்சள் கறை பட்டிருந்தது சார். நாங்க என்ன சலவை நோட்டா வச்சிருப்போம்.அன்றாடம் காய்ச்சி தானே.!’
சொல்லும் போதே அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.
‘அட பாவமே அப்புறம் என்ன தான் செய்தாய்?’
‘அப்பத்தான் சார் உன்னாட்டம் ஒரு புண்ணியவான் வந்தார். நடந்ததெல்லாம் கேட்டு விட்டு அவர் சத்தம் போட்டார்.
‘ஏழை பாழைங்க கடைக்கு தைரியமா பணமில்லாமல் வந்திருக்க மாட்டாங்க. நீ தான் வேண்டும் என்று பழி வாங்குகிறாய்.உள்ளதை சொல்.: இல்லாவிட்டால் நடக்கிறதே வேற’
அவரிடமும் அவன் எகிறத்தான் செய்தான்
‘சரி ,இப்போ போலீசுக்கு போன் பண்ணி வரச் சொல்றேன். அந்த நோட்டு மட்டும் உன்கிட்ட இருந்தது கடையையே திறக்க விடாத படி செய்து விடுவேன்.’ அப்படி மிரட்டின பிறகுதான் வழிக்கு வந்தான் உள்ளே போட்டிருந்த ரூபாயை எடுத்து கொடுத்தான்
அப்புறம் அங்கே இருந்தவர்களையும் ஒரு சத்தம் போட்டார். நீஙக அன்னிக்கு சொன்ன அதே வார்த்தை எங்கே தப்பு கண்டாலும் தட்டிக் கேட்கணும்னு.
‘என் மனசு துடிச்சு போச்சு சார். நல்லது செய்யணும் அப்படின்னு நினைக்கிற ஒண்ணு ரெண்டு பேரையும் என்னை மாதிரி ஆளுங்க பேச விடாம பண்ணிடறோம். என்னை மன்னிச்சேன் என்று சொன்னால் தான் சார் எனக்கு நிம்மதியா இருக்கும்.’
அவர் பிரமித்து போய் நின்றார்.
மனசு முழுவதும் ஏதோ மழை அடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது.
‘சரிம்மா, பரவாயில்லை.அன்னிக்கு உன் மனசுல ஆங்காரம் மட்டும் தான் இருந்தது. இப்போ உனக்கு புரியுதா!’
‘கலங்கிப் போய் நிற்பவளிடம் அதற்கு மேல்என்ன பேசுவது!
‘சரி சார்’ இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினாள்.பவ்யமாக தலையாட்டி விட்டு நகர்ந்தாள். ‘வரேன் சார் ‘என்று பாபுவும் கிளம்பினான்.
அவர்கள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவர் ஒரு பெருமூச்சுடன் எழுந்தார்.
எப்போதும் வகுப்பில் பாடம் எடுக்கும் போது கிடைக்கும் நிம்மதி அவர் மனதில் நிறைந்திருந்தது
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings